in

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் (சிறுகதை)

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

லுவலகத்தில் இருந்து மிகவும் களைப்புடன் வீட்டிற்குத் திரும்பினாள் தீபா. வருமான வரித்துறையில் எழுத்தராகப் பணிபுரிகிறாள்.

வீட்டிற்குள் நுழையும் போதே ஒரே இரைச்சல். அவள் அம்மா கற்பகம் ஒரு மூலையில் அழுதபடி உட்கார்ந்திருந்தாள். தீபாவின் ஒரே பெண் குழந்தை, இரண்டு வயது. அவள் நாத்தனார் பையனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா கலாட்டா?” என்றாள் தீபா.

“அங்கே என்ன கேள்வி? என்னிடம் கேள், நான் சொல்லுகிறேன். இன்னும் எத்தனை நாள் உன் அம்மா இங்கே இருப்பாள்? இப்போது எனக்கு தெரிய வேண்டும்” கத்தினாள் அவள் மாமியார்.

“முதலில் மரியாதை. அவர்களை மரியாதையில்லாமல் பேச நீங்கள் யார்? ஏன் என் அம்மா இங்கே இருப்பதால் உங்களுக்கு என்ன கஷ்டம்? உங்கள் பெண்ணும், மாப்பிள்ளையும் அவர்கள் வீட்டை விட்டு இங்கு தானே பல மாதங்களாக இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் இங்கே இருக்கிறார்கள் என்று நான் எப்போதாவது கேட்டேனா?” என்றாள் தீபா.

“உன் அம்மா ஏன் இங்கே இருக்க வேண்டும்? அவர்கள் வேறு எங்காவது போய் இருக்க வேண்டியது தானே? விட்டால் இங்கேயே ‘டேரா’ போட்டு விடுவார்கள் போல் இருக்கிறதே. உன் அம்மாவைப் பற்றிக் கேட்டால் நீ என் பெண்ணைப் பற்றிப் பேசுகிறாய். யார் யாரை எங்கே வைக்கணுமோ அவரவரை அங்கங்கே வைக்க வேண்டும். உன்னோடு எனக்கென்ன பேச்சு, என் பிள்ளை வரட்டும் அவனிடம் பேசிக் கொள்கிறேன்” என்று மூச்சிரைக்க கத்தினாள் மாமியார் மரகதம்.

“வரட்டும் உங்கள் பிள்ளை, அவரிடம் நானும் நறுக்கென்று சில கேள்விகள் கேட்க வேண்டும்” என்று கருவினாள் தீபா.

“இதனால் தான் நான் இங்கே வரமாட்டேன் என்றேன். நீ தான் வீண் பிடிவாதம் பிடித்து என்னை அழைத்து வந்தாய். கடைசியில் உன் வாழ்க்கையை நீ கெடுத்துக் கொள்ளாதே. கையில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்பதை மறந்து விடாதே” என்றாள் கற்பகம்.

அப்போது தன் மோட்டார் பைக்கை வாசலில் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நிறுத்தினான் வாசு. உள்ளே நுழையும் போது அவன் தங்கையின் மகன் பெருவிரலை மடக்கி அவன் குழந்தையின் தலையில் ’நறுக்’கென்று குட்டி விட்டு அவள் கையிலிருந்த பொம்மையை பிடுங்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.

அவன் பெண்ணும் ‘ஓ’ வென்று கத்தி கலாட்டா செய்து கொண்டு பொம்மையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தாள்.

“டேய் டேய் அவள் சின்னக் குழந்தைடா. அவள் தலையில் போய் குட்டுகிறாயே, மடையா. இன்னொரு முறை அவள் மேல் கை வைத்தால் கையை உடைத்துவிடுவேன் ராஸ்கல்” என்றவன், குழந்தையை அள்ளி எடுத்துக் கொண்டான் வாசு.

அதற்குள் அவன் தங்கையும், அவன் அம்மாவும் சண்டைக்கு பாய்ந்து வந்தார்கள். அந்த நேரத்தில் அந்த வீட்டின் மாப்பிள்ளை அவன் பங்கிற்கு அவன் மூக்கை உள்ளே நுழைத்தான்.

“ஏய் சாரு, பிள்ளையைத் தூக்கிக் கொண்டு கிளம்பு. நம்மை மதிக்காத இந்த வீட்டில் இனி ஒரு நிமிடமும் இங்கே இருக்கக் கூடாது” என்றவன் தன் பிள்ளையைத் தூக்கிக் கொண்டான்.

சொல்வானே தவிர இருக்கும் இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட நகர மாட்டான். அவன் நடத்தும் நாடகம் இது முதல் முறையுமல்ல. குழந்தையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டுபவன்.

வாசு தன் மனைவி தீபாவைப் பார்த்து, “ஏய் தீபா, இங்கே என்ன நடக்கிறது? நீங்கள் போடும் கூச்சல் தெருமுனை வரை கேட்கிறது” என்று கத்தினான்.

அவனை உறுத்துப் பார்த்தாள் தீபா. அதற்குள் அவன் அம்மா “டேய் வாசு, என்கிட்ட கேள் நான் சொல்கிறேன். உன் மாமியார் இன்னும் எத்தனை நாள் இங்கே இருக்க முடியும்? என்று நான் கேட்டேன். அதற்குத் தான் இவ்வளவு கலாட்டா” என்றாள்.

“அதற்கு தீபா என்ன சொன்னாள்?” என்று இறுகிய முகத்துடன் கேட்டான் .

“உங்கள் பெண்ணும், மாப்பிள்ளையும் இந்த வீட்டில் தானே மாதக் கணக்கில் இருக்கிறார்கள். நான் ஏதாவது உங்களைக் கேட்டேனா? என்றாள்” என்று கத்தினாள்.

“அவள் கேட்டது நியாயம் தான்” என்றான் வாசு.

“என்னடா இப்படிப் பேசுகிறாய்? என் பிள்ளை நீ? என்னை விட்டுக் கொடுக்கலாமா? உன் தங்கையையும் மாப்பிள்ளையையும் விட்டுக் கொடுத்துப் பேசலாமா?” என்றாள் அழமாட்டாக் குறையாக.

“ஏம்மா நீயே நியாயமாகப் பேசு. உன் பெண்ணும் , மாப்பிள்ளையும் இங்கே வந்து கிட்டத்தட்ட நாலு மாதம் ஆகியிருக்குமா?  பெரம்பூரில் மாமியார் வீட்டை வைத்துக் கொண்டு இங்கே தி.நகரில் வந்து நம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு நான்கு மாதங்களாக கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி தீபா ஒரு வார்த்தையும் சொல்லவில்லையே” என்றான் .

“வாசு… உன் தங்கையும் அவள் அம்மாவும் ஒண்ணா?”

“அம்மா… தீபாவின் அம்மா அடிக்கடி இங்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் தவறு இல்லை. என் தங்கையாகட்டும், தீபாவின் அம்மா ஆகட்டும், இருவரும் விருந்தினர்களே. தீபாவின் அம்மா ஒற்றை ஆளாக வந்திருக்கிறார்கள்.  அவருடைய கணவர் சமீபத்தில் இறந்ததாலும், உடல் நலக்குறைவினாலும், வேறு ஆதரவு இல்லாததாலும் இங்கே வந்திருக்கிறார்கள். என் தங்கையோ, அவளுடைய கணவன், குழந்தை சகிதமாக பல மாதங்கள் இங்கே தங்கியிருக்கிறாள்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, அவன் அம்மா ஆவேசமாக பேசத் தொடங்கினாள்

வாசு அவளைக் கையமர்த்தினான் .

“அம்மா… இரவு மணி ஏழாகி விட்டது. உங்கள் சண்டைக்கு நாளை தான் தீர்ப்பு வழங்கப்படும். எனக்குப் பசிக்கிறது. தீபா… எனக்கு சாப்பாடு போடப் போகிறாயா, இல்லை அம்மாவுடன் சண்டை தொடரப் போகிறாயா?” என்றான்.

“ஐயோ ஸாரி வெரி ஸாரி. நீங்கள் கை, கால் அலம்பிக் கொண்டு வாருங்கள், நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்றவள், வாசுவிற்கும் அவள் நாத்தனார் கணவருக்குமாக இரண்டு தட்டுக்கள் வைத்தாள். அந்த வீட்டில் உள்ள இரண்டு ஆண்களும் ஒன்றாக சாப்பிட வேண்டும் என்று அவள் மாமியார் வைத்த சட்டம்.

அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் ஆபீஸ் போகும் அவசரத்தில் எல்லோரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். யாருக்கும் முதல் நாள் நடந்த நிகழ்ச்சி நினைவில் இருப்பது போல் தெரியவில்லை.

தீபா ஒரு தட்டில் இட்லிகளை வைத்துக் கொண்டு அவளுடைய பெண்ணுக்கு ஒரு வாயும், அவள் நாத்தனார் பையனுக்கு ஒரு வாயுமாக ஊட்டிக் கொண்டிருந்தாள்.

வாசுவின் தங்கை சாருவோ, குளித்து முடித்து எல்லோருடைய துணிகளையும், தீபாவின் துணிகளையும் சேர்த்துத் தான் வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டிருந்தாள்.

சமையலறையில் அவன் அம்மாவும், தீபாவின் அம்மாவும் சிரிக்காவிட்டாலும், ஏதோ பேசிக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

தனித் தனியே யோசித்துப் பார்த்தால் ஒவ்வொருவரும் நல்லவராகத் தான் இருக்கிறார்கள். ஆனால் ஏன் இவர்களுக்குள் அடிக்கடி முட்டிக் கொள்கிறது? என்று யோசித்து அவனுக்கே பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது.

அலுவலகத்தில் அவனுடைய நண்பன் பிரபாகரனிடம் யோசனைக் கேட்க வேண்டும் என்று நினைத்தான். அவன் தான் சரியான ஐடியா கொடுப்பான். ஏனெனில் அவன் ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் சிக்கி சின்னா பின்னமாகி இப்போது நன்கு தேறி விட்டான்.

ஆஃபீஸில் காபி டைமில் அவனுக்கு ஒரு போண்டாவும், காபியும் வாங்கிக் கொடுத்து தன்னுடைய கஷ்டத்தைப் புலம்பினான்.

“நீ என்ன நினைக்கிறாய்? உன் அம்மா அல்லது தீபாவின் அம்மா யாராவது ஒருத்தர் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டான் பிரபாகர்.

“நோ நோ” என்று பலமாகத் தலையாட்டினான் வாசு. “எனக்கு இரண்டு பேரையும் மிகவும் பிடிக்கும். இருவருமே என்னுடன் இருக்க வேண்டும். நானும் தீபாவும் ஆபீஸில் இருக்கும் போது என் குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றான்.

“ஒரே உறையில் இரண்டு கத்தி இருக்க வேண்டும் என்று சொல்லுகிறாய்” என்றவன், சிறிது நேரம் யோசித்து விட்டு ஒரு ஐடியா சொன்னான்.

“டேய் பிரபா, இந்த ஐடியா சக்சஸ் ஆகுமா?” வாசு.

”கல் எறிந்து பார்ப்போம், கிடைத்தால் மாங்காய் இல்லாவிட்டால் ஒரு நல்ல டி.வி ஷோ” என்றான்.

“அடப்பாவி” என்று நொந்து புலம்பிக் கொண்ட வீடு போய் சேர்ந்தான். வீட்டிற்குப் போனவுடன் தீபா கொடுத்த அரிசி உப்புமாவும் டீயும் குடித்து விட்டு, நடுக்கூடத்தில் ஒரு ஒரு சேரைப் போட்டுக் கொண்டு ஒரு ஜட்ஜ் மாதிரி உட்கார்ந்து கொண்டான்.

 “தீபா, அம்மா, அத்தை, சாரு, மாப்பிள்ளை எல்லோரும் இங்கே வாருங்கள். உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்” என்றான்.

எல்லோரும் ஆளுக்கொரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அவன் எதிரில் அமர்ந்தனர்.

“இங்கே பாருங்கள்… நீங்கள் தினமும் ஏதாவது ஒரு காரணத்திற்கு சண்டை போடுவதும், உங்களை சமாதானப்படுத்துவதுமே எனக்குப் பெரிய வேலையாக இருக்கிறது. அதனால் நான் இன்று ஒரு முடிவிற்கு வந்தேன்” என்று நிறுத்தினான்.

என்ன என்பது போல் எல்லோரும் ஆவலுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அத்தை உங்களைக் கொண்டு போய் ஒரு நல்ல ஸீனியர் சிட்டிஸன் ஹோமில் சேர்த்துவிடலாம் என்று நினைக்கிறேன்”

அத்தையும் தீபாவும் திகைப்புடன் பார்த்தார்கள்.

“அதற்கு நிறைய பணம் செலவாகுமே” தீபா. திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அத்தை.

”மாமாவின் இன்ஷ்யுரன்ஸ்  பணம் தான் சில லட்சங்கள் இருக்கின்றதே, அத்தை சௌகர்யமாக வாழ்வதற்கு அந்த பணம் உதவட்டுமே” என்றவன், அவன் அம்மாவைப் பார்த்தான். அம்மாவின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்திருந்தது.

“தீபா… என் அம்மாவை சாருவின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு ஹோமில் சேர்க்க அப்ளிகேஷன் வாங்கி வந்திருக்கிறேன். அதற்கு மாதம் வாடகையும் சாப்பாட்டிற்குமாக மாதம் நாற்பதாயிரம் ஆகும். அம்மாவின் பென்ஷன் அதற்கு சரியாக இருக்கும்”

இத்தனை வருடங்களாக அந்தப் பணம் அம்மாவின் சேவிங்க்ஸ் கணக்கில் தான் அபரிமிதமாக சேர்ந்து வருகிறது. அதிலிருந்து சாருவின் கணவன் தான் ஏதாவது பிஸினஸ் செய்கிறேன் என திரும்பாத கடனாக வாங்கிச் செல்வான்.

“ஐயோ” என்று அலறினர் அம்மாவும் சாருவும் .

“சாரு… இனிமேல் நீ அடிக்கடி குடும்பத்தோடு மாதக் கணக்கில் வந்து தங்கக் கூடாது. விருந்தினராக எப்போதோ ஒரு முறை தான் வர வேண்டும். வந்தாலும் காலையில் வந்து மாலையில் திரும்பிவிட வேண்டும், சரியா?  இதுதான் என் தீர்ப்பு” என்று முடித்தான். அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. சாருவின் முகமும் சுண்டிவிட்டது.

“அடுத்த வீட்டு நெய்யே என்று சொல்வது போல் இருக்கிறது. எங்கள் பணத்தை கொடுத்து விட்டு உப்புசப்பில்லாத பத்திய சாப்பாட்டை சாப்பிட வேண்டுமா? நான் எங்கும் போக மாட்டேன்” என்றாள் அம்மா பிடிவாதமாக.

 “நான் கூட என் அம்மாவை எங்கும் அனுப்ப மாட்டேன். அந்தத் தொகையை அப்படியே நம் குழந்தை மேல் பிக்ஸட் டெபாஸிட்டில் போடலாமென்று இருக்கிறேன்” என்றாள் தீபா.

“இதே வீட்டில் நீங்கள் சௌகர்யமாக இருப்பீர்கள், என் குழந்தைக்கும் நல்ல பாதுகாப்பும், நல்ல உறவுகளும் கிடைக்கும் என்று தான் உங்கள் எல்லோரையும் என் வீட்டில் வைத்தேன்.ஆ னால் உங்களால் என் குடும்ப வாழ்க்கையின் அமைதியே போய் விடும் போல் இருக்கிறது. சாரு , முதலில் நீ இங்கிருந்து உன் குடும்பத்துடன் கிளம்பு. ஏதாவது நல்ல நாள்,கிழமைகளில் வந்தால் போதும்.எ ன்ன சொல்கிறீர்கள்?” என்றான் வாசு .

“மாப்பிள்ளை எங்களை மன்னித்த விடுங்கள். வயதான காலத்தில் என்னால் என் பேத்தியைப் பிரிந்து இருக்க முடியாது. சம்பந்தியம்மா என்னை அறியாமல் நான் ஏதும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்” என்றாள் தீபாவின் தாயார்.

“வாசு என்னை மன்னித்து விடு. என்னுடைய பொறாமை குணம் தான் இவ்வளவிற்கும் காரணம். சம்பந்தி அம்மாள் மேலும் தவறில்லை. என்னாலும் என் பிள்ளை, மருமகள், பேத்தி எல்லோரையும் பிரிந்திருக்க முடியாது” என்றாள் அவன் அம்மா.

“சரி, இனிமேலாவது சண்டையில்லாமல் இருங்கள். நான் அவ்வளவு தான் சொல்வேன்” என்றான் வாசு.  

“அண்ணா, எங்களை மன்னித்து விடு. நாங்களும் நாளை காலை என் வீட்டிற்குப் புறப்படுகிறோம்” என்றாள் சாரு

அப்போது ‘யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே’ என்ற கண்ணதாசன் பாட்டு எங்கிருந்தோ கேட்டது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ரகசியம் உடைந்தது (சிறுகதை) – ✍ சியாமளா வெங்கட்ராமன், சென்னை

    கூண்டுக்கிளி (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி