2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“நாம அழைப்பிதழ் கொடுக்கப் போயிருந்தோமே… அப்பவே எனக்கு தெரியும்!… அவர் பங்க்ஷனுக்கு வர மாட்டார்ன்னு!.. ஹும்… அழைப்பிதழைக் கையில் வாங்கும் போது அவர் மூஞ்சி போன போக்கை கவனிச்சேன்!… சும்மா வண்டி வண்டியாய் பொறாமை பொங்கி வழிஞ்சது!” நிற்காமல் பேசிக் கொண்டே போனாள் அமுதா.
சட்டென்று தலையைத் தூக்கி நான் அவளை முறைப்பாய்ப் பார்க்க, “க்கும்… என்னையே முறைங்க!… என்னைக்கு நான் சொன்னதை ஒத்துக்கிட்டிருக்கீங்க?… “அண்ணன்… அண்ணன்”னு நீங்கதான் தலை மேல தூக்கி வெச்சு ஆடிட்டிருக்கீங்க!… அட… கூடப் பொறந்த தம்பிக்காரன்… தானா… தனியா கையை ஊன்றி… காலை ஊன்றி.. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி… இன்னைக்கு சொந்தமா ஒரு கம்ப்யூட்டர் சென்டர் திறக்கிறான்!… அவனுக்கு எந்த விதத்திலும் உதவாமல் போனாலும் பரவாயில்லை… அவன் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படாமல் இருக்கலாமல்லவா?” இன்னும் அதிகமாய்ப் பேசினாள்.
“என்ன அமுதா… என்ன ஆச்சு உனக்கு?… அவர் என்ன தப்பு பண்ணிட்டாருன்னு நீ இப்படிக் கொதிக்கறே?” என் சகோதர பாசம் என்னையும் மீறி கேட்கச் செய்தது.
“என்ன பண்ணிட்டாரா?… ஏங்க… கம்ப்யூட்டர் சென்டர் திறப்பு விழாவிற்கான முதல் அழைப்பிதழை ஆசையா ஆசையாய்க் கொண்டு போய் உங்க அண்ணனுக்கு வெச்சீங்களே… என்ன ஆச்சு?… மனுஷன் ஃபங்ஷனுக்கே வரலை!… நீங்க கொடுத்த மரியாதைக்கு அவர் கொடுத்த பதில் மரியாதை சூப்பர்ங்க!” கை தட்டிச் சிரித்தாள் அமுதா.
அவள் பேச்சிலிருந்த நியாயம் எனக்கு புரியாமல் இல்லை. அண்ணனின் அந்தச் செயல் எனக்குள்ளும் கோபத்தை உண்டாக்கியிருந்தது உண்மைதான். ஆனால், அவள் இயல்பு அப்படி கத்துவது… கத்தித் தனது ஆற்றாமையை தீர்த்துக் கொள்வது. என் இயல்பு இடிந்து போய் அமைதியாய் இருந்து விடுவது.
மூன்று நாட்களுக்குப் பிறகு, கடை வாசலில் நிழலாட தலையை தூக்கிப் பார்த்தேன்.
அண்ணன்.
“வாங்க!” என்று வாய் நிறைய கூப்பிட விரும்பாமல் தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டினேன்.
உள்ளே வந்தவர் நான் சொல்லாமலேயே நாற்காலியில் அமர்ந்து பார்வையால் கடையை மொத்தமாய் அளந்து விட்டு, “எப்படி?… பிசினஸ் பரவாயில்லையா?” கேட்டார்.
“ம்” என்றேன் அலட்சியமாய்.
“ஆரம்பத்துல கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்… அதுக்காக நொடிஞ்சு போயிடாதே!… பொறுமையைக் கடைப்பிடி!… நல்ல காலம் அதுவே வரும்”
“க்கும்… வந்து விட்டாரய்யா… அட்வைஸ் ஆறுமுகம்” உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்.
என் இறுக்கமான முகத்தை பார்த்து என் உள் மன ஓட்டத்தை புரிந்து கொண்டவர், “என்னப்பா… நான் திறப்பு விழாவிற்கு வரலை!ன்னு கோபமா?” கேட்டார்.
“இருக்காதா பின்னே?… முதல் இன்விடேஷனையே உங்களுக்குத்தானே கொண்டு வந்து வெச்சேன்?… இப்படிப் பண்ணிட்டீங்களே?… ச்சே!” முகத்தில் கடுப்பைக் கேட்டினேன்.
நீண்ட பெருமூச்சு விட்டவர், “ஹச்” என்று ஓங்கித் தும்ம, சற்று நகர்ந்து முகத்தை சுளித்தேன்.
தொடர்ந்து “ஹச்… ஹச்… ஹச்…” என்று அடுக்குத் தும்மல்களை அவர் வரிசையாய் வெளிப்படுத்த குழம்பினேன்.
கிட்டத்தட்ட இருபது இருபத்திஐந்துக்கும் மேற்பட்ட தும்மல்களை அவர் வெகு சிரமத்துடன் தும்மி முடிக்கும் போது விழிகள் ரத்தச் சிவப்பேறியிருக்க, கண்ணீர் மாலை மாலையாக ஊற்றெடுத்து கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது.
லேசாய்க் கலவரமானேன். “அண்ணா!.. என்னண்ணா இது?… என்ன ஆச்சு உங்களுக்கு?” என்னையும் மீறி என் பாசம் வார்த்தைகளாய் வந்தது.
“இதுவா?… இதுதான்பா சமீபத்தில் என்னைப் பிடிச்சிருக்கற வினோதமான வியாதி!… உன்னோட கடைத் திறப்பு விழாவிற்கு முதல் ஆளா வந்து நின்னு… எல்லாக் காரியங்களையும் நானே பார்க்கணும்னு ரொம்ப ஆசையாயிருந்த என்னை இந்தச் தும்மல் சனியன் வர விடாமல் தடுத்திருச்சுப்பா!… என்ன ஆயிடப் போகுது?ன்னு ஒரு தைரியத்துல வந்துடலாம்னு நெனச்சப்போ… நீ கஷ்டப்பட்டு முன்னேறி… ஆசை ஆசையாய் ஆரம்பிக்கிற கடையோட திறப்பு விழாவிற்கு வந்து… முன்னாடி நின்னு… நல்ல காரியம் நடக்கும் பொழுது இந்த மாதிரி சரமாரித் தும்மல்களை போட்டு ஒரு அபசகுனத்தை ஏற்படுத்த விரும்பாமல்தான் நான் வரலை!… அதுக்காக என் மனசு பட்ட பாடு… இன்னும் பட்டுக்கிட்டிருக்கிற வேதனை எனக்குத்தான்பா தெரியும்!… என் சம்சாரம்… அதாவது உன் அண்ணி மட்டும் உயிரோட இருந்திருந்தா… அவளையாவது அனுப்பியிருப்பேன்… ப்ச்… அவளும் இல்லை” தழுதழுத்த குரலில் அவர் சொல்லும் பொழுது என் கண்களின் ஓரங்களிலும் ஈரம் கசிவு.
சிறிது நேரம் கீழே குனிந்து அமர்ந்திருந்தவர், தன் சட்டையின் உள் பாக்கெட்டிலிருந்து ஒரு ஐநூறு ரூபாய்க் கட்டை எடுத்து, பலவந்தமாய் என் கைகளில் திணித்து விட்டு, மெல்ல எழுந்து தும்ப்பிக் கொண்டே வெளியேறினார்.
நீண்ட நேரம் நான் அழுது கொண்டேயிருந்தேன். ஏனென்று தெரியவில்லை.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings