in ,

காட்ராக்ட் ஆபரேஷனும் தன்னு பாட்டியும் (சிறுகதை) – சுஶ்ரீ

                   2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

                                                 “ஏன் இப்படி கண்ணைப் போட்டு கசக்கிட்டே இருக்கீங்க,” கேட்ட சுசிலாவைப் ஒத்தைக் கண்ணால பாத்தேன்.

                                     “ம், காலைல டி.வி. ல, ஜோதிட சிரோன்மணி சொன்னார், காலங் காத்தாலை இடது கண்ணை கசக்கினா,மனசுல உள்ள எல்லா ஆசைகளும் நிறைவேறும்னு, அதான்”

                                    “க்கும், உங்க ஆசை எனக்குத் தெரியாதா, உங்களுக்காக, செத்துப் போன சிலுக்கு உயிரோடவா வரப் போறாங்க”

                                    “ போடி போக்கத்தவளே காலங் காத்தால வாயைக் கிளறாம, ஏதோ ராத்திரில இருந்து கண் உறுத்தறதேனு கண்ணை கசக்கினா, சிலுக்கு, குலுக்குன்னுட்டு”

                                    “ சொன்னாதானே தெரியும், டிபனை சாப்டுட்டு, ஒரு வாய் காபி குடிச்சிட்டு முதல்ல கண்ணை செக் பண்ணிண்டு வாங்கோ. 52 வயசாறது வெள்ளெழுத்து வந்திருக்கும்.”

                                         எனக்கும் தோணிச்சு, ஏதாவது படிக்கணும்னா கூட கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. இன்னிக்கு எப்படியும் அந்த “எங்க கிட்ட வாங்க ,ஆரோக்ய கண்களோட போங்கனு”டி.வி. ல சிரிச்சிட்டே சொல்றாளே அந்த அழகான டாக்டர் கிட்ட போய்ப் பாத்துடணும்.

                                         ரவா உப்புமா 6 ஸ்பூன், டிகிரி காபி ஒரு டம்ளரை

வயித்துல இறக்கிட்டு, என் ஃபேவரைட் ப்ளூ கலர் டி.ஷர்ட் மாட்டிண்டு, ‘பெல்லா விடா’ பெர்ஃப்யூமை தாராளமா ஸ்பிரே பண்ணிண்டு மணக்க மணக்க ஒன்பதரைக்கே கிளம்பினேன்.

”நானும் வேணா கூட வரவானு” கேட்ட சுசிலாவை கண்டுக்காம பைக்கை உதைத்து கிளம்பினேன். அண்ணாநகர் ரவுண்டாணாவை ஒட்டி அந்த பெரிய “ஐ கேர் சென்டர்”, ஒரு ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருந்தது. வாச்மேன் கூட விரைப்பா சலாம் போட்டு கண்ணாடிக் கதவை திறந்து விட்டார்.

                                          ரிசப்ஷன்ல நாலு பெண்கள், ( ஞாயித்துக் கிழமை நைட் TV ல பாத்த அழகிப் போட்டில கலந்துண்டவங்களை விட அழகா தெரிஞ்சாங்க) அதில் கொஞ்சம் பூசினாப்பல இருந்த பெண் ‘எஸ், சார்’ என்றாள், ஒரு பேப்பர் பேடை திறந்த வண்ணம்.

                                        “ ராத்திரில இருந்து கண் உறுத்தல், இப்பதான் கொஞ்சம் சரியாறதுனு சொல்லி, கொஞ்சம் கேணத் தனமா சிரிச்சது எனக்கே தெரிஞ்சது”

                                        “ ஓகே சார், பேர், வயசு, விலாசம், போன் நம்பர், சுகர், பிரெஷர் ஏதாவது இருக்கா விவரம் இதுல எழுதுங்க. ஒரு அறுநூறு ரூபா கன்சல்டேஷன் பீஸ் கேஷ் கவுன்டர்ல கட்டிடுங்க. பிளீஸ் உக்காருங்க சார்” பணத்தை கட்டிட்டு,வரிசையா போட்டிருந்த சொகுசு நாற்காலிகள் ஒண்ணுல உக்காந்தேன்.எதிர்ல பெரிய TV ல ஏதோ ஒரு சோப் பவுடருக்கு, ‘சூப்பரு சூப்பரு வாசனைனு’

செஃப் தாமு முகத்தை மினுக்கி ஆடிட்டிருந்தார், வேடிக்கையா இருந்தது.

                                          ஒரு நர்ஸ் விரைப்பா வந்து கண்ணை திறக்கச் சொல்லி ரெண்டு கண்லயும் ஏதா டிராப் சொட்டினார். அப்பா…. சுசிலாக்கு வெங்காயம் நறுக்கித் தரப்ப கூட இத்தனை எரிச்சல் இல்லை. திரும்ப வந்த அதே நர்ஸ் கண்ணில் டார்ச் அடிச்சா, திரும்ப அதே வெங்காயச் சாறு கண்ல ,கண்ணை மூடிக்கங்கனு போயிட்டா.இந்த ரிச்சுவல் 10 நிமிஷத்துக்கு ஒரு தடவை நடந்தது.

                                       எதிர்ல அழகான பெண்களை ரிஷப்ஷன்ல உக்கார வச்சிட்டு, இப்படி கண்ல வெங்காயச் சாறு ஊத்தறது கொஞ்சம் கூட நல்லா இல்லை.

                                       அப்பறம் உள்ளே கூப்டு ரெண்டு கண்லயும் மாத்தி மாத்தி ஏதோ லென்ஸ் மாட்டி எதிர்ல டிஜிடல் போர்ட்ல இருந்த எழுத்துக்களை படிக்கச் சொன்னா ஒரு வெண்ணிற ஆடை நிர்மலா.கடைசி 4 வரிசைல மலையாளம் மாதிரி தெரிஞ்சது. வேற வேற லென்ஸ் மாட்டி ஒரு வழியா மலையாளம் மங்கலான தமிழா மாறித்து.

                                         தாடைய இங்கே வைங்கோ , நெத்தியை ஒட்டுங்கோனு ஏதோ பயாஸ்கோப் காட்டி பேப்பர்ல பிரிண்ட் எடுத்தார்கள். ஒரு வழியா கடைசில அந்த நெடிந்துயர்ந்த ஏதோ ஒரு குமார் டாக்டரோட கேபினுக்குள் செலுத்தினார்கள். அவரும் ஏதோ பயாஸ்கோப்ல என் கண்களை பாத்தார், என்னை அவரோட இடது காது, வலது காதுனு மாத்தி மாத்தி பாக்கச் சொன்னார். வலது காதை விட இடது காதுல ஓட்டை சிறுசா தெரிஞ்சது.சொன்னா சிரிக்கறார் ஏன்னு தெரியலை.

                                            ரெண்டு கண்லயும் காடராக்ட் இருக்கு, இடது கண்ல உடனே ரிமூவ் பண்ணணும், வலது கண் அஞ்சாறு மாசம் தாங்கும். ரிசப்ஷன்ல வெயிட் பண்ணுங்க, எங்க ஸ்டாஃப் உங்களை கைட் பண்ணுவார், குட் லக்.

                                               கைட் பண்றது என்ன, பேரம் பேசற மாதிரினு வச்சிக்கங்களேன். 65, 75, 90 ஆயிரம் 3 பாக்கேஜ் இருக்கு லென்ஸ் க்வாலிடி பொறுத்து, ஆபரேஷனுக்கு பிரைஸ் நான் மிடில் பேக்கேஜ் செலக்ட் பண்ண வைக்கப் பட்டேன். அந்த ஸ்டாஃப் 4 ஃபோன் பண்ணினதுக்கப்பறம் வர புதன் கிழமை 11 மணி ஸ்லாட் ஃபிக்ஸ் ஆச்சு. அவங்க ராயப்பேட்டை பிரான்ச்ல ஆபரேஷன்.

                                               சுசிலாக்கு கொஞ்சம் பயம்தான், என் பையன் சுரேஷ் தைரியம் சொன்னான். “ அம்மா இப்பல்லாம் கண் ஆபரேஷன் 5 நிமிஷ வேலை, லேசர்ல புறை எடுத்துட்டு லென்ஸ் வச்சு நீ ஒரு தோசை போடற நேரத்துல திரும்ப அனுப்பிடுவாங்க.நான் அப்பா கூட போறேன் பயப்படாதே.”

                                             ஏதேதோ டிராப்ஸ் போட்டுண்டு புதன் கிழமை ராயப்பேட்டை ஐ கேர் ஹாஸ்பிடல் போய் சேந்தோம். அதுவும் ஒரு ஸ்டார் ஹோட்டல் ரேன்ஜ்.உக்கார வைக்கப்பட்டு வெண் பட்டு சுந்தரி கண் கலங்க கலங்க டிராப்பினார் நாலு தடவை. என் மொபைல் போன் பர்ஸ், வாட்ச், எல்லாம் கழட்டி சுரேஷிடம் கொடுத்தாச்சு. 11.30 ஆச்சு எனக்கு முன்னே 4 பேர் லைன்ல காத்திருந்தாங்க. பின்னால ஒரு 11 பேர். ரெயில்வே ஸ்டேஷன் வெயிட்டிங் ரூம் மாதிரி இருந்தது.

                                                     திடீர்னு அமைதியை கிழிச்சிண்டு மொபைல் ஃபோன் சத்தம்.என்னோடதுதான். அடெண்ட் பண்ணவானு கேட்டுட்டு சுரேஷ்தான் ஃபோனை எடுத்தான். “ ஹலோ யாரு பேசறது?,தன்னு பாட்டியா? அப்பாக்கு ஆபரேஷன் ஆஸ்பத்திரில இருக்கோம்.”

                                                   இதே டயலாக் வால்யூம் கூட்டி கூட்டி 3 தடவை பேசினான். இப்ப இந்த ரிசப்ஷன்ல இருந்த எல்லோர் கவனமும் சுரேஷ் பக்கம்.

                                                    மிக பலமாக,” ஆமாம் பாட்டி நான் சுரேஷ் பேசறேன் அப்பாக்கு கண் ஆபரேஷன்” இது ஒரு மூணு தடவை உச்ச ஸ்தாயியில்.எனக்கு சிரிப்பு வந்தது. இந்த தன்னுப் (தனலட்சுமி) பாட்டி அப்பா வழில ஏதோ சொந்தம், செங்கல்பட்ல இருக்கா தன் பேத்தியோட. மாசம் ரெண்டு தடவையாவது எனக்கு போன் பண்ணுவ. காது கொஞ்சம் டமாரம். தான் பாட்டுக்க பேசுவா, நாம சொல்றதை கேட்டாதானே.

இப்ப சுரேஷ் மாட்டினான்.

                     சுரேஷ் எங்கே வேலை பாக்கறான், என்ன டிசிக்னேஷன், எவ்வளவு சம்பளம், ஏன் இன்னும் கல்யாணம் பண்ணலை இந்த விவரம் பூரா அடுத்த 10 நிமிஷத்துல அந்த ஆஸ்பத்திரி பூரா தெரிஞ்சு போச்சு, தன்னுப் பாட்டிக்குதான் இன்னும் புரியலை. ரிசப்ஷன்ல எல்லோரும் சுரேஷையே ஆர்வமா பாத்துண்டிருந்தா.

                        என் டர்ன் வந்தது, பச்சைக் கலர் கவுன், பச்சை தொப்பி, பாலிதீன் கால் கவர்,மாட்டி விட்டா ஈஸ்வரி சேச்சி.

அங்கே சுவர்ல இருந்த கண்ணாடில பாத்தேன், கவர்ச்சிக் கன்னி கல்பனாதேவி மேகத்துல மிதக்கற ரேன்ஜுக்கு இருந்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு( ஆபரேஷன் தியேட்டருக்கு) கூட்டி செல்லப் பட்டேன்.

ஆபரேஷன்லாம் விவரமா சொன்னா உங்களுக்கு போர் அடிக்கும் வேண்டாம் அது.

                        ஒரு மணி நேரத்துல திரும்ப வீடு. வீடு திரும்பினா வீடெல்லாம் கூட்டம். சுசிலாவால பதில் சொல்லி மாளல்ல. சுரேஷுக்கு ஒண்ணுமில்லை, அவருக்குதான் கேடராக்ட் ஆபரேஷன்னு ஒவ்வொருத்தருக்கா சொல்லிண்டிருந்தா.

                       என்னாச்சுன்னா, தன்னுப்பாட்டி இப்படி ஒரு செய்தியை எல்லா சொந்தத்துக்கும் பரப்பி விட்டிருக்கா.பாவம் அவளுக்கு புரிஞ்ச விவரத்தை கவலையோட எல்லோர் கிட்டயும் பகுந்திண்டிருக்கா. அதாவது “பாவம் இந்த சின்ன வயசுல சுசிலாவோட பையன் சுரேஷுக்கு கிட்னி பெயிலியர், ஆஸ்பத்திரில அட்மிட் ஆயிருக்கான், ஆபரேஷன் பண்ணப் போறானு.”

                      தன்னுப் பாட்டி இன்னும் வரலை சாயந்தரம் பேத்தியை கூட்டிண்டு வரப் போறாளாம் பாலு மாமா சொன்னார்.

                      சுரேஷ் என்னை முறைக்கறான், நான் என்ன பண்ண?

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

பந்திக்கு முந்து (சிறுகதை) – ரேவதி பாலாஜி

பிள்ளையார் சுழி (இறுதிப்பகுதி) – வீ. சிவா