in ,

என் மனம் கவர்ந்த ராமாயண கதாபாத்திரங்கள் – தி. வள்ளி, திருநெல்வேலி

ராமாயணம் காட்டும் வாழ்க்கை நெறிகளைத் தனியாக தேட வேண்டாம். ராமாயணம் முழுவதுமே நல்ல வாழ்க்கை நெறிகளை நமக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு இதிகாசம்.

அத்தனை பாத்திரங்களும் நமக்கு அருமையான பாடங்களை கற்றுக் கொடுக்கின்றன ..சிறுவயதில் நான் ராமாயண கதை கேட்டபோது என்னைக் கவர்ந்த ஒரு கதாபாத்திரம்..நிகழ்வு…

ஸ்ரீ ராமர் கானகத்தில் தன் இளவலுடன் நடந்து வருகிறார் . வழியில் ஒரு குடிசை .அதில் மிகவும் வயது தளர்ந்த ஒரு பெண்மணி..அவள் வீட்டின் முன் ஒரு பெரிய நாவல் மரம் ..காய்த்துக் குலுங்கி பழுத்து உதிர்ந்து கிடைக்கின்றன இந்தப் பெண்மணி வாயிலில் அமர்ந்து சிந்திக்கிறாள். அவள் ஸ்ரீராமர் மேல் மிகுந்த பிரேமை கொண்டவள். ஸ்ரீராமர் அந்த பாதையாக வரும்போது அவருக்கு என்ன கொடுத்து உபசரிப்பது என்று யோசனையில் ஆழ்ந்தாள்..

அப்போது அவள் கண்ணில் பட்டது நாவல் பழங்கள் ..ஒரு கூடையை எடுத்து வந்தாள். கீழே சிதறி கிடந்த நாவல் பழங்களில் நல்ல பழங்களை எடுத்துக் கூடையில் இட்டாள்.இன்னும் அவளுக்கு ஒரு சந்தேகம்.. இந்த பழங்கள் புளிக்குமோ ..ஸ்ரீ ராமருக்கு கொடுக்க தகுமா என்ற சிந்தனை..உடனே அந்த நாவல் பழங்களை ஒன்றொன்றாக கடித்து சுவைத்து, நன்றாக, இனிப்பாக, இருப்பதை மட்டும் எடுத்து தனியாக வைத்தாள்.

தம்பியுடன் வரும் ஸ்ரீராமரை கண்டதும் உளமகிழ்ந்து அவள் தன் கண்ணீரால் அவர் பாதங்களை நனைக்கிறாள். .அவள் தன் மேல் கொண்ட அன்பை உணர்ந்த ஸ்ரீ ராமர் அவளை கட்டி அணைத்துக் கொள்கிறார்.

 ” ஸ்ரீராமா இதோ உனக்கு இந்த நாவல் பழங்களை எடுத்து வைத்துள்ளேன். இவை சுவை மிகுந்தவை..கண்டிப்பாக புளிக்காது..நான் சுவைத்து பார்த்து தான் வைத்திருக்கிறேன்” என்றாள் அன்போடு. 

அவள் பாசத்தில் மனமகிழ்ந்த ஸ்ரீராமர் அந்த கனிகளை எடுத்து சுவைக்கிறார்…அந்த வயதான பெண்மணி சபரியின் எச்சில் பட்ட பழங்கள் இரட்டிப்பு தித்திப்பாய் இருக்கிறது ஸ்ரீ ராமருக்கு .எப்பேர்ப்பட்ட அன்பு அவ்விருவருக்குமிடையே…

இந்த அன்பே எனக்கு சபரியை ராமாயணத்தில் மிகப் பிடித்த கதாபாத்திரமாக ஆக்கி இருந்தது .

அடுத்தது சகோதர பாசத்தை பற்றி கூறவே வேண்டாம் ..14 ஆண்டுகள் கண்ணிமைக்காமல் தன் அண்ணனை பாதுகாத்த லட்சுமணர் ..அரசு கட்டிலில் ஏற மறுத்து ஸ்ரீராமர் பாதுகையை அரியணையில் வைத்து அரசாண்ட பரதன் .. ஆறு மாதம் தூங்கும் வழக்கமுள்ள கும்பகர்ணன் தன் அண்ணனுக்காக என்ன ஏதுதென்று கேளாமல் போர்க்களம் புகுவது.. இன்னும் இன்னும் கூற நிறைய உள்ளது.

கணவனுடைய 14 வருட தூக்கத்தை தான் வாங்கிக் கொண்ட லெட்சுமணனின் மனைவி ஊர்மிளை..அசுர குலம் என்றாலும் கற்பில் சிறந்த ராவணனின் மனைவி மண்டோதரி …சீதைக்கு ஆறுதலாய் விளங்கிய திரிசடை …இன்னும் இன்னும் கூறிக் கொண்டே போகலாம் ..

தற்போது சுந்தர காண்டம் படிப்பதால் அனுமனின் சில குணங்கள் மனதிற்குள் வியப்பை ஏற்படுத்துகிறது.. சீதையிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பாங்கு.. அவள் பயந்து விடக்கூடாது என்று ராம நாமத்தை உச்சரித்து மெதுவாக சாந்தப்படுத்தி, பின் தன் யார் என்பதை உரைக்கிறார். பின் தூதருக்குரிய பொறுப்பை எவ்வளவு அழகாக முடிக்கிறார்.. ராவணனுக்கு பாடம் புகட்ட இலங்கையை தீக்கிரையாக்குவது ..பின் பதறி சீதைக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ என்று அசோக வனம் சென்று பார்ப்பது..அவள் கொடுக்கும் சூடாமணியை பயபக்தியுடன் வாங்கி கொள்ளுதல். சீதை என்று சொன்னால் கூட ராமர் பதறி விடுவார் என்று “கண்டேன் சீதையை ” என்று கூறிய பாங்கு.. என அனுமன் புகழ் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒருமுறை சீதை செந்தூர திலகம் இட்டுக் கொண்டிருக்கும் போது அனுமன் பார்த்துக் கொண்டிருக்கிறார்..அதை கவனித்த சீதை…

” என்ன ஆஞ்சநேயா என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்.. இந்த செந்தூரப்பொட்டு ஏன் வைக்கிறேன் என்று பார்க்கிறாயா?” என்று கேட்கிறாள்.

“ஆம் தாயே அதைத்தான் யோசிக்கிறேன்” என்றார் .

“இது என் பதி ஸ்ரீராமருக்கு மிகவும் பிடித்தது .அதனாலேயே செந்தூர திலகம் வைக்கிறேன்” என்று பெருமை பொங்க கூறுகிறாள் ..மறுநாள் சபையில் ஆஞ்சநேயர் உடல் முழுக்க பூசிய செந்தூரத்துடன் வருகிறார்…ஸ்ரீ ராமர் வியக்க.. சீதை திகைக்கிறாள். 

“ஏன் இப்படி செய்தாய் ஆஞ்சநேயா?” என்று வினவுகிறாள் ..

“தாயே தாங்கள் தானே ஸ்ரீராமருக்கு செந்தூரம் பிடிக்கும் என்றீர்கள் …”

“பார்த்தாயா சீதா! இதுதான் என் ஆஞ்சநேயன்.எனக்கு பிடிக்கும் என்று நீ செந்தூரத்தை திலகமாகத்தான் இட்டாய்.. அவனோ உடல் முழுக்க பூசிக்கொண்டு வந்து நிற்கிறான். அதுதான் ஆஞ்சநேயனது பிரேமை “என்கிறார் ஸ்ரீ ராமர் .எதையும் எதிர்பாராத என்ன ஒரு பக்தி.. மெய்சிலிர்க்க வைக்கிறது.

“ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே அதை செவிக்குளிர கேட்டிடுவோம். வாருங்கள் இனியே” என்று கூறி முடிக்கிறேன்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சிங்கார வேலவன் வந்தான் (நாவல் – பகுதி 6) – வைஷ்ணவி

    நல்ல மனம் வாழ்க (ஒரு பக்க கதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்