நெடுநாள் கழித்து ஒரு நண்பர்கள் சந்திப்பு. எல்லோரும் உற்சாகமாக விளையாட்டுகளில் கலந்துகொண்டிருந்த போது வழக்கம் போல ரவி மட்டும் தாமரை இலை நீர் போல ஒட்டியும் ஒட்டாமல் கடமைக்கென வந்தவன் போல ஓரமாக நின்றிருந்தான்.
பள்ளி முதல் நான் மட்டுமே யாராவது இவனை அடித்து விட்டாலோ, திட்டினாலோ இவன் பக்கம் நின்று ஆறுதலாக பேசும் ந(ண்)பர். அப்படி இன்றும் நானே ரவியை நோக்கி நடந்தேன்.
ரவி.. ஒரு தனிப்பிறவி. இன்று இன்ட்ரோவெர்ட் என்று இணையத்தில் படிக்கும் அனைத்து சுபாவமும் ஒருங்கே பொருந்திய அந்த ஒரு உருவத்தின் பக்கத்தில் தான் பள்ளியில் நான் அமர்த்திருப்பேன். நல்ல குணம். படிப்பில் கெட்டி. பாவம் ஏழைக்குடும்பமானாலும் கடன் வாங்கி தன் மகனை கான்வென்டில் சேர்த்திருந்தார் அவன் தந்தை.
ஏறத்தாழ பிறப்பு முதல் பள்ளியிறுதி வரை ரவியின் வாழ்கையில் நடத்த அனைத்தும் எனக்கு தெரியுமென்றாலும் பள்ளிக்கு பிறகு அவனிடம் ஏதோ பெரிய மாற்றம். இருவரும் வேறு பாதையில் சென்ற பிறகு இன்றைக்குதான் நேரில் சந்திப்பு.
“என்னடா ரவி.. இன்னிக்கி யார்கிட்ட ப்ளாஸ்திரி” என்று என் குரல் கேட்டு பழைய நட்புடன் என்னிடம் பேச வந்த ரவியிடம் குசல விசாரிப்புடன் நடுவில் நடந்த பல வருட கதைகளை அரைமணியில் பேசிவிட்டு சாப்பிடும் அறை நோக்கி நடந்தோம்.
இத்தனை வருடமாக என் மனதிற்குள் அழுத்திக் கொண்டே இருந்த அந்த கேள்வியை இன்று எப்படியும் ரவியிடம் கேட்டு விடுவதென முடிவு செய்தபடியே கை கழுவும் பைப்பை திறந்தேன்.
சாப்பிட உட்கார்ந்து, சாம்பார் சாதம் முதல் தயிர் வரை இலையில் அனைத்தும் தீர்ந்தது.. என் தயக்கம் தீர்ந்த பாடில்லை. விக்ரம வேதாளமாய் எனக்கு விடை தெரியாமல் இருந்த ஒரே கேள்வி. “ஏன் அவன் அந்த வாய்ப்பை இழந்தான்? எதை என்னிடம் இத்தனை வருடமாக மறைக்கிறான்?” நீண்..ட தயக்கத்திற்கு பின் டெசர்ட் எடுக்க செல்லும் போது கேட்டுவிட்டேன்.
அந்த கேள்வி, குலோப் ஜாமுன் சுவைக்கச் சென்ற அவனை கசப்புடன் நிறுத்தியிருக்க வேன்டும். கப்பை கீழே வைத்துவிட்டு, விறுவிறுவென எழுந்து கை கழுவி, மரத்தடி நோக்கி நடந்தான்.
எனக்கு பிடித்த ஸ்வீட்டை மிஸ் பண்ணிவிட்ட வருத்தத்தை தாண்டி, என் கேள்வியால் ரவி வருத்தமடைந்தானோ என நினைத்து நானும் பின்னே ஓடினேன். பள்ளிக்காலத்தில் ரவியுடன் மூன்றாவது பெஞ்சில் உட்காரந்து அவனுக்கு சொல்லும் ஆறுதல் பேச்சு போன்ற அதே நிலைமை. ஆம்! ரவியுடனான இந்த சந்திப்பு, என்னை பத்து வருடத்திற்கு முன் நடந்த சம்பவங்களை நினைத்துப்பார்க்க வைத்தது.
மனிதர்கள் எல்லோருமே நம்மைப்போல நல்லவர்தான் என நினைத்து வாழும் குழந்தைப்பருவம் முடிந்து ஓரளவுக்கு உலகம் இப்படித்தான் என பட்டறிவு பிறக்கும் வயதை நெருங்கிய காலம். நண்பர்களென்று சொல்லிக்கொள்ளுமளவுக்கு எங்களுக்குள் உறவில்லையென்றாலும் ஒரே ஊர்தான் என்ற வகையில் நாங்கள் மூவரும் ஒன்றாக பள்ளிக்கு பயணிப்பது வழக்கம்.
நாங்கள் என்றால் நான், ரவி மற்றும் ரவி என்றாலே உள்ளடங்கும் விதமாக அவனுடனே சுற்றும் ஒரு செராக்ஸ், வைரஸ் அல்லது இப்படி வைத்துக்கொள்வோம்.. கூடவே இருக்கும் ஒரு ஒட்டுண்ணி. மூவரும் ஒன்றாக ஒரே இருக்கையென்றாலும் நான் கொஞ்சம் பொதுச்சொத்து. எல்லோரிடமும் சகஜமாக பழகுவேன். ஆனால் ரவியும் அவனும் அப்படியல்ல.
ரவி முன்னர் சொன்னது போல இன்ட்ரோவரட் வகை. அவனோ ரவி என்ன செய்கிறானோ அப்படியே பார்த்து செய்யும் காப்பி ரகம் அவனுக்கென பாணியில்லை.. இன்று ஒரு முகமூடி நாளை வேறொன்று. இவர்கள் இருவரும் பேசுகையில் வாழ்கையில் அடுத்து என்ன செய்ய போகிறோம் என்பது முதலாக வெள்ளந்தியாக பேசிக்கொள்வது வழக்கம்.
அப்படி ரவி போகும் இடமெல்லாம் அவனும் உடன் வருவான். ரவி போகும் கோச்சிங் சென்டர்கள், கணிணி வகுப்பு, தேர்வு திருப்புதல் வகுப்புகள் என ரவி வழியை பின்பற்றி வந்தால் ரவியைப்போல மார்க் வாங்கலாம் என யாரோ அவனுக்கு சொல்லியிருப்பர் போலும்.
ஒரே பெஞ்ச் என்பதால் நானும் ரவியும் பெரிதாக வேறுபாடு பார்க்காது அனைத்தையும் அவனுக்கு சொல்லிக் கொடுப்பபோம். அதற்கு பலனும் கிடைக்கும் அவனுக்கு. இப்படி ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்த பயணம் அதற்குப் பிறகாவது அந்த ஒட்டுண்ணி வழி தனியாக இருக்கும் மூவரும் ஒன்றாக இல்லாவிட்டாலும் நட்பு தொடரும், நல்ல நண்பர்களாக இருக்க போகிறோம் என்ற நினைப்பு பொய்யாகும் வகையில் நடந்தது தான் திருப்பம்.
பத்தாம் வகுப்பிற்கு பின்னர் ஒரு மாணவனுக்கு தன் வாழ்க்கையில் என்னவாகப் போகிறோம் என நினைத்து வைத்திருக்கிறார்களோ அதற்கேற்ப பாடத்திட்டத்தை தேர்வு செய்யும் வாய்ப்பினை நம் கல்வித்திட்டம் அமைத்துக் கொடுத்துள்ளது. ஆனாலும் அந்த வைரஸ் இதிலும் ரவியை பின்பற்ற, பள்ளி முடிந்து கல்லூரி தேர்வு செய்யும் இடத்தில் வந்தது சிக்கல்.
பன்னிரண்டாம் வகுப்பில் நானும் ரவியும் சிறிது நன்றாகவே படிப்பதாலும் அவனும் எங்கள் வழியை பின்பற்றுவதாலும் முதல் 2-3 இடங்களுக்குள் மூவரும் வருவோம். அந்த ஆண்டு, இந்தியாவின் டாப் 5 ரேட்டிங்கில் எப்போதும் இருக்கும் பிரபல கல்லூரி நாங்கள் தேர்வு செய்த பாடத்தில் பொதுத்தேர்வில் ஒவ்வொரு பள்ளியிலும் முதலிரண்டு இடங்கள் பிடிக்கும் மாணவர்க்கு ஸ்காலர்ஷிப் அளித்து சேர்த்துக் கொள்வதாக அறிவித்திருந்தது. எங்கள் நோக்கமும் அந்த கல்லூரி வாய்ப்பை அடைவதாகவே இருந்ததால் அந்த முனைப்பில் தயார் செய்து அதில் வெற்றியும் பெற்றோம்.
அப்போது எங்களது குடும்பங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் ரவிக்கும் அவன் குடும்பத்திற்கும் அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. முதலிடம் பிடித்த நான், அந்த பிரபல கல்லூரியில் சேர்ந்த பின்பும் இரண்டாம் இடம் பிடித்த ரவிக்கு கால் லெட்டர் வரவில்லை.
ஏன் என ஒரு வாரம் கழித்து நானும் அவன் பெற்றோரும் பள்ளியை அணுகும் போது, ஆசிரியர்கள் அனைவரும் ரவியை ஏதோ குற்றவாளி போல பார்த்தனர். அனைவரும் அவனை அடிக்காத குறை தான்.
என்னை வெளியே இருக்கச்சொல்லி விட்டு தலைமை ஆசிரியர் அவனையும் பெற்றோரையும் மட்டும் உள்ளை அழைத்து நெடுநேரம் பேசினார். வெளியே வந்தவர்கள் முகத்தில் ஏதோ இனம்புரியாத கவலை. என்னிடம் யாரும் எதுவும் சொல்லாமல் கிளம்பி விட்டனர்.
அன்றைக்கு பொழுதுடன் இரவி மறையும் போதே இந்த ரவியும் என் கண்களிலிருந்து மறைந்துவிட்டான். கடைசியாக அவன் நாங்கள் சேர்ந்த அந்த டாப் கல்லூரி வாய்ப்பை தவற விட்டான் என்று மட்டுமே தெரிய வந்தது.
அதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து போன வருடம் தான் வாட்ஸப் குழுவில் ஒரு நண்பன் மூலம் ரவியின் தொலைபேசி எண் கிடைத்தது. அந்த குழுவின் மூலம்தான் இன்றைய சந்திப்பு.
எனக்கு விடை தெரியாமல் மண்டையை குடைந்த ஒரே கேள்வி, “ஏன் ரவி அந்த வாய்ப்பை இழந்தான்? கிரகணத்தில் மறையும் அந்த இரவி போல் இந்த ரவி ஏன் இத்தனை காலம் எங்களை சந்திக்காமல் மறைந்திருந்தான் எதை என்னிடம் மறைக்கிறான்?” இதுதான் அவனுக்கு குலோப் ஜாமுன் கசக்க காரணமான கேள்விகள்.
உணவு முடிந்து டி.ஜே ஆரமித்த சத்தம் சட்டென என்னை நிகழ் காலத்திற்கு அழைத்துவர, அவ்வளவு நேர அமைதிக்குப் பின்னர் ரவி மெதுவாக பேச ஆரம்பித்தான். ஏறத்தாழ பத்து வருட சிதம்பர ரகசியம் ஒரு பெருமூச்சுடன் போட்டி போட்டு வெளியே வருகிறது.
“பிர்னஸ்பல் ரூம்ல நடந்தது இது தான் டா.. பப்பளிக்ல ஸ்கூல்லயே நீ முதலிடம், உனக்கு சீட்டு வந்திருச்சு.. நான் இரண்டாவது ஆகவே நியாயமாக நம்ம ரெண்டு பேருக்கு தான் பள்ளியில் இருந்து ஸ்காலர்ஷிப்க்கு ரெக்கமண்டேஷன் போயிருக்கனும்.. ஆனா மூனாவதா வந்த அவனும் வழக்கம் போல நான் போகும் வழியில் போக நினைச்சது தான் பிரச்சனையே.. வெள்ளந்தியாக நம்ம இந்த காலேஜில சேர்வதை பத்தில்லாம் அவன்கிட்ட பேசினது தான் வினையா போச்சு” என பேச முடியாமல் விசும்பினான்.
அவன் விசும்பி விசும்பி சொன்னது இதுதான். இந்தியாவின் பிரபல கல்லூரியில் சீட் வாங்கும் ஆசையில், மூன்றாம் இடம் பிடித்த அந்த ஒட்டுண்ணி, இரண்டாம் இடத்தில் இருந்த ரவி வேறு கல்லூரியில் சேர்ந்துவிட்டதாகவும், அவனுக்கு “சேர விருப்பமில்லாததால் அடுத்த இடத்தில் இருக்கும் நபருக்கு ஸ்காலர்ஷிப்பை விட்டுக்கொடுக்கிறேன்” என ரவி அளித்தது போன்ற போலி கடிதத்தை வழங்கி தலைமை முதல் அனைவரையும் நம்ப வைத்திருக்கின்றனர் அவன் பெற்றோரும் உறவினர்களும்.
விஷயமறிந்து அதிர்ந்த ரவி தரப்பு கல்லூரியை நாடி செல்கையில் அங்கும் விரட்டப்பட, அங்கிருந்த நல்லவரான பியூன் ஒருவர் சொன்ன பிறகுதான் அந்த வைரஸ் செய்த உண்மையான விஷகாரியம் தெரியவந்திருக்கிறது. இது அவனை நண்பனாக நம்பிய ரவிக்கு பேரதிர்ச்சி.
அந்த ஒட்டுண்ணியின் உறவினர் ஒருவரின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பள்ளி, கல்லூரி நிர்வாகத்தை மிரட்டி இவ்வாறு மோசடி செய்திருக்கிறார்கள். பின் நியாயம் கேட்ட ரவியின் பெற்றோரையும் கட்டப்பஞ்சாயத்து செய்து விஷயத்தை அடக்கியிருக்கிறார்கள்.
இவ்வாறு ரவி கூறி முடிக்கையில் தாங்க முடியாது, பத்து வருடமாக மனமடையில் தேக்கி வைத்த அழுகை வெடித்து ஆறாக வழிந்தோடியது. அந்த விழி வெள்ளத்தில் அவன் துக்கம் பாதியாவது கறைந்திருக்கக்கூடும்.
“இந்த போர்ஜெரி பற்றி காவல்துறையில் புகார் அளித்திருக்கலாமே? எங்கள் யாரிடமாவது உதவி கேட்டிருக்கலாமே?” என்று அவனிடம் கேட்க என் மனதில் தோன்றியது..
ஆனால் அந்த வைரஸ் குடும்பத்தின் பணபலமும் அரசியல் செல்வாக்கின் முன்பும் ஏழை குடும்ப ரவியின் சொற்கள் எந்த அம்பலத்திலும் ஏறியிருக்காது என்று நினைத்து அமைதியானேன்.
கண்களைத் துடைத்து முகம் கழுவிக்கொண்டிருந்த ரவியின் மனதை எப்படியோ தேற்றி, “இறைவன் கருணையாலும் நல்ல மதிப்பெண் பெற்றதாலும் இன்று நீ நல்ல நிலையில் தானே இருக்கிறாய்” என்று உற்சாகப்படுத்தி சந்திப்பு நடந்த ஹாலிறகு அழைத்து வந்தேன்.
வயது ஏறியிருந்தாலும் அவனை எவ்வாறு சமாதானம் செய்வது என நான் அறிந்திருந்ததால் ஒருவாறு தேற்றியிருந்தேன். ஹாலிற்கு வந்தவுடன் என் பிரம்மாஸ்திரம் அனைத்தும் புஸ்வாணமாகும் விதமாக பி.எம்.டபிள்யூ காரில் ஒய்யாரமாக வந்திறங்கினான் அந்த முகமூடி.
வந்தவன், அனைவரையும் பார்த்து பேசிவிட்டு என்னையும் ரவியையும் நோக்கி வந்து, ரவியிடம் நக்கலாக நேருக்கு நேராக “உனக்கே விபூதி அடிச்சேன் பாத்தியா” என்ற தொணியில் பேசிய போது ரவி முற்றிலுமாக உடைந்துவிட்டான்.
மனிதர்கள் தான் எத்தனை ரகம்! பேசிவிட்டு நடந்த அவனை நோக்கி ஆத்திரத்தில் சட்டையை பிடித்து நாலு சாத்து சாத்த பாய்ந்த என்னை, ரவி தடுத்து விட்டான்.
“வேணாம் டா, இத்தனை காலம் நான் பாதுகாத்த ரகசியம் எல்லாருக்கும் தெரிஞ்சிடும்.. ஏற்கனவே பள்ளி ஆசிரியர்ல இருந்து ஊர்காரங்க வரை நான் ஏதோ நல்ல வாய்ப்பை உதாசீனம் செய்தது போல் பேசினதும் ஒவ்வொருவருக்கும் விளக்கம் கொடுக்க முடியாமல் திணறினதும் இன்றும் மறக்கல… இப்போ உண்மை தெரிஞ்சா, ‘கூட இருந்தவனே ரவியை ஏமாத்திட்டான்.. ஐயோ.. பாவம்’ ன்னு இவங்களோட பரிதாப “உச்” கொட்டல்களே என்னோட மிச்ச வாழ்கையின் நிம்மதியை கெடுத்துடும்.. நம்ம இங்கிருந்து போயிடலாம் என்னை வீட்டுல விட்டுடு” என்றான்.
அவன் சொன்னதில் இருந்த நியாயம் புரிந்து அதற்குமேல் அங்கு இருக்க பிடிக்காமல் இருவரும் வெளியேறினோம். ரவியை வீட்டு வாசலில் இறக்கிவிட்டு கதவைத் திறந்து உள்ளே செல்லும் வரை அவனையே பார்த்திருந்தேன்.
ரவி இன்று நல்ல நிலையில் உள்ளானென்றாலும், அந்த சம்பவம் நடந்த போது பக்குவமறியா வயதில் இந்த துரோகத்தை கடந்து செல்ல எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?
அந்த முகமூடி துரோகியைப் போல சிலர் நம் மனதில் நீங்காத வடுவையும் வாழ்க்கை பாடத்தையும் தந்துவிட்டு செல்கிறார்கள் என்று நினைத்தபடி வண்டியை உதைத்துக் கிளம்பினேன்…
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings