எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ஸ்ரீராம் எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் இம்போர்ட்ஸ்” கம்பெனியின் முக்கிய பொறுப்பில் இருந்த சஞ்சனா பாஸ் கொடுத்த லெட்டர்களை வேக வேகமாக கம்ப்யூட்டரில் டைப்படித்துக் கொண்டிருந்தாள்.
அவள் மொபைலில் ரிங்டோன் அடிக்க ..கண்களை சற்றே தாழ்த்தி மொபைலைப் பார்த்தாள் ..அஸ்வின் ..அவன் பெயரை டிஸ்ப்ளேயில் பார்த்ததும் மனம் துடித்தது. ஏனோ போனை எடுக்க மனம் அஞ்சியது..முழு ரிங் வந்து கட்டாக ..வேலையில் கவனத்தைத் திருப்பினாள்.
திரும்பவும் போன் அடிக்க .. போனை எடுத்து காதில் ஒற்றியவள் சுரத்தில்லாமல் “ஹலோ அஸ்வின்” என்றாள்.
“என்ன சஞ்சு பிஸியா? “
“ஆமாம் அஸ்வின்! நிறைய வேலை.. டைட்டாகத் தான் போகுது.”
“சாயங்காலம் பீச்சுல நாம வழக்கமா சந்திக்கிற அந்த இடத்துக்கு வந்துட முடியுமா?” என்றான் அஸ்வின்.
“அஸ்வின் நான் கூட உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நானே உன்ன கூப்பிடனும்னு நினைச்சேன். இன்னைக்கு வேலை கொஞ்சம் அதிகம்..அதனால முடிச்சிட்டு கூப்பிடலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீயே கூப்பிட்டுட்ட ..”
“ஓகே சஞ்சு! அப்ப சாயங்காலம் பார்க்கலாம் “என்று போனை வைத்தான்.
அஸ்வினை நேரில் எப்படி பார்ப்பது? அவனிடம் எப்படி இந்த விஷயத்தை சொல்லப் போறேன் ..குற்ற உணர்வு அவளைப் பிடித்தாட்ட ..அதற்கு மேல் வேலை ஓடவில்லை..
ஏதோ வேலையை முடித்து, அந்த லெட்டர்களை பாஸ்ஸிடம் கொண்டு போய் கொடுத்து விட்டு, அவன் பதிலுக்காக காத்திருந்தாள் சஞ்சனா. அப்படியே ஒரு மணி நேரம் பர்மிஷன் கேட்க வேண்டும் .. என்று மனதுக்குள் எண்ணியவளாய்.
“என்ன மிஸ் சஞ்சனா! எப்போதும் நீங்க அடிச்சா கண்ண மூடிட்டு கையெழுத்து போடலாம். இன்னைக்கு இவ்வளவு தப்பு..முதல்ல டேட்டே தப்பு.. அதை திருத்துங்க. இங்க பாருங்க நான் அந்த ரெட் லைன்ல அண்டர் லைன் பண்ணி இருப்பதெல்லாம் கையோட திருத்துக்க” என்று மடமடவென மார்க் பண்ணிக் கொடுத்தான்.
சஞ்சனாவுக்கு சங்கடமாக இருந்தது. இது நாள் வரை வேலையில் எந்த தவறும் கிடையாது ..மன அமைதி குறைவு வேலையை எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்று எண்ணியவளாய் .. தன் பாஸ்ஸைப் பார்த்து…
“சாரி சார் திருத்திடறேன் ! சார்..ஒரு மணி நேரம் பர்மிஷன் வேண்டும்” என்றாள் தயக்கத்தோடு .
“ஓகே எடுத்துக்கங்க …அதுக்குள்ள மத்தியானம் அனுப்புற முக்கியமான தபால்களை எல்லாம் அனுப்பிடுங்க” என்றான். தலையாட்டி விட்டு வெளியே வந்தாள் சஞ்சனா.
இன்று மாலை வழக்கமான இடத்தில் கடற்கரையில் அமர்ந்திருந்தனர். சஞ்சனாவும், அஸ்வினும் .. “நாம சந்திச்சு இன்னையோட ஒரு வருஷம் ஆச்சு இல்லையா சஞ்சு..” வழக்கமான மலர்ச்சி அவள் முகத்தில் இல்லாததை கவனித்தான்…
“என்னாச்சு சஞ்சு என்ன விஷயம்..” என்றான் …அவள் மௌனத்தை பதிலாக போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
“ஏதோ ஒன்னு உன் மனச கஷ்டப்படுத்துறது புரியுது.. என்னன்னு நீ வாய்விட்டு சொன்னாத்தானே தெரியும்..”
சஞ்சனா முதல் நாள் வீட்டில் நடந்த ரகளையைக் கூறினாள்.
“அப்பாவுக்கு நம்ம விஷயம் இன்னும் தெரியாது அஸ்வின். நான் உன்னை காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்ள விருப்பப்படுறேன்னு சொல்லனும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன் .அதற்குள் ஒரு திருப்பம்.. அப்பாவின் நெருங்கிய நண்பர் தன்மகனுக்கு என்னை ரொம்ப பிடித்திருப்பதாகவும், கல்யாணத்திற்கு சம்மதமான்னு?” கேட்டு நேத்திக்கு வீட்டுக்கு வந்துட்டார்.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சந்தோஷம் தாங்கலை, நல்ல இடம், தெரிஞ்ச மனுஷன், அங்க கல்யாணம் பண்ணிட்டு போனா நீ சந்தோஷமா இருப்ப அப்படின்னு என்னை ஒரே வற்புறுத்தல். எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு எவ்வளவு சொல்லிப் பார்த்தேன், அப்பவும் அவங்க கேட்கிறதா இல்லை. அப்புறம் தான் உன்னை பற்றி சொன்னேன். உன்னை கல்யாணம் பண்றது தான் எனக்கு சந்தோஷம்ன்னு சொன்னேன் .
அப்பாவும் அம்மாவும் ஒரேடியாக மறுத்து விட்டார்கள். மீறி நான் காதல் கல்யாணம் என்று போனால்’ நாங்கள் உயிரோடு இருக்க மாட்டோம் அப்புறம் உன் தங்கைக்கும் திருமணம் நடக்காது’ என்று சொல்லி ஒரே அழுகை ஆர்ப்பாட்டம் . அதிலிருந்து அப்பாவும் அம்மாவும் என் கூட கிட்ட முகம் கொடுத்து கூட பேசலை” அழ ஆரம்பித்த சஞ்சனாவை சமாதானப்படுத்தினான் அஸ்வின்.
“ஒன்னு செய்வோமா அஸ்வின் நாம ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?” அழுகையினுடைய கேட்ட சஞ்சனாவின் கைகளைப் பற்றிக் கொண்டான்.
“நடைமுறையில் அதெல்லாம் சாத்தியம் இல்லை சஞ்சனா …உங்க அப்பா உனக்கு ஒரு நல்ல நிலையான சம்பளம் வரக்கூடிய பையனை நிச்சயிக்க நினைக்கிறார். அவர் நினைக்கிறதும் தப்பில்ல…அதுவும் சரிதானே ” என்றான் ..
கோபத்துடன் டக்கென்று எழுந்து நடந்தாள் சஞ்சனா அவனை திரும்பிப் பாராமல் “உன் அன்பு காதல் எல்லாம் அவ்வளவு தான் எனக்காக போராட கூட நீ தயாராக இல்லை.போதும் நீ ஒரு கோழை.. உன்னை விட அவனே மேல்” என்று சொல்லி விட்டு கடகடவென்று நடந்தாள்.”
இதுவரை கதை சொன்ன டைரக்டர் S.A .. தன்னைச் சுற்றி உட்கார்ந்திருந்த, அசிஸ்டண்ட் டைரக்டர் வேலை கேட்டு வந்த பத்து பேரையும் உற்று நோக்கி…
“இப்ப நான் இந்த சிச்சுவேஷனை சொல்லிட்டேன்.. மேற்கொண்டு உள்ள கதையை நீங்க யோசிச்சு முடிக்கனும்..ஆனா ஒன்னு ஒவ்வொருத்தரும் ரெண்டு விதமா கதையை கொண்டு போய் முடிச்சிருக்கனும் .அதாவது ஒவ்வொருத்தரும் ரெண்டு விதமா கதை சொல்லனும். யாருடைய கதை செலக்ட் ஆகுதோ..என்னுடைய கதைக்கு மேட்ச் ஆகுதோ.. அவங்க என் அடுத்த படத்தினுடைய அசிஸ்டன்ட் டைரக்டர் …போங்க நீங்க ரெண்டு நாள் எடுத்துட்டு உங்க கதையோட வாங்க.” பிரபல டைரக்டர் S.A.. சொல்லி முடிக்க அவர்கள் 10 பேரும் பரபரத்தார்கள்..
டைரக்டர் S.A.. காரை நோக்கி நடந்தார் ..தனக்குள் சிரித்துக் கொண்டார் ..காதில் ஏறி அமர்ந்ததும் கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தில் தலையில் இருந்த நரைத்த முடி கண்ணில் பட்டது. உதடுகளில் புன்னகை.
அவருடைய கதையில் அன்று சஞ்சனா அழுதாள்… அஸ்வினுக்கு புரிந்தது.. நிலையான வேலை எதுவும் இல்லாமல் திரையுலகில் கால் பதிக்க அவன் ஸ்டுடியோ ஸ்டுடியோவாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது சஞ்சனாவின் பெற்றோருக்கும் தெரியும்.
முதல் நாள் அவனை தனியே கூப்பிட்டு “மகள் வாழ்க்கையை கெடுத்து விடாதே” என்று அவன் அப்பா கெஞ்சியது மனதிற்குள் வந்தது ..
ஒரு விதத்தில் அவர் கவலையும் அவனுக்கு நியாயமாகவே பட்டது ..தான் திரையுலகில் ஜெயிப்பதில் எந்தவித உறுதியும் கிடையாது. அது காலத்தின் கையில் ..அப்படி இருக்கும்போது கை நிறைய சம்பளம் வாங்கும் தன் நண்பனின் மகனை தன் மகளுக்கு வாழ்க்கை துணையாக ஆக்க அவன் பெற்றோர் துடிப்பது அவனுக்கு நியாயமாகவே தோன்றியது.
அவர்களே தன் நண்பனையும், அவர் மகனையும் வரச் சொல்லி, தானாக வந்தது போல் மகளை வற்புறுத்தியது எல்லாமே அவனுக்கு தெரியும். இருந்தும் தெரியாதது போல காட்டிக் கொள்ள வேண்டிய சூழலில் அவன் இருந்தான்.சஞ்சனா நல்லபடியாக வாழட்டும் என்ற எண்ணத்தில் விட்டுக் கொடுத்தான்.
இது எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் அழுது சஞ்சனாவை அவன் ஆறுதல்படுத்தினான் ..தன்னை மறந்துவிட்டு.. புது வாழ்வில் அவளை ஈடுபடுத்திக் கொள்ள வற்புறுத்தினான் .அவனுக்கு தெரியும் சஞ்சனாவும் அவள் அப்பா, அம்மாவை எதிர்க்க விரும்ப மாட்டாள். அவள் அப்பாவின் முடிவை ஏற்றுக் கொள்வாள் என்று ..
சஞ்சனா மிடில் கிளாஸ் வாழ்க்கையை தேர்ந்தெடுத்து, தன் வழியே போக, அவனுடைய வாழ்க்கையில் சுக்கிர திசை சுழன்றடிக்க இன்று திரையுலகமே கையெடுத்து கும்பிடும் மிகப்பெரிய ஒரு டைரக்டர் …இன்று தன் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்தாலும் சஞ்சனாவைப் பற்றிய ஒரு நினைப்பு நடுவே மனதில் ஓடத்தான் செய்யும்.
அதே நேரம் வீட்டில் சஞ்சனா யோசித்துக் கொண்டிருந்தாள்.
பிரபல டைரக்டர் அஸ்வின் இடம் அசிஸ்டன்ட் டைரக்டராக வாய்ப்பு கேட்டு சென்ற தன்மகன் ..அவர் வைக்கும் தேர்வில் தேறுவானா? அன்று வாழ்க்கை வைத்த பரிட்சையில் தான் தேறவில்லை ..தன் மகனாகவது அஸ்வினிடம் வெற்றி பெறுவானா ..அவள் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் அவளிடம் இல்லை.. பதில் காலத்தின் கையில் ..
எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings