in

கங்கையா காவிரியா (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

கங்கையா காவிரியா (சிறுகதை)

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

திரில் இருக்கும் சாப்பாட்டை சாப்பிடப் பிடிக்காமல், சாப்பாட்டில் ஈ மொய்ப்பது கூட கவனிக்காமல் அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வைதேகி.

சில நாட்களாகவே இப்படித்தான் அவமானப் படுத்தப்படுகிறாள். அவளை அலட்சியப்படுத்திப் பேசியதைக் கூட அவள் மனம் பெரியதாக நினைக்கவில்லை. அவள் கற்ற கல்வியை, அவள் விரும்பும் இசையை, உயிராக மதிக்கும் தமிழை துச்சமாகப் பேசியதைத் தான் அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

அலட்சியப்படுத்தியவர்கள் பேரப் பிள்ளைகளே. அவள் பெருமையை புரிந்து கொள்ள வேண்டிய இரு பிள்ளைகளுமே தங்கள் மக்களோடும், துணைவியரோடும் சேர்ந்து வாயைக் கையால் மூடி சிரிக்கும் போது அவளுக்குத் தாங்கவில்லை.

தன் மனதில் உள்ள கோபத்தை கஷ்டங்களை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும். இதே நிலை நீடித்தால் தனக்குத் தனிமையும், அசிங்கமும்தான் மிஞ்சும் என்று நினைத்தாள்.

அப்போது அவளுக்கு, அவள் கணவர் மறைந்த ரகுராம் மீது தான் கோபம் வந்தது. அடை காக்கும் கோழியைப் போல் பாதுகாத்து விட்டு, ஒரே நாளில் நெஞ்சுவலி என்று போய் சேர்ந்து விட்டார். அதனால் தான் தன்னால் மனிதர்களை அடையாளம் காண முடியவில்லை போலும் என்று நினைத்தாள். 

அவருக்குப் பிறகு பிள்ளைகள் மூன்றாவது மனிதர்கள் ஆகி விட்டார்கள்.  பேரப்பிள்ளைகள்  பக்கத்து வீட்டுக் குழந்தைகள் ஆகி விட்டார்கள்!

அவர்களே விலகிப் போக நினைக்கும் போது, நாம் வருந்தி வருந்திப் பழகினால் இன்னும் பிளவு தான் அதிகமாகும் என்பதைப் புரிந்து கொள்ள வைதேகிக்கு ஆறு மாதம் ஆகி விட்டது.

உணர்ந்த பின், அவர்களிடமிருந்து தன்னை தனிமைப் படுத்திக் கொண்டாள். அவர்கள் வசிக்கும் அந்த வீடு, அவளும் அவள் கணவரும் அரசாங்கப் பணியில் இருக்கும் போது  தங்கள் இலாகா மூலம் கடனும், வங்கிக் கடனும் பெற்று கட்டப்பட்டது.

அவர்கள் பணி முடியும் போதுஅந்தக் கடனும் முடிந்தது. ஆதலால்,  வைதேகி அந்த வீட்டின் கீழ் பகுதி முழுவதும் சமையல்கார  மாமியுடன் தனிக்குடித்தனம் வரும் போது பிள்ளைகளால் ஒன்றும் சொல்ல  முடியவில்லை. அவளுடைய தனிமை மற்றவர்களை, மகன்கள் உட்பட யாரையும் பாதிக்கவில்லை.

முதலில் தனிமை கொஞ்சம் துன்பமாகத் தான் இருந்தது, பிறகு பழகி விட்டது. ஏதாவது படிக்கவும் எழுதவும் என்று தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டாள்.

ஒரு நாள் சமையல்கார மாமி, ஒரு மூன்று வயது பெண் குழந்தையுடன் காலையில் வேலைக்கு வந்தாள். குழந்தை மாநிறமாக இருந்தாலும் நல்ல அழகாக சுத்தமாக இருந்தாள்.

சுருண்ட தலை முடியை இழுத்து இரட்டைப் பின்னலாக பின்னப் பட்டிருந்தது. யாரோ கொடுத்த கௌன் போல் இருக்கிறது. லூஸாக அங்கங்கே தொங்கிக் கொண்டிருந்தது.

“மாமி, இந்தக் குழந்தை யார் ?”  வைதேகி.

“யாரென்று தெரியாது மாமி. ஒரு நாள் காலை வாசலில் தண்ணீர் தெளிக்கப்  போனால் வாசல் படியில் படுத்திருந்தாள். அது நடந்து ஆறு மாதம் ஆகியிருக்கும். அன்றிலிருந்து என்னோடு தான் இருக்கிறாள். பேர் கூட சொல்லத் தெரியவில்லை. பெரிய குடும்பத்து குழந்தை போல் இருக்கிறது. இரண்டு பவுனில் எனாமல் கல் டாலர் வைத்து ஒரு செயின் போட்டிருந்தது. எங்கள் தெருவில் உள்ளவர்கள் சேர்ந்து அபிராமி என்று பெயர் வைத்திருக்கிறோம். எனக்கே யாரும் ஆதரவில்லை. இவளை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேனோ” என்று அங்கலாய்த்தாள் சமையல் மாமி லட்சுமி.

பெண் குழந்தைகள் என்றால் வைதேகிக்கு மிகவும் பிடிக்கும்

“மாமி, அந்தக் குழந்தைக்கும் இரண்டு இட்லி கொடுங்கள்” என்றாள் வைதேகி.

“சாப்பிடுவது கூட ரொம்ப நாசுக்கு, ஒரு இட்லிதான் மாமி சாப்பிடுவாள். பாட்டு என்றால் மிகவும் இஷ்டம் . டி.வி.யைப் பார்த்து நன்றாகப் பாடுவாள். எதையும் துடுக்காகப் பேச மாட்டாள். ரொம்ப நல்ல பெண், எனக்குத் தான் நல்ல மாதிரி வளர்க்க சக்தி இல்லை” லட்சுமி.

அன்றிலிருந்து தினம் அந்தக் குழந்தையைத் தன்னுடன் அழைத்து வருவாள் லட்சுமி. வைதேகி வெளியே போகும் போது ஒரு துணையாக அபிராமியை அழைத்துச் செல்வாள். ஆதலால் அவளுக்கு சுமாரான விலையில் அழகான ஆடைகள் வாங்கிக் கொடுத்தாள் வைதேகி.

வைதேகிக்கு  உதவியாக அவள் சொல்லும் வேலைகளைச் செய்வாள்.

திடீரென ஒரு நாள், ஆக்ஸிடென்ட் என்ற பெயரில்  எமன் லட்சுமியை அழைத்துக் கொண்டான்.

லட்சுமி கண்ணை மூடும் முன்பு, அபிராமியின் இரண்டு பவுன் சங்கிலியையும், பழைய உடைகளையும் ஒரு பையில் போட்டு வைதேகியிடம் கொடுத்து விட்டுத் தான் கண்களை மூடினாள்.

அபிராமி மீண்டும் அனாதையானாள். வேறு யாரும் அவளை வளர்க்க முன் வரவில்லை. வைதேகி அவளைத் தன்னுடன் அழைத்து வந்து விட்டாள்.

அபிராமியை அழைத்து வரும்போதே , வைதேகி மனதிற்குள் ஒரு சங்கல்பம் செய்து கொண்டாள். தன் மேல் உண்மையான அன்பில்லாத சொந்தங்களை விட, எங்கிருந்தோ வந்த அபிராமி தன் தனிமைத்  துயரைப் போக்குவாள் என்று திடமாக நம்பினாள்.  ஆதலால் அவளுக்கு தன்னால் முடிந்த வரை நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும்  என்று விரும்பினாள். 

அந்தக் குழந்தையை குறைந்த அளவே கட்டணம் செலுத்தி அரசாங்கப் பள்ளியில் சேர்த்தாள். தேவையான, ஆடம்பரமில்லாத எல்லாப் பொருட்களையும் வாங்கித் தந்தாள்

அபிராமி விரும்பும் சங்கீதத்தை, மாலையில் ஒரு மணி நேரம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தாள்.

அபிராமி வைதேகியை “அம்மா” என்றே அழைக்கத் தொடங்கினாள்

“அபிராமி… நான் உன் பாட்டி மாதிரி. என்னைப் போய் அம்மா என்றால் நாலு பேர் சிரிப்பார்கள்” எனவும்

“பாட்டி என்றால் கொஞ்சம் விலகிப்  போய் விட்டாற் போல் இருக்கிறது. அம்மா என்றால் நெருக்கமாக, உரிமையாக இருக்கிறது. கோயிலில் இருக்கும் அம்மனைக் கூட அம்மா என்று தானே அழைக்கிறோம். யாரும் பாட்டி என்றோ, அத்தைப் பாட்டி என்றோ கூப்பிடுவதில்லையே”

வைதேகிக்கு அதைக் கேட்டு உடம்பு சிலிர்த்தது

“எவ்வளவு அழகாகப் பேசுகிறாயடி கண்ணே! என் கண்ணே பட்டு விடும் போல் இருக்கிறது. என்னையும் அம்மனையும் ஒப்பிட்டுப் பேசுகிறாயே, அது தப்பு”

“போங்கம்மா ! அது ஒன்றும் தப்பில்லை. நீங்கள், அம்மனே உயிர்பெற்று என் அருகில் இருப்பது போல் தான். கடவுள் வர முடியாத இடத்தில் அம்மாவை அனுப்புகிறார் என்கிறார்கள்.  ஆனால் நீங்கள் தான் எனக்குக் கடவுள்” என்று  கண்ணீர் வழிய  வைதேகியின் வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கொண்டு இடுப்பை  அணைத்து விசும்பிக் கொண்டே கூறினாள் .

ஒவ்வொரு செயலும் ஒரு காரண காரியத்தோடு தான் நடக்கும் என்று பெரியவர்கள் சொல்ல வைதேகி கேட்டிருக்கிறாள்.

‘பிள்ளைகளும், பேரன்களும் கூட நம்மை விட்டு விலகிப் போனது, இந்த மாதிரி ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற காரணமாகத் தான் போலும். எல்லாம் பகவான் செயல்’ என்று நினைத்துக் கொண்டாள்.

அதன் பிறகு வைதேகி ரத்த பந்தங்களைப் பற்றி பெரியதாகக் கவலைப்படுவதில்லை. முதலில் பிள்ளைகளும், மருமகள்களும் அபிராமியை வீட்டில் சேர்த்து வைத்திருப்பதற்காக சண்டைக்கு வந்தார்கள்.

“நீங்கள் அன்பாக இல்லாததால் தான் மனம் அன்பைத் தேடி அலைந்தது. கங்கை இல்லாவிட்டால் என்ன? காவிரி போதும் என்று அமைதி கொண்டது. உங்கள் அன்பும் பரிவும் இல்லாவிட்டாலும், பெற்ற மகளைப் போல் அம்மா என்றழைக்கும் அபிராமி போதும்” என்றாள் வைதேகி. 

நாட்கள் மாதங்களாகி வருடங்களும் உருண்டோடின.

அபிராமி நன்றாகப் படித்தாள். பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் வாங்கினாள், கர்நாடக சங்கீதத்திலும் நன்கு தேர்ச்சி பெற்றாள்.

“எப்படியாவது உன்னை மருத்துவம் அல்லது இஞ்ஜினீயரிங் படிப்பில் சேர்த்து விடுகின்றேன்” என வைதேகி கூற

“அதெல்லாம் வேண்டாம் அம்மா. கடன் வாங்கி அதிகப் பணம் செலவு செய்து அதெல்லாம் படிப்பதை விட  உங்களுக்குப் பிடித்த தமிழ் இலக்கியம் படிக்கின்றேன். செலவும் அதிகம் ஆகாது.  மாலையில் சில குழந்தைகளுக்கு பாட்டு சொல்லித் தருகிறேன். அதிலும் கொஞ்சம் பணம் கிடைக்கும். தமிழில் எம்.பில் அல்லது டாக்டரேட் செய்தால் கல்லூரியிலும் ஆசிரியர் ஆகலாம். நீங்கள் உங்களை ரொம்பவும் கஷ்டப்படுத்திக் கொள்ளாதீர்கள்” என்றாள் அபிராமி.

சொன்னது போல் தமிழிலக்கியத்தில்  டாக்டரேட் வாங்கி ஒரு கல்லூரியிலும் பணியில் சேர்ந்து விட்டாள் அபிராமி, வைதேகியையும் அன்புடன் பார்த்துக் கொண்டாள்.

அபிராமியின் வாழ்வு நிறைவு பெற அவளது மனதிற்கு பிடித்தாற் போல் திருமணமும் முடித்து வைத்தாள் வைதேகி.

ஒருவருக்கொருவர் புரிதலோடு வாழ்ந்தால், வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தான் கை கொடுக்கும் என்பதில்லை. நல்ல மனம் கொண்ட யாரோடு வேண்டுமானாலும் கைகோர்த்து செல்லலாம் என்று புரிந்து கொண்டாள் வைதேகி

நாம் அன்புகாட்டும் பிள்ளைகள் நம்மை அலட்சியப்படுத்தினால், அவர்கள் பிள்ளைகளும் அல்ல, ஆதரவற்ற குழந்தைகள் நம்மிடம் அன்பு வைத்தால் அவர்கள் அனாதைகளுமல்ல.

கடல் தன்னிடம் வந்து கலக்கும் நதி கங்கையா? காவிரியா?  என்று பார்ப்பதில்லை ! மனிதமும் அன்பும் அப்படித்தான், கங்கை தான் புனிதமா? காவிரியும் புனிதம் தான்.

பிப்ரவரி 2022 மாதத்தின் சிறந்த படைப்பு போட்டிக்கு தேர்வாகி பிரசுரிக்கப்பட்ட படைப்புகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

                                           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. “Gangai mattumE punithamillai. Kaaviriyum nam naattil oduGinRa anaiththu nathiGaLum punithamaana nathiGaLE aagum. Kathaasiriyarukku nal vaazhththukkaL.”

    -“M.K.Subramanian.

ஆயிரங் கவனமிருந்தும்… (சிறுகதை) – ✍ இளவல் ஹரிஹரன், மதுரை

மகிழம்பூ (சிறுகதை) – ✍ ச.  ரமணி