in ,

நேரத்தின் மதிப்பு!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கண்கள் தீயாய் எரிய கணிணியைப்  பார்க்க முடியாமல்  சோர்ந்து போனாள் தீபா. அதிகாலை நான்கு மணியிலிருந்து தீவிரமாக செய்யும் வேலை தடைப்பட்டது. மணியைப் பார்த்தாள். அது ஆறரை என்றது. 

ஐயோ ! அதுதான் தலை வலிக்கிறது என்று முனகினாள் அவள்.

என்ன செய்வது ! அர்ஜுன் எழுந்திருக்கும் முன் வேலை முடிய வேண்டும். 

வீட்டிலேயே வேலை பார்க்கும் வசதி வந்தது ஒரு விதத்தில் வசதி என்றால் இன்னொரு விதத்தில் சிரமம் தான்..

நாள் முழுவதும் இரண்டு வயதுக் குழந்தையை வைத்துக் கொண்டு வேலை செய்வது  அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவது போல கஷ்டமான ஒன்று. ஆனால் என்ன செய்வது? இரண்டையும் சமாளிப்பவள் தானே இன்றைய பெண். மகேஷ்  இரவு ஷிப்ட்டில் அலுவலகம் போயிருக்கிறான். அவன் வந்தால் அலுப்பாக இருக்கிறது என்று தூங்கி விடுவான்.

இந்த வேலை முடித்தாகவேண்டுமே! ஒரு அரைமணி நேரம் உட்கார்ந்தால் முடிந்துவிடும்.

அர்ஜுன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

கண்களில் கொஞ்சம் தண்ணீர் அடித்துக் கொண்டு வரலாம் என்று எழுந்தபோது காலிங் பெல் அடித்தது. இந்த நேரத்தில் யார் என்று திறந்தபோது அபார்ட்மெண்ட் கூட்டிப் பெருக்கும்  பாக்யா நின்றாள். 

“அம்மா! பால் பாக்கெட் ஒழுகிக் கொண்டு இருக்கிறது” என்று தூக்கிக் காண்பித்தாள்.

“உள்ளே வா!”, என்றவள் ஒரு பாத்திரத்தில் அந்தப் பாலை ஊற்றி காஸ் ஸ்டவ்வை பற்ற வைத்தவள் “கொஞ்சம் பார்த்துக்கொள் “என்று சொல்லிவிட்டு முகம் கழுவப் போனாள்.

வந்து இரண்டு கப்களில் காஃபியை கலந்தவள் பாக்யாவிடம்  ஒன்றை கொடுத்து விட்டு “கொஞ்ச நேரம் அர்ஜுன் பக்கத்தில் உட்கார்ந்து இரு!” என்று சொல்லிவிட்டு  வேகமாக தன்னிடத்துக்கு திரும்பினாள்.

முகம் கழுவியதும்  சூடான காபியும் மறுபடியும் வேகமாக அவள் வேலையைத் தொடர வைத்தது.

காஃபியைக் குடித்துக் கொண்டே சுற்றிலும்  பார்த்தாள்  பாக்யா. அங்கங்கே இறைந்து கிடந்த துணிகள் , காகிதங்கள் விளையாட்டு சாமான்கள் என்று வீடே ஒரு சந்தைக்கடை மாதிரி தோற்றமளித்தது.

பணத்தின் செழிப்பு எல்லா இடங்களிலும் தெரிந்தது. அவள் தன்னுடைய வீட்டை நினைத்துக் கொண்டாள்.வசதியாக இருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நம்மைப் போன்றவர்கள் தினமும் உழைத்தால்தான்  சோறு ! 

உட்காரச் சொல்லியிருக்கிறாள்.‌ என் வேலை என்ன ஆவது? இன்னும் மூன்று மாடியும் பெருக்கி துடைக்க வேண்டும்.இங்கே சும்மா உட்கார்ந்து இருப்பதை யாராவது பார்த்தால் அவளுக்குத் தான் பிரச்சினை. 

நினைத்துக் கொண்டு இருக்கும் போதே முகமெல்லாம் சிரிப்புடன் தீபா வந்தாள். 

“தாங்ஸ் பாக்யா! இனிமேல் நீ போகலாம்!” என்றவள் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை அவள் கையில் வைத்தாள்.

“ஏதாவது வாங்கிட்டு வரணுமா?” என்றவளிடம்  “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் .நல்லவேளையா நீ வந்தே. என் வேலை முடிந்தது. அர்ஜுன் விழித்து விடுவானோ என்று பயமாக இருந்தது. ஒரே சிந்தனையா என்னால்  உட்கார முடிந்தது. அதுக்குத்தான் உனக்கு இந்தப் பணம்”, என்றாள்.

“என்னம்மா ! மிஞ்சி மிஞ்சி அரை மணி நேரம் இருக்குமா! அதுக்குப் போய் !”என்று திகைப்பும் வியப்புமாக கேட்டாள் பாக்யா.

“இன்னிக்கு கண்டிப்பா முடிக்க வேண்டிய வேலை. ஏதாவது தொந்தரவு வந்து விடுமோ என்று பயந்துகொண்டுதான் வேலை செய்கிறோம். நேரத்தோட மதிப்பு  எங்களுக்கு மட்டும் தான் தெரியும்” ,என்றவளைப் பார்த்து  ஒன்றும் சொல்லத் தோன்றாமல் கையிலிருந்த அந்த நோட்டையே பார்த்துக்கொண்டு வெளியேறினாள் பாக்யா.

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வண்ணங்கள் அழகு வாழ்க்கை இனிது!? (கவிதை) – இரஜகை நிலவன்

    ஆட்டுமந்தை மனிதர்கள் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்