ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு மணி நேரத்தையும், ஒவ்வொரு நாளையும் முழுமையாக, முனைப்போடு வாழும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியமானவொன்று. இதன் முழு அர்த்தம், விழித்திருக்கும் எல்லா நேரங்களிலும் ஏதாவதொரு சாதனையையோ, சாகசத்தையோ நிகழ்த்த வேண்டும் என்பதல்ல. நிகழ் காலத்தில் தெளிவாக வாழ வேண்டும் என்பதே.
“கடந்த காலத்தை விட்டு விடுங்கள்! நிகழ் காலத்தில் வாழுங்கள்! எதிர்காலத்தை உருவாக்குங்கள்” என்கிறார் ஜூலியோ மெலரோ எனும் வெளிநாட்டுச் சிந்தனையாளர்.
உதாரணத்திற்கு, உணவருந்தும் நேரத்தில் அந்த உணவை முழுமையாக அனுபவித்து உண்ணுங்கள். அதை விடுத்து, நேற்றைய ஒரு நிகழ்வைப் பற்றியோ, இன்று முடிக்க வேண்டிய ஒரு செயலைப் பற்றியோ, அல்லது நாளை போகப் போகும் ஒரு விழாவைப் பற்றியோ, மனத்தில் எண்ணிக் கொண்டு உணவை உள்ளுக்குள் திணிப்பது தவறு. மாறாக, அந்தக் கணத்தில் அந்த உணவின் சுவையை ரசியுங்கள். அதன் சத்துக் கூறுகளைச் சிந்தியுங்கள். மனதை இங்கே பாதியும், வேறு எங்கோ பாதியையும் வைத்துக் கொண்டிருக்க வேண்டாம். சிலர் உணவருந்தும் போது புத்தகம் வாசிப்பர், சிலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டே உண்ணுவர், இன்னும் சிலர் செல்போனில் பேசிக் கொண்டே உணவை விழுங்குவர். “என்ன உணவைத் தான் உண்ணுகிறோம்?… அதைத் தயாரிப்பில் என்ன விசேஷம்?… எந்த அளவு நமக்குப் போதுமானது?… என்பதையெல்லாம் கொஞ்சம் கூட எண்ணாமல் கடமைக்கு உண்டு விட்டு, அடுத்த வேலைக்குத் தாவுவது வாழ்க்கையை வாழ்வதற்கு அடையாளம் அல்ல. அது, வாழ்க்கையை நகர்த்துவதே.
கடந்த காலத்திற்கு நாம் திரும்ப போக முடியுமா?….நிச்சயம் முடியாது. அதே போன்று, எதிர்காலத்திற்குள் சென்று பார்த்து விட்டு வரமுடியுமா?…சாத்தியமேயில்லை. ஆக, நிகழ் காலம் மட்டுமே உண்மை. அந்த நிகழ் காலத்தை அனுபவித்து, ரசித்து, கொண்டாடி, வாழ்ந்தாலென்ன?
இந்த இடத்தில் ஒரு கேள்வியை முன் வைக்கலாம். “சரி… நிகழ் காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தால் எதிர் காலத்தைத் திட்டமிட வேண்டாமா?… கடந்த காலப் பதிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டாமா?” என்று. நிச்சயம் இவையிரண்டும் அவசியம் செய்யப் பட வேண்டியவைகளே. எப்போது? அதற்கென ஒரு நேரம் ஒதுக்க வேண்டும், முழுக்க முழுக்க அந்த சிந்தனையோடு மட்டும் வாழ வேண்டும். அவ்வாறு செய்யப்படும் போதுதான் அந்த சிந்தனையும் நேர் கோட்டில் பயணிக்கும், எதிர்காலத் திட்டமும் செம்மைப்படும். ஒரு பேருந்து ஓட்டுனர், பணியின் போது தன் கவனத்தையும், மனத்தையும் நூறு சதவீதம் நிகழ் காலத்தில் பதித்திருந்தால் மட்டுமே பயணம் நல்லவிதமாய் இருக்கும். அதை விடுத்து, குடும்ப பிரச்சினைகளையும், பொருளாதாரப் பற்றாக் குறையையும், கடந்த காலத்தின் தவறுகளையும் நினைத்துக் கொண்டே பேருந்தை இயக்கினார் என்றால் விபத்தை அவர் வலிய ஏற்கிறார் என்றே அர்த்தம். உடல் மட்டும் நிகழ் காலத்தில் இருக்க, உள்ளம் வேறெங்கோ இருந்தால் தொலைந்து போவது அந்த நிகழ் காலம் மட்டுமல்ல, அடுத்து வரும் எதிர்காலமும்தான்.
வெற்றியை எட்டியவர்களில் பெரும்பாலானோர், ஆரம்ப காலங்களில் கடுமையான சோதனைகளைச் சந்தித்து, அவற்றைக் கடந்து, தாண்டி, வந்தவர்களே. தாங்கள் அனுபவித்து மீண்ட துயர நிமிடங்களையே, அவர்கள் ஒவ்வொரு நாளும் எண்ணிக் கொண்டு இருந்திருப்பார்களேயானால், அவர்கள் சிகரத்தைத் தொட்டிருக்க முடியாது, சிக்கல்களைத் தான் தொட்டிருப்பார்கள். வெற்றியை எட்டியிருக்க முடியாது, வெறுமையைத்தான் வாங்கியிருப்பார்கள்.
சிலர் சலித்துக் கொள்வர், “அது செரி, இருக்கற வேலைகளைச் செய்யவே நேரமில்லை!… இதுல நிகழ் காலத்தில் மட்டும் வாழணுமாம்!…ஒரு வேலையைச் செய்யும் போது அதை மட்டுமே நினைக்கணுமாம்!… எப்படி முடியும்?… ஓடுற ஓட்டத்துல இதெல்லாம் ஆகிற காரியமா?” என்று. உண்மையில் “நேரமில்லை” என்று சொல்வது நாகரீகமான சோம்பேறித்தனம். எல்லோருக்குமே ஒரே அளவு நேரம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. சாதனையாளர்கள் தமக்களிக்கப்பட்ட நேரத்தை நுட்பமாகப் பயன்படுத்தி, வித்தியாசமாகச் செலவழித்து, அற்புதங்களைப் புரிகின்றனர். சாமான்யர்கள் தங்கள் நேரத்தை கவனமாக கையாள மறந்து, ஒரே நேரத்தில் பல வேலைகளை, பல சிந்தனைகளை, பல எண்ணங்களைத் திணித்து குழப்பத்திலேயே வீழ்ந்து கிடக்கின்றனர்.
நண்பரொருவர், தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தார். கடைசியாக செய்திகள் முடியும் தறுவாயில் உள்ளே வந்த நான், “என்னாச்சு… மொகாலியில் நம்ம ஆளுங்க ரொம்ப மோசமா ஆடிட்டிருக்காங்க போலிருக்கு!” என்று கேட்க, அவர் விழித்தார். “நியூஸ்ல சொல்லியிருப்பானே?” என்று நான் கேட்டதற்கு, “நான் கவனிக்கலை!” என்றார். தொலைக்காட்சி முன் அமர்ந்து செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தவர் அந்தச் செய்தி வந்திருந்தும், அதைத் தவற விட்டிருக்கிறார் என்றால், அவர் நிகழ் காலத்தில் வாழவில்லை. “உடல் இங்கே, மனம் எங்கோ!” என்றுதான் இருந்திருக்கின்றார். உண்மையில் அவரைப் போன்ற “ஆப்ஸெண்ட் மைண்டட் புரஃபஸர்”கள் தங்களைத் தாங்களே மட்டுமல்லாது, தங்களுடன் இருப்பவர்களையும் சேர்த்துக் குழப்பி விடுவர்.
மாணவன் நிகழ் காலத்தில் வாழ்ந்தால் மதிப்பெண்களைப் பெறுவான். வியாபாரி நிகழ் காலத்தில் வாழ்ந்தால் லாபங்களைக் குவிப்பான். குடும்பத் தலைவனோ… தலைவியோ நிகழ் காலத்தில் வாழ்ந்தால் சந்தோஷங்களை அனுபவிப்பர்.
காலம் மிகக் குறுகியது. நாம் செய்ய நினைக்கும் அனைத்தையும் செய்து முடிக்க காலம் போதாது. இந்த நேரத்தில் இந்த வேலை, இதற்கடுத்து அந்த வேலை, அதை முடித்த பின் வேறொன்று, என்று அழகாகத் திட்டமிட்டு நேரத்தை நிர்வகித்தால், உபரி நேரமே கிட்டும். அந்த உபரி நேரத்தையும் தெளிவாக உபயோகித்தால் இன்னும் பல காரியங்களைச் சாதிக்கலாம். உங்கள் நேரம் உங்கள் கையில், அதை நீங்கள் உபயோகிக்கும் விதத்தில்தான் உங்கள் எதிர்காலமே அமைந்திருக்கின்றது. கடந்த காலத்திலேயே வாழ்ந்தால் நிகழ் காலத்தில் வாழ முடியாது. நிகழ் காலத்தைத் தொலைத்தால், எதிர்காலம் இருண்ட காலமாகிவிடும்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings