in ,

காத்ரீன்… ப்யூட்டிஃபுல்… காத்ரீன் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

     நண்பர்களுடன்  “தல” அஜீத் நடித்த “வில்லாளன்” திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட்டு சந்தோஷமாய் வீடு திரும்பிய என்னை எதிர் கொண்ட அம்மா, “டேய் உங்கண்ணன் அமெரிக்காவிலிருந்து என்னோட மொபைலுக்கு ஏதோ மெஸேஜ் அனுப்பியிருக்கான்!… எனக்கு எப்பவுமே தமிழ்ல போடுறவன் இன்னிக்கு மறந்து போய் மத்தவங்களுக்கு அனுப்பற மாதிரியே எனக்கும் இங்கிலீஸ்ல போட்டுட்டான்… அது என்ன?ன்னு கொஞ்சம் படிச்சுச் சொல்லுடா திவாகர்”

     அசுவாரஸியமாய் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். “ஐ வில் கம் இண்டியா பை நெக்ஸ்ட் வெட்னஸ் டே வித் மை பர்ஸனல் செகரட்டரி கேத்ரீன்”

 “என்னடா எழுதியிருக்கான்… சொல்லுடா” அம்மா உசுப்ப, “அம்மா… அடுத்த வாரம் புதன் கிழமை அண்ணன் வர்றாராம்” என்று அதோடு நிறுத்திக் கொண்டேன்.

     அண்ணனிடமிருந்து அந்த மெஸேஜ் வந்ததிலிருந்தே கற்பனையில் மிதக்க ஆரம்பித்தேன். அமெரிக்காவில் பெரிய நிறுவனத்தில் ‘சீஃப் எக்ஸிக்யு+டிவ்”வாக  இருக்கும் அண்ணன் ராகுல், அடுத்த வாரம் இந்தியா வரப் போகிறார்.

     “சரி அதில் உனக்கென்னடா இத்தனை சந்தோஷம்?” என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகின்றது. அண்ணனுடன் அவரது செகரட்டரி  “காத்ரீன்” என்னும் மணமாகாத இளம் வெள்ளைக்காரியும் வருகிறாளே?.  இதற்கு நான் சந்தோஷப்படா விட்டால் நான் வாலிபனே இல்லையல்லவா?.

      “எப்படி இருப்பாள் அவள்?… “எமி ஜாக்ஸன்” மாதிரி?… இல்லை நம்மூர்  “ஹன்ஸிகா மோத்வாணி” மாதிரி?.

      “காத்ரீன்… காத்ரீன்” என் வாய் முணுமுணுக்க, என்னைச் சுற்றி பாரதிராஜாவின் வெள்ளுடை தேவதைகள்.

      “விழியோ பிரம்ம மயக்கத்தில் வரைந்த கவிதை!… மொழியோ… அமுதம் குரலாகி பொழிகின்ற போதை” எஸ்.பி.பி.யின் “கிளிஞ்சல்கள்” பாடலை என்னையறியாமல் பாடினேன்.

     மாலை. ‘ஜிம்’மில் நண்பர்களிடம் அந்த விஷயத்தைச் சொல்ல, “டேய்.. டேய்… எப்ப வர்றாருன்னு சொல்லுடா… நாங்க உன்னைப் பார்க்கிற மாதிரி உன் வீட்டுக்கு வர்றோம்!” கெஞ்சினார்கள்.

 “நோ… அந்த வேலையே ஆகாது!… இது என்னோட பேட்டை… இதுக்குள்ளார நீங்க யாரும் நுழையக் கூடாது!… அதுதான்  “குட் ஃப்ரெண்ட்ஷிப் அண்ட் ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்… என்ன?” மிரட்டல் தொணியில் கண்டிஷன் போட்டான்.

 “ஓ.கே.டா..  ஓ.கே.டா… நீயே ஜமாய்டா ராஜா”

 “டேய்… திவா… பயங்கர லக்குடா உனக்கு?… ஃபாரீன் ஃபிகர்;… ஹூம் அனுபவி” நண்பர்களின் பொறாமைப் பெருமூச்சு மகிழ்ச்சியைத் தந்தது.

 “டேய்… உண்மையைச் சொல்லணும்ன்னா… என்கிட்ட நல்ல டிரஸ் கூட இல்லைடா… ஃபாரீன்ல ஒரு பெரிய கம்பெனியோட சீஃப் எக்ஸிக்யூடிவ்வோட பர்ஸனல் செகரட்டரி எப்படியிருப்பா?… மாடர்ன் டிரஸ்ஸுல சும்மா அசத்துவா… அதை நெனச்சாத்தான் கொஞ்சம் மனசு கஷ்டமாயிருக்கு” சோகமாய்ச் சொன்னேன்.

“டேய்…  “குட் பிரெண்ட்ஷிப்” மெயிண்டெய்ன் பண்ற நாங்க உனக்கு உதவ மாட்டோமா?… உனக்கு எவ்வளவு வேணும்னு சொல்லு… கடனாய்த் தர்றோம்.. அப்புறமா திருப்பிக் குடு”

  நண்பர்களிடமிருந்து கடனாய்ப் பெற்ற தொகையில் வித விதமாய் ஜீன்ஸ்… டி-சர்;ட்… ஷூ… என வாங்கிக் குவித்தேன்.  அழகு நிலையம் சென்று தலை முடிக்கு வண்ணம் பூசினேன். அவளை வளைத்துப் போட வேண்டுமே?.

  அந்த நாளும் வந்தது… அண்ணனும் வந்தார்…

  ஆனால், உடன் அவள் வரவில்லை.

  ஏமாற்றம் என்னைத் தின்றது. “எங்கே அவள்?… என்றே மனம் தேடுதே ஆவலாய் ஓடிவா” என் மனம் பாடியது.

     காரிலிருந்து இறங்கிய அண்ணன் வீட்டிற்குள் செல்ல, நானும் அவருடன் நடந்தேன்.

     உள்ளே சென்றதும் அம்மாவும், அப்பாவும் ஓடி வந்து அவரைக் கட்டிக் கொண்டு கண்ணீர் சிந்த,

     “காத்ரீன் எங்கே?… காத்ரீன் எங்கே?” என் மனம் கிடந்து தவித்தது.

     கார் டிரைவர் அண்ணனின் பேக்குகளை உள்ளே கொண்டு வரிசையாக வைத்து விட்டுச் செல்ல, நான் அவனுடனே நடந்து வெளியே சென்று கேட்டேன்.  “ஹி… ஹி… நான் அவரோட தம்பி!… ஆமாம் அண்ணன் கூட வேற யாராவது வந்திருக்காங்களா?”

     அவன் என்னை ஏற, இறங்கப் பார்த்து விட்டு, உதட்டைப் பிதுக்கியபடி காருக்குள் சென்றான்.

     “வெள்ளைப் புறாவொன்று போனது கண்ணில் படாமலே” சோகப்பாடல் எனக்குள் ஒலித்தது.

     மீண்டும் வீட்டிற்குள் வந்த என்னை அண்ணன் அருகில் அழைத்து, “என்னடா திவா கண்டுக்கவே மாட்டேங்கறே?” தோளில் கை போட்டுக் கேட்க,

     “இல்ல… காரிலிருந்து எல்ல பேக்கையும் இறக்கியாச்சா?ன்னு செக் பண்ணப் போயிருந்தேன்!… அது செரி… எப்படியண்ணா இருக்கே?… கம்பெனி… வேலையெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு?” சும்மாவாகிலும் கேட்டேன்.  அப்படிக் கேட்டால்தானே அவருக்கு கம்பெனி ஞாபகம் வரும் கூடவே அந்த செகரட்டரி ஞாபகமும் வரும்.

     “எவ்ரி திங் பர்ஃபெக்ட்” என்ற அண்ணன். “திவா… இன்னும் பத்து நிமிஷத்துல இன்னொரு கார் வரும்… அதுல என்னோட செகரட்டரி காத்ரீன் வருவாங்க… அவங்க வீட்டிற்குள்ளெல்லாம் வர மாட்டாங்க!… அப்படியே உங்களுக்கெல்லாம் அறிமுகமாயிட்டு அப்படியே கிளம்பிப் போயிடுவாங்க!”

     அண்ணன் சொல்ல, எனக்கு மனம் வலித்தது.  “ச்சே… இங்க தங்க மாட்டாளா?… அப்ப… எங்காவது ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல தங்குவா போலிருக்கு!… அதுவும் நல்லதுக்குத்தான்… இங்க வெச்சு அவளை ரொமான்ஸ் பண்றதுக்கு அப்பாவும் அம்மாவும் இடைஞ்சலா இருப்பாங்க… அதுவே ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ன்னா ரொம்ப ஜாலியாயிருக்குமே… போதாக்குறைக்கு அங்கெ ஸ்விம்மிங் பூல் வேற இருக்கும்… அப்ப அந்த வெள்ளைக் குட்டியை ஸ்விம்மிங் டிரஸ்ஸிலேயும் தரிசிக்கலாம்!”

     அப்போது வாசலில் இன்னொரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, அண்ணன் வெளியில் சென்றார்.  நானும் பின்னாலேயே ஓடினேன்.

     வந்து நின்ற காவி நிற வேனின் பின் கதவு வழியாக அவள் கால்கள் முதலில் வெளியே தெரிய,

     பிரமித்துப் போனேன்.  அது  பெண்ணின் காலா?.. இல்லை பளிங்கில் செய்த சிலையின் காலா?.

    அடுத்து இறங்கிய அந்தப் பெண்ணைக் கண்டதும், “ஹக்”கென்று அதிர்ந்து,  சப்த நாடியும் ஒடுங்கி, சப்தமின்றி நின்றேன்.

    காவி நிற சுடிதாரில், கழுத்தெங்கும் ருத்ராட்ச… ஸ்படிக…. துளசி… மாலைகளுமாய்… நெற்றியெங்கும் வண்ண வண்ணப் பொட்டுகளோடு… ஒரு பெண் சாமியார் இறங்கினாள்.  தோளில் ஒரு காவி நிற ஜோல்னா பை வேறு.

    “கடவுளே… சத்தியமாய் இவள் காத்ரீனாய் இருக்கக் கூடாது…” வேண்டினேன்.

    அவளைத் தொடர்ந்து காரிலிருந்து வேறு யாருமே இறங்காததால், அவளே காத்ரீன் என்று முடிவு செய்து சோகமானேன். 

     ‘திவாகர்… மீட் மிஸ் காத்ரீன்… இவள் பயங்கர ஆன்மீகவாதி…. தியானம்… யோகா…ன்னு ரொம்ப சீரியஸ் டைப்!.. நம்ம நாட்டோட கலாச்சாரம்… ஆன்மீக விஷயங்கள்ல ஏக ஈடுபாடு…. ராமாயணம்… மகாபாரதம்… இன்னும் பல தமிழ் புராணக் கதைகளெல்லாம் இவளுக்கு அத்துப்படி!… பாடல் பெற்ற நம்ம நாட்டு ஆலய ஸ்தலங்களை பார்ப்பதற்காகவே  இந்தியா வந்திருக்கா… நீதான் இவ கூடப் போயி கைடு பண்ணனும்”

     என் மனக் கோட்டைகள் சரிய, அசுவாரஸியமாகத் தலையாட்டினேன்.

     அண்ணன் அந்த காத்ரீனை… இல்லை… இல்லை… அந்தப் பெண் சாமியாரை அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அறிமுகம் செய்ய, அவள் எல்லோரும் வணங்கி விட்டு தன் ஜோல்னா பையிலிருந்து விபூதி எடுத்து பவ்யமாய்க் கொடுத்தாள்.

      “திவா.. நீயும் வாங்கிக்கோ” அண்ணன் சொல்ல, வேதனையோடு சென்று பெற்றுக் கொண்டேன்.

     “ஓ.கே.காத்ரீன் யூ கேன் கோ நௌ!… டுமாரோ மை பிரத்ர் வில் கம் தெர்” என்று சொல்லி அண்ணன் அவளை வழியனுப்ப, அவன் வேனில் ஏறியமர்ந்தாள்.

      “அண்ணா… அவங்க எங்க தங்கப் போறாங்க?” கேட்டேன்.

      “இஸ்கான் மாதிரி அமெரிக்காவிலும் ஒரு இயக்கம் இருக்கு… அந்த இயக்கத்தோட ஆஸ்ரமம் இங்கேயும் இருக்கு… அங்க போய்த்தான் தங்கப் போறாங்க!… ரொம்ப ஆச்சாரம்டா”

     “என் மன வானில் சிறகு விரிக்கும் வண்ணப் பறவைகளே… என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக் கொள்ளும்” எங்கிருந்தோ ஒலித்த பாடல் என்னை நிரண்டியது.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நேராய் ஒரு எதிர்மறை (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    சின்ன மனுஷன் பெரிய மனசு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை