அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவார கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப் பொழுது.
“உங்களது புதுவருட குறிக்கோள் என்ன?”வென ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர்
மதிய உணவு இடைவேளைக்கு பின், அலுவலகம் அடைக்கப்பட்டது.
அந்த இளம் காதலர்கள், சிறு மோதலுக்கு பின், இருசக்கர வாகனத்தில் ஒரு சிறு தூர பயணம் செல்ல முடிவெடுத்தனர்
பயணத்தில் மகிழ்ச்சி, புதிதாக செல்லும் பாதையென்பதால் சாலை ஒர காட்சியில் ஓர் ஈர்ப்பு, அலுவலுக வேலை பதற்றமின்றி இருவருக்குமாக கிடைத்த அந்த இனிய மாலைப் பொழுது என்பதால் ஒரு களிப்பு. ஆங்காங்கே நிறுத்தி தேனீர் அருந்தினர்
அவனது ஆர்வம் தனது ஸ்ப்ளெண்டர் வாகனத்தை அவள் இயக்க வேண்டும் என்று. ஏற்கனவே இருந்த பயிற்சியின் நம்பிக்கையில் அவள் வாகனத்தை கம்பீரமாக இயக்க, அவன் பின் சீட்டில் அமர்ந்தான்
பின் சீட்டில் அமர்ந்து பிரயாணம் செய்வதும் ஒரு சுகம் தான் என சீண்டலாக சொன்னான்
காடு வெளியில் இரு சக்கர வாகனம் சிறிது வேகம் குறைவாகவே சென்றது
அந்த இளங்காற்றின் உரசல், கிராமத்து காட்டுப் பாதை, சுற்றிலும் அழகான காட்சி, விரிந்த காடுகள், மெதுவாக மேற்கு நோக்கி நகரும் சூரியன், மீண்டும் தனது கிராமங்களில் பயணிப்பது போலான ஓர் உணர்வு என, அனைத்தும் அவர்களுக்கு அதிகப்படியான உற்சாகத்தை ஊட்டியது
அது ஒரு அழகான புது அனுபவம் அவர்களுக்கு. சிறிது நேர பயணத்திற்கு பின் சின்ன திருப்பதி என்றழைக்கப்படும் வெங்கடேஸ்வரா கோவிலுக்கு சென்றடைந்தனர்
அது பெங்களூரின் புறநகர் பகுதி, மாலூர் தாலூக்காவிற்கு உட்பட்ட இடம். அங்கு பிராத்தனையை முடித்துக் கொண்டு கிளம்பினர்.
அப்போதும் அவர்கள் உணரவில்லை மாலை பொழுது கடந்து கொண்டிருக்கிறது, செல்லும் தூரமும் அதிகமென்று.
ஆம் காதலுக்கு கண்ணில்லை என்பார்களே.
ஏதோ ஒரு இனம்புரியாத சந்தோஷமும், ஆர்வமும் உந்த, மீண்டும் வண்டியை இயக்கி சென்றனர்
முழுவதும் காட்டுப் பாதை என்பதால், தங்களையே மறந்த ரசனையில் ஆழ்ந்திருந்தது அவர்களது பயணம்.
அது அவர்களுக்காகவே ஒதுக்கப்பட்ட நேரம் என்பதால், பேச மிச்சமிருந்த பலதையும் உரையாடிக் கொண்டு சென்றனர்.
ஒரு நீண்ட பயணத்திற்கு பின், கோடிலிங்கேஸ்வரர் கோவிலை அடைந்தனர். அதுவே அவர்களது பயணத்தின் இலக்காக இருந்தது.
அதன் அழகும் பிரமிப்பும் அவர்களை மெய்மறக்கச் செய்தது.
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள கம்மசந்திரா என்ற இடத்தில் அமைந்திருந்தது கோடிலிங்கேஸ்வரர் கோவில்
இங்கு உலகின் மிகப்பெரிய சிவலிங்கம், 108 அடி உயரத்தில் அமைந்துள்ளது
இதைத் தவிர்த்து, கோவில் முழுவதும் பல்வேறு அளவுகளில் சிறியதும், பெரியதுமாக, ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமாக சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆலயத்திற்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் சுற்றி பார்த்துக் கொண்டிருந்த வேளையில், ஆங்காங்கே மின்விளக்குகள் ஏற்றப்படுவதை உணர்ந்தார்கள்.
அந்த கணத்தில் தான், மனதில் ஒரு பயம் வந்தது
ஆம்… அதுவரை மறந்து போன காலம், தூரம், பாதுகாப்பு என அனைத்தும், அக்கணம் பூதாகரமாக காட்சியளித்தது
அந்த கிராமம் பெங்களூரில் இருந்து சுமார் எழுபது கிலோ மீட்டர் தொலைவு இருந்தது
நேரம் இரவு ஏழு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது
எப்படியும் திரும்பி சென்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தார்கள். வேறு வழியும் தென்படவில்லை.
அதுவரை இருந்த ரசனை உணர்வு அடையாளமின்றி சிதறிப் போனது அவர்களிடம்.
ஒரு சிறு அதிர்ஷடம், அன்று பௌர்ணமி நாள். இருட்டை விலக்கி வெளிச்சத்தை பாய்ச்சியது வெண்ணிலா. வேகமாக வண்டியை இயக்க தொடங்கினார்கள்
அழகாக தெரிந்த இயற்கை அழகு, இப்பொழுது ஒரு அடர்ந்த பயம் கொள்ளும் காடாக அவர்களுக்கு தென்பட்டது
அவர்கள் வந்த பாதை, பங்காரபட், லாக்கூர், சிக்கு திருப்பதி என்ற முழுநீள காட்டுப் பாதை
அவர்களுக்கு இருந்த குழப்பமான மனநிலையில், தேசிய நெடுஞ்சாலை பாதையான கோலார் வழி மிக நீண்டதாகவும், பாதுகாப்பற்றதாகவும் தோன்றியது
ஆகவே வந்த வழியே சென்று விடலாம் என தீர்மானம் செய்து பயணத்தை துவங்கினார்கள்
வந்த போது காதலிலும் ரசனையிலும் மறைந்து போன தூரம், இப்போது எதோ ஒரு இனம் தெரியாத உருவம் துரத்துவது போல் அவர்களை பயமூட்டியது
நிலவின் வெளிச்சத்தை தவிர எந்த ஒரு வெளிச்சமும் கண்ணெட்டும் தூரம் வரை தென்படவில்லை
வழிநெடுகிலும் மரங்களும் அந்த காதலர்களும் தவிர, எந்த ஒரு மனித நடமாட்டமும் இல்லை.
எப்படியோ பாதி தூரத்தை வந்தடைந்தனர்
ஆனால் திடீரென ஒரு நான்கு வழி சந்திப்பு வர, அந்த நான்கு வழியில் எது பெங்களூர் செல்லும் வழியென அவர்களுக்கு தெரியவில்லை
நான்கு ரோட்டின் நடுவில் வண்டியை நிறுத்திவிட்டு விழித்தனர். அந்த கணம் தான் அவர்களின் அச்சம் உச்சமடைந்து. வழி கேட்கவும் ஒரு மனித தலையும் தென்படவில்லை
அது கூகுள் மேப் வழக்கத்திற்கு வராத காலம் (வருடம் 2010)
சுற்றிலும் மிகப் பெரிய மரங்கள், போகும் வழியின் பாதை புலப்படவில்லை. சரியாக பாதி தூரத்தை அடைந்த நிலை, திரும்பி போகவும் மனமில்லை
அதுவரை இருந்த தைரியத்தில் ஒரு சிறு நடுக்கம். கடவுளின் மேல் நம்பிக்கை கொண்டு ஒரு பாதையை தேர்வு செய்தனர்
சிறிது தூரம் அந்த பாதையில் வந்த நிலையில், ஒரு இருசக்கர வாகனம் எதிரில் வந்தது
அதில் இரு ஆண்கள், பார்க்க கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போல் இருந்தனர்
ஒருநிமிடம் வண்டியின் விளக்கை அணைத்து விட்டு ஒதுங்கி நிற்கலாமா அல்லது வேகமாக அவர்களை கடந்து சென்று விடலாமா என மனம் ஊசலாடியது
இரண்டும் விடுத்து, நம்பிக்கையோடு நின்று வழி கேட்கலாமே எனவும் தோன்றியது, உடனே நெஞ்சில் ஒரு குளிர் பரவியது அவனுக்கு
ஆம்… ஆளில்லாத நடுக்காட்டில், இரவு வேளையில், காதலியோடு நின்று, அடையாளம் தெரியாதவர்களிடம் வழி கேட்க, யாருக்கும் பயம் வருவது இயல்பு தானே
ஆனால், செல்லும் வழி சரி தான் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இல்லை. ஆகையால், குருட்டு தைரியம் என சொல்வது போல், எதிரில் வந்த வாகனத்தின் அருகில் நிறுத்தி, அந்த ஆண்களிடம் அவர்கள் செல்லும் பாதை சரி தானா என்று உறுதி செய்து கொண்டனர்.
நேரம் இரவு எட்டை கடந்தது
சோதனை மேல் சோதனையாய், மீண்டும் ஒரு முச்சந்தியில் வந்து சேர்ந்தனர். இப்பொழுது அந்த ஆளில்லாத காட்டில் ஒரு ஆட்டோ மட்டும் நின்று கொண்டிருந்தது
பீதியின் உச்சத்திற்கு சென்ற அவர்கள், வேறு வழியின்றி ஆட்டோ ஓட்டுனரிடம் வழி கேட்டனர்
அவன் பிதற்றிக் கொண்டே வழி சொன்னான். அவன் குடி போதையில் இருப்பதை புரிந்து கொண்டார்கள். அங்கு அவனை தவிர வேறு யாரும் இல்லை.
சுற்றும் முற்றும் பார்த்தனர். யாருமில்லாத இந்த இடத்தில் எதற்காக இந்த ஆட்டோ? யார் வந்திருப்பார்கள்? அவர்கள் எங்கே? போன்ற கேள்விகள் எழ, மனதில் அச்சம் பெருகியது
இரு மனதோடும் குழப்பத்தோடும் அவன் கூறிய பாதையில் பயணத்தை தொடர்ந்தனர்
அது பிரதான சாலையில் இருந்து உள்ளே செல்லும் ஒரு ஒற்றை சாலையாக இருந்தது. செல்வதா வேண்டாமா என்ற தடுமாற்றம், ஆனால் நேரம் கடந்து கொண்டே இருந்ததால், தாமதிப்பது நல்லதல்ல ஏதோ ஒரு தைரியத்தில், அந்த ஒற்றைச் சாலையில் வண்டியை செலுத்தினர்
அப்போது அங்கு தென்பட்டது ஒரு காட்சி…
நீர் நிறைந்த பெரிய அகலமான குளம். அதன் கரையெங்கும் உயர்ந்த மரங்கள் அடர்த்தியாக நிற்க, பௌர்ணமி நிலவின் வெளிச்சம் நீரின் மீது படர்ந்து ஜொலித்தது
சலனமின்றி வெள்ளித்தட்டு போல் நிலவின் பிம்பம் நீரில். அதற்கு மேலும் அழகு சேர்ப்பது போல் மௌனமான இரவு வேளை.
கண்கொள்ளா அந்த அழகும் கரை புரண்டு ஓடும் பீதியும் ஒரே காட்சியில்! ஒரே கணத்தில்! ஒரே சூழலில்!
ஆம் அவர்கள் மாலை செல்லும் போது, வழியில் எந்த ஒரு குளமும் இருக்கவில்லை என்ற நினைவு வந்ததும், இருவரும் ஸ்தம்பித்து போனார்கள்
அந்த பௌர்ணமி வெளிச்சம், அவர்களுக்கு மட்டும் இருளாக தெரிந்தது. மனது மிக வேகமாக துடிக்கத் தொடங்கியது
எதற்கு அந்த குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் இந்த ஒற்றை சாலையை கை காட்டினான். அது ஏதேனும் சதித்திட்டமோ?
எப்படி பார்த்தாலும், மீண்டும் அவர்கள் அந்த ஒற்றை பாதையில் தான் திரும்பி செல்ல வேண்டும்
ஒருவேளை அவர்கள் திரும்பி வருவார்கள் என எதிர்பார்த்து, கூட்டாளிகளோடு அவன் காத்திருப்பானோ? அல்லது அவர்கள் நம்மை பின் தொடர்ந்து வந்திருப்பார்களோ?
அங்கேயே நிற்கவும் மனமில்லை, மீண்டும் அந்த பாதையில் திரும்பி செல்லவும் நடுக்கம்
மெதுவாக வண்டியை இயக்கி ஒருவழியாக பிரதான சாலையை அடைந்தனர்.
வேறு வழியில்லை, அந்த ஆட்டோ ஓட்டுனரை கடந்தே அடுத்த பாதையை அடைய வேண்டும்
மூச்சை இறுக்க பிடித்துக் கொண்டு, வேகமாக அந்த முச்சந்தியை கடந்து, சரியான பாதையில் வந்து சேர்ந்தனர்
இன்னும் அவர்களை தூரமும் பயமும் துரத்திக் கொண்டே வந்தது
எப்படியோ இரவு ஒன்பது மணியளவில் சின்ன திருப்பதியை வந்தடைந்தனர். அப்போது தான் அவர்கள் இருவருக்கும் சரியாய் மூச்சே வந்தது
மீண்டும் தைரியத்தையும் நம்பிக்கையும் வளர்த்துக் கொண்டு சிறிது வேகமாக வண்டியை விரட்டினர்
ஒரு வழியாக பெங்களூர் தெருவிளக்குகளின் வெளிச்சம் கண்ணில் தென்பட்டது
மீண்டும் விடுமா என்றார் போல்… என்ன கோபமோ வண்டிக்கு? என்ஜின் சீஸ் ஆகி நின்றது
ஆனாலும் ஒரு நிம்மதி, பெங்களூர் சர்ஜாபூர் மெயின் ரோட்டை அடைந்திருந்தனர்
அங்கிருந்து ராகிகுட கோவிலுக்கு (ஜெயநகர் பகுதி) வந்து சேர வேண்டும், அவர்களது விடுதி அங்கு தான் இருந்தது.
கடவுளே வந்தாற் போல் மீண்டும் ஒரு ஆட்டோ. நேரமும் சிரமமும் புரிந்து, தொகையை சற்று அதிகமாக வாங்கிய போதும், பொறுமையாக அழைத்து வந்து சேர்த்தார் அந்த ஆட்டோ ஓட்டுநர்
ஆம், ஆட்டோவில் அவள் அமர்ந்து கொள்ள, ஆட்டோவின் உந்துதலில் அவன் வண்டியை தள்ளி கொண்டே, விடுதி வந்து சேர்ந்தனர்
அன்றைய பகலில் கேலியாகவும் விளையாட்டாகவும் கேட்டுக் கொண்டிருந்த போது வராத புது வருட குறிக்கோள், மிக உறுதியாக அவர்களுக்கு அப்போது வந்தது. அது அவர்களது மனதிலும் வேரூன்றி நின்றது
ஆம்! இனி ஒரு போதும் நேரம் காலம் கணக்கிடாமல், பயணம் மேற்கொள்ளக் கூடாது. பாதுகாப்பற்ற சாலைகளை தேர்ந்தெடுக்கக் கூடாது
இனி எப்போதும் இப்படி ஒரு திட்டமில்லா பிரயாணத்தை செய்யக் கூடாதென மனதில் உறுதி பூண்டனர்
அனுபவங்கள் கற்றுக் கொடுக்கும் பாடமே, அழிவில்லா ஞானம்!!!
#ad
#ad
வித்தியாசமான கதைக்கரு. திக் திக் என மனது அடித்துக் கொண்டாலும் கடைசியில் சுபமே ஓர் படிப்பினையுடன்.
Thank you mami