எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்தக் கிராமத்தில் வழக்கமாக பஞ்சாயத்து கூடும் அந்தப் பெரிய மரத்தினடியில் ஊர் மக்கள் திரண்டிருந்தனர்.
“போன தடவை நம்ம கிட்ட ஓட்டு வாங்கி ஜெயிச்சு போட்டு, நம்ம கிராமத்துப் பக்கமே தலை வெச்சுப் படுக்காத அந்த மாரிமுத்து… அடுத்த வாரம் நம்ம ஊருக்கு மறுபடியும் ஓட்டுக் கேட்டு வர்றானாம்!.. வரட்டும்… வரட்டும்… அவன் கிட்டே நம்ம முடிவை தெளிவா சொல்லிடுவோம்!” என்றார் ஊர்ப் பெரியவர்.
“பின்னே?… நம்ம ஓட்டுல எம்.பி.,ஆகி… பதவியில் உட்கார்ந்துக்கிட்டு… கொள்ளை கொள்ளையா சம்பாதிச்சிட்டு… நம்மளுக்கு எதுவும் செய்யாதவனல்ல அந்த மாரிமுத்து?… அவனை ஊருக்குள்ளேயே விடக் கூடாது” ஆவேசமாக கத்தினான் ஆறுமுகம்.
“வரட்டும்… வரட்டும்… “இந்த தடவை எங்க ஊர்ல யாருமே ஓட்டுப் போடப் போறதில்லை!”ன்னு மூஞ்சியில் அடிச்ச மாதிரிச் சொல்லி அனுப்பிச்சிடலாம்!” என்றார் ஊர்ப் பெரியவர் நிதானமாக.
“ஆமாம்ப்பா… எல்லாரும் நல்லாக் கேட்டுக்கோங்க!… “வர்ற ஓட்டெலக்சன்ல நம்ம கிராமத்திலும் சரி… சுற்று வட்டாரத்தில் இருக்கிற எட்டு கிராமத்திலேயும் சரி… யாருமே ஓட்டுப் போடக்கூடாது!”ன்னு இந்தப் பஞ்சாயத்துல தீர்மானமாயிருக்கு!… அதனால எந்தப் பயபுள்ளையும் பூத்துப் பக்கம் போகக் கூடாது ஆமா!… மீறி எவனாச்சும் போய் விரல்ல புள்ளி வெச்சுக்கிட்டு வந்தீங்க… விரலை மட்டும் இல்லை… கையையும் சேர்த்து வெட்டிப் போடுவோம்!” கண்கள் சிவக்கக் கத்தினான் ஆறுமுகம்.
அந்தத் தீர்மானத்தை அனைவரும் ஒரு மனதாய்ச் சம்மதிக்க கூட்டம் கலைந்தது.
அடுத்த சில நாட்களில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கத் துவங்கியது.
அந்த கிராமத்து மக்களின் தேர்தல் புறக்கணிப்புத் தீர்மானம் பத்திரிகைகள் வாயிலாக தெரிய வர எந்தவொரு அரசியல் கட்சியும் ஓட்டு கேட்டு அந்தக் கிராமத்திற்குள் போக தயங்கின.
“யோவ்… மாரிமுத்து நீதான்யா அந்தத் தொகுதியோட மாஜி எம்.பி.?… நீயே போகத் தயங்கினா எப்படியய்யா?.. போய்யா… போய் நாலஞ்சு மீட்டிங் போட்டு…. கொஞ்சம் காசு பணத்தை அள்ளி வீசி, அந்தப் பரதேசிப் பசங்களோட ஓட்டைப் புடுங்குய்யா!… இதையெல்லாம் கூட நான் சொல்லித் தரணுமாய்யா?” கட்சித் தலைவர் கத்தினார்.
மாரிமுத்துவும் வேறு வழியில்லாமல் தனது தேர்தல் சுற்றுப்பயண லிஸ்டில் அந்த கிராமத்தின் பெயரையும் சேர்த்துக் கொண்டார்.
வரிசையாக ஒவ்வொரு கிராமத்திலும் மீட்டிங், கொடியேற்றுதல், பெயர் வைத்தல், போன்ற அரசியல் சில்மிஷங்களைச் செய்து கொண்டே அந்தக் கிராமத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார் மாரிமுத்து.
“ஐயா ஊர்ப் பெரியவரே!… மாரிமுத்துப் பயல் ஓட்டுக் கேட்டு நம்ம ஊரை நோக்கி வந்திட்டிருக்கானாம்!” ஆறுமுகம் ஓடி வந்து மூச்சு வாங்கியபடி சொல்ல, ஊஞ்சலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஊர்ப்பெரியவர் வேகமாய் எழுந்தார்.
“பயபுள்ள… எத்தனை எகத்தாளம் இருந்தா… அந்த மாரிமுத்து நம்ம கிட்ட ஓட்டுக் கேட்டு வருவான்?.. நாமதான் நம்ம முடிவைத் தேங்காய் உடைச்ச மாதிரிச் சொல்லிட்டோம்!ல பிறகெதுக்கு அந்தப் பன்னாட இங்க வருது?” கோபத்தில் அவர் மீசை துடித்தது.
“அது மட்டும் இல்லைங்க ஐயா… ரெண்டு மூணு நாளாவே அவனோட ஆளுங்க நம்ம கிராமத்துக்குள்ள பூந்து நிலைமையை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கானுங்க!.. நம்ம ஆளுங்க சிலரைப் பார்த்து, “காசு பணம் எவ்வளவு வேணும்னாலும் கொடுக்கிறோம்… ஊக் கட்டுப்பாட்டை மீறி ஓட்டுப் போடுங்கள்”னு என்று கேட்டுட்டு இருக்கானுங்க!”.
அதைக் கேட்டதும் ஊர் பெரியவரின் ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. “பாத்தியா அரசியல்வாதி புத்தியைக் காண்பிச்சிட்டான் பாத்தியா?… விடக் கூடாது அவனை!.. ஊருக்குள்ளார வருவதற்கு முன்னாடியே… எல்லைச்சாமி கோவிலோட அவனைத் திருப்பி அனுப்பிடனும்!… ராஸ்கல்… காசு குடுத்து ஓட்டு வாங்கற புதுப் பழக்கத்தைக் கொண்டு வர்றானா இந்த ஊருக்குள்ளார?”” ஆவேசமாய் அங்கிருந்த நீண்ட கம்பைத் தூக்கிக் கொண்டு அவர் தெருவில் இறங்க, அவரைப் பார்த்த ஊர் மக்கள் தாங்களும் ஆளுக்கொரு தடியைத் தூக்கிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தனர்.
எல்லைச்சாமி கோவில் அருகே வந்து, அந்தக் கூட்டம் ஆக்ரோஷத்துடன் காத்திருந்தது.
மாஜி எம். பி. யின் ஜீப் அந்தக் கிராமத்தை நெருங்கியது. “அடுத்து என்ன நடக்கப் போகுதோ… தெரியலையே?” எம்.பி.யின் உதவியாளன் குரல் நடுங்கச் சொல்ல.
“அடப் பயந்தாகுள்ளி… நமக்கு பின்னாடி வர்ற கூட்டத்தை பாருடா!… கிட்டத்தட்ட பத்துக் கார்கள்… நம்ம ஜீப்பையும் சேர்த்து மொத்தம் பதினோரு வண்டி!… எப்படியும் சுத்தமா நாப்பது நாப்பத்தியஞ்சு பேர் இருப்போம்!… அப்படியிருக்கும் போது… என்னத்தை பண்ணிடுவானுக அந்தப் பஞ்சப் பரதேசிப் பயலுக?” என்றார் வேட்பாளராக வந்திருக்கும் மாஜி. எம்.பி. மாரிமுத்து.
அப்போது அவர் கை அவரையுமறியாமல், பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மண்வெட்டி மேல் பட்டு விட உதறிக் கொண்டே, “ச்சை… எந்தப் பொறம்போக்குய்யா இதை இங்க வெச்சது?” கேட்டார்.
“ஐயா… நான்தான் எடுத்திட்டு வந்தேன்!… எதுக்குன்னா… இந்த தடவை நம்ம சின்னம் “மண் வெட்டி”… அதை மக்களுக்கு காட்டினால் தானே சரியா ஒட்டுப் போடுவாங்க?… இல்லைன்னா தெரியாத்தனமா போன தடவை போட்ட மாதிரியே “காக்கை” சின்னத்துக்கே போட்டுட்டானுகன்னா… போச்சு… கதை கந்தலாயிடும்!”.
“சரி… அதை டிக்கியில் வைக்க வேண்டியதுதானே?” என்றார் மாரிமுத்து முகச்சுளிப்புடன்.
ஜீப்பை அந்தக் கூட்டம் கும்பலாய் வந்து தடுத்தது.
“அப்படியே திரும்பி போ… நாங்க யாரும் இந்த தடவை ஓட்டு போடறதா இல்லை!” ஊர்ப் பெரியவர் உரத்த குரலில் சொல்ல.
“அப்படிச் சொல்லக் கூடாது பெரியவரே!” என்றபடியே மாரிமுத்து ஜீப்பை விட்டு இறங்க,
மக்கள் கூட்டம் ஒட்டு மொத்தமாய் “இறங்காதே… இறங்காதே… திரும்பிப் போ… திரும்பிப் போ!” என்று கத்தியது.
மாரிமுத்துவுக்கு கோபம் வரத் துவங்கியது. “இது சுதந்திர இந்தியா!… யாரு வேணும்னாலும்… எங்கே வேணும்னாலும்… போகலாம்… வரலாம்… யாரும் யாரையும் தடுக்க முடியாது!”
“ப்பூ… இதுதான் சுதந்திரத்தை நீ புரிஞ்சு வெச்சிருக்கற லட்சணமா?… ஆமாம்… காந்தி தெரியுமா உனக்கு?… சுதந்திர போராட்டக் கதை தெரியுமா உனக்கு?… ஹும்… அதெல்லாம் உனக்கெங்கே தெரியப் போகுது?… எப்படி ஊழல் பண்றது?… எப்படி லஞ்சம் வாங்குவது?… எப்படி சொத்து சேர்ப்பது?.. எப்படி ஓட்டுப் போட்ட மக்களை ஏமாத்துறது?… அதெல்லாம்தானே உனக்குத் தெரியும்!” ஊர்ப் பெரியவர் உண்மையைப் போட்டுடைக்க,
“ஏய் இந்த ஆளு தீவிரவாதத்தைத் தூண்டி விடுறான்யா… அடிச்சு… நொறுக்குங்கடா இவனை” என்று மாரிமுத்து கத்த, பின்னாலிருந்த காருக்குள்ளிருந்து கட்சித் தொண்டர்கள் என்கிற பேரில் வந்திருந்த ரவுடிகள் இறங்கினார்கள்.
அதற்குள் பாய்ந்து வந்த அந்தப் பாமர மக்கள் கூட்டம், மாஜி எம்.பி.யைத் “தர…தர!”வென்று இழுத்துச் சென்று, தங்கள் கைகளில் இந்த தடியால் அடிக்க துவங்கியது.
ஆக்ரோஷமாய்ப் பாய்ந்து சென்று ஜீப்பிலிருந்த மண்வெட்டியை எடுத்து வந்து, மாரிமுத்துவின் தலையில் இறக்கினான் ஒருவன். பீறிட்டு வரும் ரத்தத்தைக் கையால் தடுத்தவாறே தன்னைத் தாக்கியவனைத் திரும்பிப் பார்த்த மாரிமுத்து அதிர்ந்தார்.
அவருடன் வந்திருந்த அவரது விசுவாசமான உதவியாளந்தான் அந்தக் காரியத்தைச் செய்திருந்தான். “டேய்… நீ… நீயா?” திக்கித் திணறி மாஜி எம்.பி.கேட்க,
“எதிர்க்கட்சிக்காரன் கிட்ட பெரிய தொகை வாங்கிட்டேனல்ல?… அந்த விசுவாசம்தான்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து நழுவினான் அந்த உதவியாளன்.
மண்டை இரண்டாகப் பிளந்து, ரத்தம் கொட்டத் தரையில் விழுந்து துடிக்கும் மாஜி எம்.பி.யைப் பார்த்த ரவுடிகள், வந்த வேகத்திலேயே திரும்பி, காரில் ஏறிப் பறந்தனர்.
கட்சிக்காரர்களும் கீழே இறங்கப் பயந்து கொண்டு, ஜீப்பைக் கிளப்பி விட, அந்த இடம் சில நிமிடங்களிலேயே காலியானது.
ஊர் மக்களும் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் வேட்பாளரைக் கண்டு கொள்ளாமல் சென்று விட,
மாஜி எம்.பி.யின் வலதுகைப் பக்கம் அவரது இந்நாளைய சின்னமான “மண் வெட்டி” ரத்தப் பூச்சுடன் கிடக்க, அதில் ஒட்டியிருந்த ரத்தத்தை இந்நாளைய சின்னமான “காக்கை” கொத்திக் கொத்தித் தின்று கொண்டிருந்தது.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings