in ,

என்பும் உரியர் பிறர்க்கு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த லோகநாதன் கேட்டிற்குள் நுழைந்த பெண்ணையும் சிறுமியையும் அசூசையுடன் நோக்கினார். அவர் வெறுப்பைப் புரிந்து கொண்ட அப்பெண் சிறுமியை தூக்கிக் கொண்டு பக்கவாட்டுச் சந்தில் நுழைந்து வீட்டின் பின்புறத்திற்குச் சென்றாள்.

                வீட்டிற்குள் திரும்பிய லோகநாதன், “பார்வதி உனக்கு எத்தனை தடவ சொல்றது.. அந்தப் பெண்ணை வேலையை விட்டுத் தூக்கு!”ன்னு..”

                லோகநாதனின் மனத்திரையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தேறிய கலவரக் காட்சிகள் படமாய் ஓடின.

      பார்வதி ஏதோ சொல்ல வாயெடுக்க அவளைக் கையமர்த்தி “உனக்கு வேற வேலைக்காரியே கிடைக்கலியா?..”

                “எப்பவோ… இருபத்தியஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்த கலவரத்த இன்னும் நெனச்சுக்கிட்டு… ‘அந்த மதத்துக்காரங்களோட பேசக் கூடாது… பழகக் கூடாது.. வேலைக்கு வெச்சுக்கக் கூடாது”ன்னு சொல்றது நியாயமில்லைங்க… அதுவும் அரசு அதிகாரி நீங்க… வெளிவட்டாரத்துல செல்வாக்குள்ள மனுஷன்.. நீங்களே இப்படிப் பேசறது…. சரியில்லைங்க!”

                “உனக்குத் தெரியாது… அந்தப் பிரச்சினையெல்லாம் தீராத பிரச்சினை!” பற்களை “நற..நற”வென்று கடித்தார் லோகநாதன்.

                “நாம வீடு கட்டி வந்திருக்கறது புறநகர் ஏரியாவுல.. இப்பத்தான் அங்கொண்ணும் இங்கொண்ணுமா வீடுக முளைக்க ஆரம்பிச்சிருக்கு.. இந்த ஏரியாவுக்கு வீட்டு வேலைக்கு வர யாருமே இஷ்டப்படறதில்லைங்க… ஏதோ இந்த சாயிராபானுதான் போனாப் போகுதுன்னு வந்துட்டிருக்கா.. அவளும் நல்லவளாத்தான் இருக்கா… அதையும் இதையும் பேசி அவளை வெரட்டி விட்டுடாதீங்க” கையெடுத்துக் கும்பிட்டாள் பார்வதி.

                “ஹூம்.. என்னமோ பண்ணிட்டுப் போ” அங்கிருந்து நகர்ந்து வீட்டின் பின்புறம் சென்ற லோகநாதன் அங்கே தன் ஆறு வயது மகள் காதம்பரி சாயிராபானுவின் மகள் ஷெரீனுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு மேலும் ஆத்திரமானார்.

                “ஏம்மா.. நீதானே வீட்டு வேலைக்கு வர்றே…அப்புறம் கூட எதுக்கு ஒரு இலவச இணைப்பு?…” ‘வெடுக்”கென்று கேட்டார் லோகநாதன்.

                கூனிக் குறுகிய சாயிராபானு தன் மகளை நோக்கி “ஷெரின்..நீ வீட்டுக்குப் போம்மா.. அம்மா சீக்கிரத்துல வந்துடறேன்” என்றாள்.

                “டாடி… ஷெரீன் குட் கேர்ள் டாடி… என்னோட பெஸ்ட் பிரண்ட் டாடி… அவளைப் போகச் சொல்லாதீங்க டாடி” லோகநாதனின் மகள் காதம்பரி கெஞ்ச “விருட்”டென அதைத் தூக்கி கொண்டு வீட்டிற்குள் சென்றார். 

                கணணீருடன் ஷெரீன் தாயைத் திரும்பித்  திரும்பிப் பார்த்துக் கொண்டே கேட்டை நோக்கி நடந்தாள்.

                மாலை 6.00. 

                “நான் கௌம்பறேன்மா” பார்வதியிடம் சாயிராபானு சொல்லிக் கொண்டிருந்த போது  அவசரமாய் வந்த லோகநாதன் பதட்டமாய்க் கேட்டார்.  “பார்வதி… காதம்பரியைப் பாத்தியா?,”

                “ம்.. மொட்டை மாடியில் நின்னுட்டிருந்தாளே”

                “அங்க அவ இல்லை” சொல்லியவாறே அங்கிருந்து நகர்ந்து மகளைத் தேடும் பணியில் ஈடுபட்டார் லோகநாதன். பார்வதிக்கு நேரம் ஆக.. ஆக அடிவயிற்றில் அமிலம் சுரக்க ஆரம்பித்தது.

                மாலை  7.00. 

                “மணி ஏழாயிடுச்சுங்க… இருட்டிப் போச்சுங்க… எனக்கு பயம்மாயிருக்குங்க” பார்வதி குரலில் நடுக்கம்.

                லோகநாதன் மறுபடியுமொரு முறை வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு, கேட்டுக்கு வெளியே சென்று பார்த்தார். அச்சமே கண்டிராத அவருடைய இரும்பு மனம் லேசாய் ஆடத் துவங்கியது. 

                “யாராவது வந்து தூக்கிட்டுப் போயிருப்பாங்களோ?.. கழுத்துல.. காதுல.. நகைக கூட ஏதுமில்லையே…”

                “ஒரு வேளை… தண்ணித் தொட்டில கீது…” ஓடினார்.  டார்ச் பீச்சிய ஒளி தொட்டிக்குள் ஊடுருவிச் சென்று அங்கு ஏதுமில்லை என்றது.

                இரவு  8.30. 

                தெருவில் நாலைந்து பேர் சத்தமாய்ப் பேசிக் கொண்டு போக விசாரித்தார்  லோகநாதன்.

                “யாரோ ஒரு குழந்தை போர்வெல் குழாய்க்குப் போட்ட துளைல விழுந்து உள்ளார சிக்கிடுச்சு… ஒரே கூட்டம்”

                “அய்யோ”காலடியில் பூமி நழுவியது.

                “உள்ளாரயிருந்து குழந்தை அழுவற சத்தம் மட்டும் கேட்குது”

                வீட்டிற்குள் வந்த லோகநாதன் பார்வதியிடம் சொல்ல கத்தியவாறே மயங்கினாள். அவளைத் தண்ணீர் தெளித்து எழுப்பி மெல்ல சோபாவில் படுக்க வைத்து விட்டு தன் நண்பன் முகிலனுக்குப் போன் செய்தார் லோகநாதன்.

                “பயப்படாதீங்க சார்..பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்”

                 இரவு 9.00. 

                மின்னல் வேகத்தில் வந்திறங்கிய முகிலன் “சார்.. ஸ்பாட்டுக்குப் போய்ப் பார்த்துட்டுத்தான் வர்றேன்…அங்கே பயங்கர இருட்டு மொதல்ல வெளிச்சத்துக்கு ஏற்பாடு பண்ணணும்”  போனை எடுத்துப் பேசி விட்டு  “பத்து நிமிஷத்துல ஜென்ரேட்டர் வந்துடும்…அடுத்தது…ஃபயர் சர்வீஸ்!”

                லோகநாதனும் பார்வதியும் முகிலனுடன் அந்த இடத்திற்கு  வந்து சேரும் முன்பே ஜெனரேட்டர் வந்து ஒளி வெள்ளத்தைப் பரப்பியிருந்தது.

இரவு  9.30 

                ஃபயர் சர்வீஸ் வண்டி வந்து நிற்க, குதித்திறங்கிய தீயணைப்பு வீரர்கள் சுறுசுறுப்பாய்க் காரியத்தில் இறங்கினர். 

                “உள்ளார இருந்து சத்தம் வருதா?”  ஒருவனிடம் மெல்ல விசாரித்தான் முகிலன்.

                “இத்தனை நேரம் கேட்டது.. இப்ப  நின்னு போச்சு.

                 அதைக் கேட்டு பார்வதி மீண்டும் அழுகையைத் துவக்க, லோகநாதன் அவளை ஆறுதல் படுத்தினார்.

                இரவு  10.15. 

                தீயணைப்பு அதிகாரி “கிட்டத்தட்ட முப்பதடி ஆழத்துல குழந்தை சிக்கியிருக்கு..  ண்ணு வேற லேசாயிருக்கு நாம ஏதாச்சும் செய்யப் போக மண்ணு சரிஞ்சு  மூடிடுமோன்னு பயம்மா இருக்கு” என்ற போது லோகநாதன் பீதியானார்.

                “கவலைப்படாதீங்க சார்.. பொக்லைன் வந்திட்டிருக்கு… ஆர்.டி.ஓ.கிட்டப் பேசிட்டேன்.. என்ன உதவி வேணும்னாலும் கேட்கச் சொன்னார்”

                இரவு 11.00.

                பொக்லைன் எந்திரம் மூலம் ஆழ் துளையின் அருகில் முப்பதடி ஆழத்திற்கு பெரிய  பள்ளம் தோண்டுவதென முடிவு செய்யப்பட்டு பணியும் முடுக்கி விடப்பட்டது.

                அதிகாலை  3.00.

                பத்திரிக்கைக்காரர்களும் தனியார் தொலைக்காட்சிகாரர்களும் அங்கு நடப்பவைகளைத் தங்கள் காமிராக்களில் போட்டி போட்டுக் கொண்டு விழுங்கித் தள்ளினர்.

                அதிகாலை  4.30.

                “குழந்தையை எடுத்தாச்சு….” பள்ளத்தின் அடிப் பகுதியிலிருந்து குரல் வர துள்ளியெழுந்தாள் பார்வதி. 

                நான்கைந்து தீயணைப்பு வீரர்கள் குழந்தையை தூக்கி வந்து கிடத்தி,  முதலுதவியில்  இறங்க வேடிக்கை பார்க்க கூட்டம் முண்டியடித்தது.

                “விலகுங்கப்பா.. கொழந்தையோட அப்பா அம்மா வர்றாங்க விலகுங்கப்பா” லோகநாதனும் பார்வதியும் கூட்டத்திற்குள் வந்தனர்.

                 தீயணைப்பு வீரர்கள் நகர்ந்து வழி விட, குனிந்து பார்த்த லோகநாதனும் பார்வதியும் அலறினார்கள்.  “இது எங்க குழந்தையில்லை”  மொத்தக் கூட்டமும் அதிர்ந்தது.

                “அப்ப இது யாரோட குழந்தை?” முகிலன் கேட்க,

                “எங்க… வீட்டு.. வேலைக்காரி… சாயிராபானுவோட மகள்…”

                “யாராயிருந்தா என்ன.. மொதல்ல குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் குடுக்கணும் அதுதான் முக்கியம்” என்ற முகிலன் குழந்தையை பக்கத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான்.

“அப்ப எங்க காதம்பரி?” பார்வதி கேட்க,   “வாங்க வீட்டிலேயே போய் நல்லாத் தேடலாம்!” முகிலன் முன்னே நடந்தான்.

                லோகநாதனையும் பார்வதியையும் ஹால் சோபாவில் அமர வைத்து விட்டு வீட்டை சல்லடை போட்டான் முகிலன்.  அரை மணி நேரத்திற்குப் பிறகு  கட்டிலுக்கடியில் குனிந்து பார்த்தான் முகிலன்.  காதம்பரி கொட்டு கொட்டென்று விழித்தபடி படுத்திருந்தாள்.  மெல்ல அவளை வெளியே வரவழைத்துக் கேட்டான் முகிலன்.

      “எதுக்கு இப்படி ஒளிஞ்சிட்டிருக்கே?”

                “ஷெரீனும் நானும் விளையாடிட்டிருந்தோம்… அப்ப ஷெரீன் அந்த ஓட்டைக்குள்ளார விழுந்துட்டா… ஓடி வந்து எங்கப்பாகிட்டச் சொல்லலாம்ன்னு நெனச்சேன்.. ஆனா.. அவருக்கு அவளைப் பிடிக்காது அதனால அவளைக் காப்பாத்த மாட்டார்ன்னு தெரியும்.. அதே மாதிரி…ஷெரீனோட அம்மாவாலேயும் எங்கப்பா மாதிரி ஏற்பாடெல்லாம் பண்ணி மகளைக் காப்பாத்த முடியாதுன்னு தெரியும்!… அதனால.  ஷெரீன் இடத்துல நான் இருந்தா நிச்சயம் காப்பாத்தப்படுவேன்னு தெரியும்!… அதான் நான் இங்க ஒளிஞ்சுக்கிட்டு… குழிக்குள்ளார இருப்பது நான்”னு எல்லோரையும் நம்ப வெச்சேன்!… எங்கப்பாவும் யார் யாரையோ வரவழைச்சு என்னென்னமோ பண்ணி ஷெரீனைக் காப்பாத்திட்டார்!”

முகிலனுக்கு மனசு வலித்தது.

 “அங்கிள் ஏன் எங்கப்பா “அவங்கெல்லாம் வேற… நாம வேற”ன்னு சொல்றார்?… எனக்குப் புரியவே மாட்டேங்குது அங்கிள்”

 “அது உனக்குப் புரிய வேண்டாம் அம்மா… உனக்கு மட்டுமல்ல… இனி வரப் போகும் சந்ததிகள் யாருக்குமே புரிய வேண்டாம் அம்மா” என்றார் முகிலன்.

காதம்பரியின் பேச்சுக் குரல் கேட்டு அறைக்குள் நுழைந்த லோகநாதனும், பார்வதியும் மகளைக் கண்டதும் பாய்ந்து வந்து கட்டிக் கொண்டனர்.

அதே நேரம், மருத்துவமனையில் கண் விழித்த ஷெரீன் முதல் வார்த்தையாய், “காதம்பரி எங்கே?… அவளுக்கு ஒண்ணும் ஆயிடலையே?” என்று கேட்க,

சொர்க்கத்தில் காந்தி நிமுர்ந்து உட்கார்ந்தார்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தல போற வேல (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    சைக்கிள் கனவுகள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை