எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஒரு மார்கழி மாதம்…
அவசரமாக அரூரில் இருந்து சேலம் செல்ல வேண்டும்…
நள்ளிரவு தாண்டி… வேலூரில் இருந்து வந்த பேருந்தில் சன்னல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. குளிர் அப்படி. பேருந்தில் ஏறியதும் புறப்பட்டு விட்டது. தேடிப் பார்த்தால் உட்கார இடம் கிடைக்கவில்லை… பணத்தைக் கொடுத்து பயணசீட்டு வாங்கி நின்றுக் கொண்டே பயணித்தேன்.
பேருந்தின் உள்ளே பார்க்கும் கண்ணாடி வழியே என்னைப் பார்த்த ஓட்டுநர்… “சார் …முன்னாடி வாங்க …குளிருக்கு இதமா இந்த இன்ஜின் மேல் உட்கார்ந்து வாங்க” என்றார்.
பொதுவா சில ஓட்டுநர்கள் இஞ்சினை தெய்வமாகப் பார்ப்பவர்கள் …அதன் மீது உட்கார அனுமதிக்க மாட்டார்கள். அதனால் நானும் இடமில்லை என்றால் …நின்றுகொண்டே சென்று விடுவேன் …கேட்பது இல்லை.
ஓட்டுநரின் பெருந்தன்மையை ஏற்றுக்கொண்டு உட்கார்ந்தேன் …இரவுப் பனிக்கு இன்ஜின் சூடு இதமாகத்தான் இருந்தது .பேருந்தில் இருந்த அனைவரும் இருக்கின்ற துணிகளைத் தலையோடு சேர்த்து மூடிக்கொண்டு உறங்கவும் முடியாமல் உதடுகள் டைப் அடிக்கப் புரண்டுக் கொண்டிருந்தனர்.
ஓட்டுநரும் நடத்துநரும் உறங்காமல் இருக்க… எதை எதையோ பேசிக்கொண்டே வந்தனர் … நான் அமைதியாகக் கேட்டபடி வந்தேன்.
பேருந்து மஞ்சவாடி கணவாய் வெள்ளையப்பன் கோயில் தாண்டியதும் … பின்னுருக்கையில் இருந்து ஒருவர் வந்து ஓட்டுநரிடம்… “சார் ….கொஞ்சம் வண்டிய ஓரமா நிறுத்துங்க …அவசரம்…போகணும்?”
“என்ன சார் …இப்பதானே காளிப்பேட்டையில் டீ குடிக்க நிறுத்தினோம் …அப்ப போய்ட்டு வர வேண்டியது தானே!”
“சார் …நான் சுகர் பேஷண்ட் …பனிக்குளிர் வேற …கொஞ்சம் நிறுத்துங்க சார்”
“நிறுத்துறேன் …நிறுத்தறேன் …”
பேருந்து ஓரங்கட்டி நிறுத்தியதும் …கேட்டவர் இறங்கிப்போக …சற்று நேரத்திற்கு எல்லாம் ஒருவர் பின் ஒருவராகச் சுமார் 10 நபர்கள் இறங்கிவிட்டனர் …பாவம் அவர்களுக்கும் குளிர் இருக்கத் தானே செய்யும். எல்லோரும் மீண்டும் ஏறிவிட்டார்கள் என்று உறுதிசெய்து கொண்ட நடத்துநர் …போலாம் என்று சொல்ல பேருந்து கிளம்பியது…மீண்டும் இருவரிடையே உரையாடல் தொடங்கியது…
ஓட்டுநர் தொடங்கினார்…
“ஏப்பா…இந்தியாவுக்குச் சுதந்திரம் எப்போ கிடைச்சது தெரியுமா?!”
“ஆகஸ்ட் 15, 1947”
“சரி என்னா டைம் இருக்கும்?”
“நள்ளிரவு …”
“யாரு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது?”
“நம்ம காந்தி தாத்தா தான்”
“அது எப்படின்னு தெரியுமா?”
“என்னண்ணே …பல போராட்டங்கள் நடத்திதான் வாங்கிக் கொடுத்தார்…உலகத்துக்கே தெரியுமே!”
“வேற ஒரு முக்கியக் காரணம் இருக்கும் தெரியுமா?!” என்றார் ஓட்டுநர்.
வரலாற்று ஆசிரியரான எனக்குச் சற்று ஆர்வத்தைத் தூண்டியது … “நான் படித்த வரலாற்றில் மறைக்கப்பட்ட செய்தியா இருக்குமோ?” ஓட்டுநர் எதைத் தோண்டி எடுக்கப் போறார்?!”… பொறுத்திருந்தேன்… அவர்களுக்கும் இடையில் புகாமல் உரையாடல்களுக்குச் செவி கொடுத்தேன்.
“தெரியாது அண்ணே …நீங்களே சொல்லுங்க” என்றார் நடத்துநர்
“காந்தியும் .மற்ற இந்திய தலைவர்களும் ஆகஸ்ட் 14, 1947 அன்னிக்கு நைட் லார்ட் மவுண்ட் பேட்டன் தலைமையிலான கிழக்கிந்திய கம்பெனியினருடன் பேச்சுவார்த்தை போச்சு …அது நள்ளிரவு தாண்டி போச்சு ….ஒரு கட்டத்துல… இந்திய பிரதிநிதி ஒருவர் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூட்டத்தில் இருந்து எழுந்து போனார் …அவர் போன கொஞ்ச நேரத்திற்குப் பின்னர் …ஒவ்வொருவராகப் போயினர் …இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த லார்ட் மவுண்ட் பேட்டன்…
“இந்தியர்கள் ஒன்னுக்குப் போறதுல கூட ஒற்றுமையா இருக்காங்க இனி நாம இந்தியாவில இருக்க கூடாது அப்படின்னு “… சுதந்திரம் கொடுத்துட்டு போயிட்டான் …என்றார்.
நடத்துநர் சத்தமாகவே சிரித்துவிட்டார் …நாம் மௌனமாகவே சிரித்தேன்.
இது நடந்து ஒருவாரம் கழித்து …வார வேளை நாளின் இறுதிநாள் …வெள்ளிக்கிழமை இறுதி பாடவேளை
ஆறாம் வகுப்புக்கு “இந்திய சுதந்திரப் போராட்டம்” பற்றிப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன் …பின் வரிசையில் இருந்து எழுந்த மாணவன் ஒருவன் ஒரு கையை உடலோடு கட்டிக் கொண்டு ..ஒரு கையை முன் நீட்டி விரல்களை மடக்கி சுண்டு விரலை மட்டும் காட்டினான்…
“என்னடா ..?”
“ஐயா …அவசரம் …?”
“போயிட்டு வா ” என்று அவனை அனுப்பிய சிறிது நேரத்தில் இன்னொருவன் எழுந்தான் …சுண்டுவிரலைக் காட்டினான் …எனக்கு பேருந்து பயணம் நினைவு வந்தது …அடுத்து சில நிமிடங்களில் என்ன நடக்கும் என்று தெரிந்தது.
“இன்னிக்கு உங்க எல்லோருக்கும் சுதந்திரம்…நீங்க எல்லோரும் போய் விளையாடுங்க” என்று சொன்னதும் துள்ளிக் கொண்டு ஓடினார்கள்.
இறுதியா போன குறும்புக்காரன் ஒருவன் அவன் நண்பனிடம், “டேய்…ஐயாவுக்கும் அவசரம் போல” என்று மெதுவாகச் சொன்னான் …எனக்குத்தான் நன்றாகக் கேட்டுவிட்டது.
உள்ளக்குள் சிரித்துக்கொண்டே நடந்தேன் …எதிர்பட்டது “ஆண்கள் கழிவறை”.
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings