எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நகர வாசனை அதிகம் எட்டிப் பார்க்காத கிராமம் நல்லூர். அங்கு பிறந்து வளர்ந்த இளைஞர்களில் பெரும்பாலோர் தற்போது வெளிநாடுகளிலும் நாட்டின் பிற பெரிய நகரங்களிலும் வசிப்பவர்கள்.
கிராமத்தில் வசிக்கும் தங்கள் பெற்றோரையும் வீட்டுப் பெரியவர்களையும் பார்க்க எப்போதாவது அங்கு குடும்பத்துடன் விஜயம் செய்வார்கள். தற்போது காலியாக உள்ள கிராமத்து வீடுகளில் டவுனில் வேலை பார்ப்பவர்கள் அங்கு குறைந்த வாடகைக்கு குடியேறி அந்த பெரிய வீடுகளின் காற்றோட்டத்தை அனுபவித்தனர். இவ்வளவு பெரிய வீடு மட்டும் சிட்டியில் இருந்தா வாடகையிலேயே காலத்தை ஓட்டலாமே என அங்கலாய்த்தவர்கள் பலர்.
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பினாலே போதும் ,பெற்றோர் சுகமாய் இருப்பர் என நினைக்கும் பிள்ளைகள். பிள்ளைகளையும் அவர்கள் குடும்பங்களையும் பார்க்க மாட்டோமா என்று மறுகும் பெற்றோர். அந்த பெரியவர்களுக்கு ஆபத்பாந்தவி அனாதரக்ஷகியாக வந்தவள் தான் ஜெயந்தி.
அவள் யார் எங்கிருந்து வந்தாள் என்பதை பற்றி அறிந்து கொள்ள அந்த வயதானவர்களுக்கு விருப்பம் இல்லை. அவரவர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள். எங்களுக்கு உதவி செய்ய ஜெயந்தி இருக்கிறாள் என்ற நிம்மதியில் அந்த பெரியவர்களின் காலம் ஓடியது.
ஜெயந்தி பெயருக்கேற்ப லட்சணமான முகம், உயரமான ஒல்லி உடல்வாகு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவரையும் நேசிக்கும் குணம். அவள் வசிக்கும் தெருவில் இருந்த வயதானவர்களை டவுன் ஆஸ்பத்திரி, போஸ்ட் ஆபீஸ், பேங்க் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று தேவையான உதவிகளை செய்வது.
இன்னும் சிலருக்கு காய்கறி மளிகை பொருட்கள் வாங்கித் தருவது வீடுகளில் சின்ன சின்ன எலக்ட்ரிக்கல் பிளம்பரிங் வேலைகள் செய்வது என முகம் சுழிக்காமல் அனைவருக்கும் உதவி செய்வாள் ஜெயந்தி.
அன்று டவுனுக்கு வந்த ஜெயந்தி தனக்கு வேண்டிய பொருட்களை வாங்கியவள் ஊரில் மற்றவர்கள் அவளிடம் வாங்கி வரச் சொன்ன பொருட்களையும் வாங்கிக் கொண்டு நல்லூருக்குச் செல்லும் பஸ்ஸுக்காக காத்திருந்தாள். பஸ் வரவும் அவளுடன் பஸ்ஸில் ஏறிய மற்றொருவன் செல்லையா.
“யாரு இது புதுசா இருக்குது நம்ம ஊருக்கு டிக்கெட் எடுக்குது” என மனதில் நினைத்த செல்லையா ஜெயந்தியை உற்றுப் பார்த்தான். “நாம இல்லாத இந்த ஒரு வருஷத்திலே எத்தனை புது ஆளுங்க வந்துருக்காங்களோ ஊருக்குள்ள ம்… போய் பார்த்தா தெரியும்” என முணுமுணுத்தான்.
பஸ் நல்லூரில் நிற்கவும் பஸ்ஸிலிருந்து இறங்கிய செல்லையாவை “மச்சான் வந்துட்டயா” என்று கலங்கிய குரலில் கூறி அவன் கைகளை ஆசையுடன் பற்றிக் கொண்டாள் அவன் மனைவி கண்ணம்மா.
“ம்க்கும் அவனே ஒரு முடிச்சவிக்கி செயில்லேந்து ரிலீஸ் ஆனவன என்னவோ போராட்டத்துக்கு போன தியாகி திரும்பி வந்த மாதிரி வரவேக்கறா பாரு இவ” என்று கூடையுடன் பஸ்ஸில் ஏறிய பெண் வெடுவெடுத்தாள்.
இதை விநோதமாகப் பார்த்த ஜெயந்தி டீக்கடையில் நிறுத்தி வைத்திருந்த தனது சைக்கிளில் வேகமாக ஏறிக் கொண்டு அங்கிருந்து மறைந்தாள்.
“இப்போ சைக்கிளில்ல போகுதே அந்தப் பொம்பள யாரு” என்று கேட்ட செல்லையாவை முறைத்த கண்ணம்மா
“ஏன் திரும்ப செயிலுக்கு போய் களி திங்கணுமாக்கும் நீ இப்பதான் வெளிய வந்துருக்கிற வாலை சுருட்டிட்டு கம்னு கிட” என்று படபடத்தாள்.
“அடச்சே… அந்தப் பொம்பளயை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு கேட்டா இவ ஒருத்தி” என்று எரிச்சலுடன் கூறினான் செல்லையா. ஆனால் அவன் மூளை தேடுதலில் இறங்கியது.
வாங்கிய பொருட்களை அவரவர் வீட்டில் கொடுத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்த ஜெயந்தி களைப்புடன் அமர்ந்தாள். பெருங்காற்றில் அடித்துச் செல்லப்படும் சருகாய் தன்னை வாழ்க்கை இந்த தளத்தில் கொண்டு வந்து சேர்த்துள்ளது என நினைத்தவளுக்கு மனதில் பழைய நினைவுகள் மெல்ல ஒவ்வொன்றாக எழுந்தன. ஆனால் அந்த நினைவுகளால் வரும் வேதனையும் தன்னிரக்கமும் தன்னை பலவீனப்படுத்தும் எனத் தெரிந்து அதை ஓரங்கட்டி விட்டு சமையலை செய்ய ஆரமித்தாள்.
நான்கு வீட்டு பெரியவர்களுக்கு தினமும் சமையல் செய்து கொடுப்பதில் வரும் வருமானமே அவள் ஒருத்திக்கு போதுமானதாக இருந்தது. சமயத்தில் உடம்பு முடியவில்லை என்று கேட்கும் பெரியவர்களுக்காகவும் சமைப்பதில் கூடுதல் வருமானமும் வந்தது.
அவர்களுக்காக செய்யும் மற்ற எந்த உதவிக்கும் ஜெயந்தி பணம் வாங்க மாட்டாள். எப்படியோ நல்லூரில் அனைவருக்கும் வாழ்க்கை நல்ல விதமாகவே போய்க்கொண்டு இருந்தது செல்லையா வரும் வரை.
“என்ன மச்சான் ஏதோ ரோசனையாவே இருக்கற” என்ற கண்ணம்மாவிடம் “அந்தப் பொம்பள இங்கே என்ன வேலை செய்யுறா” என்று கேட்டான் செல்லையா.
“யாரு ஜெயந்தியா? அது பாவம் மச்சான் அப்பிராணி வயசானவங்களுக்கெல்லாம் எப்படி உதவி செய்யுது தெரியுமா. நம்ம போலீஸ்காரர் வீட்டில தான் குடியிருக்குது. நாலு வீட்டுக்கு சமைச்சு குடுக்குது அதுல வர வருமானத்தில வயித்த கழுவுது” என்றாள் கண்ணம்மா பரிதாபத்துடன்.
“அதுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” என்று கேட்ட செல்லையாவிடம்
“ஏன் ஆகலைன்னா நீ செஞ்சு வைக்கப் போறியா? என்ன மாமா விசாரணை வேற ரூட்ல போகுது. பழசெல்லாம் மறந்துருச்சாக்கும் உனக்கு?” என்ற கண்ணம்மாவை முறைத்த செல்லையா
“அடி யாருடி இவ அந்தப் பொம்பளயை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு சொன்னேனில்ல. இவளை செயில்ல தான் பார்த்தேன், இவ மாமனையே கொலை செய்த கொலைகாரின்னு சொன்னாங்க” என்றான்.
“ஏய்யா தெரியாம எதையாவது சொல்லாத” என்ற கண்ணம்மாவின் குரலில் சந்தேகத்தின் சாயல் ஒலித்தது.
“சுதந்திர தினத்தன்னைக்கு வந்த பெரிய ஆபீஸர்ங்கெல்லாம் இந்த பொண்ணு செயிலுக்கு வந்தாலும் நல்லா படிச்சு தன் நல்ல நடத்தையால இன்னைக்கு ரிலீஸ் ஆகுறான்னு பாராட்டி பேசினாங்க, எனக்கு இப்பத்தான் ஞாபகத்துக்கு வருது” என்றான் செல்லையா தீர்மானமாக.
ஊரில் இந்த விஷயம் மெல்ல மெல்ல புகை போல் பரவி கண்ணைக் கரித்தது. ஜெயந்திக்கு மூச்சு முட்டியது. சரி இனி இந்த ஊரிலும் நம்மால் காலம் தள்ள முடியாது என நினைத்த ஜெயந்தி, தன் உடமைகளை கட்டி வைத்தாள்.
“ஜெயந்தி”
வீட்டு சொந்தக்காரர் கூப்பிடவும் வெளியே வந்த ஜெயந்தி திகைத்துப் போனாள். ஊரின் பாதி அங்கு நின்றது.
“ஐயா” என்றவளை தடுத்து “ஜெயந்தி உன்னை பத்தின விபரத்தை சொல்லு நீ இங்க இருக்கலாமா வேண்டாமான்னு ஊர்க்காரங்க முடிவு செய்வாங்க” என்றார் .
“ஐயா உங்க மகன் ஜெயிலர் அய்யா தான் என்னை இங்க வந்து தங்கச் சொன்னாரு” என்ற ஜெயந்தி தன் சோகக் கதையை சொல்லத் தொடங்கினாள்.
இரு பெண் பிள்ளைகளுடன் என் பெற்றோர் சந்தோஷமான ஒரு வாழ்க்கையை நடத்தி வந்தாங்க. அதிலும் அக்காவை கட்டிக் கொடுத்து ஒரு நல்ல மருமகன் கிடைத்ததும் வாழ்க்கை எங்களுக்கு சீனி மிட்டாய் ஆனது. அதில் யார் கண் பட்டதோ காட்டாற்று வெள்ளம் என்ற பெயரில் காலன் என் பெற்றோரை இழுத்துச் சென்றான்.
ஒரே சொந்தமான என் அக்கா வீட்டில் என் வாழ்க்கை தொடர்ந்தது. தொடக்கத்தில் மிக நல்லவராக இருந்த என் மாமா நான் வளர வளர என்னிடம் அவர் நடவடிக்கை வித்தியாசமானது. அதைப் புரிந்து கொண்ட என் அக்கா அவள் வீடு எனக்கு பாதுகாப்பற்றது எனத் தெரிந்து கொண்டாள். என்னை ஒரு பள்ளியின் விடுதியில் சேர்க்க முயற்சித்தாள்.
ஒரு நாள் இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த மாமா என் அக்காவிடம், “ஏய் உனக்கு குழந்தை பெத்துக் கொடுக்க வக்கில்ல உன் தங்கச்சியை எனக்கே கட்டி வைச்சுடு இன்னைக்கு முதலிரவு கொண்டாடிட்டு நாளைக்கு கட்டிக்கறேன்” என தகாத வார்த்தைகளை பேசியவர் என்னிடம் மோசமாக நடக்க முற்பட்டார்.
தடுக்க வந்த என் அக்காவை எட்டி உதைத்தவர் என் அருகில் வந்தார். நானும் எவ்வளவோ முயன்றும் அவரைத் தடுக்க முடியாது என தெரிந்ததும் அருகில் கிடந்த கட்டையால் அவர் மண்டையில் பலமாக தாக்கியதில் அவர் இறந்து விட்டார்.
கேஸ் நடந்தது. என்னென்னவோ கேள்விகள் கேட்டனர். என் மாமா என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். ஆனால் கோர்ட்டில் கேள்வி கேட்டே என்னை துகிலுரிந்தனர். நான் அவரை கொலை செய்தது என் பாதுகாப்புக்காகத் தான் என்றாலும் எனக்கு ஏழு வருட சிறைத்தண்டனை கிடைத்தது.
நான் சிறையில் இருந்த போது என் அக்காவும் இறந்துட்டாங்க. சிறையில் கல்லூரி படிப்பை முடித்தேன். நம்ம ஜெயிலர் அய்யா தான் எல்லாத்துக்கும் உதவினாரு.
ஜெயிலில் இருந்து ரீலிஸாகி எங்க ஊருக்கு போனேன். அங்கே எல்லாரும் என்னை வேண்டாதவளாக விலக்கி வைச்சாங்க. படித்த படிப்புக்கான வேலையும் எனக்கு யாரும் கொடுக்கலை
செய்வதறியாது நின்ன போது ஜெயிலர் அய்யா தான் உன் உதவி இவங்களுக்கு தேவைன்னு இந்த ஊருக்கு அனுப்பி வைச்சாரு. நீ யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம்ன்னும் சொன்னாரு” என்று முடித்தாள் ஜெயந்தி.
சற்று நேரத்திற்கு அங்கு பலத்த மெளனம் நிலவியது. பெண்களின் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிந்தது.
“மொள்ளமாறி முடிச்சவிக்கி எல்லாம் இந்த ஊரில இருக்கும் போது நல்லவ நீ இருக்க இடமில்லாம போகுதா இங்கே. பொம்பளைங்கள பொறுத்தமட்டில நீ செய்தது கொலையில்ல தாயி ஒரு அரக்கனை வதம் செய்துருக்க அம்புட்டுத்தேன்” என்றாள் கண்ணம்மா நெகிழ்ச்சியுடன்.
அதை அனைவரும் தங்கள் மௌனத்தால் ஆமோதித்தனர்
எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings