in

என் அப்பாவுக்காக ❤ (சிறுகதை) -✍ ஐஸ்வர்யா

என் அப்பாவுக்காக ❤

ப்பாவுக்கும் மானம் ரோஷம் தன்மானம் எல்லாம் இருக்கும். ஆனால் மகளின் வாழ்க்கை என வரும் போது மானம் ரோஷம் தன்மானம் எல்லாம் அங்கே தோற்றுப் போகிறது

பொண்ணு சந்தோஷமா இருக்கணும் என்பதற்காக எந்த நிலைக்கு வேணும்னாலும் போவாங்க அப்பா. பொண்ணோட வாழ்க்கையை விட அப்பாவுக்கு வேறு எதுவும் பெருசில்ல.

நாம தான் நம் பொண்ணுக்கு எல்லாம்னு அதுவரை நினைச்சுக்கிட்டு இருந்த அப்பா, கல்யாணத்தப்போ மகளோட கைய பிடிச்சு மருமகன்கிட்ட ஒப்படைச்சு, ‘இனி நீங்கதான் என் பொண்ணுக்கு எல்லாம்’னு சொல்லும் போது, அப்பாவோட மனநிலை எப்படி இருந்துருக்கும்

அப்பாவோட தியாகத்திற்கும் அன்பிற்கும் ஈடு இணை ஏதுமில்லை.

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்

என் அப்பா சாகுற முன்னாடி வர, இந்தப் பாடலை கேட்கும் போது ஒரு சோகப் பாடலா மட்டும் தான் எனக்கு இருந்துச்சு. ஆனால் அப்பா இறந்த பிறகு தான், ‘காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்’ என்ற பாடல் வரியைப் போல, இந்தப் பாடலில் இருக்கும் அனைத்து வரிகளும் எவ்வளவு நிதர்சனமான உண்மை என புரிந்து கொண்டேன்

அப்பா இருக்கும் வரை அவங்க அருமை நமக்கு புரியாது. அவங்க போன பிறகு தான் அப்பாவை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கோம்னு நமக்கு புரியும்

அப்பா இந்த அன்பு மகளுக்காக எவ்வளவோ செஞ்சிருக்காங்க. அதுல நான் பெருசா நினைக்கிற ஒண்ணு பத்தி தான் இப்ப சொல்லப் போறேன்

என் கணவருக்கு சென்னையில் வேலை. விடுமுறைக்காக நானும் என் கணவரும் சொந்த ஊருக்கு வந்தோம். விடுமுறை முடிந்து சென்னை கிளம்புவதற்காக பையில் எல்லாம் எடுத்து வச்சுட்டு இருந்தேன். சாயங்காலம் 5.30 மணிக்கு ரயில்

அப்பா என்கிட்ட, “எல்லா பொருளும் மறக்காம எடுத்து வச்சுக்கோமா. இப்போ ஆட்டோ வந்துரும் கிளம்பி ரெடியாயிரு”னு சொன்னார்

அப்பா வீட்டில் இருக்கும் போது, சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷமா இருக்கும்

‘நாளை காலை சென்னையில் இருப்போம். இனி எப்போ ஊருக்கு வருவோம்னு தெரியாது’னு மனசுக்குள்ள நினைச்சு வருத்தப்பட்டேன்

நினைச்சுட்டு இருக்கும் போது ஆட்டோவும் வர, நான், அம்மா, அப்பா, பொண்ணு நால்வரும் கிளம்பி ரயில்வே ஸ்டேஷன் போனோம்

அங்கே என் கணவர், எங்களை வழியனுப்ப மாமனார், மாமியார், நாத்தனார், நாத்தனாரின் கணவர், நாத்தனாரின் மகன் என அனைவரும் எங்களுக்காக காத்திருந்தனர்

ரயில் வர 30 நிமிடங்கள் இருந்தது. அதுவரை நாங்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம். நான் ஏதேச்சையாக என் செல்போனை தேட, என் ஹேன்ட் பேக்கில் இருந்தது ஞாபகம் வந்தது

தோளில் என் ஹேன்ட் பேக்கை காணோம். வீட்டிலிருந்து கிளம்பிய அவசரத்தில் வீட்டிலேயே மறந்து வச்சிட்டு வந்தது அப்போ தான் ஞாபகம் வந்தது

அவ்வளவு தான் சுற்றி இருந்த எல்லோரும் என்னை அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார்கள்

என் கணவர் என் அப்பாவிடம், “நாளை சென்னை வர்ற பஸ்ஸில் ஹேண்ட் பேக்கை குடுத்து அனுப்புங்க” என்றார்

“இப்ப போய் எடுத்துட்டு வரவா”னு என் அப்பா கேட்டார்

நான் வாட்சைப் பார்த்தேன். ரயில் வர இன்னும் 20 நிமிடங்கள் இருந்தது. ரயில்வே ஸ்டேஷனுக்கும் வீட்டிற்கும் இடையில் ஐந்து கிலோ மீட்டர் தூரம்

“சரிப்பா போய் எடுத்துட்டு வாங்க”னு சொன்னேன்

அதுக்கும் சேர்த்து எல்லாரும் என்னை திட்ட ஆரம்பித்தார்கள். “அப்பா போயிட்டு வர்றதுக்குள்ள ட்ரெயின் போயிரும். அப்பா போயும் வேஸ்ட் தான், அதனால வேண்டாம்”னு எல்லாரும் சொன்னாங்க

அப்பா யார் பேச்சையும் கேட்காம நான் சொன்னேன்னு சொல்லி உடனே கிளம்பிட்டாங்க

ஒரு அஞ்சு நிமிஷம் ட்ரெயின் லேட்டா வராதா ஒரு அல்ப நம்பிக்கை தான். அதுக்குள்ள அப்பா வந்துடணும்னு வேண்டிக்கிட்டே இருந்தேன்

இன்னொரு பக்கம் எல்லாரும் என்னை திட்டிக் கொண்டு தான் இருந்தார்கள். ஒரு அஞ்சு நிமிஷம் கடந்திருக்கும்

‘என்ன ஆச்சுன்னு தெரியலையே! அப்பாவுக்கு போன் பண்ணி கேட்கலாம்னா அப்பா டென்ஷன்ல இருப்பாங்க. சரி வேண்டாம் ஏதாச்சும் கேட்கணும்னா அப்பாவே போன் பண்ணுவாங்க’னு நினைச்சேன்

அப்போது தான் அன்று மதியம் நடந்த சம்பவம் ஞாபகம் வந்தது

“போன்ல பேலன்ஸ் இல்ல, வெளியே கடையில போய் போட்டுட்டு வாரேன்”னு அப்பா சொன்னாங்க

“வேண்டாம்பா என் போன்ல இருந்து உங்களுக்கு டாப் அப் பண்ணி விடுறேன்”னு சொன்னேன்

என் கெட்ட நேரமோ என்னவோ தெரியல. அஞ்சு நிமிஷமா முயற்சி செஞ்சு பார்த்தேன். ரீசார்ஜ் பண்ணவே முடியல.

அந்த நேரம் பார்த்து அப்பாவுக்கு வேற ஏதோ வேலை வரவும், “விடும்மா, உன்னை ட்ரெயின் ஏத்தி விட்டுட்டு வந்து நான் கடைல போய் ரீசார்ஜ் பண்ணிக்கிறேன்”னு அப்பா சொன்னாங்க

அது ஞாபகம் வரவும் உடனே நானே அப்பாவுக்கு போன் செய்தேன், “ஹேண்ட் பேக் எங்க வச்சிருக்க? தேடிப் பார்த்தேன் கிடைக்கல”னு சொன்னாங்க

“ஹால்ல டேபிள் மேல தான் ப்பா வச்சிருக்கேன்”னு சொன்னேன்

“சரி”னு சொல்லி போன் வச்சுட்டாங்க

நேரம் போய்க் கொண்டே இருந்தது. எனக்கு படபடப்பு ஏறிக் கொண்டே இருந்தது

‘நான் எவ்வளவு பெரிய சுயநலக்காரி. தெரிஞ்சே அப்பாவை கஷ்டப்படுத்திட்டு இருக்கேன். அவசரம் அவசரமா  அப்பா ஆட்டோல வருவாங்க. கடவுளே எங்க அப்பா நல்லபடியா வந்து சேரணும்’னு வேண்டிக்கொண்டேன்.

இன்னொருபுறம் அம்மா, “அப்பா வரதுக்குள்ள நீங்க கிளம்பி போய்டுவீங்க, அப்பாவுக்கு உங்களை பாக்க முடியாது. பாவம் அப்பா தேவையில்லாம அலைய வச்சுட்டு இருக்க”னு சொல்ல, குற்ற உணர்ச்சியில் எதுவும் சொல்லாமல் நான் தரையையே பார்த்துக் கொண்டிருந்தேன்

அந்த நேரம் என் நாத்தனார் அவரது மகனை ஆட்டோ ஸ்டாண்டுக்கு அனுப்பி, “தாத்தா வந்தா உடனே பேக்கை வாங்கிட்டு வா” என அனுப்பி வைத்தார்

இறுதியில் ரயில் வண்டி வரும் சத்தம் கேட்டது. நான் படபடப்பின் உச்சிக்கே சென்று விட்டேன். அப்பா வரவே இல்லை. ரயில் வண்டி வந்து நின்றது. 

கொண்டு வந்திருந்த லக்கேஜ் எல்லாம் ரயிலில் எடுத்து வைத்து விட்டு, ஓடிச் சென்று ரயில் வண்டியின் வாசலில் நின்று அப்பா வருகிறாரா எனப் பார்த்தேன், அப்பா வரவில்லை

அப்பாவை பார்க்காமலே கிளம்பப் போகிறோம் என நினைத்து மனதிற்குள் அழுது கொண்டிருந்தேன். வண்டி கிளம்ப தயாரானது

“ட்ரெயின் கிளம்பப் போகுது, போய் உன் சீட்ல இரு”னு எல்லோரும் சொன்னார்கள்

‘அப்பா வருகிறாரா’ என்று பார்த்துக் கொண்டே உள்ளே சென்றேன். திடீரென்று என் பின்னாலிருந்து, “அத்தை இந்தாங்க பேக்”னு என் நாத்தனார் மகனோட குரல் கேட்டது, மூச்சிரைக்க நின்று கொண்டிருந்தான் அவன்

அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, “அப்பா வந்துட்டாங்களா?” என கேட்டுக் கொண்டே வாசலை நோக்கி ஓடினேன். அப்பா வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார்

அவ்வளவு நேரம் நான் அடக்கி வைத்திருந்த குற்றவுணர்ச்சி, தவிப்பு, வருத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்து கண்ணீராய் வெடித்து சிதறியது

ஓடிச் சென்று அப்பாவின் கரம் பற்றி,  “சாரிப்பா, உங்கள ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் சாரிப்பா” என அழுதுக்கிட்டே சொன்னேன். வாழ்க்கையில் அன்று தான் முதல் முறையாக அப்பாவிடம் மன்னிப்பு கேட்டேன்

எல்லோரும் என் மீது கோபத்தில் இருந்த போது, என் அப்பா மட்டும் சிரித்துக் கொண்டே, “ஐயே… அழாதமா. அதெல்லாம் ஒண்ணுமில்ல. என் பிள்ளைக்காக தானே எடுத்துட்டு வந்தேன், சாரிலாம் கேட்காதமா”னு சொல்லி, என் கண்ணீரை துடைத்து சமாதானப்படுத்தினார் அப்பா

ஆனாலும் நான் அழுது கொண்ட இருந்தேன். அப்பா என்னை எத்தனை சமாதானப்படுத்த முயன்றும், அழுகையை நிறுத்த முடியவில்லை

ரயில் வண்டியும் கிளம்ப ஆயத்தாயிடுச்சு. எல்லோரும் எங்களுக்கு டாட்டா காண்பிக்க, அப்பாவும் சிரித்துக் கொண்டே டாட்டா காட்டினார்

அழுகையும் சிரிப்பும் சேர்ந்த முகமாய், நானும் டாட்டா காண்பித்து விடைபெற்றேன்

அதோடு விடாமல் உடனே போனை எடுத்து அப்பாவிடம் பேசி, அழுது கொண்டே மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தேன். என்னை சமாதானப்படுத்தினார் அப்பா

இவ்வளவு ரிஸ்க் எடுத்து யாராவது பண்ணுவாங்களா? இப்போதும் இந்த நிகழ்வை நினைத்துப் பார்த்தால் அழுகை தான் வருகிறது. இந்தப் பதிவை கூட அழுது கொண்டே தான் எழுதுகிறேன்

என் தோழிகளில் சிலர் கூறுவார்கள், ”உங்க அப்பா போல எங்க அப்பா இல்லை”னு

அதை கேட்கும் போது மனசுக்கு சந்தோசமா இருக்கும். இந்த உலகத்தில் யாருக்கும் கிடைக்காத அப்பா எனக்கு கிடைச்சிருக்காங்கனு நினைச்சு ரொம்ப சந்தோஷப்படுவேன்

நான் நினைச்சது அந்த கடவுளுக்கே கேட்டுட்டோ என்னவோ, கடவுளுக்கே பொறுக்க முடியாம அப்பாவை என்கிட்ட இருந்து சீக்கிரமே பிரிச்சிட்டாங்க

ஏதாவது அதிசயம் நிகழ்ந்து அப்பா திரும்ப என்கிட்ட வர மாட்டார்களானு தினமும் மனசு ஏங்கும்

அதுக்கு அப்பா, “நான் எப்பவும் உன்கூட தாம்மா இருக்கேன்”னு சொல்றது போல அடிக்கடி என் கனவில் வருவாங்க. அது எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்

அந்தக் கடவுளே வரமாக அப்பா எனக்கு கிடைச்சாங்க

அப்பா! அடுத்த ஜென்மத்திலையும் நானே உங்களுக்கு மகளாக பிறக்கணும். உங்கள நல்லா பாத்துக்கணும். இதுதான் என் ஆசை அப்பா😢❤

(முற்றும்)

#ad

     

        

#ad 

             

       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தன்னம்பிக்கை (கவிதை) – ✍ரோகிணி

    ஸ்ரீ ரேணுகா பதிப்பக வெளியீடு புத்தகத்தை பெற அணுகவும்