in ,

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 நகரத்திலிருந்த அந்த ஆஸ்பத்திரி  எப்போதும் போல பரபரப்பாக காணப்பட்டது.

வழக்கம் போலவே நோயாளிகளைப் பார்த்துவிட்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள் லதா. எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நடக்கும் என்ற நிலையில் ஒரு பெண் முதல்நாள்  இரவு அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

தேவையான எல்லா டெஸ்ட்டுகளையும் செய்துவிட்டு கூட இருந்தவர்களிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு நர்ஸிடமும்  சில குறிப்புகளை கொடுத்துவிட்டு வந்திருந்தாள். 

வெளியிலிருந்து வரும் நோயாளிகளுக்காக தன்னை தயார் நிலையில் வைத்துக் கொண்டு அங்கிருந்த ஒரு பத்திரிகையை  அசுவாரசியமாக புரட்டிக் கொண்டிருந்தாள் அவள்.

அந்த ஆஸ்பத்திரி மதுரை நகரில் முக்கியமான இடங்களில் ஒன்றில் அமைந்த பிரபலமான ஒன்று. அவளுடைய நேரடிப் பார்வையில் இயங்குவதால் சிறப்பான பெயர் பெற்றிருந்ததுடன் மக்களின் நம்பிக்கையையும் பெற்றிருந்தது.

ஏதோ நினைவாக புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தவள் எதிரில் வந்தவர்களை பார்த்து திகைத்துப் போனாள். உடலெல்லாம் ரத்தம் வழிய  ஒரு பிச்சைக்காரனைத் தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.

பார்த்தவுடன் தோளிலிருந்து மார்பு வரை கத்தியால் கீறிய காயம் நன்றாக தெரிந்தது. அழுக்கான உடலையும் கந்தலான துணியையும் மீறி ரத்தம்  வழிந்தது.

அவசரமாக எழுந்தவள் , “சீக்கிரம் இவரை உள்ளே கொண்டு போங்கள்”, என்று சொல்லி விட்டு கூட வந்தவரிடம் “ஏதாவது பிரச்சினையா! போலீஸில் புகார் கொடுத்து விட்டீர்களா” என்று வினவினாள்.

“கொடுத்துட்டேன் டாக்டர்! முதலில் அவரை பாருங்கள்”, என்றவனுக்கு முப்பது வயதுக்குள் தான் இருக்கும். நிமிர்ந்து பார்க்க வைக்கும் உயரம். கண்ணியமான தோற்றம் .நல்ல ஒரு பதவியில் இருப்பவன் போலத் தோன்றினான். இவனுக்கும் அந்த பிச்சைக்காரனுக்கும்  என்ன தொடர்பு இருக்கக்கூடும்! மனதுக்குள் எண்ணமிட்டவளாக தன் பணியைத் தொடர்ந்தாள் அவள்.

“நல்ல வேளையாக ஆழமாக கத்தி கீறவில்லை .ஆனாலும் ரத்த சேதம் அதிகம்.‌ நல்லவேளை சரியான  நேரத்துக்கு கூட்டி  வந்து விட்டீர்கள் . இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து தான் கூட்டிப் போக முடியும். என்ன நடந்தது! இப்போவாவது சொல்றீங்களா மிஸ்டர்?”

‘நிரஞ்சன்’ என்றான் அவன்.

“ஏதாவது அடிதடியா! கலாட்டாவா!  என்னதான் நடந்தது! “விஷயம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் ஒரு வேதனையும் தெரிந்தது டாக்டரின் குரலில். நிரஞ்சன் ஒரு நிமிடம் கண்களை மூடித் திறந்தான். அன்றைய நிகழ்ச்சிகள் மனதில் படமாக விரிந்தன.

கோவில் வாசலில் காரை நிறுத்தியவன் “இறங்கு காயத்ரி, நான் போய் இடம் பார்த்து பார்க் பண்ணிவிட்டு வருகிறேன்” என்று அவளை இறக்கிவிட்டு காரை நிறுத்துவதற்கான இடம்  பார்க்க சென்றான்.

கீழே இறங்கிய காயத்ரி கோவில் கோபுரத்தின் அழகை கண்டு பிரமித்து நின்றாள். ” இங்கே வந்து நிழலில் நில்லுங்கம்மா”, என்ற குரலில் ஈர்க்கப் பட்டவள் கொஞ்சம் தள்ளிப் போய் அந்தப் பிச்சைக்காரன் அருகில் நின்றாள். ஒரு துணியை விரித்துக் கொண்டு தாடியும் மீசையுமாக பல நாள் குளிக்காத அழுக்குடன்  காணப்பட்டான் அவன். அவனைப் பார்த்து இரக்கப்பட்டவள் தன் கைப்பையில் இருந்து அவனுக்கு சில்லறை எடுத்து கொடுத்தாள்.

“இந்த வெயிலில் தினமும் எப்படி இங்கே உட்காருகிறீர்கள்?”

“என்னம்மா பண்றது ! பிழைப்பு நடந்தாகணுமே!”

“ஏதாவது உழைத்து பிழைக்கலாமே!”

அவன் சிரித்தான். “எத்தனையோ வேலை செஞ்சு பார்த்துட்டேம்மா; தள்ளுவண்டியிலே காய் பழம் வச்சு வித்தேன். எங்கே எங்களிடமே மாமூல் வாங்கிக் கொள்ளும் பலரோட தொல்லை தாங்கமுடியலைம்மா! காயை வாங்கிகிட்டு பணமும் கொடுக்க மாட்டாங்க. எதுவும் சரிப்படலைம்மா!”

அவள் பேசாமல் இருந்தாள்.

“என்னம்மா! உங்களுக்கு சரியா படலை! அப்படித்தானே! ஒண்ணு சொல்றேம்மா! எங்களைப் பார்த்து அசூயைப் படறீங்க! நாங்க யாசகம் தான் கேட்கிறோம். யார்கிட்டேயும் எதையும் பிடுங்கறதில்லை. ஆனா யோசிக்காம எல்லார்கிட்டேயும் பிடுங்குகிறவர்களை திருடுகிறவர்களை உங்களால் எதுவும் பண்ண முடியவில்லை”

“யாரைச் சொல்கிறீர்கள்?” காயத்ரி வியப்புடன் கேட்டாள்.

“முன்னெல்லாம் பர்ஸ் நிறைய பணம் எடுத்துட்டு வருவாங்க. பஸ்ஸில்கூட்டம் இருக்கும் போது எத்தனை பேர் கைப்பொருளை இழந்திருப்பார்கள்! நாங்கள் அப்படி மனச்சாட்சி இல்லாமல் யாரிடமும் எதுவும் எடுப்பதில்லையே! நீங்களாக கொடுப்பதைத்தானே வாங்கிக் கொள்கிறோம்.”

“ஆமாம், சரிதான்” என்று ஒத்துக் கொண்டாள் அவள்.

“இப்படித்தான் வாழணும்னு சில பேர் வாழ்க்கை நடத்துறாங்க எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று சில பேர் வாழ்க்கை நடத்துறாங்க. எப்படியாவது வாழ்க்கை நகர்ந்தால் போதும்னு  எங்களைப் போல இருக்கிறவங்க வாழ்ந்துகிட்டு இருக்கோம்” அவனுடைய வார்த்தைகள் அவளை மிகவும் பாதித்தன.

“அம்மா! நீங்க இங்கே இருக்கீங்களா! உங்க வீட்டுக்காரர் உங்களைக் கூட்டி வரச் சொன்னார்” யாரோ ஒருவன் வேகமாக வந்து அவளிடம் சொல்ல காயத்ரி திகைத்துப் போனாள்.

அவனுடைய படபடப்பும் அவசரமும் அவளை யோசிக்க வைத்தது. “சிவப்பு மாருதியில தானே வந்தீங்க! அவர் சொல்லித்தான் வந்தேன்”

“இல்லையே, அவர் என்னை இங்கேதான் நிற்க சொன்னார். நான் அவர் வந்ததை பார்க்கலையே” சொல்லிக் கொண்டே பார்வையை ஓடவிட்டாள் அவள்.

“அவர்தாம்மா அனுப்பினார் அதோ அந்த நிழலில் நிற்கிறார். நீங்க வாங்கம்மா” கையைப்பிடித்து இழுக்காத குறையாக அவன் அவசரப்படுத்த தயக்கத்துடன்  தொடரப் பார்த்தவளை தடுத்தான் அந்த பிச்சைக்காரன்.

“போகாதீங்கம்மா! அவர் இன்னும் வரலை. இவனை நம்பாதீங்க! “

“நீ யாருடா பிச்சைக்காரன், பெரிசா பேச வந்துட்டே! வாயை மூடிக்கிட்டு சும்மா இரு” அவனிடம் எகிறியவன் ‘வாங்கம்மா’, என்றான் பவ்யமாக.

“வேண்டாம்மா! கொஞ்சம் பொறுங்க! அதோ அவர் இப்போதான் வரார் பாருங்க!” என்று சுட்டிக் காட்டினான்.

நிஜம்தான். நிரஞ்சன் அப்போதுதான் அங்கே வந்து கொண்டிருந்தான். கையில்  பொடி மாதிரி எதையோ வைத்திருந்தவன் கையை நீட்டுவதற்குள்  குறுக்கே புகுந்து தடுத்தான் அந்த பிச்சைக்காரன். 

அவளை இழுத்துப் போக நினைத்த தன் சூழ்ச்சி பலிக்காத வெறியில் தடையாக இருந்தவனை சட்டென்று கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து பறந்து விட்டான் அந்த முரடன்.

ரத்தம் சொட்ட சொட்ட விழுந்த அவனை தன் கைகளில் தாங்கிய அவள் கணவனிடம் எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள். நிரஞ்சனுக்கு என்ன நடக்க இருந்தது என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் தன் மனைவி கடத்தப்பட்டிருப்பாள் என்பதை அறிந்து  கொதித்துப் போனான்.

பட்டப்பகலில் பல பேர் நடமாடும் இடத்தில் ஒரு கோவிலின் முகப்பில் இப்படியெல்லாம் நடக்க முடிகிறதே! எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம்? அவன் எத்தனை பேரை அங்கே நிறுத்தி வைத்திருந்தானோ!

ஒருநிமிடத்தில் ஏதாவது ஒரு பரபரப்பை உண்டாக்கி தானாகவே வருவது போல சித்தரிக்க நினைத்திருக்கிறான். எத்தனை புத்திசாலியாக சாமர்த்தியசாலியாக இருந்தாலும், ஒருகண நேரத்தில் ஏமாறுவதும் உண்டுதானே! யாரும் எதையும் இப்போதெல்லாம் கண்டு கொள்வதும் இல்லை. தன் வேலை நடந்தால் போதும். இந்த காலத்தில் பெண்கள், குழந்தைகள் தனியாக நடமாட முடியாது போலிருக்கிறது.

அவன் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்த லதா அதிர்ந்து போனாள். “மயிரிழையில் தப்பித்திருக்கிறார்கள்”

“ஆமாம்! அதுவும் அந்த பிச்சைக்காரன் தடுக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்றே சொல்லமுடியாது”

“உங்க மனைவி எங்கே!”

“இங்கே  உங்க ரிசப்ஷன் ஹாலில் தான் உட்கார்ந்திருக்கிறாள்”.

“வாருங்கள்! அவங்களையும் கூட்டிக் கொண்டு போய் பார்ப்போம்”

காயத்ரி  பிரமை பிடித்தவள் போல  அமர்ந்திருந்தாள்.‌ திடுதிப்பென்று ஒரு பள்ளம் தோன்றி அவளை விழுங்க நினைத்தது போல  ஒரு அதிர்ச்சியில் இருந்தாள். அவளை தோளில் தட்டிக் கூட்டிக் கொண்டு வந்தான் நிரஞ்சன்.

பிச்சைக்காரன் இப்போது  லேசாக தெளிந்திருந்தான். கையில் டிரிப் ஏறிக் கொண்டிருந்தது. கண் விழித்து பார்த்தவன் காயத்ரியை பார்த்ததும் மலர்ச்சியுடன் லேசாக புன்னகைத்தான். அவனைப் பரிசோதித்துக் கொண்டிருந்த டாக்டரிடம் கண் கலங்கினாள் அவள்.

“அவர் பெயர் கூட எங்களுக்கு தெரியாது. கோவிலுக்கு வந்தோம்‌. கடவுளை நேரிலேயே பார்த்து விட்டோம்”. கரங்களை கூப்பி அவனை வணங்கினாள் அவள்.

“என்ன சொல்றதுண்ணு தெரியலை! ஆனா நீங்க பயப்படாம ஒரு பெரிய அக்கிரமத்தை தடுத்திருக்கீங்க!”. மருத்துவத்துறையில் பல காலம் பணிபுரிந்து அனுபவப்பட்ட லதாவாலேயே   இந்த விஷயத்தை   சுலபமாக ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

“அட! என்னங்கம்மா நீங்க!  இந்தப் பொண்ணு தனியா நின்னா பிரச்சினை வரும்னு தான் என்கிட்டே  நிக்கவச்சு‌  பேச்சு கொடுத்துக்கிட்டிருந்தேன். அவன் வரும் போதே புரிஞ்சிடுச்சு. பயப்பட்டா முடியுமாம்மா! ஒரு அடி நகர்ந்தாலும் சட்டென்று  ஏதாவது செய்து கூட்டிப் போய்டுவான். அவனோட ஆட்கள் நிறைய பேர் தயாரா இருப்பாங்க. எங்களால முடிஞ்ச வரைக்கும் நாங்க  காப்பாத்திக் கொடுக்கிறோம். ஒரு குழந்தையோ பொண்ணோ தனியா நிக்க முடியாதும்மாm காலம் ரொம்ப கெட்டுக் கிடக்கு. நாங்க ரத்தத்தை பார்த்து பயப்படுற மாதிரி  நீங்க பயப்பட்டா  இப்படி மருத்துவ சேவை செய்ய முடியுமாம்மா! அநியாயத்தைப் பாத்து ஒதுங்கிப் போக முடியலை”

மிகவும் சாதாரணமாக சொன்னவனது உருவம் காயத்ரியின் கண்களுக்கு அந்த கோவில் கோபுரத்தை விட பிரமாண்டமாக தெரிந்தது.

கண்களில் நீருடன் அவனை வணங்கியவள், “என் உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றின்னு ஒரு வார்த்தையில் சொல்லி முடிச்சுக்க முடியாது”, தழுதழுத்த அவள் குரலைத் தொடர்ந்து நிரஞ்சனும் சொன்னான்.

“உங்க பெயர் வயசு குடும்பம் எதுவும் எங்களுக்கு தெரியாது. ஆனா உங்க மனசு எல்லோருக்கும் நல்லது மட்டுமே நினைக்கிற மனசு. அது நல்லா தெரியுது”.

“எங்களை மாதிரி பிச்சைக்காரங்க உங்களுக்கு எந்த கெடுதலும் பண்ண மாட்டோம். ஆனா விஷக்கிருமிகள் மாதிரி சமுதாயத்தில் ஊடுருவி இருக்கிற இந்த மாதிரி ஆட்களை நம்பி ஏமாறுகிறவர்கள் எத்தனை பேர்? அவர்களை எதுவும் செய்ய முடியவில்லையே!” அவன் கேள்வி அவனுடையது மட்டுமில்லை, சமுதாயத்தின் கேள்வி. அதற்கு பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்து நின்றார்கள் அவர்கள்.

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கலப்பையும், கணினியும் (சிறுகதை) – கீதா இளங்கோ

    ராஜு வந்து விட்டானா??? (ஒரு பக்க கதை) – அகிலா சிவராமன்