in ,

என்றும் என்றென்றும் (சிறுகதை) – சந்திரா சந்தீப் (தமிழில் பாண்டியன்)

எழுத்தாளர் பாண்டியன் எழுதிய அனைத்து கதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“அம்மா, எனக்கு பயமா இருக்கு”, என முணுமுணுத்தான் ஆதி.

மருத்துவசாலையின் வெள்ளைச்சுவர்கள், நுண்மிகள் ஒழிக்கப்பட்ட அந்த அறையை ஒரு சிறைச்சாலை போல மாற்றியிருந்தன. அங்கு சிறைக்கைதியாக, படுக்கையில் கிடந்தாள் ஆதியின் தாய். அவளருகில், துவண்டு கிடந்தான் ஆதி.

தன் தாயின் முகத்தின் அருகே, தன் முகத்தை புதைத்துக்கொண்டான். மருந்துகளின் வீச்சம் அவனது நாசியில் நமைச்சலைத் தூண்டியது. தன் தாயிடமிருந்து வந்த மூச்சுக்காற்றில், தனக்கு பழக்கமான நறுமணங்களைத் தேடிக்கொண்டிருந்தான்.

“அம்மா, நீ தூங்குறியா?” அவன் மீண்டும் கிசுகிசுத்தான்.

கேசமெல்லாம் உதிர்ந்த அவளது உச்சந்தலையை வருடியபோது அவன் விரல்கள் நடுங்கின. அது மென்மையாக இருந்தாலும் நெருஞ்சி பொதிந்திருப்பது போல் அவனுடைய சிறு விரல்களை அருவியது. ஆதி தன் கீழ் உதட்டை கடித்துக் கொண்டான்.

“உனக்கு என் மேல கோபமா?” என்றான் தயக்கத்துடன்.

“என் பட்டு இல்ல, உன்மேல நான் எப்படி கோபப்படுவேன்?” அம்மாவின் ஹீனமான குரல் அவனுக்கு அறிய இயலாத ஒரு வியப்பை அளித்தது.

அவள் அருகிலேயே இருந்தாலும், அவளுடைய குரல் அந்த நுண்மிகள் ஒழிக்கப்பட்ட அறையின் மறுமுனையில் இருந்து ஒலிப்பது போல் சன்னமாக இருந்தது.

“ஏ…ஏ… ஏன்னா நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்.”

அம்மாவின் முகத்தை ஒரு கனிவு தவழும் புன்னகை அலங்கரித்தது.

“அப்டி என்ன தப்பு செஞ்ச?” குரலில் தாய்மையின் அன்பும் பரிவும் கலந்திருக்க, ஆதியிடம் கேட்டாள்.

“என் பிறந்தநாள் அன்னிக்கி… நீ ஒரு மாதிரி இருந்தப்ப… நான் அவர்கிட்ட சொன்னேன்…”

தன் உடலுடன் இணைக்கப்பட்ட மருத்துவக் குழாய்கள் அசைய, அம்மா கையைத் தூக்கி ஆதியின் மேல் வைத்தாள் “என்னால உன்கிட்ட கோபப்படவே முடியாது.”

“ஆனா இது எல்லாமே என்னோட தப்புதான்…” அவன் அடக்க இயலாமல் விம்மினான். “என்னோட பிறந்தநாளுக்கு சில நாள் முன்ன நீ முடி இல்லாமல் வீட்டுக்கு வந்தே. நியாபகம் இருக்கா? என் ஃப்ரண்ட்ஸ் உன்னைக் கேலி செய்வாங்கன்னு ரொம்ப கவலைப்பட்டேன். அப்ப ரொம்ப பெரிய தப்பு செஞ்சேன். அன்னைக்கி ராத்திரி, உம்மாச்சிட்ட வேண்டிகிட்டேன், அவர் உன்னை திரும்ப மருத்துவமனைக்கே கொண்டு போகனும்னு! இப்ப பாரு. நீ இங்கே இருக்க, நெஜமாவே உடம்புக்கு முடியாம போச்சு.” தன் குரலில் குற்றவுணர்ச்சியும், பச்சாதாபமும் தொணிக்க ஆதி மூச்சு விடாமல் பேசினான்!

“இது உன்னோட தப்பு இல்லையே. கடவுளும் என்னை மருத்துவமனைக்கு அனுப்பல. உன்னோட பிறந்தநாள் அன்னிக்கி மேஜிக் மாதிரி, எனக்கு புதுசா முளைத்த முடி உனக்கு நியாபகம் இல்லையா?”

தன் வலியை மறைத்தவாறே, ஆதியைத் தேற்றினாள் அம்மா. அந்த கரிசனமான குரல் அவன் முகத்தில் புன்முறுவலைக் கொண்டு வந்தது.

“ஆமாமா, அதுமட்டுமில்ல… மாயாவி அன்னைக்கி அருமையான வித்தைகளைச் செஞ்சு காட்டினார். என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் அதுதான் ரொம்ப அருமையான பிறந்தநாள் விழான்னு சொன்னாங்க!” ஆதி அவன் முகத்தில் இருந்த சிரிப்பை வழித்து எறிந்துவிட்டு, “ஏம்மா, அது உண்மையா?” என்றான்.

“எது மாய வித்தையா?” அம்மாவின் முகத்தில் மூன்றாம் பிறையை ஒத்த புன்னகை தோன்றியது, ஆனால் அந்தப் பிறை நிலவை உண்மையிலேயே அவன் மெரினாவில் பார்த்து ரசித்த பொழுது எழுந்த அலைகளை விடவும், அதிகமாக அவளது மார்பு உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்தது.

அவளுடைய மார்பின் மேல் தன் கையைப் போட்டுக்கொண்டு, தொடர்ந்த கேவலுடனும் அழுகையுடனும், “அதில்லை! நீ கொஞ்ச நாள் மட்டும்தான் எங்களோட இருப்பியாமே! அப்பா சொன்னார். ஆனால் நீ இல்லாம போறது எனக்கு பிடிக்கவே இல்ல” கன்னங்களில் நீர் கோடிட பொறுமினான்.

“எனக்கு மட்டும் உன்னைத் தனியா விட்டுப் போக ஆசையா…” அம்மா அசைய, இயந்திரத்தின் பலத்த பீப் அறையில் எதிரொலித்தது. அவள் புருவங்கள் நெறிய, வலி நிறைந்த பெருமூச்சை வெளியிட்டாள். கட்டிலில் இருந்து எகிறிக் குதித்த ஆதி தன் தந்தையை அழைக்கத் தயாரானான். ஆனால் அதற்குள் அவள் தனது கையை நீட்டி அவன் கரங்களைப் பற்றிக்கொண்டதால், மீண்டும் தன் அம்மாவின் அன்பான அரவணைப்பில் பதுங்கிக்கொண்டான்.

ஆதியின் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கியபோது அம்மா நோய்வாய்ப்பட்டாள். அப்பா வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் இடையில் ஓடியபோது தாத்தா-பாட்டி அவனுடன் தங்கி ஆறுதலாக இருந்தனர். சில நாட்கள் கழித்து அம்மா திரும்பி வந்ததும் ஆதி மகிழ்ச்சியில் துள்ளினான். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகுநாள் நீடிக்கவில்லை.

அவனை கேள்விகள் குடைந்தன: அம்மா ஏன் வேறுமாதிரி இருக்கிறாள்? ஏன் நாள் முழுவதையும் தூங்கியே கழிக்கிறாள்? அலுவலகத்திற்குச் போகவில்லையா? ஏன் அவள் அணைக்கும்போது முன்பு போல மென்மையாக இல்லை? அவளது கைகள் ஏன் மரக்கிளை போல கடினமாகவும், தயர்வாகவும் இருக்கின்றன?

அவனது தந்தையும் தாத்தா-பாட்டியும் சொன்ன மறுமொழிகள் அவனுக்கு அமைதி தரவில்லை.

“அம்மா!” ஏதோ நினைவு வந்தது போல ஆதி ஆர்வத்துடன் அழைத்தான். “அப்பா என் ரிப்போர்ட் கார்டைக் காட்டினாரா? எல்லாப் பாடத்திலயும் ஏ வாங்கியிருக்கேன். மூணாம் வகுப்பு போறப்ப புதுசா தண்ணீர் கேனும், பையும் வாங்கித் தரியா?”

அவள் கண்கள் மின்னின. “ஆமா என் தங்கமே! நானும் பார்த்தேன், கையெழுத்து கூட போட்டேன். புது உணவு டப்பா கூட வாங்கலாம். உனக்குப் பிடிச்ச விண்மீன்,  அண்டவெளி படம் எல்லாம் போட்ருக்குமே. அது. சரியா?”

ஆதி அவள் இரு கன்னங்களிலும் முத்தமிட்டு “புது சீருடை வாங்க என்கூட வருவியா?” என கேட்டான்.

அம்மாவின் மூடியிருந்த விழித்திரைகளுக்குள் நீர் எட்டிப் பார்த்தது. ஆதி விரைவாக அதைத் துடைத்தான் “அழாதே அம்மா. நீ வரலைன்னாலும் பரவால்லை”

அவள் வெளிக்கூடத்தைப் பார்த்தாள். ஆதியின் தந்தை இன்னும் அலைபேசியில் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

“அப்பா என்னைக் கூட்டிப் போவார்” என்றான் ஆதி. “நீ அளவை மட்டும் சொல்லு. போன வாரம், எனக்கு புது உள்ளாடை வாங்கிக் கொடுத்தார், அது ரொம்ப சின்னது, ஒரு காலுக்குத்தான் போடமுடியும் போல.”

அம்மா அப்போது சிரிக்கத் தொடங்கினாள், மீண்டும் ஒருமுறை கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது. ஆனால் இம்முறை அவற்றைத் துடைக்காமல், ஆதி அவளை அணைத்துக் கொண்டான். “அம்மா, நான் ஒன்னு கேக்கவா?”

“தாராளமா!” என்றாள் அம்மா. “ஆனா விண்வெளி வீரர் பெயரைத் தவிர வேறு எதை வேணாலும் கேளு!”

“அதில்ல. என்னோட நண்பன் கரண் இருக்கான்ல, அவனோட நெருங்கின நண்பன் ஆனந்தை இனி நியாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாதுன்னு சொல்றான். ஏன்னா அவனோட குடும்பம் மூணு வருஷத்துக்கு முன்ன மும்பைக்கு போயிட்டாங்க. தினமும் யாரையாவது பார்க்கலன்னா அவங்கள மறந்துடுவோம்னு கரண் சொல்றான்.”

“ம்ம்…” அம்மா கன்னத்தில் வரி விழ புன்னகைத்தாள். “சரி, உன்னோட கேள்வி என்ன?”

“என்னன்னா…” என ஆதி மீண்டும் தொடங்க, தாழ்ந்த குரலில், “தினமும் உன்னைப் பாக்கலன்னா, நானும் உன்னை மறந்திடுவேனா, அம்மா? உன்னை மறக்க எனக்கு பிடிக்கலை…” அடர்த்தியான குரலில் அவன் எழுப்பிய கேள்வியில் கனம் தொணித்தது.

வெறுமனே சுவர்களை வெறித்தாள் அம்மா. அவள் உடல் உதறியது. ஆதிக்கு அது பருவமழை துளிகளில் படபடக்கும் ஈரமான மாமர இலைகளை நினைவுபடுத்தியது. வெகு நேரமாக அவள் மவுனமானதால் அவளுடைய தோள்களை அழுத்தினான். “அம்மா?”

ஆதியிடம் கிசுகிசுத்தாள் அம்மா “உன் கண்ணை மூடி நெஞ்சைத் தொட்டுக் கொள்”.

அப்படியே செய்தான் ஆதி.

“நாம மதுரை போனோமே. நியாபகம் இருக்கா?”

“ஆமா! அந்தப் பெரிய கோயிலுக்குப் போனோம்; நான் ரொம்பவே சோர்வா இருந்தேன், அப்பா கூட என்னைத் தோள்ல தூக்கி வந்தாரே. ம்… அப்புறம்…” ஆதி உதடுகளை நக்கி, உள்ளங்கைகளை ஒன்றாக சேர்த்து, “அந்த ரோஸ்கலர் குளிர்பானம் குடிச்சோம். அருமையா இருந்துச்சு!”

“ஆமா, ரொம்பவே நல்லா இருந்துச்சு! ஆனா ஆதி, 3 வருஷத்துக்கு முன்னாடி தானே அங்க போனோம். அதுக்கப்புறம் நீ  ஜிகர்தண்டாவும்  குடிச்சதில்லை. ஆனா இன்னும் எப்படி எல்லாத்தையும் இவ்வளவு தெளிவா நினைவில வெச்சிருக்கிற?”

ஆதி தோளை உயர்த்தி உதட்டைப் பிதுக்கினான்.

“ஏன்னா நம்மோட நெஞ்சுக்குள்ள ரகசியமான ஒரு இடம் இருக்கு, உன்னோட நோட்புக் உள்ள மயிலிறகு வெச்சிருப்பியே. அது மாதிரி. அங்க நமக்கு ரொம்ப பிடிச்சதை பொக்கிஷமா எப்பவுமே வெச்சிருக்க முடியும்.”

ஆதியின் குரல் மெல்ல எழுந்தது. “என்னோட நெஞ்சுக்குள்ளயும் அதுமாதிரி ரகசிய இடம் இருக்குமா, அம்மா?”

“ஆமா, என் செல்லமே.”

“நான் உன்னை அங்கே வெச்சிருக்கலாமா?”

“நிச்சயமா!”

“தினமும் உன்னைப் பாக்காட்டாலும் நான் உன்னை மறக்கவே மாட்டேனா?”

அம்மாவின் கண்களில் கண்ணீர் பெருகி உதடுகள் வெடவெடத்தன. “ஆமாம் கண்ணா. நீ என்னை மறக்கவே மாட்ட. நான் என்னைக்கும் உன்னோட நெஞ்சிலயும் உன்னோட நினைப்பிலும் இருப்பேன்.”

அம்மாவை பலமாக அணைத்து புன்னகைத்த ஆதியின் கண்கள் மின்னின. “என்றும் என்றென்றும்.”

ஆசிரியர்: சந்திரா சந்தீப் https://wordsopedia.com ல் எழுதி வருகிறார்.

மொழிமாற்றம் : பாண்டியன் இராமையா. https://dwaraka.wordpress.com ல் எழுதி வருகிறார்

எழுத்தாளர் பாண்டியன் எழுதிய அனைத்து கதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அறியாமை (கவிதை) – வைஷ்ணவி

    பாகப்பிரிவினை (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத்தமிழாழன்