இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பதினொன்றாம் வகுப்பில் இருந்துதான் முதல் முதலாக செய்முறை வகுப்புகள் (Practicals) ஆரம்பிக்கும். அது புதிது என்பதால் எங்கள் அனைவருக்கும் ஒருவித பதற்றம் இருக்கும். செய்முறை வகுப்பில் வைத்திருக்கும் பொருள்களை கவனமாக கையாள வேண்டும்.
வேதிப் பொருள்களை அமிலங்கள், காரங்கள் என்று குடுவையில் பேப்பரில் பெயர் எழுதி ஒட்டி வரிசையாக அடுக்கி வைத்திருப்பார்கள். எங்களின் வேதியியல் ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். அதே நேரம் பாசமானவரும் கூட. அனைத்து பொருள்களையும் கவனமாக உபயோகிக்க அறிவுறுத்திக் கொண்டேயிருப்பார்.
வேதியியல் செய்முறையில் உப்பு வகை கண்டறியும் சோதனை என்று ஒன்று உள்ளது. இது தான் முதலில் சொல்லிக் கொடுப்பார்கள்.இதை முடித்த பின் தான் மற்ற ஆய்வக சோதனைகள் சொல்லிக் கொடுப்பார்கள்.
சோடியம் குளோரைடு என்பது நாம் வீட்டில் உபயோகப்படுத்தும் உப்பு. இந்த உப்பும் அங்கு இருக்கும். மக்னீசியம் சல்பேட், கால்சியம் கார்பனேட், லெட் நைட்ரேட் என்று தனித்தனியாக உப்பு வகைகளை ஒரு சின்ன கண்ணாடி குடுவையில் போட்டு மூடி வைத்திருப்பார்கள்.
இவற்றிற்கெல்லாம் நடுவில் ராஜா போல் தனியாக ஒரு பெரிய கண்ணாடி குடுவை மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். அதற்கு மட்டும் செவ்வக வடிவில் மரப்பலகையால் அடைப்பு செய்து, அடைப்பு இருக்கும் இடத்தில் பாதி வரை மணல் பரப்பி, நடுவில் கம்பீரமாக வீற்றிருக்கும். அந்த அமிலம் தான் “அடர் கந்தக அமிலம்”.
கந்தக அமிலத்தின் மற்றொரு பெயர் சல்பூரிக் அமிலம். இதை ‘வேதிப் பொருள்களின் அரசன்’ என்று கூறுவர். எடுக்கும்போது மணலில் தவறுதலாக, ஒரு சொட்டு விழுந்தாலும் ‘சுர்’ என்று சத்தம் எழுப்பி, விழுந்த இடத்தில் மணல் முழுவதையும் கருப்பாக்கிவிடும். இது நீரில் எல்லா அளவிலும் கலந்து கரையக் கூடியது. இது பல்வேறு தொழிலகங்களிலும் பயன்படும் வேதிபொருள்.
இதில் அடர் கந்தக அமிலம், நீர்த்த கந்தக அமிலம் என்று இரண்டு இருக்கும். நீர்த்த கந்தக அமிலம் உடம்பில் பட்டால் ஒன்றும் செய்யாது. ஆனால் அடர் கந்தக அமிலம் ஒரு துளி பட்டால் போதும், சதைக்குள் ஊடுருவி எலும்பு வரைக்கும் சென்று விடும். அதனால் தான் என்னவோ, அதற்கு அவ்வளவு மரியாதை, கம்பீரம், பாதுகாப்பு எல்லாம்.
வெள்ளிக்கிழமை அன்றே, திங்கள்கிழமை உப்பு சோதித்தறியும் வகுப்பு என்று வேதியியல் ஆசிரியர் அறிவித்திருந்தார். செய்முறை வகுப்பானது ஒன்றரை மணி நேரம் இருக்கும். அதன் பிறகு இடைவேளை இருக்கும். நாங்கள் மொத்தம் எங்கள் கணித குழுவில் 20 மாணவ, மாணவிகள் இருந்தோம்.
செய்முறை வகுப்பறையானது ரொம்ப பெரியதுமல்லாமல், சிறியதுமல்லாமல் இருக்கும். மாணவர்கள், ஒரு புறமும், மாணவிகள் மறுபுறமுமாக நின்று கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு உப்பையும் எவ்வாறு கண்டறிய வேண்டும் என்று வேதியியல் ஆசிரியர் செய்முறை விளக்கம் அளித்தார். ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார். யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை, என்னைப்போல. ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும்போது எல்லாம் புரிந்த மாதிரி தான் இருக்கும். ஆனால் செயல்முறை செய்யும்போது தான் கண் விழிபிதுங்க ஆரம்பிக்கும்.எங்கள் ஆசிரியர் முன்னதாகவே, தாளில் பொட்டலம் பொட்டலமாக உப்பை மடித்து மேஜையில் வைத்திருந்தார். அதில் 20க்கும் மேல் பொட்டலம் இருக்கும். அதை வகுப்புத்தலைவரிடம் கொடுத்து ஒருவருக்கு ஒன்று என்ற வீதத்தில் அனைவருக்கும் கொடுக்க சொன்னார். மீதியை மேஜையின் மீதே வைக்கச் சொன்னார்.
செய்முறை வகுப்பில் உபயோகப்படுத்துவதற்கென்று நிறைய பொருட்கள் இருக்கும். அதில் நாங்கள் முக்கியமாக பயன்படுத்துவது மூன்று பொருட்களைத்தான் 1.சோதனை குழாய் (Test Tube) 2.துளிசொட்டி (Dropper) 3.குழாய்.
முதலாவது, சோதனைக் குழாய் கண்ணாடியால் ஆனது. கீழ் பாகம் மூடி மேல்பாகம் மட்டும் வாய் திறந்திருக்கும். அதன் வழியே தான் அமிலங்கள், உப்பு போன்றவற்றை இட வேண்டும்.
இரண்டாவது துளிசொட்டி (Dropper) இது கண்ணாடியிலும் இருக்கும், இரப்பரால் செய்யப்பட்டதும் இருக்கும்.எங்கள் ஆய்வகத்தில் இரப்பரால் செய்யப்பட்டது இருந்தது. துளி சொட்டியானது, நாம் மைநிரப்பி எழுதும் பேனாவில், மை நிரப்ப பயன்படுத்தும் நிரப்பி போல் இருக்கும். ஆனால் மை நிரப்ப நாம் பயன்படுத்துவது சிறிதாக இருக்கும்.
துளி சொட்டியானது கொஞ்சம் பெரிதாக இருக்கும். மேல்புறம் மூடி குமிழ்போல் இருக்கும். கீழே போக, போக சுருங்கி, திறந்தவாறு இருக்கும். மேல்புறத்தை அழுத்திவிட்டு, அமிலம் குடுவையில் விட்டால் துளிசொட்டி அமிலத்தை உள் இழுத்து விடும்.
தேவையான அளவு எடுத்துவிட்டு, மேல்புறம் அழுத்தி இருப்பதை விட வேண்டும். பிறகு தேவையான அளவு உபயோகப்படுத்தலாம். ஒரு சொட்டு, இரு சொட்டுகள் என்று சொட்டுக் கணக்கில் தான் உபயோகப்படுத்த வேண்டும்.
அடர் கந்தக அமிலம் எடுப்பதற்கு ஒரு குழாய் இருக்கும் அது திக்கான கண்ணாடியாக, நீளமாக (Straw போல்) இருக்கும். இருபுறமும் திறந்து இருக்கும். குழாயின் மேல் புறம் கையால் மூடி விட்டு, குடுவையின் உள்ளே விட்டால் கொஞ்சம் குழாயில் வந்திருக்கும். மேல்புறம் மூடிய விரலை எடுத்து விட்டால், அனைத்து அமிலமும் குடுவைக்குள் சென்றுவிடும். மேல்புறம் மூடிய விரலை எடுக்காமல் அப்படியே, வெளியே எடுத்து பயன்படுத்த வேண்டும்.
நான் சோதனைக் குழாயில் உப்பை எடுத்துவிட்டு, அடர் கந்தக அமிலம் எடுப்பதற்காக மேஜை நோக்கி சென்றேன். குழாய் மூலமாக, எடுத்து சோதனைக் குழாயில் இரண்டு சொட்டு விட வேண்டும். அவ்வாறு செய்தபோது, குழாயில் இருந்த அமிலம் சோதனை குழாயில் விழவில்லை. ஏதோ, அவசரத்தில், மறதியாக குழாயை உதறி விட்டேன். அமிலம் மிக சூடாக இருந்தது மண்ணில் சிதறினாலும் ‘சுர்’ என்று சத்தம் கேட்கும்.
குழாயிலிருந்து வெளிவராத அமிலம் உதறியதும் வேகமாக வெளி வந்து, பக்கத்தில் நின்று கொண்டிருந்த கயல்விழி கையில் வளையல் போட்டு இருக்கும் இடத்திற்கு கீழ் பட்டுவிட்டது.
‘ஆ’ என்று ஒரு அலறல் சத்தம். மாணவ, மாணவிகள் அனைவரும் நான் இருக்குமிடம் திரும்பிப் பார்த்தனர். நானோ அதிர்ச்சியில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.
கயல்விழி அலறியதோடு மட்டுமல்லாமல் கையை பிடித்துக் கொண்டே மெதுவாக நகர்ந்தாள்¢. மேஜையில் இருந்த சோதனை குழாயை கையில் எடுத்துக் கொண்டாள். எனக்கு மனம் ‘திக்’ ‘திக்’ என்று இருந்தது. எங்கள் ஆசிரியர் வேகமாக வந்தார். என்ன நடந்தது என்று கேட்டார். யாரிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை.
கயல்விழி, தானாகவே முன்வந்து அடர் கந்தக அமிலம் கையில் பட்டு விட்டது என்றாள்.
உடனே ஆசிரியர் விரைந்து சென்று மருந்து எடுத்து வந்தார். அதை கயல் கையில் போட்டு விட்டார். அது, வெண்மை நிறத்தில் பிசு,பிசு வென்று இருந்தது. கயல்விழியின் கையில் அமிலம் பட்ட இடத்தில் சதைக்குள்ளாக ஊடுருவி வெள்ளையாக தெரிந்தது. அது எலும்போ, வெண்தோலோ தெரியவில்லை எனக்கு. ஒரு சொட்டு தான் என்றாலும் நன்கு பதம் பார்த்து விட்டது.
ஆசிரியர், “கொஞ்சம் எரியும், பிறகு சரியாகிவிடும்” என்றார்.
“யார் இந்த வேலையைச் செய்தது” என்று கோபமாக எங்களைப் பார்த்து கேட்டார். அவர் இவ்வளவு கோபப்பட்டு நாங்கள் யாரும் பார்த்தது இல்லை. நான் குற்ற உணர்வில் மனதில் புழுங்கி கொண்டிருந்தேன்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings