2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ராகவனும் மோகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இருவரின் கண்களிலும் உலகளாவிய ஆச்சர்யம் பொங்கி வழிந்தது.
பேசறது அம்மாதானா. கண்ணைத் திறக்க மாட்டாங்களா என தவிப்புடன் காத்து நின்ற ராகவனுக்கு அம்மா பேசிய சந்தோஷத்தை விட பேசிய வார்த்தைகள் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.
“அண்ணா! அம்மா தைரியமா இருக்காங்க ஹாஸ்பிட்டல் போறதுக்கு முன்னால உன்கிட்ட அழக்கூடாதுன்னு சொன்னாங்கன்னு சொன்னியே என்னண்ணா இது” என்றான் மோகன்.
“எனக்கும் அதுதாண்டா புரியலை. கட்டில்ல இருந்து விழுந்துட்டாங்கன்னதும் ரொம்பவேப் பதறிப் போயிட்டேன். அதுவும் தலையில அடிபட்டுடுச்சேன்னு கவலையா இருந்திச்சு.
இங்க ஹாஸ்பிட்டல் வந்ததும் டாக்டரும் ரத்தக்கசிவு இருக்கும்னு நினைக்கிறேன் பார்க்கலாம் ரிஸல்ட் எல்லாம் வரட்டும்னு வேற சொல்லவும் நடுங்கிப்போய் தான் அப்பாவை அழைச்சுக்கிட்டு உடனே வான்னு உனக்கு ஃபோன் பண்ணினேன்.
அம்மாதான் ‘ராகவா! என்ன இது சின்னப் பிள்ளையாட்டம் அழுதுகிட்டு, எனக்கென்ன வயசு கொஞ்சமாவா ஆகுது நல்லா ஆண்டு அனுபவிச்சிட்டேன். பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி பண்ணி பேரன் பேத்தி பாத்தாச்சு. இனிமே கிடக்காம பறக்காம போய்ச் சேரனும் அவ்வளவு தானே’ன்னு சொன்னாங்க.
நான்தான் வாயைப் பொத்தி அப்படியெல்லாம் சொல்லாதீங்கன்னு கெஞ்சினேன். அதுக்கப்பறம் மயக்கத்தில விழுந்தவங்கதான் எப்ப கண்ணு முழிப்பாங்கன்னு பிரார்த்தனை பண்ணிகிட்டு தவிச்சுக்கிட்டு நிக்கிறேன். டாக்டர் கோமாவுக்கு போயிட்டாங்கன்னு வேற சொன்னார். பயப்படாதீங்க சீக்கிரம் நினைவு திரும்பவும் வாய்ப்பிருக்குன்னு தைரியமும் கொடுத்தார்”
வாயே மூடாமல் காதால் கேட்ட விஷயத்தில் மிகவும் குழம்பிப் போய் புலம்பிக் கொண்டிருந்தான் ராகவன்.
“சரி சரி டென்ஷன் ஆகாத. நல்ல விஷயம்தானே நடந்திருக்கு” என்று அண்ணனை ஆசுவாசப்படுத்தினான் மோகன்.
மோகன் பெங்களூரில் வசிக்கிறான் ராகவன் சென்னையில் இருக்கிறான். இரண்டு பேரின் மனைவியும் வேலை பார்ப்பவர்களாக இருந்ததால், வீட்டையும், குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள பெரியவர்கள் யாராவது வீட்டில் இருக்க வேண்டியிருந்தது. அதனால் அம்மா ராகவனுடனும், அப்பா மோகனுடனும் இருக்கலாம் என முடிவெடுத்தார்கள். அப்பா அம்மாவின் ஒப்புதலுடன்தான்.
அப்பாவும் அம்மாவும் இவர்களுக்கு நினைவு தெரிந்த நாளாக ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்து கூட இவர்கள் பார்த்ததில்லை. சாப்பாடு பரிமாறும் போது ஏதாவது வீட்டு விஷயங்கள் இருந்தால் அம்மா சொல்லுவாங்க. அது போலத்தான் அப்பாவும் வெளியில் நிகழ்ந்த ஏதாவது சம்பவங்களைச் சொல்லுவார். சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டது கூடக் கிடையாது.
பிள்ளைகளுக்கும் கணவருக்கும் சாப்பாடு போட்டு முடித்து விட்டு, அவர்கள் மூவரும் ஏதாவது பேசிக்கொண்டிருந்தால் அதில் கலந்து கொண்டு, அப்புறம் எல்லோரும் எழுந்து போனபின்பே சாப்பிட்டு, பாத்திரங்கள் கழுவி, வேலைகளை முடித்து விட்டு அம்மா வரும் போது பெரும்பாலும் அப்பா தூங்கிவிட்டிருப்பார்.
பிள்ளைகள் தான் ஏதாவது படித்துக் கொண்டு, பேசிக் கொண்டு இருப்பார்கள். அப்போதெல்லாம் இதையெல்லாம் பெரிதாக நினைத்ததில்லை இருவருமே.
இருவருக்கும் திருமணம் முடிந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டபின் நிறைய முறை இதைப்பற்றி யோசித்திருக்கிறார்கள். அம்மா அப்பாவின் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது. பிரைவசின்னு ஒண்ணை அவங்க தேடிக்கவேயில்லையே.
ஒண்ணா உக்காந்து சாப்பிட்டு, ஒரே ரூம்ல படுத்து, தனியா ரெண்டு வார்த்தை பேசிக்கிட்ட மாதிரி கூடத் தெரியலையே என்று. அதனால்தான் தனித்தனியா பிள்ளைங்க வீட்டில இருக்கிறதைப் பத்தி எந்த தயக்கமும் இல்லை. இவங்களும் அதைப்பற்றி கொஞ்சமும் யோசிக்கவில்லை.
அப்பப்ப ரெண்டு பேரும் ஃபோனில பேசிக்கிறாங்க அதுவும் ராகவனும் மோகனும் செய்து கொடுத்த ஏற்பாடுதான். வீடியோ கால் போட்டும் பேசச் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். நீ நல்லா இருக்கியா, சாப்பிட்டீங்களா, குழந்தைகள் நல்லா இருக்காங்களா இதுதான் சம்பாஷணையே.
பேரப்பிள்ளைகள் கூட கலாட்டா பண்ணி இருக்காங்க ரெக்கார்ட் பண்ணி வச்சு போட்டு விட்டால் போதும் எதுக்கு தினம் கால் பண்ணனும் ஒரே டயலாக்கை பேசறதுக்குன்னு. ராகவனும் மோகனும் நடந்தவைகளை அசை போட்டுக் கொண்டு பிரமித்து நின்றிருந்த போது டாக்டர் வந்தார்.
“ரொம்ப சர்ப்பிரைஸா இருக்கு ராகவன் ஸார். உங்க அப்பா வந்து பக்கத்தில உட்கார்ந்துகிட்டு வாய் வார்த்தையா எதுவும் பேசாம அம்மா கையை எடுத்து தன் கையில வச்சுகிட்டு கண்ணால பொலபொலன்னு தண்ணி விட்டுகிட்டு இருந்தார். உள்ளே போன நான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு ஒதுங்கி நின்னுட்டேன். இவரோட கண்ணுத் தண்ணி அம்மாவோட கையில் பட்டதும், அவங்கள்ட்ட ஒரு அசைவு தெரிஞ்சாப்ல இருந்துச்சு.
அதனால தான் அவரை, அவங்களை பேர் சொல்லி கூப்பிடுங்கள்னு சொன்னேன். அவர் கொஞ்சம் தயங்கிட்டு அப்பறமா, செல்லம்மா! செல்லம்மான்னு ஹஸ்கி வாய்ஸ்ல கூப்பிட்டார். அம்மா கண்ணு முழிச்சிட்டாங்க.
அதுக்கப்பறம் தான் என்கிட்ட ‘என்னை எப்படியாவது காப்பாத்திடுங்க டாக்டர் இவர் இப்படி சின்ன பிள்ளையாட்டம் அழுவுறாரே இவரை விட்டுட்டு எப்படி நான் போகமுடியும்’னு சொன்னாங்க” என்று விலகாத ஆச்சரியத்துடன் டாக்டர் சொல்லச் சொல்ல, மீண்டும் ராகவனும் மோகனும் ஒருவரை ஒருவர் அர்த்தமுள்ள பார்வை பார்த்துக் கொண்டனர்.
தேவகி தானே அம்மாவோட பேர். அதைக்கூட சொல்லி அப்பா ஒரு முறை கூட அழைத்ததா ஞாபகம் இல்லையே. செல்லம்மா என்ற அழைப்பெல்லாம் எப்போது நடந்தது. தம் கண்களுக்குப் படாமல் அவர்களிடம் நிலவி வந்த அன்னியோன்னியம் இப்போதுதான் அந்த அன்பு மகன்களுக்குப் புரிந்தது.
அம்மா நல்லபடியாக வந்ததும் அவங்க ரெண்டு பேரையும் ஒரே இடத்தில வச்சுப் பாத்துக்கனும்னு ரெண்டு பேரும் ஏகமனதாக அந்த நிமிஷமே முடிவெடுத்தார்கள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
மிகவும் அற்புதம் மா.
அடடா … என்ன அழகாக எழுதியிருக்கீங்க மா… கதை அழகான திருப்பங்களுடன் கவிதை வடிவில் இருந்தது .