2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
முன்கதைச் சுருக்கம்:
அரசவை முடியும் சமயம் பார்த்து ராணியிடமிருந்து தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மன்னருக்கும் தும்மல் வந்து கொண்டே இருக்கிறது. அப்போது ஒரு புலவர் அவரைப்பற்றி பாடி பரிசு பெற அனுமதி கேட்டு வெளியே காத்திருக்கிறார். அந்த நேரத்தில் அமைச்சர் மன்னருக்கு எப்படி இருபதாம் எலிகேசி என்ற பெயர் வந்தது என்று கேட்க மன்னர் சொன்ன பதிலைக் கேட்டுவிட்டு அமைச்சர் சிரிசிரியென்று சிரிக்கிறார்.
இனி….
‘அமைச்சரே… பரட்டைத்தலையுடன் எவனோ ஓடிவருகிறானே… வாயிற்காவலாளிகள் என்னத்தை, ….டுங்கிக் கொண்டிருக்கிறார்கள்… ’
‘ மன்னிக்கவேண்டும் மன்னா. தாங்களை புகழ்ந்து பாடி பரிசு பெற ஓடிவந்த புலவன்தான் நான்… வரும் வழியில் விநாயகர் ஊர்வலம் வந்து டிராஃபிக் ஜாம் ஆகிவிட்டது. அப்படி இப்படி அரண்மனை வந்து சேர்ந்துவிட்டேன். அப்படியும் வெளியே காத்திருக்கும் தங்களது இரண்டு காவலாளிகளும் ரொம்பநேரம் என்னை காத்திருக்க வைத்து விட்டார்கள். அதிலொருவன் வெளியே வரும்போது ஒரு தங்க நாணயத்தை அவனுக்கு கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று பிடித்துக்கொண்டான். கதவைத் திறந்ததும், அடித்துப்பிடித்து ஓடிவந்ததில் தலைமுடியெல்லாம் களைந்து விட்டதால் பரட்டைத்தலை போல தெரிகிறது தாங்களுக்கு… இதோ அள்ளி முடிந்து கொள்கிறேன் மன்னா…’
‘அமைச்சரே… இவன்… கடந்தமுறை என்னிடம் சரியாக வாங்கிகட்டிக் கொண்டு போனானே அதே வாயாடனல்லவா…’
‘மன்னிக்க வேண்டும் மன்னா… இது அவனில்லை. அவன் வேறு; இவன் வேறு. இருவரும் இரட்டையர்கள்… அவன் கலைவாணன். இவன்…’
‘ கொலைவாணனோ…’
‘மன்னிக்க வேண்டும் மன்னா… முந்திரிக்கொட்டை மாதிரி பேசுவதை முதலில் நிறுத்துங்கள். என்ன சொன்னேன்… ஆங்… இவன் கலைவாணன்…ஐயோ ஐயோ… நானே குழம்பி விட்டேனே… அவன் கலைவாணன்… இவன் மயில்வாகனன்… அவன் அண்ணன், இவன் தம்பி… ’
‘சரி சரி… எங்கே பாடும்… பாடித் தொலையும்… வரட்… வரட்… ’
‘ போருக்குப் போய்வந்த புண்ணுடம்பு மன்னா… ’
‘ஏ நிறுத்து… யோவ் அமைச்சரே… நீர் ஏதும் போட்டுக் கொடுத்தீரோ… ’
‘மன்னிக்க வேண்டும் மன்னா… நான் அப்படிப் பட்டவன் இல்லை… எங்கள் பரம்பரையே எட்டப்பன் பரம்பரைக்கு எதிரிகள். ஆனாலும் புலவன் போகும்வரை வரட் வரட்டென்று சொறிந்துகொள்வதை தாங்கள் நிறுத்தவேண்டும் மன்னா… ’
’புலவரே… உன் அண்ணனுக்குத்தான் வாய்க்கொழுப்பு அதிகம் என்று என்று நினைத்தேன்… உமக்குமா… ’
‘மன்னா…மன்னிக்கவேண்டும்… நான் அப்படி கொழுப்பாக பேசவில்லையே… தாங்களை புகழ்ந்துதானே பாடினேன்…’
‘போருக்குப் போய்வந்த புண்ணுடம்பு மன்னா… என்றீரே…’
‘மன்னிக்கவேண்டும் மன்னா… நான் பொன்னுடம்பு என்றல்லவா சொன்னேன்…’
‘அப்படியென்றால் என் காது செவிடு என்று சொல்கிறீர்… அப்படித்தானே… எவ்வளவு நெஞ்சழுத்தம் உமக்கு… ’
‘மன்னிக்க வேண்டும் மன்னா… நான் உண்மையிலேயே பொன்னுடம்பு என்றுதான் சொன்னேன்… அதாவது ஆங்கிலத்தில் கோல்டன் பாடி என்பார்கள்… ’
‘ஆங்கிலம் கூடாது… பேசினால் நாக்குத் துண்டிக்கப்படும்… சரி.. சரி… மேலே பாடும்… பாடித் தொலையும்… ஹூம்… கொஞ்சம் இரும்… ஏதோ குறுஞ்செய்தி வருகிறது போல… ஹோ இருபத்து மூன்றாவது குறுஞ்செய்தி… சரி சரி… நீர் பாட்டைத் தொடரும்… ‘
‘ எதிரிக்கு அஞ்சா நெஞ்சன் இருபதாம் எலிகேசியே, உன் படை பெரிது… ’
‘ என்ன… படை பெரிதா… என்ன புலவரே உலறுகிறீர்… வரட் வரட்… ’
‘மன்னிக்கவேண்டும் மன்னா… நான் உளறவில்லை. எதிரிகளின் படைகளை விட தாங்களது படை பெரிது என்ற அர்த்தத்தில் அல்லவா சொன்னேன்… ’
‘மன்னா நான் முதலிலேயே சொன்னேன் புலவர் போகிறவரை தாங்கள் வரட் வரட் என்று சொறிவதை நிறுத்தி வையுங்கள் என்று… பாருங்கள் இப்போது… உங்களுக்கு படை சொறி சிரங்கு வந்திருக்கிறது என்ற அர்த்தத்தில் புலவர் பாடுகிறார்… ‘
‘போதும்… போதும்… அமைச்சரே இந்த புலவனுக்கு … ஐந்து பொற்காசுகள் மட்டும் கொடுத்தனுப்புங்கள்… ’
‘ மன்னா… இது அநியாயம்… அக்கிரமம்… ’
‘புலவரே… என்ன உளறுகிறீர்… நீர் கொலைவாணன் என்று நிரூபித்துவிட்டீர். தமிழை ரொம்பவும் கொலை செய்கிறீர்… ’
‘மன்னிக்க வேண்டும் மன்னா…நான் அரசவைக்கு வரும்போது வெளியே போன எல்லா புலவர்களும் பொற்காசுகளை மூட்டைக் கட்டி கொண்டு போனதைப் பார்த்தேன். எனக்கும் அதைப்போல அள்ளிக் கொடுப்பீர்கள் என்று நினைத்து வந்தால் கிள்ளிக் கொடுக்கிறீர்களே… இதில் ஒரு காசு வாயில்காவலாளிக்கு வேறு போய்விடுமே… ’
‘சரி.. சரி…ஒரு காசு சேர்த்து ஆறு காசுகளாகக் கொடுத்துவிட்டு, இவனது அங்கவஸ்திரத்தைப் பிடுங்கிக் கொண்டு நாக்கையும் துண்டித்து அனுப்புங்கள்…. இவனின் அண்ணனைப் போல இவனுக்கும் நாக்கு கொஞ்சம் நீளம்… ஆங்கிலமும் அதிகம் பேசுகிறான்… ’
‘போதும் மன்னா ஐந்து காசுகளையே வாங்கிக் கொண்டேன்… அங்கவஸ்திரத்தைப் பிடுங்கவும் வேண்டாம். நாக்கை துண்டிக்கவும் வேண்டாம்… அனுமதியுங்கள்.. நான் வருகிறேன்….’
‘சரி சரி கொடுத்தனுப்பும் அமைச்சரே… ஹோ மறுபடியும் குறுஞ்செய்தி… இது இருபத்து நான்காவது குறுஞ்செய்தி… ஹா… ஹச் ஹச் ஹச்… அமைச்சரே… நான் இன்னும் அவை கலையட்டும் என்று சொல்லவில்லையே… ஏன் எல்லோரும் இப்படி ஓட்டமெடுக்கிறார்கள்… ’
‘இன்னும் ஆங்காங்கே கொரோனா தலைகாட்டுகிறது என்று தாங்கள் கேள்விப்படவில்லையா… அதனால்தான் இப்போது தாங்கள் போட்ட தும்மலில் எங்கே நமக்கும் மறுபடியும் கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்தில் அமைச்சர்கள் ஓடியே விட்டனர். முகக் கவசம் அணியுங்கள் அணியுங்கள் என்று நானும் அடித்துக் கொள்கிறேன்… தாங்கள் கேட்பதாகவே இல்லை… இதில் புதிதாக வரட் வரட் வேறு… நான் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே சொரிகிறீர்களே மன்னா… ’
‘என்னய்யா செய்ய… அரிப்புத் தாங்கவில்லையே… ஹா… மறுபடியும் குறுஞ்செய்தி வந்துவிட்டது… நான் போகிறேன்… இல்லை என்றால் இன்று பட்டினிதான்… ’
xxxxxxxxx
‘ என்னாச்சு மன்னா… அடித்துப் பிடித்து உள்ளே ஓடினீர்கள் மறுபடி ஏன் இப்படி திரும்பி ஓடி வருகிறீர்கள்… ’
‘ அமைச்சரே… நான் என்னவென்று சொல்வேன்…’
‘ என்னாச்சு மன்னா… சொன்னால்தானே தெரியும்….’
‘நான் அடிக்கடி தும்முகிறேனாம்… சொரிந்து கொள்கிறேனாம்… அதனால் எல்லா ராணிகளும் ஒன்றுகூடிப் பேசி, என்னை உள்ளேவரவிடாமல் அந்தப்புரத்தை அடைத்து விட்டார்கள்… ஹையோ… நான் இந்த இரவை இந்தக் கொசுக்கடிகளுக்கிடையில் எப்படிக் கழிப்பேன்… ஹா… ஹச்…ஹச்…. வரட் வரட்… அமைச்சரே… ஏன் இப்படி தலைதெறிக்க ஓடுகிறீர்… ‘
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings