2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அந்தத் தெருவிற்குள் நுழைந்தவுடன் என்னை வரவேற்றதே சாவு வீட்டின் அழுகுரல் சத்தம்தான். கால்கள் நடுங்க மெதுவாக அந்த வீட்டை நோக்கி நடந்தேன்.
ஆழியார் டேம் பிக்னிக்கில் தன் அறுவை ஜோக்குகளால் நண்பர்களைக் கலகலப்பாக்கியவனை… கல்லூரி மாணவர் தேர்தலின் போது எனக்காக இரவு பகல் பாராது உழைத்து என்னை மாணவர் தலைவனாக்கியவனை… தனக்கொரு புது டிரஸ் வாங்கினால் எனக்கும் ஒன்று சேர்த்து வாங்கி நட்புக்கு இலக்கணமாய்த் திகழ்ந்த என் அறைத் தோழன் குணசேகரை உயிரற்ற சடலமாய்… உருக்குலைந்த சதைப் பிண்டமாய்ப் பார்க்க என்னால முடியுமா?.. என் மனசு தாங்குமா?
தடுமாற்றத்துடன் அவன் உடல் கிடத்தப்பட்டிருந்த அறையின் கதவுக்கருகில் நின்று கனத்த இதயத்துடன் எட்டிப் பார்த்தேன்.
அந்த நிமிடம் வரை நான் சிரமப்பட்டு அடக்கி வைத்திருந்த அழுகை என்னையும் மீறி பிரவாகமெடுத்தது. நானா அப்படியொரு உச்சஸ்தாயில் அழுதேன்? எனக்கே ஆச்சரியமாயிருந்தது.
குணசேகரின் சடலத்திற்கருகில் அமர்ந்து மாறி மாறி மார்பில் அடித்துக் கொண்டு கதறிய அவனது தாயாரையும் தங்கையையும் பார்க்கும் போது என் இதயமே வெடித்து விடும் போலிருந்தது வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்று, வெளியில் வந்து நின்றேன்.
அன்று மாலை வரை இருந்து குணசேகரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு இரவே பஸ் ஏறினேன்.
இரவுப் பயணம் என் மன பாரத்தை இன்னும் அதிகமாக்கியது.
அவ்வப்போது தூங்க முயற்சித்து கண்களை மூடுவேன். கண்ணுக்குள் குணசேகரின் உருவம் திரும்பத் திரும்ப வரும். “எத்தனை அன்னியோன்யமா இருந்து என்ன பிரயோஜனம்… கடைசி நேரத்துல அவன் கூட சண்டை போட்டுட்டோமே”
அன்று இரவு எனக்கும் அவனுக்குமிடையில் நடந்த அந்த சண்டை மீண்டும் என் மனத்திரையில் படமாக ஓடியது.
“ஹல்லோ பார்ட்னா;… இன்னிக்கு என்னோட முறை… நான்தான் மெத்தையில் படுக்கணும்… நீ பாட்டுக்கு கம்முன்னு படுத்திட்டே?.. ம்… ம்… எழுந்திரு… எழுந்திரு..” படுத்திருந்த குணாவை உசுப்பினேன்.
“டேய் ஆனந்த்… இன்னிக்கு எனக்கு உடம்பு ரொம்ப முடியலைடா! ப்ளீஸ்… எனக்காக இன்னிக்கு ஒரு நாள் மட்டும் விட்டுக் குடுடா” கெஞ்சலாய்க் கேட்டான் குணசேகர்.
“என்னது… விட்டுக் குடுக்கறதா? அதுசரி… என்ன மாம்ஸ்?.. நம்ம அக்ரிமெண்ட் மறந்து போச்சா?… ‘ஹாஸ்டல்ல குடுத்திருக்கறது ஒரு மெத்தை ஆனா நாம ரெண்டு பேர் இருக்கோம்!… அதனால ஆளுக்கொரு நாள் மெத்தைல படுத்துக்கணும்’ அதானே நம்ம அக்ரிமெண்ட்?.. அந்த வகைல பார்த்தா இன்னிக்கு என்னோட முறைதானே?.. நான்தானே இன்னிக்கு மெத்தைல படுக்கணும்.?”
“சரி… நான் ஒத்துக்கறேன்!… பட் சின்னதா ரெக்வெஸ்ட் பண்றேன்… ப்ளீஸ் இன்னிக்கு மட்டும் எனக்கு மெத்தையைக் குடுடா… எனக்கு உடம்பு சரியில்லைடா”
குணசேகரின் மன்றாடுதலை நான் அலட்சியப்படுத்தும் விதமாய், வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். ஆனாலும் குணசேகர் விடாது கெஞ்சினான்.
“டேய்… ஜுரம் ரொம்ப அதிகமாயிருக்குடா!… இப்ப பாய்ல படுத்தேன்னா மொசைக் தரை ஜில்லிப்புக்கு ஜுரம் அதிகமாயிடும்டா… அப்புறம் காலைல நேரத்துல எந்திரிச்சு… ஊருக்குப் போக முடியாமல் போயிடும்டா”
“ஊஹூம்… அந்த வேலையே ஆகாது” என்றேன் நான்.
சிறிது நேரம் விளையாட்டுக் காட்டி அப்புறமா விட்டுக் கொடுத்திடலாம், என்கிற எண்ணத்தில்தான் இருந்தேன்!… அவனும் என் நச்சரிப்புத் தாங்காமல் மெத்தையை விட்டு எழுந்து தள்ளாட்டமாய்ச் சென்று பாயில் கூனிக் குறுகி படுத்துக் கொண்டான். எனக்கு அவனைப் பார்க்கவே பாவமாயிருந்தது.
“சரி… சரி… போய் மெத்தையிலேயே படுத்துக்கோ…” என்று சொல்ல வாயெடுத்த போது தான் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
சென்று கதவைத் திறந்தேன். பக்கத்து அறை விஜய் நின்று கொண்டிருந்தான்.
“ஏமிரா தொங்கனா கொடுக்கா?” சிரித்தபடியே கேட்டேன்.
“ஃபாரின் பாட்டில் வந்திருக்கு… ரெண்டு ரவுண்டு தேறும்… வர்றியா?” என்றான் அந்த விஜய் கண்ணடித்துக் கொண்டே
என் நாக்கில் ஜலம் ஊறியது “டேய் வார்டன்?” தயக்கமாய்க் கேட்டேன்.
“அது தூங்கி ரொம்ப நேரமாச்சு… இன்னேரம் கனவுல ஹன்சிகா மோத்வானியோட இடுப்ப நோண்டிக்கிட்டிருக்கும்”
அடுத்த நிமிடமே அறைக் கதவைச் சாத்தி விட்டு பக்கத்து அறைக்குச் சென்று வெளிநாட்டுச் சரக்கின் வீரியத்தைச் சோதனை போட ஆரம்பித்தேன்.
மறுநாள் காலை என் அறைக்கு வந்து பார்த்தவன் நொந்து போனேன். “அடடா.. அநியாயமா உடம்பு சரியில்லாதவனை பாயில் படுக்க வெச்சுட்டேனே…” என்னை நானே திட்டிக் கொண்டு குணசேகரைத் தொட்டுப் பார்த்தேன். இன்னும் ஜூரம் இருந்து கொண்டேயிருந்தது.
நான் தொட்டதில் விழித்துக் கொண்ட குணசேகர் அவசரமாய் டைம் பீஸைப் பார்த்தான். உடனே வேக வேகமாய் எழுந்து பாத்ரூமை நோக்கி ஓடினான்.
அடுத்த பதினைந்தாவது நிமிடம் சூட்கேஸூம் கையுமாகக் கிளம்பியவனை நிறுத்தினேன். “ஏண்டா என்கிட்ட சொல்லிட்டுப் போக மாட்டியா?”
“யாரும் யாருகிட்டேயும் சொல்லிட்டு வர்றதுமில்லை… அதே மாதிரி சொல்லிட்டுப் போறதுமில்லை” எங்கோ பார்த்தபடி தத்துவமாய்ச் சொன்னவன் வேக வேகமாக வெளியேறினான்.
அந்த வார்த்தைகளின் அh;த்தம் அப்போதைக்கு எனக்கு சாதாரணமாகத்தான் தெரிந்தது. ஆனால் மறுநாள் கிடைத்த அந்தச் செய்தி அவன் சொல்லிச் சென்ற வார்த்தைகளுக்கு ஒரு மெகா அர்த்தத்தைக் கற்பித்தது.
ஆம்! குனசேகர் சென்ற எக்ஸ்பிரஸ் பஸ்ஸும் இன்னொரு பஸ்ஸும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பதிமூன்று பேர் பலி. குணசேகரையும் சேர்த்து.
நினைவுகளைக் கலைத்து விட்டு பஸ் ஜன்னலின் ஷட்டரைத் தூக்கி வெளியே பார்த்தேன். இதமான குளிர் காற்று மார்பில் மோதி மெய் சிலிர்க்க வைத்தது. வான மணவறை வெளுக்கத் துவங்கி விடியல் மணப் பெண்ணுக்காக காத்திருந்தது.
ஏழு மணி வாக்கில் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்து ரவுண்டடித்து நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கினேன். ஆட்டோ பிடித்து ஹாஸ்டலுக்கு வந்தவன் அன்று கல்லூரிக்குச் செல்ல மனமில்லாமல் படுக்கையில் விழுந்தேன். அறையிலிருந்த ஒவ்வொரு பொருளும் குணசேகர் ஞாபகத்தை தூண்ட புரண்டு புரண்டு படுத்தேன்.
திடீரென்று எழுந்து படுத்திருந்த மெத்தையை காலால் உதைத்து கட்டிலுக்கடியில் தள்ளினேன்.
“இத்தோட சரி… இனிமே வாழ்க்கைல சாகற வரைக்கும் மெத்தைல படுக்கவே மாட்டேன்… இது சத்தியம்.. குணசேகரா… நான் உனக்குச் செய்த பாவத்துக்கு இதுதாண்டா பரிகாரம்… இல்லை தண்டனை”
யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டு எழுந்து சென்று திறந்தேன். தோளில் ஒரு புது மெத்தையைத் தூக்கிக் கொண்டு ஹாஸ்டல் சிப்பந்தி நின்று கொண்டிருந்தான்.
“ஒரு வாரத்துக்கு முன்னாடி நம்ம குணசேகர் தம்பி ஆர்டர் குடுத்திருந்ததாம்… நேத்திக்கு பார்ட்டி வந்து குடுத்துட்டுப் போனான்… எனக்கு என்ன செய்யறதுன்னே புரியலை!… அதான் வாங்கி வெச்சிட்டேன்!.. இதை என்ன பண்றது?”
எரிமலை வெடித்தது போல் எனக்குள்ளிருந்து அழுகை பீறிட வாயைப் பொத்திக் கொண்டு சுவற்றில் சாய்ந்தேன்.
“ஆண்டவா?… இன்னும் எத்தனை யுகங்களுக்கு எனக்கிந்த தண்டனை?” குமுறினேன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings