இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
12ம் வகுப்பு இறுதித் தேர்வு முடிந்து, நல்ல மதிப்பெண்கள் பெற்று எல்லோரும் மேல்படிப்பிற்காக வெவ்வேறு இடம் சென்றுவிட்டோம். மேல் படிப்பு, அதன் பிறகு வேலை, சம்பாத்தியம், என்று ஓடி சொந்த கிராமத்திற்கு வருவதே வருடத்திற்கு ஒரு முறை, இல்லாவிடில் ஏதேனும் ஒரு விசேஷம் என்றாகிவிட்டது. தகவல் தொடர்பு பெரிதாக இல்லை. பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய, நட்பிற்கு முக்கியத்துவம் இல்லாமல் பணம், பதவி, செல்வாக்கு, ஆடம்பரம் இவற்றின் பின்னால் ஓடி போகின்ற சூழ்நிலை என்றாகிவிட்டது.
கயல்விழி இழந்த வாழ்வை, மீட்டெடுக்க அவளுக்கு எப்படி உதவலாம் என்று சிந்திக்கலானேன். கயல் வேலை செய்யும் நிறுவனத்தில், நாமும் வேலைக்கு சேர்ந்து, அதன் பிறகு என்ன பிரச்சனை என்று அறிந்து அதைத் தீர்க்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் இது சாத்தியமாகுமா? நம் வேலையை விட்டு விட்டு அங்கு சென்று நம்மால் பணிபுரிய முடியுமா, முதலில் எனக்கு அங்கு வேலை கிடைக்க வேண்டுமே என்று பலவாறு சிந்தனை என்னுள் ஓட ஆரம்பித்தது.
என்னுடன் பொறியியல் படிப்பை முடித்த என் நண்பன் திலக் என் ஞாபகத்திற்கு வந்தான். அவன் படிக்கும் காலத்திலே வேலை வாய்ப்பு செய்திகள் (Employment news) எதையும் விடுவதில்லை. எந்த படிப்பு படித்தால் எங்கு வேலை கிடைக்கும். மேலும் எங்கு பணியிடம் காலியிடம் உள்ளது என்று எல்லாம் விரைவில் கண்டறிந்து விடுவான். அவனிடம் உதவி கேட்டுப் பார்க்கலாம் என்று அவனுக்கு கைபேசியில் அழைப்பு விடுத்தேன் நான் போன் செய்யும்போது அவன் எடுக்கவில்லை. பின் அரைமணி நேரம் கழித்து அவனே தொடர்பு கொண்டான்.
நலம் விசாரித்துவிட்டு, என்னடா மதி, திடீரென்று போன் செய்திருக்கிறாய் நான் முழு விவரமும் சொல்லாமல், “சிறகுகள்” சென்னை தரமணியில் உள்ள பத்திரிகை அலுவலகம். அங்கு ஏதாவது காலி பணியிடம் இருக்குமா என்று பார்த்து சொல் என்றேன்.
என்னடா மதி, வேலையை விட்டுவிட்டு பத்திரிகை சேவை புரியப் போகிறாயா.
இல்லை. ஓரு மாற்றத்திற்காக பார்க்கிறேன். Ok. டா இன்று சிறிது வேலை இருக்கிறது. நாளைக்கு பார்த்துச் சொல்கிறேன்.
Ok. திலக். Take care. என்று பேச்சை முடித்துக் கொண்டோம்.
மறுநாள், ஞாயிற்றுக் கிழமை.
காலை பேருந்தில் பயணம் செய்து, ரிப்பேர் செய்த பைக்கை எடுத்துக் கொண்டு, அம்மா, தங்கை எல்லோரிடமும் கைபேசியின் மூலம் பேசிவிட்டு, மதியம் சாப்பாட்டை முடித்துவிட்டு அறைக்கு வந்தேன். மாலை நேரம் முழுவதும் ஓய்வு எடுத்துவிட்டு, திலக் போன் செய்திருக்கிறானா என்று பார்த்தேன். அவனை தொந்தரவு செய்ய மனம் வரவில்லை. நாளை பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன்.
திங்கள் கிழமை. காலை வழக்கம் போல் வேலைக்கு கிளம்பி, காலையிலிருந்து, மதியம் வரை விறு விறுப்பாக சென்றது.
மதியம் சாப்பிடும்போது, கைபேசியில் அழைப்பு உள்ளதா என்று பார்த்தேன். திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டு இருந்ததால், சாப்பிட்டு முடித்து விட்டு, உணவகத்தில் மறந்து கைபேசியை விட்டு சென்று விட்டேன்.
மாலையிலிருந்து இரவு 8 மணி வரை ஒரு meeting இருந்தது. அலுவலகம் முடிந்த பிறகு உணவகத்திற்கு சென்று கைபேசியை பெற்று கொண்டேன். திலக் பலமுறை அழைத்திருந்தான். கைபேசியில் charge இல்லாமல் அணைந்துவிட்டது. வீட்டிற்கு சென்று, கைபேசியை chargeல் போட்டு விட்டு போன் செய்தேன்.
“என்னடா மதி எவ்வளவு நேரம் உனக்கு முயற்சி செய்வது. போன் எடுக்க மாட்டாயா”, திலக்.
என்னடா என்ன விஷயம்,
‘சிறகுகள்’ பத்திரிகை அலுவலகத்தில் இரண்டு மாதத்திற்கு முன் Photographer தேவை என்று ஒரு விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். நீ அதை முயற்சி செய்யலாம். ஆனால், என்ன பிரச்சினை என்றால், இன்று தான் கடைசி நாள், விண்ணப்பிப்பதற்கு. அதான் நெடுநேரம் முயற்சித்து கொண்டு இருந்தேன்.
இப்போது விண்ணப்பித்தால் ஏற்றுக் கொள்வார்களா? வேக, வேகமாக மடிக்கணினி எடுத்து, என்னுடைய Resume ஐ தேடி, அதில் பல மாறுதல்கள் செய்து, ‘சிறகுகள்’ அலுவலகத்திற்கான mail id ஐ கண்டிபிடித்து விண்ணப்பித்து முடிப்பதற்குள் சரியாக இரவு 11.59 ஆகிவிட்டது.
இது அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை.
என்னுடைய Resume ஐ ஏற்றுக் கொண்டால் அதிர்ஷ்டம். இல்லையென்றால் துரதிர்ஷ்டம். இதை பற்றி இப்போது யோசித்து பிரயோஜனம் இல்லை. நடப்பதை பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு தூங்கிப்போனேன்.
கயல்விழியின் வீடு
பறவைகளின் ரீங்கார சத்தம் ரசிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தது. இன்னும் நன்றாக விடியவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று போர்வையை இழுத்து போர்த்திய கயல்விழியை எழுப்பியது ஒரு வித்தியாசமான பறவையின் அதீதமான ஒலி.
படுக்கையை விட்டு எழுந்து, போர்வையை மடித்து வைத்துவிட்டு நேராக குளியலறைக்கு சென்று கையில் தண்ணீரை பூப்போல அள்ளி, முகத்தில் தௌ¤த்தாள். முகம் சில்லென்று குளிர்ந்தது. காலைக் கடன்களை எல்லாம் முடித்துவிட்டு, காலை உணவிற்கு என்ன செய்யலாம் என்ற எண்ணத்தோடு சமையலறைக்கு சென்றாள்.
காலை உணவை தயாரித்து, சாப்பிட்டு விட்டு அலுவலகம் கிளம்புவதற்காக, அறைக்கு வந்து, எல்லா பொருள்களையும் எடுத்து வைக்கலானாள். மதிய உணவு அலுவலக உணவகத்தில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தாள். வெகு நாட்களாகவே இந்த நடைமுறைதான் கயலின் வீட்டில் நடைபெற்று கொண்டிருக்கிறது. கயலின் அம்மா, கயலோடு பேசுவதில்லை. அதனால் கயலுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. இது தினசரி வழக்கமானதால் அலுவலகத்திற்கு கிளம்பினாள்.
சிறகுகள் பத்திரிகை அலுவலகம்
சிறகுகள், பத்திரிகை அலுவலகமானது தரமணியில், ஒரு சிறந்த பிள்ளையார் கோவிலின் எதிர்புறம் முதல் மாடியில் உள்ளது. செய்தி தொகுப்பாளர், விளையாட்டுப் பற்றிய செய்தி அறிவிப்பவர், செய்திகளை நிர்வகிப்பவர் செய்தித் தாள்களில், ஒவ்வொரு பக்கத்திற்கும் என்ன, என்ன போடலாம் என்று தீர்மானிப்பவர், தகவல் சேகரிப்பு மற்றும் உண்மையானதா என்று ஆராயும் நிருபர் (investigative reporters), அறிவியல் சம்பந்தமாக எழுதுபவர்கள், ஆவணப்படம் எடுப்பவர், புகைப்படம் எடுப்பவர், என்று அலுவலகத்தில் நிறைய பேர் இருப்பார்கள். இவர்களுக்கு தலைமையாக பதிப்பாசிரியர் (Editor) இருப்பார். இவருக்கென்று மட்டும் தனி அறை (cabin) ஒதுக்கப்பட்டிருக்கும். இவருக்கு கீழ்பணிபுரிய துணை பதிப்பாசிரியரும் (sub-editor) இருப்பார். மற்ற அனைவருக்கும் ஒவ்வொரு கணிப்பொறியும் வழங்கப்பட்டிருக்கும். இடையே கண்ணாடியால் அடைப்பு இருக்கும். அவரவர்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து அவர்களுடைய வேலையை செய்ய வேண்டும்.
கயல்விழி investigative reporter ஆக இருந்தாள். அலுவலகத்தில் கயலுக்கு உற்ற தோழி தமிழ்செல்வி. தமிழ்செல்வி அறிவியல் சம்பந்தமாக எழுதும் பணி செய்து வந்தாள்.
செய்தித் தொகுப்பாளராக இருந்தார் சுந்தர். இவருக்கு கயலை கண்டாலே பிடிக்காது. தினமும் விறுவிறுப்பாக அலுவலகத்தில் வேலை நடந்து கொண்டே இருக்கும்.
ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து, எனக்கு “சிறகுகள்” பத்திரிகை அலுவலகத்திலிருந்து பணிக்கான நேர்காணல் அழைப்பு வந்திருந்தது. எப்படியாவது, நேர்காணலில் தேறிவிட்டால் கயலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று உள்மனம் அக்களித்தது. நேர்காணலில் வெல்வதற்கான முயற்சியாக, அங்கு தற்போது வேலை செய்பவர்களிடம் நிறுவனமானது என்ன எதிர் பார்க்கிறது என்று ஆராய்ந்தேன். அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள கடைகளில் அலுவலகத்தை பற்றி பேச்சு கொடுத்தேன். அதில், ஒரு டீக்கடைக்காரர், சம்பளத்திற்காக ரொம்ப கிராக்கி செய்யாமல் சேவை புரிய ஆசையாய் இருக்கிறேன் என்று சொன்னால், உடனே வேலை கிடைக்கும் என்றார். அதையே பின்பற்றி வேலையும் கிடைத்துவிட்டது. ஒரு மாத கால அவகாசத்திற்கு பிறகு சேர்வதாக, சொல்லி வந்தேன். பணி நிரந்தரம் கிடையாது. மூன்று மாத காலம் தற்காலிகமாக வேலை பா£¢க்க வேண்டும். நமது பணி சிறப்பானதாக இருந்தால் தொடரலாம்.
தற்போது, நான் வேலை பார்க்கின்ற இடத்தில் இருந்து எப்படி விடுப்பு எடுப்பது? சம்மதிப்பார்களா? நம் வருமானம் பாதியாக குறைந்துவிடும். என்னுடைய செலவை மட்டும் எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம். அம்மாவிடம் வேலை மாறுதலுக்கான காரணமாக எதை சொல்வது.
இதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் பத்திரிகை அலுவலகத்தில் ஒரு மாதத்தில் வேலைக்கு சேர்வதாக கூறிவிட்டோமே. என்ன செய்யலாம்? என்று யோசித்தேன்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings