in ,

இனக் கேடர் | இடாலோ கால்வினோ (மொழிமாற்றச் சிறுகதை) – பாண்டியன் புதுக்கோட்டை

எழுத்தாளர் பாண்டியன் ராமையா மொழியாக்கம் செய்த மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தன் குடிமக்கள் அனைவருமே திருடர்களாகக் கொண்ட ஒரு நாடு இருந்தது.

இரவில் எல்லோரும் மாற்றுச் சாவிகளை எடுத்துக்கொண்டு, லாந்தர் விளக்குகளுடன் வீட்டை விட்டு வெளியேறி, அக்கம் பக்கத்து வீட்டில் திருடச் சென்றுவிடுவர். திருடிய பொருள் மூட்டைகளுடன் அவர்கள் விடியற்காலையில் திரும்பி வந்து பார்க்கும்போது, அவர்களின் சொந்த வீட்டில் களவு போயிருக்கும்.

எல்லோரும் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள், யாரும் எதையும் இழக்கவில்லை, ஏனென்றால் ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து திருடினார்கள், அந்த மற்றவர் மீண்டும் இன்னொரு மற்றவரிடமிருந்து திருடினார், கடைசி நபர் முதலில் திருடிய நபரிடம் திருடும் வரை இந்த திருட்டுச் சங்கிலித்தொடர் நீண்டு கொண்டு போனது. அந்நாட்டில் வர்த்தகம் என்பது வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவரின் பக்கங்களையும் ஏமாற்றுவதாக ஆனது, தவிர்க்க முடியாமல்! அந்த அரசாங்கம் என்பது அதன் குடிமக்களிடமிருந்து திருடும் ஒரு குற்றவியல் அமைப்பாக இருந்தது. குடிமக்களும் தங்கள் பங்கிற்கு அரசாங்கத்தை ஏமாற்றுவதில் மட்டுமே ஆர்வம் காட்டினர். இதனால் வாழ்க்கை சீராகச் சென்றது, யாரும் பணக்காரர் இல்லை, யாரும் ஏழைகளும் இல்லை.

இப்படிச் சென்று கொண்டிருந்த வேளையில் என்ன நடந்ததோ, ஒரு நாள், ஒரு நேர்மையான மனிதர் அந்த நாட்டில் வசிக்க வந்தார். இரவில் சாக்கு மற்றும் விளக்குடன் களவாங்கச் செல்வதற்கு மாற்றாக, புகைபிடிப்பதற்கும் நாவல்களைப் படிப்பதற்கும் அவர் வீட்டிலேயே தங்கினார்.

திருடர்கள் வந்தனர், விளக்கு எரிவதைப் பார்த்தனர் எனவே உள்ளே செல்வதைத் தவிர்த்துவிட்டனர்.

இது சிறிது காலம் நீடித்தது: பின்னர், அவர் எதையும் செய்யாமல் அங்கே வாழ விரும்பினாலும், மற்றவர்கள் தங்கள் களவு தர்மத்தைச் நிறைவேற்றுவதைத் தடுக்கக்கூடாது என்பதை அவருக்கு விளக்க வேண்டிய கட்டாயம் அக்குடிமக்களுக்கு ஏற்பட்டது. அவர் வீட்டில் கழித்த ஒவ்வொரு இரவும் ஏதோ ஒரு குடும்பத்திற்கு மறுநாள் சாப்பிட எதுவும் இல்லாமல் ஆக்கியது.

நேர்மையான மனிதர் அத்தகைய நியாயத்தை எதிர்க்கவில்லை. அவரும் பிறரைப் போலவே மாலையில் வெளியே சென்று மறுநாள் விடியலில் திரும்பி வந்தார், ஆனால் அவர் திருடவில்லை. அவர் நேர்மையானவர். அவருடைய இந்த குணத்தைப் பற்றி நீங்கள் எதுவும் செய்ய இயலாது. அவர் பாலம் வரை சென்று கீழே ஓடை நீர் பாய்வதைப் பார்த்துக்கொண்டு இருந்தார். வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது அவர் வீடு கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைத் தெரிந்து கொண்டார்.

அடுத்த ஒரே வாரத்திற்குள் அந்த நேர்மையான மனிதர் தான் பணமில்லாமல் இருப்பதை உணர்ந்தார், அவரிடம் சாப்பிட எதுவும் இல்லை, அவருடைய வீடு காலியாக இருந்தது. ஆனால் இது ஒரு சிக்கலாக இருக்கவில்லை, ஏனெனில் இது அவர் தெரிந்தே செய்த தவறு; இல்லை, சிக்கல் என்னவென்றால், அவரது குணம்தான் மற்ற அனைத்து வருத்தங்களையும் கொண்டு வந்து சேர்த்தது. ஏனென்றால், யாரிடமும் எதையும் திருடாமல், தன்னிடம் இருந்த அனைத்தையும் மற்றவர்கள் திருடிக்கொள்ள அவர் அனுமதித்தார்; இந்த சிக்கலுக்கு இன்னொரு பக்கமும் இருந்தது. இரவு திருடச் சென்று விடியற்காலையில் வீட்டிற்கு வந்த யாராவது ஒருத்தர் தன் வீடு தீண்டப்படாமல் இருப்பதைக் கண்டார்: அந்த வீட்டை நேர்மையாளர் கொள்ளையடித்து அந்நாட்டின் களவு நீதியை நிலைநாட்டி இருந்திருக்கவேண்டும். ஆனால் இல்லை அல்லவா! எப்படியிருந்தாலும், சிறிது காலத்திற்குப் பிறகு, திருடப்படாதவர்கள் மற்றவர்களை விட தங்களை பணக்காரர்களாக உணர்ந்தனர், மேலும் திருட விரும்பவில்லை. அதே நேரத்தில் நேர்மையானவரின் வீட்டில் திருட வந்தவர்கள் எப்போதும் காலியாக இருப்பதைக் கண்டனர்; நிலைமையை மோசமாக்கும் விதத்தில் அவர்கள் ஏழைகளாகப் போனார்கள்.

இதற்கிடையில், பணக்காரர்களாக மாறியவர்கள், நேர்மையாளரின் வழக்கத்தைப் பார்த்து இரவு நேரத்தில் பாலத்திற்கு அடியில் தண்ணீர் ஓடுவதைப் பார்ப்பதைத் தங்கள் வழக்கமாக்கிக் கொண்டனர். இது குழப்பத்தை அதிகரித்தது, ஏனென்றால் பலர் பணக்காரர்களாகவும், பலர் ஏழைகளாகவும் மாறினர்.

இப்போது பணக்காரர்கள் பார்த்தார்கள், இப்படி தினமும் இரவில் பாலத்திற்குச் சென்றால் விரைவில் ஏழைகளாக்கிவிடுவார்கள். என்ன செய்யலாம் என்று நினைத்தபோது அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது: ‘சரி, நம் சார்பில் போய் கொள்ளையடிக்க ஏழைகளுக்கு பணம் கொடுத்தால் என்ன?’ அவர்கள் ஒப்பந்தங்கள், நிலையான சம்பளம், சதவீதங்கள் என்பனவற்றை உருவாக்கினர்: அவர்கள் இன்னும் நிச்சயமாக திருடர்கள்தான், அவர்கள் இன்னமும் ஒருவரையொருவர் ஏமாற்ற முயன்றனர். ஆனால், வழமை போலத் தோன்றினாலும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகவும் மாறினர்.

பணக்காரர்களில் சிலர் பெரும்பணக்காரர்களாகி விட்டனர், அவர்கள் பணக்காரர்களாக இருக்க அவர்கள் திருடவோ, அல்லது அவர்களுக்காக மற்றவர்கள் திருடித் தரவோ தேவையில்லாமல் போனது. ஆனால் அவர்கள் திருடுவதை நிறுத்தினால், பிற ஏழைகள் அவர்களிடமிருந்து திருடிக் கொண்டிருப்பதன் காரணமாக, இந்தப் பணக்காரர்களும் ஏழைகளாகி விடுவார்கள் அல்லவா.  எனவே அவர்கள் மற்ற ஏழைகளிடமிருந்து தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க ஏழைகளிலேயே மிகவும் ஏழ்மையானவர்களுக்கு பணம் செலுத்தத் தொடங்கினர், ஒரு காவல் துறையை அமைப்பதற்கும் சிறைகளைக் கட்டுவதற்கும்.

எனவே நேர்மையானவர் அங்கே வந்து சில வருடங்கள்தான் கழிந்தது. மக்கள் திருடுவதையும் திருட்டுக் கொடுப்பதையும் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டனர், பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் வேறுபாட்டைப் பற்றி மட்டுமே பேசினர்; ஆனால் அப்போதும் அவர்கள் அனைவரும் திருடர்களாகவே இருந்தனர்.

ஒரே ஒரு நேர்மையான மனிதர் ஆரம்பத்தில் தனியராக இருந்தார், அவர் மிகக் குறுகிய காலத்திலேயே இறந்து போனார் – பசிக்கொடுமையால்!

எழுத்தாளர் பாண்டியன் ராமையா மொழியாக்கம் செய்த மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இழிந்த அந்நியன் (சிறுகதை) – தோமிச்சன் மத்தேய்கல் (தமிழில் பாண்டியன் புதுக்கோட்டை )

    இறைவன் என்னும் இயக்குனர் (சிறுகதை) – முகில் தினகரன்