எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“நானும்தான் அஞ்சாறு பிள்ளைகளைப் பெத்தேன்… ஒரு தடவை கூட இந்த மாதிரி பால் வத்திப்போனதில்லை!… இங்கே என்னடான்னா… மொதக் குழந்தைக்கே மடி சுரக்க மாட்டேங்குது உன் பொண்டாட்டிக்கு!… ஹும்… எல்லாம் காலக் கொடுமை!” மருமகளை முறைத்தவாறே லட்சுமி சொல்ல.
“அம்மா… நீ கொஞ்சம் சும்மா இருக்கியா?.. பாவம்… அவ ஏற்கனவே நொந்து போய்க் கிடக்கிறா… இதுல நீ வேற குத்தாதே!… இதெல்லாம் உடல் வாகும்மா… அவதான் என்ன பண்ணுவா?” கதிர்வேல் மனைவியை ஆறுதல் படுத்தும் விதமாய் பதில் பேசினான்.
“ம்… சொல்லுவே… சொல்லுவே… உன் பொண்டாட்டி மலடியாப் போயிருந்தாக் கூட அதுவும் உடல் வாகும்பே!”
“அடுத்தவங்க மனசு புண்படுங்கறதைப் பத்தி கொஞ்சங் கூடக் கவலைப்படாமல் பேசுற உன் கூடவெல்லாம் முகம் குடுத்துப் பேசுறதே தப்பும்மா!” “வெடுக்”கெனச் சொல்லி விட்டு, சடாரென எழுந்து அறையை விட்டு வெளியேறி, ஆஸ்பத்திரி வராண்டாவிற்கு வந்து, அங்கிருந்த பெஞ்சில் தனியே அமர்ந்தான் கதிர்வேல்.
அவன் மனம் தன் மனைவி ஜெயந்தியை நினைத்து வேதனித்தது.
“பாவம் ஜெயந்தி!… கல்யாணமாகி ஏழு வருஷத்துக்கு அப்புறம்தான் ஆண்டவன் அவளுக்கு குழந்தை பாக்கியத்தையே கொடுத்தான்… ஆனா அதிலும் ஒரு குறையை வெச்சு… அவளை மறுபடியும் சோகப்படுத்திட்டானே?… ஒரு பெண்ணுக்கு போதிய அளவு பால் சுரக்கிறதும்… சுரக்காததும்…. இயற்கைதானே?… இதைக் கூட இந்த அம்மாவால் ஏன் புரிஞ்சுக்க முடியலை?”.
தளர்ச்சியாய் தலையைத் தூக்கி, கவலை படர்ந்த முகங்களுடன் ஆஸ்பத்திரிக்குள் அங்குமிங்கும் உலவும் மனிதர்களை பார்த்தான்.
“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கவலைகள்!… ஒருவேளை… இந்தக் கவலைதான் மனித குலத்திற்கு கடவுள் கொடுத்திருக்கும் பொதுச் சொத்தோ?”
.
“சார்… கொஞ்சம் தள்ளி உட்கார முடியுமா?” சாந்தமான குரலில் கேட்ட அந்த மனிதனுக்கு இடம் கொடுத்துத் தள்ளி அமர்ந்தான் கதிர்வேல்.
பொதுவாகவே துயரத்தில் உழலும் ஒரு மனிதனுக்குத்தான் சக மனிதனின் துயரமும் வேதனையும் புரியும் என்பார்கள். கதிர்வேலுவின் இறுக்கமான முகத்திலிருந்து அவன் உள்ளச் சோகத்தின் அளவைப் புரிந்து கொண்ட அந்த மனிதன், “என்ன சார்?… மனைவிக்குப் பிரசவமா?” கேட்டான்.
“ஆமாம்” சுவாரஸ்யமே இல்லாமல் பதிலளித்தான் கதிர்வேல்.
“குழந்தை பிறந்துடுச்சா?”.
“ம்”
“ஆணா?… பெண்ணா?”
.
“ஆண்!”.
“அப்புறம் ஏன் சார் இத்தனை சோகமாய் இருக்கீங்க?” சிரித்தபடி கேட்டான் அவன்.
தன் பாரத்தை யாரிடம் கொட்டுவது என்று காத்திருந்தவன் போல் தன் உள்ளக் குமுறலை வலிய வந்து சினேகமாய்ப் பேசிய மனிதனிடம் கொட்டினான் கதிர்வேல்.
பொறுமையாக கேட்டு முடித்த அவன் இறுதியில், “கல…கல”வெனச் சிரிக்க எரிச்சலானான் கதிர்வேல்.
“என்னப்பா?… என் வேதனை உனக்குச் சிரிப்பா இருக்கா?”.
“சார்… நான் உங்க வேதனையைப் பார்த்து சிரிக்கலை… அந்த இறைவனோட விளையாட்டை நினைத்துச் சிரித்தேன்!”.
“என்னப்பா சொல்றே?”.
“சார் நான் ஒரு முஸ்லிம்!… என் பேரு சம்சுதீன்!… நானும் என் மனைவியோட பிரசவத்திற்காகத்தான் இங்கே வந்தேன்”.
“பிரசவம் ஆயிடுச்சா?” கதிர்வேல் கேட்டான்.
“ம்… பிரசவமும் ஆச்சு!… பிறகு சவமும் ஆச்சு!” விரத்திச் சிரிப்புடன் அவன் சொல்ல.
கதிர்வேல் நெற்றியைச் சுருக்கி கொண்டு அந்த சம்சுதீனைப் பார்த்தான்.
“ஆமாம் சார்…. பத்து நாளைக்கு முன்னாடி என் மனைவி அழகான ஒரு ஆண் குழந்தையைப் பெத்தாள்… ஆனா பிறந்த ஒரு மணி நேரத்திலேயே அந்தப் பிஞ்சு உசுரை விட்டுடுச்சு!” என்று சொல்லி விட்டு ஒரு நிமிடம் கண்களை மூடி அந்த வேதனையை விழுங்கியவன், “ப்ச்… அதுக்கு இந்த உலகம் பிடிக்கலை போலிருக்கு!… பரவாயில்லை” தன்னைத்தானே ஆறுதல் படுத்திக் கொண்டான்.
சில நிமிட அமைதிக்கு பின்,
மெல்ல அவன் தோளைத் தொட்ட கதிர்வேல், “பத்து நாளைக்கு முன்னாடின்னு சொல்றீங்க… இன்னுமா உங்க மனைவியை டிஸ்சார்ஜ் பண்ணாம வச்சிருக்காங்க?”.கேட்டான்.
“அது…. இன்னும் பெரிய சோகம் சார்!… சுரக்கிற பாலைக் குடிக்க வேண்டிய ஜீவன் போய்ச் சேர்ந்து விட்டதால்… மார்ல பால் கட்டிப் போய்… வலியால துடிச்சிட்டிருக்கா என் மனைவி!… இப்ப அதுக்கான ட்ரீட்மெண்ட்தான் நடந்திட்டிருக்கு!… இதுதான் சார் இறைவனோட விளையாட்டு!… ஒரு பக்கம் உசுரோட இருக்கிற குழந்தைக்கு தாய்ப்பால் தட்டுப்பாடு… இன்னொரு பக்கம் சுரக்கிற பாலை குடிக்க ஒரு குழந்தை இல்லாமல் தட்டுப்பாடு… இப்பப் புரியுதுங்களா நான் சிரிச்சதுக்கான காரணம்?”.
அமைதியாய் மேலும் கீழும் தலையை ஆட்டி அதை ஆமோதிப்பதை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை கதிர்வேலுக்கு.
காலை ஏழு மணி.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சம்சுதீன் திடுக்கிட்டு விழித்து, அதே வேகத்தில் சுவர் கடிகாரத்தை பார்த்து அதிர்ந்தான். “அடப்பாவமே!… மணி ஏழாயிடுச்சே?… “ஆறரை மணிக்கெல்லாம் டிபன் வாங்கிட்டு வந்துடறேன்”னு சொல்லிட்டு வந்தேனே?”.
அவசர அவசரமாய் எழுந்து பாத்ரூமிற்குள் புகுந்து, பத்தே நிமிடத்தில் வெளியே வந்தான்.
வீட்டுக் கதவைப் பூட்டி விட்டுத் தெருவில் இறங்கியவன் கண்களில் குப்பைத் தொட்டி அருகே படுத்திருந்த அந்த நாய் பட, நிதானமாய்க் கவனித்தான்.
அதன் பால் காம்புகளை வெகு சுவாரஸியமாய்ச் சுவைத்துக் கொண்டிருந்தது சற்றே பெரிதாக வளர்ந்திருந்த ஒரு கருப்பு நிறக் குட்டி. தாய் நாயும் அந்தச் சுகத்தை கண் மூடி அனுபவித்துக் கிடந்தது.
“அட… இது என்ன அதிசயமா இருக்கு?… போன வாரம் இந்த நாய் ஈன்றெடுத்த நாலு குட்டிகளுமே வெள்ளை நிறமாச்சே?… இப்ப எப்படி திடீர்னு ஒரு கருப்புக் குட்டி… அதுவும் பெரிய சைஸ்ல?”.
தன் சந்தேகத்தை ஜாகிங் கிளம்பிக் கொண்டிருந்த எதிர் வீட்டு இளைஞனிடம் கேட்க, “அதை ஏன் சார் கேக்குறீங்க?… இது போட்ட நாலு குட்டிகளுமே செத்துப் போச்சுக!… இந்த கருப்பு குட்டி வேற ஏதோ நாயோட குட்டி போலிருக்கு!… பாவம்… அது இதுக்குத் தெரியல… இதையும் தன்னோட குட்டின்னு நெனச்சுக்கிட்டு அதுக்குப் பால் குடுத்துட்டிருக்கு!… அஞ்சறிவு மிருகம்ங்கறது சரியா இருக்கு!” சொல்லிக் கொண்டே அவன் ஜாகிங் கிளம்பினான்.
பொட்டில் அடித்தாற் போலிருந்தது சம்சுதீனுக்கு.
“அஞ்சறிவு மிருகம்னு… அலட்சியமாய் சொல்லிட்டுப் போயிட்டான்!… ஆனா அதுக்கு இருக்குற அறிவு கூட நமக்கு இல்லை!… தான் பெத்தெடுத்த குட்டிக எல்லாம் போன பிறகு… சுரக்கிற பாலை… அப்படியே விட்டு வச்சா… அதனால் தனக்குத்தான் உடல் உபாதை வரும்னு தெரிஞ்சு… இந்த அஞ்சறிவு ஜீவன்… அதை வேறு ஏதோ குட்டிக்குத் தாரை வார்க்குது!… ஆனால் ஆறறிவு மனுசனான நான்… இது கூடப் புரியாமல் பொண்டாட்டியை ஆஸ்பத்திரியில் விட்டிருக்கேன்!”.
வழி முழுக்கத் தீவிரமாய்ச் சிந்தித்து, ஒரு தீர்மானமான முடிவிற்கு வந்தவன், ஆஸ்பத்திரியை அடைந்ததும் முதல் வேலையாய் கதிர்வேலைச் சந்தித்து தன் எண்ணத்தை வெளியிட்டான்.
கதிர்வேலு யோசித்தான்.
“என்ன சார் யோசிக்கிறீங்க?… நாங்க வேற மதம்…. நீங்க வேற மதம்…ன்னு யோசிக்கிறீங்களா?” பரிதாபமாய்க் கேட்டான் சம்சுதீன்.
“இல்லைப்பா!…. அஞ்சறிவுப் பிராணி கிட்டயிருந்து பாடம் கத்துக்குற நிலைமையில்தான் இன்னும் மனுஷன் இருக்கானே?” என்பதைப் பற்றி யோசிச்சேன்!”.
“அப்ப….?”
“நீங்க முன்னாடி போங்க!… பின்னாடியே நாங்க குழந்தையை எடுத்திட்டு உங்க ரூமுக்கு வர்றோம்!”
அடுத்த பதினைந்தாவது நிமிடம் கதிர்வேலுவின் மகன் அந்த சம்சுதீனின் மனைவியிடம் தாய்ப்பால் அருந்த,
ஆஸ்பத்திரி சுவற்றில் மாற்றப்பட்டிருந்த போட்டோவிலிருந்த மகாத்மா தன் பொக்கைவாய்ச் சிரிப்பால் அதை ஆமோதித்தார்.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings