in ,

தேவன் கோயில் மணியோசை! (சிறுகதை) – இரஜகை நிலவன்

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மீன் படகிலிருந்து அந்தோணி இறங்கியபோது வேகமாக வந்து வியாபாரிகள் சூழ்ந்து கொண்டனர். அந்தோணி மகன் சூசையை கூப்பிட்டு “ஒழுங்காக பார்த்து வியாபாரம் செய். டெய்சியை இன்னைக்கு பொண்ணு பார்க்க வாராங்க. நான போய் எல்லாவற்றிற்கும் அரேஞ்ச் பண்ணுகிறேன்” என்றவாறு வேகமாக வீட்டிற்கு கிளம்பினார்.

எதிரே வந்த இடிந்தகரை பஸ்சிலிருந்து இறங்கிய மாப்பிள்ளை வீட்டுக்காரர்களைப் பார்த்ததும், “வாங்க, படகுக்கு போயிட்டு வர கொஞ்சம் தாமதமாகி விட்டது. வீட்டுக்கு போகலாம்” என்றவாறு வந்திருந்தவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார் அந்தோணி.

வாசலில் மீன் வலையை வேகமாக சரி செய்து கொண்டிருந்த மரியம்மாள் எழுந்து உள்ளே போக, வந்திருந்தவர்களை அமரச் செய்துவிட்டு, உள்ளே வந்து, “மரியம்மா சீக்கிரம் டெய்சிக்கு துணியை உடுத்திக் கூட்டிட்டு வா. அதற்கு முன்னாலே சாப்பிடு வதற்கு வாங்கி வைத்திருந்த பட்சணங்களை எடுத்து வை” என்றார்.

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க, மத்தியானந்தானே வாரதா சொன்னாங்க.. இப்பவே வந்துட்டாங்களே. டெய்சி அவளுக்க பிரண்டு வீட்டுக்குல்ல போனா” என்றாள் மாரியம்மாள்.

“நீ போய் முதலிலே பட்சணங்கள் எல்லாம் எடுத்து வை. சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். அப்புறமாக அவளைக் கூட்டிண்டு வந்து துணி உடுக்கச் சொல்லு” என்று சொல்லிவிட்டு முன் அறைக்கு வந்தார்.

“காரிலேதான் வருவீங்கன்னு என்று எதிர்பார்த்தேன். அதுவும் மத்தியானம்தானே வரதா சொன்னீங்க… அதனாலே டெய்சி யாரோ சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிருக்கா.. இருங்க. இப்ப வந்துடுவா. அதுக்குள்ளே டிபன் பண்ணிடலாம்” என்றார் பொதுவாக.

மாப்பிள்ளை ஜோசப்பின் அப்பா விக்டர், “குளச்சலிலேயிருந்து கார் பிடிக்க ரொம்ப காசு ஆகும்னான். அதுவும் சரிதான்னு நாகர்கோயிலுக்கு வந்தால் உங்க ஊர் இடிந்தகரை பஸ்சும் ரெடியாக நின்னுச்சு. நேரடியாக போய்ச் சேர்ந்து விடலாமே என்றுதான் பஸ்சிலே வந்தோம்.”

“முதலிலே அஞ்சுகிராமம் வந்து கார் பிடிச்சு வரலாம்னு தான் முடிவு பண்ணினோம். எம் பொண்ணு நாளைக்கு மெட்ராசுக்கு போகணும். அதுதான் சீக்கிரம் போயிட்டு வந்து விட்டால் தயார் பண்ணுவதற்கு வசதியாக இருக்கும்னுதான் சீக்கிரம் வந்தோம்” என்றாள் ஜோசப்பின் அம்மா.

மரியம்மாள் எல்லோருக்கும் காபி, டிபன் தந்து விட்டு மனதுக்குள்ளே முனகிக் கொண்டு வேகமாக டொசியைத் தேடிக் கிளம்பினாள்.

“நான் வரவில்லை. என்னை யாரும் பெண் பார்க்க வரவேண்டாம் என்று எத்தனை முறை சொல்லி விட்டேன். நான் அத்தான் சேவியரைத்தான் கட்டிக் கொள்வேன், நீ போய் உங்க வீட்டுக்காரரிடம் சொல்”.

“வீணாத வம்பு பண்ணாதே. சும்மா வந்து துணியை உடுத்திக் கொண்டு நில்லு. அவுக பொண்ணு பார்த்துட்டுப் போகட்டும், நாளை கழித்து கிறிஸ்துமஸ், இந்த நேரத்திலே நீ இப்படி இப்படி பேசினா, வீட்டிலே கிறிஸ்துமஸ்சும் கொண்டாட முடியாது. அப்புறம் எழவு தான் நடக்கும்.”

“நான் வர முடியாதுன்னா முடியாது. என்ன செய்யணுமோ செய்துக்கோ, கிறிஸ்துமசும் கொண்டாட வேண்டாம். ஒரு சந்தோஷமும் எனக்கு வேண்டாம். சேவியர் அத்தானை என்னைக்கு கல்யாணம் பண்ணிக்கிறேனோ அன்னைக்குத்தான் எனக்குச் சந்தோஷமும் கொண்டாட்டமும்” என்று சொல்லி முடிக்கு முன் உள்ளே வந்த அந்தோணி, “ஏய் டெய்சி கிளம்பு” என்றார்.

“நான் வர முடியாது. எத்தனை முறை சேவியர் அத்தானை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன பிறகும் கேட்காமல் நீங்கள் எனக்கு வேறு மாப்பிள்ளை பார்ப்பீர்கள்?”

“சேவியர் சும்மா ஒரு ரன் பிடிக்கிற படகுகூட இல்லாமல் எவன் கூடவோ தினக்கூலிக்கு போய்க் கொண்டிருக்கிறான். நான் பார்த்திருக்கிற மரப்பிள்ளைக்கு நான்கைந்து போட் இருக்கு. பெரிய பங்களா வச்சிருக்கார். ஒரே பையன். நீ கல்யாணம் முடிஞ்சு போனா சொகமா ஜீவனம் நடத்தலாம். சும்மா ஒண்ணுமில்லாத பயலுக்கெல்லாம் உன்னைக் கட்டி வைக்க முடியாது, கெளம்பு” என்றார்.

டெய்சி அடம்பிடிக்க, “எங்குணம் உனக்கு நல்லா தெரியுமில்லையா?” என்றவர் அவள் தலை முடியைக் கொத்தாக பிடித்து தூக்கி தரதரவென இழுக்க, டெய்சியின் தோழியின் அம்மா வந்து தடுக்க, “ஒழுங்காக இவளை வரச் சொல்லுங்கள். வீணாக நம்ம முறை ஊர் ‘கிறிஸ்தும்ஸ்’ கொண்டாட விடாமல் என்னைக் கொலைக்காரனாக மாற்றப் பார்க்கிறாள்” என்று கத்தினார் அந்தோணி.

“போம்மா டெய்சி. உன்னைப் பொண்ணுதானே பார்க்க வந்திருக்கிறார்கள். இப்படி கிறிஸ்துமஸ் நேரத்திலே எந்த விதமான அபசகுன செயல்கள் இந்த ஊரிலே நடக்க வேண்டாம். அவர்கள் பெண் பார்த்து விட்டுப் போகட்டும், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தாள்.

இடிந்தகரை தேவாலயம் மிகவும் அழகாக ஜோடிக்கப்பட்டு, கிறிஸ்துவின் வருகைக்கான இரவு நடுநிசித் திருப்பலிக்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.

திருப்பலி ஆரம்பமாவதற்கு முன் எல்லோரும் வீடுகளில் புத்தாடைகள் அணிவதில் முனைந்திருக்க, டெய்சி நேரடியாக ஆலயத்திற்கு வந்து மணிக்கூண்டில் கட்டியிருந்த ஆலய மணியை அடிக்க, என்னவோ ஏதோ என்று ஊர் மக்கள் எல்லோரும் தேவாலயத்திற்கு முன்னால் கூட ஆரம்பித்தனர்.

தேவாலய மணியோசையைக் கேட்ட பங்கு தந்தை டேவிட், டெய்சியின் அருகில் வந்து, “என்னம்மா, என்ன விஷயம்?. கிறிஸ்துமஸ் திருப்பனி தொடங்க வேண்டிய இந்த நேரத்தில் வந்து ஏன் ஆலய மணியை அடித்தாய்?” என்றார்.

“பாதர் நான் ஏற்கனவே ங்களிடம் சொல்வியிருந்த பிரச்சினைதான். எங்கப்பா என்னையும் என் மாமி மகன் சேவியரையும் பிரிக்கப் பார்க்கிறார். என்னை வேறு இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் பார்க்கிறார். நீங்கள்தான் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்” என்றாள்.

கோபமாக ஓடி வந்த அந்தோணியை தடுத்து நிறுத்திய பங்குத்தந்தை, “ஏன் அந்தோணி கோபப்படுகிறாய்? அவள் விரும்பிய பையனை திருமணம் செய்து வைப்பதில் உனக்கு என்ன தயக்கம்?” என்றார்.

“பாதர் அவன் ஒண்ணுமில்லாதவன். தினக்கூலிக்கு மீன் பிடிக்கிறவன். இவள் கல்யாணம் முடிஞ்சு கண்ணைக் கசக்கிக்கிட்டு இருந்தால் எனக்குத்தானே கஷ்டம்?” பல்லைக் கடித்தார்.

“நாங்க ரொம்ப சொகமாகத்தானிருப்போம். அப்படி பிரச்சினைன்னாலும் இவர்கிட்ட போய் கண்கலங்க மாட்டேன் பாதர்” என்றாள் டெய்சி வீம்பாக.

“அந்தோணி… கிறிஸ்துமஸ் அதுவுமாக உன் பெண் விரும்பியதை நடத்தி வை. அதுவே உன் பெண்ணுக்கு கொடுக்கிற கிறிஸ்துமஸ் பரிசாக இருக்கட்டும். போ… கிறிஸ்துமஸ் முடிந்ததும் டெய்சிக்கும் சேவியருக்கும் நடக்க வேண்டிய திருப்பலிக்கு ஏற்பாடு செய்” என்றார் பங்கு தந்தை டேவிட்.

“நீங்கள் சொன்ன ஒரே காரணத்திற்காக செய்கிறேன் பாதர்” என்று அந்தோணி கிளம்ப, எல்லோரும் மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் திருப்பலிக்கு கிளம்பினர்.

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இன்ஸ்டாகிராம் நண்பனும் இலக்கிய கூட்டமும் 2045 (சிறுகதை) – பஷீர் அஹமது

    சொல்லாமலே யார் பார்த்தது?! (அத்தியாயம் 1) – இரஜகை நிலவன்