in

இந்த எண் உபயோகத்தில் இல்லை (சிறுகதை) – ✍ ரமணி

இந்த எண் உபயோகத்தில் இல்லை (சிறுகதை)

டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

சிவசாமி ஓய்வுபெற்ற அரசு ஊழியர். தனது கிராமத்து வீட்டில் மனைவி சிவகாமியுடன் வசிக்கிறார். அன்று இரவு கைபேசியை எடுத்தார். காதில் வைத்தார்.

“ஹலோ… மை டியர் சன்….. எப்படியிருக்கே…. நானா… ரொம்ப நல்லா இருக்கேன்… வேளா வேளைக்கு டாண் டாண் ணு உங்கம்மா டிபன், சாப்பாடு எல்லாம் தயார் பண்ணித்தறா. நானும் உங்கம்மாவும்  ஜம்முனு இருக்கோம்.

ஆமாம்… அங்கே எப்படி… நீ, மருமகள், குழந்தை எல்லாரும் சௌக்கியமா? இன்னிக்கு என்ன டிபன்… அடையா…. வெரிகுட்… எனக்கும் ரொம்பப் பிடிக்கும். உன் அம்மா  மாசத்துல ஒருநாள் அடை பண்ணுவா…. வெண்ணை, வெல்லம், தேங்காய் சட்னி…. ஆஹா… அற்புதமா இருக்கும்.

சரி…. எல்லாரும் வேளாவேளைக்கு ஒழுங்கா சாப்பிடறேளா? ஹும்…. எப்படி சாப்பிடுவேள்…. ரெண்டு பேரும் வேலை வேலைன்னு பறக்கறேளே…..அப்புறம் எப்படி….. டேய்…. வேலை வந்துண்டேதான் இருக்கும். அதுக்காக சாப்பிடாம இருக்கறதா…. தப்புப்பா…. உடம்பு என்னத்துக்காறது…. என்ன வேலையிருந்தாலும் டைமுக்கு சாப்பிடணும்.

பர்ட்டிகுலரா பிரேக்ஃபாஸ்ட் ரொம்ப இம்பார்ட்டண்ட்.. காலமே 9 மணிக்கு முன்னே முடிச்சுடணும்…. ஓகேவா…. அப்புறம். மருமகள் எப்படி இருக்கா….. அவளையும் வேளா வேளைக்கு சாப்பிடச்சொல்லு… நீ சொல்லியா கேக்கப்போறா….

நான்தான் பார்த்தேனே பாதிநாள் பிரேக்ஃபாஸ்ட் கட்…. உங்களைச் சொல்லிக் குத்தமில்லே…. இந்த ஜெனரேஷன் எல்லாரும் அப்படித்தான் இருக்கா… ஓகே… ஓகே.

ஆமாம்… குழந்தை ஸ்கூல் போறானா…. நன்னாப் படிக்கறானா…. படித்தம் முக்கியம்டா…. நல்ல மார்க் வாங்கினாதான் வால்யு. வேணுமானா, டியூஷன் ஏதாவது வச்சிக்கோ…. அவனும் வேளா வேளைக்கு நன்றாக சாப்பிட வை.

என்னடா இவன் தின்னறதுலேயே குறியா இருக்கேனே பாக்குறியா…. ஆமாம்…. அதுக்குத்தானே சம்பாதிக்கறோம்…. முதல்ல சாப்பாடு…. அது போகத்தான் மீதியெல்லாம்…. …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

ஆமாம் நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்  நேரமாகுது…. போ… போ…. ரொம்ப நேரம் தூக்கம் முழிக்காதே. வேளா வேளைக்குத் தூங்கணும். வாரத்தில் ஒரு நாள் எண்ணை தேச்சுக்குளி. உடம்பு சூடு குறையும். ஓகே…. எங்களைப் பத்திக் கவலைப்படாதே. நாங்க நன்னாயிருக்கோம். இங்கே ஒரு குறைவுமில்லே…. நீ ஒடம்பைப் பாத்துக்கோ…. பை…. குட் நைட்…!” 

காதிலிருந்து கைபேசியை எடுத்தார். சிவகாமி கையை சேலைத் தலைப்பில் துடைத்துக் கொண்டு வேகமாக வந்தாள்.  

“என்னங்க நம்ம புள்ளைகிட்டே தானே பேசறீங்க…. தாங்க… நானும் ரெண்டு வார்த்தை பேசிக்கிறேன்…. “

“இல்லேம்மா…. அவன் ரொம்ப பிஸி…. ஞாயிற்றுக்கிழமை பேசலாம்”  

“ஆமாம்…. இப்படித்தான் சொல்லுவீங்க…. ஞாயிற்றுக்கிழமை வந்துட்டுப் போயிட்டு இருக்கும். நீங்க என்னைப் பேசவே விட மாட்டீங்க…. எப்படியோ அவங்க நல்லாருக்காங்க இல்லே….. அது போதும்…”

அடுத்த நாள் காலை சிவசாமி வெளியே கிளம்பினார்.

” ஏ…. இவளே…. ஃபோனை சார்ஜுல வைச்சிட்டுப் போறேன்….பாத்துக்க “

சிவசாமி நடக்கத் தொடங்கினார். அவர் அந்தப் பக்கம் போனதும் சிவசாமி யின் நெருங்கிய நண்பர் ராமசாமி வந்தார்.

“சிவசாமி இல்லையா…. எங்கே போய்த் தொலைஞ்சான்…”

சிவகாமி வந்தாள். “வாங்கண்ணா…. இப்பத்தான் வெளீல போனார்…. என்ன ஏதாவது விசேஷமா?”

“ஒன்னுமில்லே…. சும்மாதான்…. அப்படி இந்தப் பக்கம் வந்தேன். பாத்து நாளாச்சு…. பாத்துட்டுப்போலாம்னு…..” 

“ஒக்காருங்கண்ணா…. இதோ காப்பி கொண்டு வரேன்…..”

ராமசாமி உட்கார்ந்தார். சிவகாமி உள்ளே காப்பி போடப் போனாள். அப்போது திடீரென  அவளுக்கு ஒன்று தோன்றியது.  இவர்கிட்டே டயல் பண்ணித்தரச் சொல்லி, புள்ளைகிட்டே பேசலாமே.

“இந்தாங்கண்ணா… காப்பி…. ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா….”

“என்ன வேணும்?”

“ஒன்னுமில்லே…. நேத்து ராத்திரி ரொம்ப நேரம் புள்ளைகிட்ட பேசிட்டிருந்தாரு… நான் கேக்கப் போனேன். கட் பண்ணிட்டாரு…. அதான் நீங்க கொஞ்சம் டயல் பண்ணித் தந்தா….” 

“ஓஹோ…. இவ்வளவுதானே…. ஃபோனைக் கொடுங்க…… நம்பர் என்ன…… ஓ…. வேண்டாம்…. நேத்திக்கு அதுக்கப்புறம் யார்கிட்டேயும் பேசலையே….” என்று ஃபோனை வாங்கி, நேற்று சிவசாமி பேசிய எண்ணுக்கு ரீடயல் பண்ணினார்.  

“நீங்கள் டயல் செய்த எண் உபயோகத்தில் இல்லை”

மீண்டும் பண்ணினார். அதே பதில்.

“தங்கச்சி…. இந்த நம்பர் தானா….. கரெக்டா தெரியுமா….?”

“அவர் நேத்திக்கு பேசினார் அம்புட்டுத்தான் தெரியும்.”  இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது சிவசாமி வந்து விட்டார்.

“அடே…. ராமசாமி….. எப்ப வந்தே….. ஏய்…. காப்பி கொண்டா….”

“அதெல்லாம் குடிச்சாச்சு…. ஆமாம்…. நேத்திக்குப் பையன்கிட்ட பேசினையா….”

“ஆமாம்…. அதுக்கென்ன இப்போ…‌ ஆமாம், என் ஃபோன் உன் கையில…. என்னாச்சு….”

“சிவசாமி…. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…. நேத்திக்கு இந்த நம்பருக்குத்தான் ஃபோன் பண்ணி பேசினயா…..?”

“ஆமாண்டா…. ஆமாம்…”

“அதெப்படிடா….. இந்த எண் உபயோகத்தில் இல்லைனு வருது”

“………”

“என்னடா பேசாம இருக்கே…. அதெப்படிடா……” 

“அந்த எண் உபயோகத்தில் இல்லை” சொல்லிவிட்டு  சிவசாமி முகத்தைத் திருப்பி மேல் துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நாய்ச்சங்கிலி (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

    வாழ்க்கை எனும் கவிதை ❤ (நாவல் – அத்தியாயம் 1) – ✍ ”எழுத்துச் செம்மல்” இரஜகை நிலவன், மும்பை