in ,

எதற்கும் அழாதவன் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

       “எத்தனை அடி அடிச்சாலும் எருமையாட்டம் நிற்கிறியே… உனக்குக் கொஞ்சம் கூட வலிக்கலையா?” வீரண்ணன் தொண்டை நரம்புகள் புடைக்கக் கத்த,

       “அப்பாா… நீங்க எத்தனை அடிச்சாலும் நான் அழவே மாட்டேன்!… அம்மா… சின்ன வயசுலிருந்தே எனக்கு சொல்லிக் கொடுத்திருக்காங்க…  “ஆம்பளப் பசங்க எப்பவும்… எதுக்கும்.. அழக்கூடாது!”ன்னு… அதனால நான் அழ மாட்டேன்ப்பாா” வலி உடலை வருத்தினாலும், உறுதியான மனதுடன் பதில் சொன்னான் தங்கராசு.  ஸ்தம்பித்து போனாள் வீரண்ணன்.

****

        பழைய நினைவுகளில் மூழ்கிக் கிடந்த தங்கராசுவை ஒரு பெருசு உசுப்பியது..  “தங்கராசு… சவத்தைத் தூக்கிடலாமா?”  தந்தையை இழந்து விட்ட சோகத்தில் அமர்ந்திருந்தவன் நிதானமாய் எழுந்தான்.

     சற்று நேரத்தில் அவனது அப்பாவின் உடல் காடு நோக்கிப் பயணப்பட்டது.

      வெற்றுடம்புடன் பாடைக்கு முன் நடந்து, காட்டில் சடங்குக்காரன் சொன்னபடி காரியங்களைச் செய்து முடித்து விட்டு, தோள் மீதும், மார் மீதும் போட்டு வளர்த்த தந்தையை தீயிட்டுக் கொளுத்தி விட்டுத் திரும்பினான்.

      அசதியும் சோகமும் அவனைப் பாடாய்ப்படுத்த திண்ணையில் அமர்ந்தான்.

       “ஆனாலும்… தங்கராசுக்கு இத்தனை கல்லு மனசு ஆகாதம்மா!… பெத்த அப்பன்  பொணமாக் கெடக்கான்… கண்ணுல ஒரு சொட்டுத் தண்ணி வரலை!… இந்த மாதிரி நான் பார்த்ததே இல்லையம்மா!” வீட்டினுள் யாரோ ஒரு பெண் அம்மாவிடம் சொல்ல,

“என்னம்மா பண்ணச் சொல்ற?… சின்ன வயசிலிருந்தே அவன் அப்படித்தான்!… எத்தனைக் கஷ்டம் வந்தாலும் சரி… எத்தனை வலிச்சாலும்… அழவே மாட்டான்!… ஸ்கூல்ல இவனை அடிக்கற வாத்தியார்கதான் கை ஓய்ஞ்சு போயிடுவாங்க!”  அம்மா அழுகையினூடே சொன்னாள்.

      “அதென்ன அப்படியொரு பழக்கம்?”.

      “அவன் சின்னதாயிருக்கும் போது… ஏதோ… ஒரு தடவையோ… ரெண்டு தடவையோ… நான்தான் சொல்லி வெச்சேன்!…  “ஆம்பளைப் பசங்க அழுவக்கூடாது”ன்னு அதையே “கப்பு”ன்னு புடிச்சுக்கிட்டான்!… அதுவே  மனசுல பதிஞ்சு போச்சு!… எதுக்குமே அழாதவனாகவே வளர்ந்துட்டான்!”.

       “என்னது?… சின்ன வயசிலிருந்தே எதுக்கும் அழ மாட்டானா?… நெசமாவா?… நம்பவே முடியலையே”

      “உண்மையைச் சொல்லணும்னா… அவன் அழுது நானே பார்த்ததில்லை!.. கைக்குழந்தையா இருக்கும் போது அழுததோட சரி!… பிளஸ் டூ பரீட்சையில அவன் ஃபெயிலாப் போனப்ப… நான்தான் அழுதேன்… அவன் அழலே!”

அதைக் கேட்டுக் கொண்டிருந்த தங்கராசு, “அம்மா இதுவரை மட்டுமல்ல… இனி இந்த உடம்பு கட்டைல போற வரைக்கும் அழவே மாட்டேன்” மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டான்.

      தந்தைக்குப் பிறகு அவருடைய மர வியாபாரத்தை தந்தையை விடவும் சிறப்பாகச் செய்து காட்டினான்.

      ஒரே வருடத்தில் ஊரில் ஒரு பெரிய மனிதனானான்.

கல்யாணத்திற்காக நச்சரிக்கும் தாயிடம், “இப்பதான் வியாபாரத்தில் முன்னேறிக்கிட்டு இருக்கேன் அதுக்குள்ளார எதுக்கு?” வாய் மறுத்துப் பேசினாலும் மனம்,  “எப்படிடா அம்மா கிட்ட நானும் அந்த ஷா மில் ஓனர் பொண்ணு யசோதாவும் காதலிக்கிற விஷயத்தை சொல்றது?”ன்னு தவிக்கும்.

அதிகாலை நாலு மணி. தூங்கிக் கொண்டிருந்த தங்கராசு அம்மாவின் கத்தல் கேட்டுக் கண் விழித்தான். “போச்சுடா… எல்லாம் போச்சுடா” தலையில் அடித்துக் கொண்டு கதறினாள்.

பதட்டமான தங்கராசு வெளியில் நின்று கொண்டிருந்தவர்களிடம் விசாரிக்க, “ஐயா… நம்ம மர குடோன்ல தீப்பிடிச்சு… எல்லாம் எரிஞ்சு நாசமாயிடுச்சுங்கய்யா!”…

      தலையில் தீப்பற்றிக் கொண்டதைப் போல் ஓடினான் தங்கராசு.

     அவன் போய்ச் சேர்ந்த போது முக்கால்வாசிக்கு மேல் அவன் மர குடோன் எரிந்து போயிருந்தது.

     அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

     துக்கம் விசாரிக்க வீடு தேடி வந்தவர்களிடம் அவன் தாய் மட்டுமே அழுது புலம்பினாள்.  தங்கராசு அழாமல் உறுதியாக நின்றிருந்தான்.

     மாலை, கடை வீதியில் எதிர்ப்பட்ட யசோதாவிடம், ”யசோதா… உனக்கு என் மர குடோன் தீப்பிடித்த விஷயம் தெரியாதா?” கேட்டான்.

     “கேள்விப்பட்டேன்! ஏகப்பட்ட நஷ்டமாமே?… இதிலிருந்து நீ மீளவே முடியாதாமே?” எங்கோ பார்த்தபடி பேசினாள்.

      கோபமான தங்கராசு,. “ஏய்.. என்ன பேச்சு ஒரு மாதிரி.. நீ பேசிட்டிருக்கறது… உன்னோட வருங்கால புருஷன்கிட்ட!” என்றான் சற்று காட்டமாய்.

       “அதை நீங்க சொன்னா பத்தாது…. என்னைப் பெத்தவங்களும்… முக்கியமா நானும் சொல்லணும்!”.

       “நீ சொல்லாம எங்க போயிடுவே?”.

       “சொல்லுவேன்… உனக்கும் எனக்கும் இனி ஒத்து வராது!”ன்னு சொல்லுவேன்!”

       இடி விழுந்தது போலிருந்தது தங்கராசுவிற்கு.  இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு, “என்ன யசோதா… என்னென்னமோ பேசுறே?” த்ணிந்த குரலில் கேட்டவாறே அவளை நெருங்கினான்.

      “ச்சூ… தள்ளி நின்னே பேசுங்க” என்றாள் அவள்.

      மூச்சே நின்று விடும் போலானது தங்கராசுவிற்கு.

      “யசோதா… இவ்வளவுதானா நம் காதல்?”

      “இங்க பாருங்க…. நான் உங்களை காதலிச்சேன் இல்லைன்னு சொல்லலை!… ஆனால் இப்ப உங்கள் நிலைமை என்ன?… யோசிச்சு பாருங்க!… எல்லாத்தையும் நெருப்புல இழந்திட்டு போண்டியா நிக்கற உங்களுக்கு என்னைக் கட்டி வைக்க சம்மதிப்பாங்களா என்னைப் பெத்தவங்க?”

       “அவங்களை விடு!… நீ முடிவெடு”

       “அவங்க முடிவுதான் என்னோட முடிவு!” ஆணித்தரமாய்க் கூறிவிட்டு வேகமாய் நடந்தவளின் கைகளை பிடித்தான் தங்கராசு.

      உதறி விட்டுப் போனாள், தன் கையையும், அவன் மீதான காதலையும்.

.
      “நெருப்பு என் சொத்தை எரிச்சுது!… உன் வெறுப்பு என் நெஞ்சை எரிச்சிட்டுதடி!” துக்கம் தொண்டையை அடைக்க, இதுவரை அவனிடமிருந்து வெளிப்படாத அழுகை வெளிப்படத் துடிக்க, சிரமப்பட்டு விழுங்கிக் கொண்டான்.

      பாழும் மனம், அவளோடு பேசிய பேச்சுக்களை… விளையாடிய விளையாட்டுக்களையே திரும்பத் திரும்ப நினைத்து அவனைப் பாடாய்படுத்தியது.

.
       ஒரே மாதத்தில் பாதி உடம்பாய் இளைத்து போனான்.  உணவும்… உறக்கமும் குறைந்ததில் அவன் கண்களைக் கரு வளையங்கள் கைப்பற்றிக் கொண்டன. கன்னமேடு குழியானது.

      “தங்கராசு ஷா மில் ஓனரும் அவர் சம்சாரமும் வந்திருந்தாங்க!…” வீட்டிற்குள் நுழைந்தவனிடம் அம்மா சொல்ல,

      “என்ன… என்ன விஷயம்?” ஆர்வமாய்க் கேட்டான்.

      “பொண்ணுக்குக் கல்யாணமாம்!… பத்திரிக்கை வெச்சிட்டுப் போனாங்க!”

      சோக முகத்துடன் அந்தப் பத்திரிக்கையைப் பார்த்து விட்டு,  திருமண நாளன்று தான் ஊரில் இருக்கக் கூடாது என முடிவு செய்தபடி, “அம்மா வியாபார விஷயமாய் நான் வெளியூர் போறேன்… வர பத்து இருவது நாளாகும்!” என்றவன்,

      அன்றிரவே பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

     ஒரு மாதத்திற்குப் பிறகே ஊர் வந்து சேர்ந்தான். மாதக்கணக்கில் மகனைப் பிரிந்த தாய் ஓடோடி வந்து கட்டிக் கொண்டாள்.

       “என்னப்பா?.. ஒரு மாசம் என்னைத் தவிக்க வெச்சிட்டியேப்பா!”

       “வியாபாரத்தில் ஒரு சோதனை… அதைத் தாங்குற பக்குவம் எனக்கு ஏற்படுவதற்கு ஒரு மாதம் தேவைப்பட்டது… அதான்!”

      மறுநாள், வாசலுக்கு வந்தவன் எதிரில் வருபவர்களை கண்டு இடிந்து போய் நின்றான்.

     அவர்கள் கடந்து போன பின் வீட்டிற்குள் வந்து படுக்கையில் “தொப்”பென்று விழுந்தான்.

      பத்து நிமிடங்களில், பல வருடங்கள் அழுதே பழக்கப்படாதவன் வெளிப்படுத்திய விசும்பல் ஒலி வினோதமாய் ஒலித்தது.  சமையலறையிலிருந்து ஓடி வந்தாள் தாய்.

      குப்புற படுத்திருந்தவனைத் திருப்பி போட்டவள் கதறி விட்டாள்.

      எதற்கும் அழாதவன் அழுது கொண்டிருந்தான்.

      “அடேய்.. ராசு!.. என்னடா ஆச்சு உனக்கு?… அழுவறியேடா!… எத்தனையோ இடிகளை அனாவசியமா தாங்கிட்டுத் திரிஞ்சியேடா… இப்போ என்னடா பேரிடி விழுந்திச்சு?.. முப்பது வருஷமா பார்க்காத உன்னோட அழுகைக் கோலத்தை பார்க்க வெச்சது எதுடா?” மகனின் அழுகையை கண்டு பயந்து போன தாய் பதறினாள்.

      கண்களிலிருந்து இறங்கி வழியும் கண்ணீர் துளிகளை சுட்டு விரலால் வழித்தெடுத்து உதறிய தங்கராசு, வாய் பேச முடியாமல் அம்மாவை அங்கிருந்து போகச் சொல்லி ஜாடை காட்ட, மகன் இருக்கும் நிலையில் அவனுக்குத் தனிமை தேவை என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் தாய்.

       “எத்தனையோ சோகங்களைத் தாங்கிட்டு… அழுவாம இருந்தேன்.. அவ என்னை உதறிட்டுப் போனப்ப… வேறொருத்தன் கூட கல்யாணம்னு நடந்தப்பக் கூட அழாம இருந்தேன்!… தெருவுல அவள் இன்னொருத்தனோட… அவன் மனைவியா…. ஜோடியா போற காட்சியை பார்த்துத்தானம்மா அடக்க முடியாமல் அழுதிட்டேன்!ன்னு… இந்த உண்மையை எப்படியம்மா உன்கிட்டச் சொல்லுவேன்?” வேதனையுடன் குமுறினான் அந்த எதற்கும் அழாதவன்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கூடடையும் பயணத்தில் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    எல்லோருமே சூழ்நிலைக் கைதிகள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை