எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அக்கா.. இன்னைக்காவது நம்மளை நிம்மதியா தூங்க விடுவாங்களா..?” ஐந்து வயது ரியா குட்டி குசுகுசுவென கேட்டது பத்து வயது மோனிஷாவிடம்.
“ஸ்ஸ்.. சப்தம் போடாதே.. நம்ம பிரச்சனையை சால்வ் பண்ண நான் ஒரு ஐடியா வைச்சிருக்கேன்..” என்று சொன்னபடியே தன் கையில் உள்ள மொபைலை ஆட்டிக் காண்பித்தாள் மோனிஷா.
ஆஃபிஸில் அதிக வேலை என்று சொல்லி அவர்களது அப்பா ரிஷி தினசரி லேட்டாக வீட்டுக்கு வருவதும், அவன் வீட்டுக்குள் வந்ததும், வராததுமாக பிலுபிலு வென்று பிடித்துக் கொண்டு, உச்ச ஸ்தாயியில் அம்மா மைதிலி கத்திக் கொண்டு சண்டை போடுவதும், அதனால் குழந்தைகள் இருவரும் தூக்கம் கெட்டு விழித்து, இவர்கள் எப்போதடா சண்டையை நிறுத்துவார்கள் என எதிர்பார்த்து காத்திருப்பதும் அந்த வீட்டில் வாடிக்கையாகி விட்டது.
இவர்கள் சண்டை போடுவதை மொபைலில் பதிந்து வைத்து, தாத்தா, பாட்டியிடம் போட்டுக் காண்பிப்பது சமர்த்து மோனிஷாவின் திட்டம்.
***
மணி இரவு பத்து. ரிஷி தன் வண்டியை நிறுத்திவிட்டு ஹாலில் நுழையும் போதே மைதிலி பிடித்துக் கொண்டாள்..
“நேரத்தோடு வீட்டுக்கு வரணும்னு எண்ணம் இருக்கா, இல்லையா..?”
“ஷ்ஷ்.. வந்தவுடனே சண்டையை ஆரம்பிக்காதே னு எத்தனை தடவை உனக்கு சொல்றது?.. பிள்ளைகள் தூக்கம் கெட்டு அலறப் போகுது..”
“ஓஹோ.. பிள்ளைகள் மேலே அவ்வளவு அக்கறை இருந்தா நேரத்தோடு வீட்டுக்கு வர வேண்டியது தானே..?”
“மைதிலி.. ஆபிஸ்ல இருந்து நேரே வீட்டுக்குத் தானே வர்றேன்.. எல்லாம் தெரிஞ்சும் ஏன் என்னை டார்ச்சர் பண்றே..?”
போச்சு.. அப்பா டார்ச்சர் னு ஒரு வார்த்தையை யூஸ் பண்ணிட்டார்.. அம்மா இதை வச்சே இன்னும் அரை மணி நேரம் கத்துவா.. கடைசில பாத்திரங்களும், ஷூக்களும் ரெண்டு பக்கமும் பறக்கப் போவுது.. நம்மை இப்போதைக்கு யாரும் கவனிக்கப் போறதில்ல.. என நினைத்தபடியே தன் காரியத்தில் கண்ணாய் இருந்தாள் மோனிஷா..
“என்னக்கா பண்றே..?” குட்டி ரியா சைகையால் கேட்டாள்.
அவளை அமைதியாக இரு, அப்புறம் சொல்றேன் என்பது போல பதில் சைகை செய்தாள் மோனிஷா.
***
மறுநாள் மாலை.
மைதிலியின் சொந்தத்தில் ஒருவர் வெளியூரில் இறந்து விட, அவள் குழந்தைகளை அழைத்து, தானும் ரிஷியும் வெளியூர் செல்லப் போவதாகவும், மறுநாள் தான் திரும்பி வரப் போவதாகவும் சொன்னாள். மோனிஷாவை கதவைப் பூட்டிக்கொண்டு பாதுகாப்பாக இருக்கச் சொன்னாள்.
மைதிலி சொன்னது போலவே அன்று ரிஷி சீக்கிரம் வந்து விட்டதால், இரவு எட்டு மணிக்கெல்லாம் இருவரும் கிளம்பி விட்டனர்.
போகும்போது வீட்டுக்கு
வெளியில் வைத்து ஒருமுறை “ரெண்டு பேரும் பாதுகாப்பா இருங்க..” என்று ஊருக்கே கேட்கும்படி சப்தமாக சொல்லிவிட்டு சென்றாள் மைதிலி.
***
அவர்களது வீடு சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு தனி வீடு. பக்கத்து வீடு பத்து மீட்டர் தொலைவில் தான் இருந்தது. உரக்க கத்தினால் ஒழிய அக்கம் பக்கத்தினர் வர வாய்ப்பில்லை.
இந்த மாதிரி இடங்களை தேர்ந்தெடுத்து, அதிலும் ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டில் புகுந்து திருடுவது ரங்கனின் தொழில்.
இரவு ஊரடங்கியதும் உலா வந்த ரங்கனுக்கு ரிஷியின் வீடு கண்ணில் பட்டது. வீட்டு வாசலில் வண்டி எதுவும் நிற்காததும், வீட்டிலிருந்து எந்த சப்தமும் வெளிவராததும் அவனுக்கு தைரியத்தை கொடுத்தன.
***
ரங்கன் பூனை போல மெல்ல நடந்து, தலை வாசல் கதவுக்கு முன்பிருந்த கிரில் கேட் பூட்டை திறந்த சப்தம் கேட்டதும் உஷாரான மோனிஷா, அவன் அடுத்த கதவு பூட்டை திறக்க முயற்சித்தவுடன் அலைபேசியில் பதிந்து வைத்திருந்த ‘அப்பா – அம்மா சண்டைக் காட்சி உரையாடலை ‘ ஹாலில் இருந்த ஸ்பீக்கரில், பெட் ரூமில் இருந்தபடியே ப்ளூ டூத் மூலமாக உயிர்ப்பித்து முழு ஒலியளவை வைத்தாள்.
திடீரென கணவன் – மனைவி சண்டை உச்ச ஸ்தாயியில் கேட்டதும் ரங்கன் அலறியடித்துக் கொண்டு ஓடினான்.
மறுபடி ஸ்பீக்கரை அணைத்த மோனிஷா, தன் தங்கையை அணைத்துக் கொண்டு நிம்மதியாக தூங்கினாள்.
***
மறுநாள் பெற்றோர் வந்தவுடன் குட்டி ரியா இரவு நடந்ததை விவரிக்க, அவர்கள் மோனிஷாவின் சாமர்த்தியத்தை பாராட்டியதோடு, அந்த உரையாடலை பதிவு செய்த காரணத்தை தெரிந்த பிறகு வெட்கத்தில் தலை குனிந்தனர்.
எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings