எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காய்கறி மார்க்கெட்டில் இன்று கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
“என்னம்மா… ரெண்டு கட்டுக்கீரை நாப்பது ரூபாயா?… பகல் கொள்ளையாய் இருக்கே?” யதார்த்தமாய்த்தான் சொன்னான் மணிவாசகம்.
“ஆமாம்… உங்க கிட்டக் கொள்ளையடிச்சிட்டுப் போய்த்தான் நான் கோட்டை கட்டப் போறேன்!… கீரை வாங்குற மூஞ்சியை பாரு மூஞ்சியை…. போவியா?… வந்திட்டான்… வாலாட்டிக்கிட்டு” அந்தக் கீரைக்காரி எச்சில் தெறிக்க, எடக்காகப் பேச மணிவாசகத்துடன் நின்றிருந்த என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. என்ன இருந்தாலும் என் நண்பன் மணிவாசம் ஒரு கம்பெனியில் மேனேஜர் உத்தியோகம் பார்ப்பவனல்லவா?..
“இந்தாம்மா… வார்த்தையைக் கொஞ்சம் அளந்து பேசும்மா!… அவரு யாரு தெரியுமா?” கத்தலாய்ச் சொன்னேன்.
அவள் என்னை மேலும், கீழும் பார்த்து, “பார்ரா…குறுக்கால ஒரு குரங்கு ஓடுறதை?” என்றாள். அப்படிச் சொல்லும் போது அவள் குரங் முகத்தை அபிநயித்தது என் சுயமரியாதையைச் சோதித்தது. “என்னம்மா… நாக்கு ரொம்ப நீளுது… இப்படித்தான் வாடிக்கையாளர்களிடம் பேசுவியா??” நானும் தடாலடியாய் இறங்கினேன்.
மணிவாசகம் இடையில் புகுந்து என்னை அடக்கினான். “ம்ஹும்… வேண்டாம் ராகவா!… எதுக்கு அனாவசிய வாக்குவாதம்?… இந்தாம்மா நீ கேட்ட நாப்பது ரூபாய் வாங்கிக்கோ!… இதில் ரெண்டு கட்டை எடுத்துப் போடு” என்றபடி கூடையை நீட்டி அவள் போட்ட கீரைக்கட்டை பெற்றுக் கொண்டு பணத்தையும் கொடுத்தான்.
இப்போது என்னுடைய கோபம் மணிவாசகத்தின் மீது பாய்ந்தது. “என்ன மணி?… அந்தம்மா தராதரம் இல்லாம உன்னை எடுத்தெறிஞ்சு பேசறாங்க?… நீ பாட்டுக்கு அவங்க கேட்கற பணத்தைக் குடுத்து கீரை வாங்கறே?… என்ன?… பேரம் பேசுறது கௌரவக் குறைச்சல்ன்னு நெனைக்கறியா?” சற்று காட்டமாகவே கேட்டேன்.
பதிலேதும் பேசாமல் குறுஞ்சிரிப்புடன் அடுத்த கடையை நோக்கி நகர்ந்தவன் பின்னால் அமைதியாக நடந்தேன். தொடர்ந்து எந்தவித குறுக்கீடு இல்லாமல் அவன் செய்கைகளையே கவனித்தபடி இருந்தேன். ஒரு இடத்தில் கூட அவன் பேரம் பேசியதாக தெரியவில்லை. யார் என்ன விலையைச் சொன்னாலும் மறுப்பே பேசாமல் அப்படியே கொடுத்து வாங்கினான்.
“இது என்ன வகை நாகரீகம்?… அப்பா இல்லாத இவனை வளர்க்கறதுக்கு இவனோட அம்மா எத்தனை கஷ்டப்பட்டாள்?.. தான் அரை வயிறு… கால் வயிறு கஞ்சி குடிச்சாலும்… இவனைப் பட்டினி போடாமல் பார்த்துக்கிட்டா!.. அஞ்சு ரூபாயையும்… பத்து ரூபாயையும்… அஞ்சாயிரம்… பத்தாயிரம் மாதிரி நெனச்சு சிறுகச் சிறுக சேமிச்சு இவனைப் பெரிய படிப்பு படிக்க வெச்சா!… ஆனா இவன்?.. படிச்சு வந்து பெரிய உத்தியோகத்துக்குப் போனதும்… காசோட அருமை தெரியாம… பணத்தோட மதிப்பு புரியாம… எவ்வளவு அலட்சியமா… பேரம் பேசுறதைக் கூட கௌரவக் குறைச்சலாய் நினைக்கிற… போலி கௌரவத்திற்கு அடிமையாகிக் கிடக்கிறானே?… கடந்து வந்த பாதையை இவன் மனசு மறந்துடுச்சா?… இல்லை வறட்டு கௌரவம் இவன் கண்ணை மறைச்சிடுச்சா?”. உள்ளுக்குள் புழுங்கினேன்.
என் திடீர் மௌனம் அவனைச் சங்கடத்தில் ஆழ்த்த, “என்ன ராகவன்?… முகம் ஒரு மாதிரி டல்லடிக்குது?… ஒரு காஃபி சாப்பிட்டு போகலாமா?” வலியக் கேட்டான். எனக்கும் காஃபி சாப்பிடணும் போலிருக்க, மறுப்பேதும் கூறாமல் சம்மதிக்கும் விதமாய்த் தலையை ஆட்டினேன்.
இருவரும் இந்தியன் காபி ஹவுஸுக்குள் நுழைந்தோம்.
“ரெண்டு கும்பகோணம் காஃபி” என்று ஆர்டர் செய்து விட்டு, மேஜை மீதிருந்த மெனு கார்டை எடுத்துப் படிக்கலானான் மணிவாசகம்.
சர்வர் காஃபியைக் கொண்டு வந்து வைத்ததும், “ம்… சாப்பிடு” என்றவன் தான் ஒன்றை எடுத்துக் கொண்டான்.
நிதானமாய்க் காஃபியை உறிஞ்சியபடி மணிவாசகத்தையே ஊடுருவலாய் பார்த்தேன்.
“என்ன ராகவா?… நானும் அப்போதிருந்து கவனிச்சிட்டேதான் வர்றேன்!… ஒரு மாதிரியா இருக்கே… ஒரு மாதிரியா பாக்குறே!… என்ன விஷயம்?… ஆர் யூ ஃபீல் டயர்ட்?”.
இட, வலமாய்த் தலையாட்டியவன், ஒரு சிறிய யோசனைக்குப் பின், எனக்குள் இருந்து கொண்டு என்னை அரித்த அந்த விஷயத்தை மொத்தமாய்ச் சொல்லி விட்டு, “உன் கூடவே இருந்து நீ பர்ச்சேஸ் பண்ணறதைப் பார்த்ததில் எனக்கு ஒரு விஷயம் தெளிவாய்ப் புரிஞ்சிட்டுது!… நீ பேரம் பேசுவதை கௌரவக் குறைச்சலாய் நினைக்கறே!… வேண்டாம் மணி… இன்னைக்கு வசதி வந்து விட்டது என்பதற்காக ஆடாதே!… உங்க அம்மாவ நெனச்சுப் பார்த்துட்டு… காசை செலவு பண்ணு” என்றேன்.
“நோ டவுட்!… இன்னைக்கும் நான் எங்க அம்மாவை நினைச்சுப் பார்த்திட்டுத்தான் செலவு பண்றேன்”. என்றான் அவன்.
“எது?… இப்படிப் பேரம் பேசாமல்… சொன்ன விலைக்கு வாங்கறதா?” இதழோரம் இழையோடும் குறுஞ்சிரிப்புடன் கேட்டேன்.
“ஆமாம்” மணிவாசகம் அழுத்தம் திருத்தமாய் சொல்ல,
என் எரிச்சல் மேலும் அதிகமாகியது முகத்தை திருப்பிக் கொண்டேன்.
சர்வர் வந்து காலி காஃபி கோப்பைகளை எடுத்துச் சென்றதும் எழுந்தேன். “ராகவா… கொஞ்சம் உட்காரு!… உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” மணிவாசகம் என் கைகளைப் பிடித்து என்னை உட்காரச் சொல்ல அமர்ந்தேன்.
“எங்க அம்மா எத்தனையோ கஷ்டப்பட்டு… ஏதேதோ வேலைகளைச் செய்து… என்னைப் படிக்க வச்சாங்க!ன்னு சொன்னே… உண்மை… எங்க அம்மா அப்படிச் செய்த வேலைகள்ல ஒண்ணு… மார்க்கெட்ல கீரை… காய்கறியெல்லாம் விற்பது!… அது தெரியுமா உனக்கு?” மணிவாசம் கேட்டான்.
“ம்… நல்லாவே தெரியும்” என்றேன் எங்கோ பார்த்துக் கொண்டு.
“அப்போ… தினமும் ராத்திரி வந்து… என்னை மடியில படுக்க வெச்சுக்கிட்டு… என்ன சொல்லிப் புலம்புவாங்க தெரியுமா?… மார்க்கெட்ல காய்கறி வாங்க வர்றவங்கெல்லாம் பேரம் பேசுறேன் பேர்வழின்னுட்டு அநியாயத்துக்குக் குறைச்சலாய் விலை கேட்பாங்களாம்!… நான் என்ன ஆயிரக்கணக்கில் லாபம் வெச்சா விற்கப் போறேன்?…. ஒரு ரூபாயோ… இல்ல ரெண்டு ரூபாயோதான் லாபம் வெச்சு விற்கறேன்… அதைக் கூடத் தர மாட்டேன்னு சொன்னா நான் என்னதான் பண்ணுவேன்?”ன்னு வாய் விட்டுப் புலம்புவாங்க… பல நாள் லாபமே பார்க்காமல் அசல் வந்தால் போதும்ன்னு… வியாபாரம் பண்ணி இருக்காங்க!… என்ன பண்ணும் பாவம்… காய்கறிகாரங்களாச்சே அன்னிக்கே வித்தாகணுமே?.. இல்லைன்னா. அழுகிப் போய் முதலுக்கே மோசம் வந்திடுமே?”.
அவன் உண்மையான உள்ளம் எனக்குப் புரிய வர, “மணிவாசகம்” என்று தழுதழுத்த குரலில் நான் அழைக்க,
“எங்க அம்மா அன்னிக்கு பட்ட வேதனையை இன்னிக்கு இன்னொரு தாய்க்கு நான் தரணுமா?… பாவம் அவங்க வீட்டில் எத்தனை மணிவாசகங்கள் படிப்புக்காகக் காத்திட்டிருக்காங்களோ?” மணிவாசகம் பேசிக் கொண்டே போக என் மனசுக்குள் அவன் மீது இருந்த மதிப்பு எவரெஸ்ட் உடன் கைகுலுக்கியது.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings