ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
சென்னை நகரின் பெரிய மருத்துவமனை. கொரொனா தொற்றுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் சிவராமன். வயது அறுபத்து ஐந்தைக் கடந்த சிவராமன், நுரையீரல் பாதிக்கப்பட்டு செயற்கை பிராண வாயுவின் உதவியில் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்.
நோய் தொற்றின் ஆரம்ப கட்டத்திலிருந்து ஓய்வின்றிப் பணிபுரியும் மருத்துவர்களும், செவிலியர்களும் தங்களால் இயன்ற அளவு அபாயக் கட்டத்தில் இருக்கும் நோயாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தார்கள்.
மயக்கத்திற்கும், விழிப்பிற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்த சிவராமன் மனதில் அஞ்சலை சொன்னது ஒலித்துக் கொண்டிருந்தது.
“நீ கொரொனா வந்து கஷ்டப்படணும். சொந்த பந்தங்கள் பக்கத்தில இல்லாம அனாதையா நீ சாகணும்.”
உறவும், நட்பும் அந்திம காலத்தில் அருகில் இல்லாமல் உயிர் துறக்கப் போகிறேன் என்று மனம் வருந்தினாலும், செய்த தவறை உணர்ந்து அவர் மனம் வெட்கப்பட்டது, வேதனைப்பட்டது. என்னுடைய செயலை அஞ்சலை வெளியில் சொல்லியிருந்தால், குடும்ப மானம் போகியிருக்கும். மகனும் மருமகளும் என் மீது வைத்திருந்த நன் மதிப்பு காற்றில் பறந்திருக்கும். அதைச் சொல்லாமல் மறைத்த அஞ்சலைக்கு அவர் மனம் நன்றி கூறியது.
அரசின் பொது மருத்துவமனையில் கொரோனாவிற்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அஞ்சலையின் மனமும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
சிவராமன் எகத்தாளமாகக் கேட்ட, “உன்னால் என்னை என்ன செய்ய முடியும் அஞ்சலை”?” என்ற கேள்வி அவள் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
‘சிவராமன் தவறு செய்தார். ஆனால் பழி வாங்கும் வெறியில் நான் செய்ததும் தவறுதானே? மற்றொரு உயிரை எடுக்கும் அதிகாரம் எனக்கு எப்படி வந்தது? பழிக்குப்பழி, அவர் செய்த தவறுக்கு தண்டனை, என்று என்ன பெயரிட்டாலும், மற்றொரு உயிரைத் திட்டமிட்டுப் பறிப்பது கொலைதானே?”’
அஞ்சலையின் மனம் மானசீகமாக கடவுளிடமும், சிவராமன் மகன், மருமகளிடமும் மன்னிப்புக் கோரியது. நோய் தொற்றுப் பரவாமல், அளப்பரிய சேவை செய்யும் முதன்மை பணியாளராகச் சேர்ந்து, அதன் மூலம் பழியைத் தீர்த்துக் கொண்டதற்காக வருந்தியது அவள் மனம்.
சிவராமன், அஞ்சலை என்ன நடந்தது? சற்றுப் பின் நோக்கிச் செல்வோம்.
மனைவியை இழந்த சிவராமன், மகன் மருமகளுடன் அடையாரில் வாழ்ந்து வருகிறார். சபலிஸ்ட் வகையைச் சேர்ந்த அவர் பசுத்தோல் போர்த்திய புலி.
நாற்பது வயதான அஞ்சலை கணவனையிழந்தவள். குழந்தை இல்லை. சிவராமன் வீட்டில் இருவேளை சமையல் செய்வதுடன், வீடு பெருக்குவது, பாத்திரம் தேய்ப்பது என்று எல்லா வேலையும் செய்வாள். நல்ல சம்பளம், இருவேளை சாப்பாடு.
மகன், மருமகள் அலுவலகம் சென்றவுடன் மதியம் வேலைக்கு வரும் அஞ்சலையிடம் தன்னுடைய சபல புத்தியை காண்பிக்க ஆரம்பித்தார் சிவராமன். தவறி கைபடுவது, தொடுவது என்று சில்விஷமங்களில் ஆரம்பித்தவர், நாளடைவில் இழுத்து அணைப்பது, முத்தமிடுவது என்று வரம்பு மீறினார். வேலை போய் விடுமோ என்ற பயம், நிதி நிலைமை, அவளை ஒன்றும் செய்ய விடாமல் தடுத்தது.
மருமகளிடம் சொல்லப் போவதாகச் சொன்னாள் அஞ்சலை. சிரித்துக் கொண்டே சிவராமன் சொன்னார், “அஞ்சலை. உனக்கு கை கொஞ்சம் நீளம் என்று சந்தேகிப்பதாகச் சொல்லியிருக்கிறேன். என்னுடைய மணிபர்ஸிலிருந்து நூறு, இருநூறு என்று ரூபாய் நோட்டுக்கள் திருடு போவதாகச் சொல்லியிருக்கிறேன். நீ என்னைப் பற்றிச் சொன்னால் அது பழி வாங்கும் நடவடிக்கை என்று நினைப்பார்கள். என்னுடன் ஒத்துழைப்பது உனக்கு நல்லது.”
மேலும் எகத்தாளமாக, “உன்னால் என்னை என்ன செய்ய முடியும் அஞ்சலை? ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று உனக்குத் தெரியாதா?”” என்று சிரித்தார்.
ஆண்கள் அத்து மீறும் போது, படித்த பெண்கள் இணையதளத்தில் பதிவிட்டு மற்றவர்கள் உதவி பெற முடிகிறது. ஆனால் வீட்டு வேலை செய்யும் பெண்கள், கட்டுமானப் பணியில் ஈடுபடும் பெண்கள், ஆண்களின் சில் விஷமத்தை சகித்துக் கொண்டு வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
வார, மாத இதழ்களில் வீட்டு வேலை செய்யும் பெண்களையும், வீட்டுச் சொந்தக்காரரையும் இணைத்துப் பதிவிடும் சிரிப்புத் துணுக்குகள் அதிகம்.
சிவராமனைப் பார்க்கும் போதெல்லாம் தன்னுடைய இயலாமையை சுட்டிக் காட்டி சிவராமன் சிரித்த எகத்தாளச் சிரிப்பு நினைவிற்கு வரும். அவரைப் பழி வாங்க வேண்டும் என்ற வெறிஉணர்ச்சி அஞ்சலை மனதில் எழும். ஆனால் வழி தெரியவில்லை.
கொரோனா ஊரடங்கு நேரத்தில், அஞ்சலைக்கு, சிவராமன் வீட்டிற்க்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை. அவளுடைய சிநேகிதி கலா ஆரம்ப சுகாதார மையத்தில் வேலையில் இருந்தாள். அவளுடைய உதவியுடன் அஞ்சலை சுகாதார மையத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். காய்ச்சல் என்று வருபவர்களுக்கு, செவிலியருடன் சேர்ந்து தேவையான பரிசோதனை செய்ய உதவுவது அவள் வேலை. சிவராமனைப் பழி வாங்க அவள் மனதில் ஒரு திட்டம் உருவாகியது. தன்னை வருத்திக் கொண்டாவது நினைத்ததை முடிக்க நினைத்தாள்.
அஞ்சலை எதிர்பார்த்தது போலவே அவளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கூறி மருந்தை வாங்கி வந்தவள், அதை உட்கொள்ளவில்லை.
வீட்டிலிருந்து வேலை செய்யும் சிவராமனின் மகனும், மருமகளும், சனிக்கிழமை காலையில் கடைக்குச் சென்று அந்த வாரத்திற்குத் தேவையான மளிகை சாமான்கள், காய்கறி, பழவகைகள் வாங்கி வருவது வழக்கம் என்று அறிந்து கொண்டாள்.
அவர்கள் இல்லாத நேரம் வீட்டிற்குச் சென்ற அஞ்சலையை சிவராமன் பார்த்த பார்வையிலேயே காமம் பெருக்கெடுத்து ஓடியது. உள்ளே அழைத்துச் சென்று, கட்டியணைத்து, அவள் முகக்கவசம் எடுத்து ஆசையுடன் முத்தமிட, அஞ்சலையும் சிவராமனை முத்தமிட்டாள். எதிர்பாராத முத்தத்தால் ஆனந்தம் அடைந்தார் சிவராமன்.
அஞ்சலை சொன்னாள், “எனக்கு உன் மீது ஆசை வந்துட்டது அப்படின்னு நினைச்சியா. நான் உனக்கு கொடுத்தது ஆசை முத்தம் இல்லை. உனக்கு தண்டனையா கொடுத்த முத்தம். உன்னாலே என்னை என்ன செய்ய முடியும்ன்னு கேட்டியே. அதுக்கு பதில் இது. எனக்கு கொரோனா தொற்று இருக்கு. உனக்கும் அதை தந்துட்டேன். உனக்கு இதய நோய் இருக்குன்னு தெரியும். கொரோனாவும் சேர்ந்து நீ கஷ்டப்படணும். சொந்த பந்தங்கள் இல்லாம நீ அனாதையா சாகணும். வீட்டிலேயே அடைந்சு கிடைக்கற உனக்கு கொரோனா எப்படி வந்தது அப்படின்னு மகனும், மருமகளும் கேட்டா என்ன சொல்லுவே. அஞ்சலை வந்து முத்தத்தோட கொரோனாவும் கொடுத்தாள் அப்படின்னு சொல்லுவியா?”
அன்றிரவே சிவராமனுக்கு காய்ச்சல் வந்தது. மகனும், மருமகளும் கூட லேசாக தலைவலி, காய்ச்சல் உணர்ந்தார்கள். அடுத்த நாள் சுகாதாரத் துறையினர் வந்து பரிசோதனை செய்தனர். மகனையும், மருமகளையும் வீட்டில் இருந்தே மருந்து சாப்பிட்டு சிகிச்சை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். இதயநோயாளியான சிவராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை எடுத்துக் கொள்ளாத அஞ்சலையின் உடல்நிலை மோசமடைந்ததால் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாள்.
இப்போது, சிகிச்சை பலனின்றி சிவராமன் உயிர் பிரிந்தது. கொரோனாவால் இறந்தவர்களுக்கு வகைபடுத்தப்பட்ட நெறிமுறைகளின்படி அவருடைய உடல் எரியூட்டப்பட்டது. விவரங்கள் அறிந்த அஞ்சலையின் சினேகிதி கலா அவளிடம் விவரங்கள் சொல்லப் பொது மருத்துவமனை விரைந்தாள்.
அஞ்சலைக்கு இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்தது.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings