in ,

ஹிந்தி ராணி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

‘ களுக் ‘கென்று சிரித்துக் கொண்டாள் ராணி.

பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த ராசாத்தி திகைத்துப் போய் கேட்டாள், ‘ என்னாடி இவ… தானாவே சிரிச்சிக்கறா… ’

சேலையை தண்ணீரில் அலசிக்கொண்டிருந்த லக்ஷ்மியும், ‘ஆமாடி… நாலு நாளாவே இவ இப்படித்தான்டி சிரிச்சிக்கறா… ’ என்றாள்.

ஈரத் துணிகளை தோளில் போட்டுக்கொண்டு வாய்க்காலை விட்டு விடுவிடுவென மேடேறிய ராணி திரும்பி நின்று, ‘ லக்ஷ்மியக்கா…நான் கிளம்பறேன்… ’ என்றுவிட்டு பதிலுக்கு காத்திராமல் நடகக ஆரம்பித்தாள்.

‘ என்னாடியிது… புதுசா இருக்கு… எப்பவும் ஒன்னாத்தானே போவோம்… இன்னிக்கென்னவோ இவ நமக்கு முன்னாடியே கிளம்பிட்டா… ’

‘ ஹூம்… அந்த இந்திக்காரன் இவளோட எப்போ பேச ஆரம்பிச்சானோ, அப்போலேர்ந்து இவ இப்படித்தாண்டி பண்ணிட்டிருக்கா… ’

இவள் வேலை செய்யும் இடத்தில்தான் அவனும் வேலை செய்கிறான். ஹிந்திக்காரர்கள் மூன்று பேர் இருக்கிறார்கள் ஒரு தகரக்கொட்டகை போட்டுக்கொண்டு.

நம்மூர் காரர்களிடம் பேசும்போது மட்டும் தமிழில் பேசுவார்கள். தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது மட்டும் அவர்களது பாஷையிலேயே பேசிக்கொள்வார்கள். இவளுக்கு அது கொஞ்சமும் புரியாது. ஆனாலும் அவர்கள் என்ன அப்படி என்னதான் பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமும் இருக்கும்.

ஒருநாள் அவளிடம் வந்த உமர். ‘ நாம் ராணீ ஹை…’ என்றான்.

இவளுக்கு குழப்பமாக இருந்தது. நாம் என்கிறான், ராணீ என்கிறான். ஆனால் நமது பெயரை சொல்கிறான் என்று மட்டும் புரிந்தது. அதையும் ராணீ என்றல்லவா சொல்கிறான். நிமிர்ந்தவள் புருவங்களை வளைத்து… விழித்தாள்…

இவள் முழிப்பதைப் பார்த்தவன் அதை புரிந்து கொண்டு, ‘ உன் பேரூ ராணீ ‘ என்றான்.

‘ இல்லே ராணி ‘ என்றாள் இவள்.

‘ ஓ ராணி… அச்சா… நா உமர்… ’ என்றுவிட்டு கடைவாயில் சிரித்தான். ஏன் ஒருமாதிரியாகச் சிரிக்கிறான், பைத்தியம் போல…

காரைச்சட்டியை தலையில் சுமந்தபடி யோசித்தபடியே போய் விட்டாள் அவள்.

கொஞ்ச நேரத்தில் மறுபடியும் வந்து, ‘ சுந்தர் ‘ என்றான்.

‘ ஏய்…என் பேரு ராணினு சொல்லிட்டேன்… அப்புறமும் எதுக்கு சுந்தர்னு சொல்றே… அது ஆம்பளை பேரு… ’ என்று சொல்லியபடி நிற்காமல் நடந்தாள். தொடர்ந்து வந்தவன், ‘சுந்தர்னா…நீ… அழ்கா இருக்கேனு சொல்லுது… ‘ என்று சிரித்தான்.

இப்போது இவளுக்கு புரிந்தது, நீ அழகாக இருக்கிறாய் என்பதைத்தான் அவன் அப்படி உளறியிருக்கிறானென்று. இவன் ஏன் நம்மை வர்ணிக்க வேண்டும். சற்றே எரிச்சல் தலை தூக்கியது. ஆனாலும் அவன் தமிழை உச்சரிப்பது இவளுக்குப் பிடித்திருந்தது.

ஓரிருமுறை யாருக்கும் தெரியாமல் அவனை கவனித்திருக்கிறாள். வெள்ளை உடம்பு… பழுப்பேறிய தலை… அரும்பு மீசை… சிரிக்கும்போது தெரியும் காவிப் பற்கள், கையில் ஒரு காப்பு. எப்படியும் ஒரு இருபத்தேழு இருபதெட்டு வயது இருக்கும். அழகாய்த்தான் தெரிந்தான்.

அன்று மதியம் மற்ற சித்தாள்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாள் இவள். ஒரு தட்டை கையில் வைத்துக்கொண்டு இவளுக்கு பின்னால் வந்து உட்கார்ந்தான். உடனே, ‘ரோட்டி சாப்பிடுது… ’ என்றான்.

‘ ஹூம்… நான் திங்கறது சாம்பார் சாதம்… ரோட்டியுமில்லே… போட்டியுமில்லே… ’ என்று சொல்லி சிரித்தாள். மற்றவர்களும் அவளுடன் சேர்ந்துகொண்டார்கள்.

‘ இல்லே… ரோட்டி… நீ சாப்பிடுது… ’ என்று ஒரு ரொட்டியை அவனது தட்டிலிருந்து எடுத்து நீட்டினான். பார்க்க அது மொத்தமான அப்பளம் மாதிரி இருந்தது.

இஷ்டமில்லை இவளுக்கு. திரும்பி கொஞ்சம் நகர்ந்தும் உட்கார்ந்துகொண்டாள்.

‘ இதை எப்படித்தான் மெல்லமுடியுதோ… இவங்களால… ’

மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது இவளுக்கு, அவன் நமக்கு ரூட் விடுகிறான் என்று.

இவர்கள் பேசுவதும் புரிவதில்லை. இவர்கள் சாப்பிடுவதும் பிடிக்கவில்லை. இது நமக்கெப்படி ஒத்து வரும் ?

சாயங்காலம் டீக்காரன் வந்தபோது அவனிடமிருந்து ஒரு வடை வாங்கி இவளிடம் நீட்டினான்.

‘ ச்சே இவன் என்னத்துக்கு நமக்கு வடை வாங்கித் தரவேண்டும்… ‘ பேசாமல் நகர்ந்துவிட்டாள்.

சாயங்காலம் வேலை விட்டு கிளம்பும்போது மெல்ல திரும்பி அவனைப் பார்த்தாள். அவன் இவளை பார்த்துக்கொண்டே வேலை செய்துகொண்டிருந்தான். சட்டென திரும்பிக் கொண்டாள்.

இவர்களது ஆளில் ஒருத்தியை டாவடித்துக்கொள்ள வேண்டியதுதானே…

யோசித்துக்கொண்டே கொஞ்சதூரம் நடந்திருப்பாள், அதற்குள் ராசாத்தியும் லக்ஷ்மியும் வந்து சேர்ந்து கொண்டார்கள்.

‘ ராணி… என்னடி அந்த இந்திக்காரன் உங்கிட்டே ரொம்பத்தான் வழியறான்… ’ என்றாள் லக்ஷ்மி.

‘ பார்த்துடி… தமிழுக்குள்ளே இந்தி புகுந்துடப் போவுது… ’ சிரித்தாள் ராசாத்தி. அவர்கள் சொன்னதை உள்ளுக்குள் ரசித்துக் கொண்டாள் இவள். ஆனாலும் ஒன்றும் பேசாமல் நடந்தாள்.

 ‘ ஆமாமா… அப்புறம் இந்திராணி ஹிந்திராணி ஆகிடுவா… இல்லே… ’ சிரித்தாள் லக்ஷ்மி மறுபடியும்.

லக்ஷ்மி அப்படி சொன்னதும் திடீரென்று வெட்கம் பிடுங்கித் தின்றது இவளை. ஆனாலும் உடனே, ‘ அவன் வந்து பேசினா… அதுக்காக அதுக்கு தலையும் காலும் வச்சி பேசுவீங்களா… இந்த சிங்காரி மக எதுக்கும் அசஞ்சு குடுக்க மாட்டா… ’ என்றாள் ராணி கட்டைவிரலை உயர்த்தி ஆட்டி.

‘ பாக்கலாம்…பாக்கலாம்… ’ சிரித்தாள் ராசாத்தி. பேசிக்கொண்டே போய் வாய்க்காலில் குளித்து கும்மாளம் போட்டனர்.

இவள்மட்டும் வேகவேகமாய் குளித்துவிட்டு கிளம்பிவிட்டாள்.

xxxxxxxxx

ராத்திரி முழுதும் அதே நினைப்புத்தான். நீ அழகாய் இருக்கிறாய் என்று அவன் சொன்னது ஒருமுறை அவளது காதுகளில் வந்து ஒலித்தது. உடனே எழுந்து போய் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். தெளிவில்லை. லைட்டை போட்டாள். இப்போது முகம் பளிச்சென்று தெரிந்தது. தனது கன்னத்தை தானாகவே தட்டிக்கொண்டு சிரித்தும் கொண்டாள். முழித்துக்கொண்ட ராசாத்தி கேட்டாள், ‘ ஏன்டி தூங்கலையா… ’

‘ முகத்துல எறும்பு கடிச்ச மாதிரி இருந்துச்சும்மா… ’ என்று சமாளித்தபடி லைட்டை அணைத்துவிட்டு போய் திரும்பவும் படுத்துக்கொண்டாள்.

இந்திக்காரன்… சுவாரசியமாய்த்தான் இருக்கிறது. ஆனால் எத்தனை நாள், எதுவரை, கல்யாணமுமா? அப்புறம் அம்மா… புரியாத பாஷையுடன்… ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு…தகரக் கொட்டகையில்? கவலை பயம் எல்லாம் வந்தது இவளுக்குள்.

‘ நீ…அழ்கா இருக்கே… ‘

மறுபடியும் களுக் என்று சிரித்துக்கொண்டாள்.

 ‘ என்னாடி.. இன்னும் தூங்கலியா… ’

‘ ஆச்சுமா… ‘ என்றபடி போர்வையை இன்னும் நன்றாக இழுத்து போர்த்திக்கொண்டாள். அம்மாவுக்கு விஷயம் தெரிந்தால், மொத்தாமல் விடமாட்டாள்.

xxxxxx

காலையில் போகிற போக்கில் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். முன்னைக்கு கொஞ்சம் பளபளவென்று இருப்பது போல தெரிந்தது. சிரித்துக் கொண்டாள்.

‘ இந்திராணி ஹிந்திராணி ஆகிடுவா…’

அதை நினைக்கவும் மேலும் சிரிப்பு வந்தது.

‘ ஹிந்தி ராணி ‘ சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.

குளித்துவிட்டு வந்தவள், இருப்பதிலேயே நல்ல பாவாடை தாவணியாகப் பார்த்து எடுத்து கட்டிக்கொண்டாள்.

‘ ஏன்டி…நீ வேலைக்குத்தானே போறே… இல்லை கல்யாணம் காதுகுத்துக்குப் போறியா…’ அம்மா திட்டினாள்.

 ‘ ஏம்மா ‘ என்றாள்.

‘ சித்தாள் வேலைக்குப் போறவ பழச எடுத்துக் கட்டிக்கிட்டு போவாளா…அத உட்டுட்டு இப்படி புதுச எடுத்துக் கட்டிக்கிட்டு போறியேன்னு கேட்டேன்…’ என்றவள், ‘ ராத்திரி பூரா அனத்திக்கிட்டே இருந்தே… இந்தி இந்தினு உளறுனே… என்ன இந்திக்காரன் எவன்கிட்டயாவது பேச்சு குடுத்தியா… மரியாதையா வேலைக்கு மட்டும் போயிட்டு வா… பின்னாடி ஏதாவது கலாட்டா பண்ணிவச்சே… மவளே தூக்கிப் போட்டு மிதிச்சுடுவேன்… ‘

 ‘ ஏற்கனவே ஓடிவந்தவ பொண்ணுதானே… இதுவும் ஓடித்தான் போகும்னு வீட்டைச் சுற்றி ஜாடை பெசறாளுங்க… நீயும் அதுக்கு தகுந்த மாதிரி பண்ணிவச்சிடாதே… பிய்ச்சிபுடுவேன் பிய்ச்சு… என்னடி சொல்லிட்டே இருக்கேன்… அப்படியே போறே… ‘

‘ இன்னிக்கு ஒரு நாளைக்கு மட்டும்மா… ‘

‘ ஒழிஞ்சு தொலை… ‘

டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு இவள் கிளம்பியே விட்டாள்.

கண்டிப்பா அவன் லவ்தான் பண்ணுகிறான், அதை வந்து சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை. திடீரென்று கையைப் பிடித்துவிடுவானா… முத்தம் ஏதும்… ச்சே… இப்போது வெட்கம் வரவில்லை, கோபம்தான் வந்தது.

சட்டென நின்றாள். அப்படியே திரும்பினாள். மடமடவென வந்து பழையதையே கட்டிக்கொண்டு திரும்பினாள்.

கட்டிடத்தை நெருங்கும்போது… ராசாத்தி கண்ஜாடை காட்டி கூப்பிட்டாள். புரியாமல் அவளை நெருங்கினாள்.

‘ ஏன்டி, தூக்குச் சட்டியை கொக்கியில தொங்கவிடப் போனேன்…என்னைப் பார்த்து ‘ சுந்தர் ‘ னு சொல்லி சிரிச்சான்டி அந்த உமர்… என்னாடி அர்த்தம் அதுக்கு…’ என்றாள்.

களுக்கென்று சிரித்துக் கொண்ட இவள், மனதுக்குள் சொல்லிக்கொண்டாள், ‘ அப்பாடா… நான் இல்லை… ’

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பெட்டி நிறைய பணம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    திருட்டுப்பட்டம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு