இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அழகிய பூங்காவின் அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. அங்கே பல்வேறு விதமான மரங்கள் இருந்தன. மரத்தின் அடியில் இருந்து பார்த்தால் அதன் உச்சிப்பகுதி தௌ¤வாகத் தெரியாது.
முதல் மாடியில் குழந்தைகள் விளையாடும் இடம் அமைந்துள்ளது. அதில் இரண்டு ஊஞ்சல், ‘S’ போன்ற வடிவத்தில் சறுக்கி விளையாடும் இடம், எட்டு வடிவில் நடைபயிற்சி மேற்கொள்ள நீல நிறம் மற்றும் வெண்மை நிறம் கலந்து வண்ணம் தீட்டப்பட்டு சுத்தமாக காட்சி தந்து கொண்டிருந்தது. பெற்றோருடன் சேர்ந்து வந்தால் விளையாட பாதுகாப்பான இடம் தான் குழந்தைகளுக்கு.
அங்கிருந்து பார்த்தால் வானளாவ உயர்ந்து நிற்கும் மரங்கள் எல்லாம் நன்றாக தெரியும். மரத்திற்கு ஒரே ஒரு உச்சிமுனை என்று இல்லை. குழந்தைகள் தாளில் மலை வரைவார்களே, வளைத்து வளைத்து, மலைக்கு ஒரு உச்சி வரும், அதிலிருந்து கீழே வந்து மறுபடியும் மேல் நோக்கி ஒரு குமிழ்போல் வந்து கீழ் இறங்கும். அதுபோல் மரத்திற்கு நிறைய வளைவு, சுளிவுகள் இருந்தன.
இதுதான் உயரம் என்று பறவைகள் அதற்கு பிடித்த மரத்தின் உச்சி முனைகளில் நின்றன. அதில் கிளி மற்றும் மைனா பறவைகள் கலந்து இருந்தன. அவர்களுக்கான ஒலியை எழுப்பிக் கொண்டு அங்குமிங்குமாக பறந்து திரிந்தன.
பெரும்பாலான பறவைகள் ஆரஞ்சு, சிவப்பு, வெளிர் மஞ்சள் ஒரு சேர கலந்து பூத்துக் குலுங்கி, புது உற்சாகம் தந்து கொண்டிருந்த அந்த மரத்தில் தான் உட்கார்ந்திருந்தன.
என்னைக் கவர்ந்த அந்த பூக்கள் அவர்களையும் கவர்ந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
ஆனால், மனிதர்களாகிய நம்மைப்போல் பறவைகளும் முட்டி மோதி, உயரமான இடத்தைப் பிடித்து உட்கார்ந்திருந்தன. என்ன ஒரு வித்தியாசம், அவை சண்டையிடாமல் பகிர்ந்து உட்கார்ந்ததை போல் இருந்தது.
இயற்கை அழகு கொஞ்சும், பாமரரையும் கவிதை படைக்கத் தூண்டும், எழில்மிகு பசுமையான மரம், செடி, கொடிகளோடு, பூக்களின் வாசமும், பறவைகளின் நேசமும், தென்றலின் ஈரமும், காண்பவர்களை மனம் களிக்க வைக்கும் வெளிப்புற அழகினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது அந்த இடம்.
அந்த இடத்தில் உள்ள பூரண அழகினை ரசிக்கும் அளவிற்கு நிதானமும், பொறுமையும் அங்கு வசிப்பவர்களுக்கு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. நான் பார்த்தவர்கள் எல்லோரும் பரபரப்பாக இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
என் பெயர் மதிவாணன். ‘மதி’ என்று என்னை சார்ந்தவர்கள் அழைப்பார்கள். வயது 26. குடும்பத்தினரின் அன்புத் தொல்லையால், நான்கு வருட பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, என்னுடைய கனவாக (photography course) புகைப்பட கலை இரண்டு வருடம் முடித்து, இரண்டு வருடம் கோயம்புத்தூரில் பணிபுரிந்து விட்டு இப்போது மாற்றலாகி வந்துள்ளேன் சென்னை பெருநகரத்துக்கு.
அம்மா, அப்பா, தங்கை, நான் என்று அளவான குடும்பம். என்னைத் தவிர அனைவரும் திருநெல்வேலியில் உள்ள ஒரு கிராமத்தில் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார்கள்.
நேற்று, என் பள்ளித் தோழன் பாஸ்கர், திடீரென்று கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினான். உன்னை கண்டிப்பாக சந்தித்து பேசியாக வேண்டும். முக்கியமாக கயல்விழியைப் பற்றிதான் சொல்ல வேண்டும். என் வீட்டருகே உள்ள பூங்காவில் சந்திக்கலாம்; விலாசத்தை அனுப்புகிறேன். நாளை 9.00 மணிக்கு வந்துவிடு மற்றவற்றை நேரில் சந்தித்து பேசலாம் என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.
அவன் ஏதோ பயணத்தில் இருப்பது போல் தோன்றியது. ஏதோ அவசர, அவசரமாக பேசினான். பள்ளிப் பருவத்தில் இருந்தே அப்படித்தான் அவன் பேச வேண்டியதை பேசி விடுவான். மற்றவர்களின் பதிலை எதிர்பார்ப்பதில்லை. இன்றும் அப்படித்தான்.
“கயல்விழி” அந்த பெயரைக் கேட்டதும் என் மனம் பட்டாம்பூச்சி சிறகடித்ததுபோல் சுறுசுறுப்பானது. ஆனால் பாஸ்கர் சொன்ன தோரணையைப் பார்த்தால் மகிழ்ச்சியான செய்திபோல் தோன்றவில்லை.
கயல்விழிக்கு என்ன ஆனது? அவள் வாழ்க்கையில் என்ன நடந்திருக்கும் என்ற சிந்தனையோடு பூங்காவில் காத்திருந்தேன் பாஸ்கரின் வரவிற்காக.
சரியாக 9.05-ற்கு பூங்காவிற்கு வந்தான் பாஸ்கர். வந்ததும் நலம் விசாரித்துவிட்டு கயல்விழியைப் பற்றி நேரடியாகவே பேசலானான்.
கயல் வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்தவளாக இருப்பதாகவும் ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும் நம்மோடு பயின்ற மலர் கூறினாள். மற்றப்படி தகவல் எதுவும் சரிவர தெரியவில்லை. கயல் இங்கு தான் சென்னையில் வசித்து வருகிறாள். மலரின் கைப்பேசி எண் அனுப்பியுள்ளேன்.
பள்ளிப் பருவத்தில் நீயும், கயலும் சிறந்த நண்பர்கள் என்று எனக்கு தெரியும். கயலுக்கு ஏதாவது உதவ முடியுமா என்று பார். நான் இன்று இரவு சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு, என்னுடைய பதிலை எதிர்பாராமல் புறப்படத் தயாரானான். அவனுடைய இயல்பை அறிந்த நான் வழியனுப்பிவிட்டு என் இருப்பிடத்திற்கு வந்தேன்.
கவிதை படைக்கும் ஆவலில் இருந்த என் மனம் கயலை நினைத்து குழப்பத்தில் ஆழ்ந்தது. மலரின் கைப்பேசி எண்ணை அழைத்தேன் பதில் இல்லை.
தற்கொலை செய்து கொள்ளபோகும் அளவிற்கு கயலின் வாழ்க்கையில் என்ன நடந்திருக்கும். “அழகு என்பது புறத்தோற்றத்தில் அல்ல, அகம் என்னும் தோற்றத்திற்குள் ஒளிந்திருக்கும் குணத்தின் பிரதிபலிப்பு என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவள் கயல் விழி”.
எல்லோரும் கூறுவார்கள் கல்லூரி வாழ்வை மறக்க முடியாது என்று. ஆனால் எனக்கு அப்படியில்லை. நான் மிகவும் ரசித்து, மகிழ்ச்சியாக வாழ்ந்தது பள்ளிப் பருவத்தில் தான். அதற்கு காரணம் கயல் தான்.
பத்து வருடங்களுக்கு முன், பள்ளிப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சிகள் எனது மனத்திரையில் என் அனுமதி இல்லாமலே ஓட ஆரம்பித்தன.
நானும், கயல்விழியும் 9ம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் பயின்றோம். நான் என்னுடைய ஊர் குளக்கரையிலிருந்து பேருந்து ஏறி, பள்ளிக்கு செல்வேன். கயல்விழியோ, இரண்டொரு நிறுத்தம் தள்ளி தவளைகுளம் என்ற ஊரில் இருந்து ஏறுவாள். நாங்கள் இருவரும் பேசியது கிடையாது. அதற்கான வாய்ப்பும் அமையவில்லை.
நாங்கள் பயின்றது காமராஜபுரத்தில் இருந்த அரசுப் பள்ளி . நாங்கள் படித்த காலத்தில் ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் சகஜமாக பேசுவது எல்லாம் கிடையாது. கயல்விழி படிப்பில் படுசுட்டி. நான் சுமார் ரகம்தான்.
எங்களின் முதல் சந்திப்பு இல்லை இல்லை எங்களுள் இருந்த நட்பை வெளிப்படுத்திய முதல் சந்திப்பு என்று சொல்லலாம்.
நாங்கள் இருவரும் பதினொன்றாம் வகுப்பில் கணிதம்-கணினி அறிவியல் (Maths-Computer Science) பிரிவை தேர்வு செய்திருந்தோம்.
அன்று திங்கள்கிழமை. வேதியியல் செய்முறை வகுப்பில் (Chemistry practical) அன்று நடந்த நிகழ்ச்சி தான் எங்களுக்குள் நல்ல நட்பை உருவாக்கியது.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings