2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘ச்சே… என்ன மனுஷன் இவர்…’ என்று முனகிக்கொண்டே அந்த அறையை விட்டு நகர்ந்தவள், கடுப்புடன் அவருக்காக கொண்டுபோன டீ கப்பை வாஷ்பேஸினில் வீச, அது சுக்குநூறாகி அதிலிருந்த டீயும் கிச்சன் முழுதும் சிதறியது.
‘முன்பெல்லாம் இவர் இப்படி நடந்து கொண்டதில்லையே. திடீர்னு ஏன் இப்படி… வயதானால் புத்தி பேதலித்துவிடுமோ… ’ குமுறினாள் மங்களம்.
பத்து மணி இருக்கும். காலிங்பெல் அடித்தது. எழுந்து போய்க் கதவைத் திறந்தாள் அவள். ஒரு பெண்ணும் ஆணும் நின்றிருந்தனர்.
அவளுக்கு வயது ஒரு இருபத்திரண்டு அல்லது இருபத்து மூன்று இருக்கும். அவனுக்கு ஒரு இருபத்தைந்து அல்லது இருபத்தாறு இருக்கும். புத்தாடை அணிந்திருந்தார்கள். முகத்தில் புன்னகை. அவளது கையில் ஒரு எவர்சில்வர் தட்டு. அதில் கொஞ்சம் சாக்லேட்டுகள்.
‘அக்கா…நாங்க எதிர்வீட்டுக்கு புதிசா குடிவந்திருக்கோம்… கொஞ்சம் முன்னாலத்தான் பால் காய்ச்சினோம். சரி, அப்படியே பக்கத்து வீடுகள்ல சொல்லிட்டு சாக்லேட் கொடுத்துட்டு அறிமுகப் படுத்திக்கலாமேன்னு வந்தோம்… சாக்லேட் எடுத்துக்கோங்க… ‘ என்றாள் அந்தப் பெண். அவனும் புன்னகைத்தபடியே, ‘ மேடம் எடுத்துக்கோங்க ‘ என்றான்.
அவன் ‘ மேடம்‘ என்று சொன்னது பிடித்திருந்தது மங்களத்திற்கு. அதைவிட அவள், ‘அக்கா ‘ என்று சொன்னது இன்னும் அதிகமாகப் பிடித்திருந்தது. இரண்டு பையன்களைப் பெற்றவள் என்பதால், ‘ஆண்ட்டி ‘ என்று சொல்லாமல் அக்கா என்றது மனதுக்கு இதமாக இருந்தது.
அதற்குள் உள்ளேயிருந்து வெளியே வந்தார் மாணிக்கம். வந்திருப்பவர்களைப் பற்றி அவரிடம் சொன்னாள். அவரும் புன்னகை பூத்து, ‘ வாங்க… உள்ளே வாங்க… ’ என்றார்.
‘உட்காருங்க டீ கொண்டு வர்றேன்…‘ என்றுவிட்டு திரும்பினாள்.
அதற்குள், ‘டீ வேண்டாங்கக்கா, எல்லார் வீட்டிலேயும் குடிச்சு குடிச்சு வயிறே ஒரு மாதிரியா ஆகிடுச்சு…‘ என்றவர்களை, ‘என்ன இருந்தாலும், எங்க ஊருக்கு வந்திருக்கீங்க… எங்க வீட்டுக்கும் வந்திருக்கீங்க… இனிமே தினமும் ஒருத்தர் முகத்துல ஒருத்தர் முழிச்சுக்கப் போறோம்… ஒரு டீ குடிக்காம போறதாவது…. சரி, ஜூஸாவது கொண்டுவர்றேன் கொஞ்ச இருங்க.. ‘ என்றுவிட்டு அவள் உள்ளே நகர, மாணிக்கம் முந்திக்கொண்டு சொன்னார்.
‘எங்க வீட்டில மத்தியானம் சாப்பிடலாமே’ என்றார். கணவனை திகைப்புடன் பார்த்தாள் மங்களம். ‘ அதிகப் பிரசங்கி ‘ என்றும் முனுமுத்துக் கொண்டாள்.
‘சாமான்லாம் வந்திடுச்சா…’ என்றார் மாணிக்கம்.
‘இன்னும் இல்லைங்க சார்… நாளைக்குத்தான் லோடு வருது… இன்னிக்கு பால் காய்ச்சற அளவுக்கு மட்டும்தான் சாமான் கொண்டுவந்தோம். ‘ என்றான் அந்தப் பையன்.
அந்தப் பெண், ‘எங்க சொந்த ஊரு மதுரைங்க அங்கிள்… இவருக்கு பேங்க்ல அசிஸ்டெண்ட் மேனேஜர் வேலை. இங்கேக்கு டிரான்ஸ்பர் ஆகிடுச்சு. அதான் இங்கே வீடு பிடிச்சு குடிவந்துட்டோம்… ‘ என்றாள்.
அதற்குள் எல்லோருக்கும் ஜூஸ் கொண்டுவந்து கொடுத்தாள் மங்களம்… அவளிடம், ‘மங்களம்… மத்தியானம் நம்ம வீட்டுக்கு லஞ்சுக்கு வரச் சொன்னேன். நீயும் சொல்லு… ‘ என்றார்.
பெண்கள் விஷயத்தில் இவர் எதற்கு மூக்கை நுழைக்கிறார் என்று மனதுக்குள் திட்டிக்கொண்டவள், ஆனாலும் உடனே முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொண்டு, ‘ஆமாம்… மத்தியானம் நீங்க எங்க வீட்டுக்கு சாப்பிட வந்திடுங்க… ‘ என்றுவிட்டு கூடவே, ‘நீங்க சைவமா… அசைவமா… ‘ என்றாள்.
‘நாங்க சுத்த அசைவம்ங்கக்கா… ‘ என்று சிரித்த அந்தப்பெண், ‘அக்கா… நாங்க எங்க அப்பா வீட்டுக்கு வந்திடறதா வாக்கு கொடுத்திட்டோம்… பக்கம்தான். லால்குடிதான் வீடு. அரைமணி நேரத்துல போயிடுவோம்.. வீட்டில பேனே இல்லாததால ஒரே கசகசன்னு ஆகிடிச்சு. திரும்ப ஒரு தடவை குளிச்சிட்டு டிரெஸ் மாத்திட்டு கிளம்பிடுவோம்… லஞ்ச் வேண்டாம். இனிமேதான் அடிக்கடி மீட் பண்ணிக்கப் போறோமே… இன்னொரு தடவை சாப்பிட்டுக்கிட்டா போச்சு… நாங்க வந்து முதல்ல செட்டில் ஆகறோம்… அப்புறம் பார்க்கலாம், நீங்களும் அவசியம் எங்க வீட்டுக்கு ஒருதடவை வரணும், லஞ்ச்சும் சாப்பிடனும்… நாங்களே வந்து கூப்பிடறோம் ‘ என்றுவிட்டு கிளம்பினார்கள்.
வாசல் வரை வந்து வழியனுப்பிவிட்டு கணவன் பக்கம் திரும்பினாள் மங்களம். ‘ரொம்பத்தான் வழிஞ்சு வழிஞ்சு பேசினீங்க போல… ‘ என்றாள்.
‘சீ சீ… முதன்முதலா நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க… முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டா பேசுவாங்க… நீ என்ன இப்படி குதர்க்கமா பேசறே… ‘ என்றார் மாணிக்கம்.
‘இல்லே… நீங்க பேசின விதம் அப்படி இருந்துச்சு… அவளை கட்டின புருஷனும் பக்கத்துல இருக்கான்… நீங்க அந்தப் பொண்ணை அடிக்கடி பார்த்து பேசினதையும் சிரிச்சி சிரிச்சி பேசினதையும் கவனிச்சேன். அவனும் கவனிச்சிருக்க மாட்டானா… ‘
வெகுண்டெழுந்தார் மாணிக்கம்… ‘நீ என்ன இப்படி பேசறே… நான் என்னவோ பொண்ணுங்க பின்னாடி அலையறவன் மாதிரி.. சரி சரி… நாளையிலேர்ந்து நான் வேலைக்கே போகலை… நீ போயிட்டு வா… நான் வீட்டைப் பார்த்துக்கறேன்… ‘ என்றார்.
‘நான் ஏன் போகணும்… ‘ என்றாள்.
‘ஆமா… நான் வேலை செய்யற இடத்துல கூடத்தான் லேடீஸா இருக்காங்க. நான் எல்லாத்துக்கிட்டேயும் சிரிக்காமலே பேசணும்னா… வேலை எப்படி நடக்கும்… அவ்வளவு ஏன், எங்க எம்.டி.கூட ஒரு பெண்பிள்ளை தான்… நான் சிரிக்காமலேயே பேசணும்னா… அப்புறம் வேலைக்கு போகாம இருக்கவேண்டியதுதான்…. அதான் நீ வேலைக்கு போங்கறேன்… ‘ என்று பொங்கினார்.
‘அது சரி, இதான் சாக்குனு ஆரம்பிச்சிடுவீங்களே…‘ என்றுவிட்டு முனுமுனுத்தபடி நகர்ந்துவிட்டாள்.
‘ஆம்பிள்ளைனா, நீங்க பண்றதெல்லாம் கரெக்டா… பொண்ணுக்கு முன்னால வழியற மாதிரி பேசறது தப்புன்னு சொன்னா, அது தப்பா…‘
அரிசியை களைந்து போட்டு குக்கரை அடுப்பில் ஏற்றிவிட்டு, இன்னொரு குக்கரில் பருப்பை வேகவைத்துவிட்டு அப்போதுதான் பார்த்தாள், கொஞ்சம் டீ மீதம் இருந்தது.
‘சரி சுடேற்றி குடிக்கலாம் ‘ என்று நினைத்து சூடேற்றி கப்பில் ஊற்ற அது நிரம்பிப் போனது. ‘சரி அவருக்கும் கொடுக்கலாமே‘ என்று நினைத்து இன்னொரு கப்பில் பாதியை ஊற்றி எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவள், அவரைக் காணவில்லை என்று பெட்ரூம் பக்கம் எட்டிப் பார்க்க, அங்கே அவர் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தார்.
நைஸாக இவளும் பார்த்தாள். அங்கிருந்து எதிர்வீட்டு லாபி தெரிந்தது. அதில் தலையை துவட்டிக்கொண்டு அங்குமிங்குமாய் நடந்துகொண்டிருந்தாள் ஒரு பெண். கொஞ்சம் உற்றுப்பார்த்த போதுதான் தெரிந்தது, கொஞ்சம் முன்னாள் இங்கே வந்துவிட்டுப் போன அதே பெண்.
எதுவும் பேசாமல் கடுப்புடன் திரும்பிய அவள் ‘ச்சே… என்ன மனுஷன் இவர்… ’ என்று முனகிக் கொண்டே அவருக்காக கொண்டு போன டீ கப்பை வாஷ்பேஸினில் வீசியெறிய, அது சுக்குநூறாகி அதிலிருந்த டீயும் கிச்சன் முழுதும் சிதறியது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
பெண்ணுக்கே உரிய possessiveness
பின்னே, யார்தான் விட்டுக் கொடுப்பார்கள்…?