in ,

பிரியாணியும் பீர்பாட்டிலும் (சிறுகதை) – சசிகலா எத்திராஜ், கரூர்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“ஏலே மாணிக்கம் …எங்கலே இவ்வளவு அவசரமா கூப்பிட கூப்பிட போய்கிட்டு இருக்கே”..  தேநீர் கடையிலே உட்கார்ந்த படி சென்று கொண்டிருந்தவனை கூவி அழைத்தான் இருளாண்டி.

கூப்பிடும் சத்தத்தில் திரும்பிப் பார்த்த மாணிக்கமோ அவனை முறைத்தபடி ”ஏலே சோலியா போறவனை கூப்பிட்டு வம்படியா வார்த்தையை புடுங்கணும் கங்கணம் கட்டிக் கிட்டு… போறவன் வருகிறவனைக் கூப்பிட்டு ஊர்கதை பேசணுமாக்கும்” எனச் சடைத்தவன் கண்டு …

”ஏலே சலிச்சிக்கிற…  ஏதோ விரசா போய்கிட்டு இருக்கீயே… என்ன சோலியோ தெரிஞ்சா நானும் ஒத்தாசைக்கு வருவேன்ல .. அதான்பலே கேட்கிறேன்” என இருளாண்டி சொல்லவும்..

”ம்க்கூம் உன் ஒத்தாசை லட்சணம் எனக்குத் தெரியாமலே கிடக்கு.. நீ எதுக்கு அடிப்போடறேனு புரிஞ்சு போச்சுல” என முணுமுணுத்தவன்..

”அடுத்த வாரம் கட்சி பொது கூட்டமல.. அதுக்குக் கூட்டம் சேர்க்கணுமாம்லே.. அதுக்குத் தான் கட்சி ஆபீஸ்ல கூப்பிட்டாங்கனு போறேன்” எனச் சொல்லியவன் வேகமாக நடையை எட்டிப் போட..

”ஏய் மாணிக்கம் இருமலே நானும் கூட  வாரேன்” எனச் சொல்லி மாணிக்கத்தோடு சேர்ந்து இருளாண்டியும் நடக்க..

சட்டென்று நின்ற மாணிக்கமோ ”ஏய் இருளாண்டி அங்கே கட்சி ஆபிஸ்ஸிலே  நான் பேசறப்ப வாயை திறக்கக் கூடாது.. அப்படினா வா.. இல்லை இங்கேயே  இரு.. எல்லாம் தெரிந்த மாதிரி அங்கே வாய் சவடால் விடுவ.. உன் காரியம் ஆனதும் அந்தரத்தில் விட்டுட்டு போய்ருவ.. அதற்குபிறகு நான் தான் மற்றவங்க கிட்ட மல்லுக்கட்டி நிற்கணும். நான் சொல்லறத கேட்கிறதா இருந்தால் வா.. இல்ல இங்கேயே இரு” என மறுபடியும் சொல்லியவனிடம்..

”இல்லடா மாணிக்கம் நான் எதும் பேசல.. போன தடவை பண்ணின மாதிரி பண்ண மாட்டேன் டா ” என அழுத்திச் சொல்லியவனைக் கண்டு நக்கலாக சிரித்த மாணிக்கம்..

”ம்க்கூம் போன தடவை என்ன நடந்தது தெரியுமா?..கமிஷன் காசு கொடுக்காமலே ஏமாத்திட்டானுங்க…. நான் கேட்டதற்கு நீ வாங்கீட்டே அவனுங்க சொல்ல… அதை உன்கிட்டே கேட்டால் நீ இல்லைனு சொல்ல… அவனுங்களோ உனக்குக் குவோட்டர் பாட்டிலே  பார்த்தாலே சொல்லறக்கு எல்லாம் தலையாட்டி காலிலே விழுவ.. என்கிட்டேயே சொல்லிக் கேலிப் பண்ணறானுங்க.. தேவையா எனக்கு.. நானும் இப்படி கட்சி கூட்டம் நடக்கிற நேரத்தில் தான் நாலு காசு கையிலே பார்க்க முடியும். உன்னாலே அதுவும் போச்சு அன்னிக்கு” எனக் கடுகடுத்தவன் ”இந்த முறை அப்படி எதாவது பண்ணினே வெட்டிப் போட்டுருவேன் உன்னை”… எனச் சொல்லி ”வா” என அழைத்துக் கொண்டு போனான் மாணிக்கம்.

”இனி குவோட்டர் பார்த்து மயங்கிட மாட்டேன் டா. எனக்குக் கொஞ்சம் அவசரமா பணம் வேணும்டா. அதுவும் ஆத்தாவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போகணும். போன முறை கவுர்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போனப்ப என்னெனவோ டெஸ்ட் எடுக்கச் சொன்னானுங்க. எடுத்தால் ஏதோ கட்டி இருக்கு. ஆபிரேசன் பண்ணனும் சொல்லிப் பயப்படுத்தி விட்டானுங்க. இப்ப ஆத்தாவோ அடிக்கடி ரொம்ப வயித்து வலி்க்கது சொல்லிகிட்டு கிடக்கு.. நான என்ன கவுர்மென்ட் உத்தியோகமா பார்க்கிறேன்.. மாசமானால் டான்னு பணம் கிடைக்க..  ஏதோ கிடைச்ச சோலியைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்” எனப் புலம்பிய இருளாண்டியைப் பார்த்த மாணிக்கமோ ”பயப்படாதடா ஆத்தாவை சரிப்பண்ணிடலாம்.. கட்சி ஆபீஸ்ல பணம் கிடைக்குமா கேட்டுப் பார்க்கலாமலேடா பயப்படாதே” எனப் பேசியபடி இருவரும் சென்றார்கள்.

கட்சி அலுவலகம் எனப் போர்டு மாட்டிருந்த கட்டித்திற்குள் வெள்ளையும் சொல்லையுமா ஆட்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது  …அங்கிருந்த ஆட்களின் கூட்டம் செல்போனை கையில் வைத்தபடி கட்சியின்  மேலே இருக்கிற முக்கியமான பெரிய ஆட்களை எனக்குத்  தெரியும்.. உனக்கு எதாவது காரியம் ஆகணுமனா சொல்லு .. நான் கேட்டால் மாட்டேனு சொல்லமாட்டார்கள்” எனக் கதையளந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்தபடி ஓரமாக நின்றனர் மாணிக்கமும் இருளாண்டியும்.

”ம்க்கூம் இவனுங்க யார் ?..அந்த மேலித்திலே கேட்டா யாருடா அவன் திரும்பக் கேட்பாங்க.. இதுல இவங்க சொன்னவுடனே காரியம் நடந்திருமாக்கும்.. நானும் தான் விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து இங்கே நடையா நடக்கிறேன்…. மாங்குமாங்கு சோலியைப் பார்க்கிறேன் . ஆனால் கூட்டித் துடைக்கிற கிழவிக்குக் கூட என்னைத் தெரியாதுல” என மாணிக்கத்திடம் கிசுகிசுத்தான் இருளாண்டி.

அதைக்கேட்டுச் சிரித்தவனோ ”டேய் இங்கே வாய் உள்ளே புள்ள பொழைக்கும்டா .. நம்மலே போல ஆட்கள் எல்லாம் கூழை கும்பிடு போட்டுக்கிட்டு தூக்கி எறிகிற எலும்பு துண்டான காசை நாயா கவ்விக் கிட்டு துரத்தி விடுவானுங்க. நாமும் அவன் செய்கிற எல்லாவற்றிருக்கும் ஈ..னு பல்லைக் காட்டிக் கிட்டு போய்கிட்டு இருக்கோம்… மான ரோசமல மந்தையிலே விட்டுட்டு” எனச் சொல்லிப் பெருமூச்சு விட்டான் மாணிக்கம்.

”என்னமோ நம்ம இப்படியே இவனுங்க பின்னாலே கொடி பிடிச்சுட்டு அலைவது… செம்மறிஆட்டு மந்தையா அவன்க பின்னால் போய்கிட்டே நம்ம காலம் முடிஞ்சிரும் போல” என விடாமல் புலம்பினான் இருளாண்டி..

”டேய் விடுடா.. சும்மா நை நை புலம்பிகிட்டே இருக்காதே.. அதோ  கட்சியின் முக்கிய ஆளான ராகவன் சாரு வராரு பாரு.. நம்மை அங்கே வரச் சொல்லி ஜாடை காட்டறாரு… வா போவோம் ” என்று சொன்ன மாணிக்கம் இருளாண்டியை கையைப் பிடித்து இழுத்தபடி ராகவனிடம் விரைந்தான் .

”என்னல மாணிக்கம்.. இன்னிக்குக் உன் கூட்டாளியும் சேர்த்துக் கூட்டிட்டு வந்திருக்க போல”.. என்றவன், ”இந்த முறை கூட்டம் அதிகமாக வரணும் தலைவர் விரும்புகிறார்.. அதனால பக்கத்துல இருக்கிற கிராமத்தில இருக்கிற எல்லாரையும் வர வைக்கணும்.. தண்ணீ  பிரியாணி ,சாராயம் கேட்டதுக்கு மேலே கிடைக்கிற அளவுக்கு வாங்கிக் கொடுத்திருங்க.. எவனும் தலைவர் கூட்டத்திலே பேசி முடிந்து போகிற வரை கூட்டம் கலைய கூடாது. அப்பறம் தலைவர் வரும் வழியிலே தலைவர் வாழ்க… கோஷம் போட ஆட்களை நிறுத்தி வைக்கணும். கூட்டம் நடக்கிற நுழைவாயிலே பச்சை தோரணங்கள் வாழை மரம் அலங்காரம் செய்ய ஏற்பாடு பண்ணிருங்க.. விவசாயிகள் சில பேரை தோட்டத்திலே போட்டிருந்த நெற்கதிர்களை எடுத்து கைகளிலே வைத்து தலைவரிடம் விவசாயத்திற்கு ஏதாவது வழி செய்யுங்க தலைவரே எனக் கேட்கிற மாதிரி ஆட்களை செட் பண்ணுங்க. வயசான கிழவிகள் ஆர்த்தி எடுக்க இள வயசு பெண்கள் தங்கள் குழந்தைக்குப் பெயர் வைக்க கேட்கிறது…. குறை தீர்க்கும் மனு கொடுக்க… என அது அதுக்கு ஆட்களை கூட்டிட்டு வந்திரு .. இந்தமுறை நம்முடைய மெஜ்ஜார்ட்டி பார்த்து மற்ற கட்சிகாரன் மூக்குல விரல வைத்து பயந்து நடுங்கணும்.. அப்பறம் நம்ம தலைவர் வருகிற வழியில் பார்க்கிற எல்லா பக்கமும் கட் அவுட் வைத்து விடணும்.. நாட்டுபுறக் கும்மிப் பாட்டு ஆடுகிறவங்க நாதஸ்வரம், மத்தளம், தண்டா மேளம் , எனக் குற்றம் குறை இல்லாமல் ஏற்பாடு பண்ணனும்” என வரிசையாக சொல்லி முடித்தான் ராகவன்..

ராகவன் சொன்னதைக் கேட்டு உள்ளுற மலைத்தாலும்.. ”அதுயெல்லாம் கலக்கிடலாம் சார்.. நம்ம கூட்டத்திற்கு வரக் கூட்டத்தைப் பார்த்து மற்ற கட்சிகாரன் துண்டை காணாம் துணியை காணாம் ஓட வைச்சிடலாம்” என்றவன் ”நீங்க சொன்ன சோலிக்கு கொஞ்சம் அதிகமா செலவு ஆகுமே” என தலையை சொறிந்தபடி பேசினான் மாணிக்கம்.

”காசைப் பற்றியெல்லாம் யோசிக்காதே மாணிக்கம். பணம் எவ்வளவு வேண்டுமென்றாலும் மேலிடம் தந்திடும். இல்லை என்றால் கட்சி வளர்ச்சி நிதிநிலை சொல்லி கடைவீதி கடைகளில் வசூல் பண்ணிக்கலாம்” எனச் சொல்லிய ராகவன் ”அப்பறம் குவோட்டருக்கும் கணக்குப் பார்க்க வேண்டாம்.. அருவியாக கொட்டிக் கொடுக்கணும் எல்லாருக்கும். வேணும் அளவுக்கு கிடைக்கணும். ரோட்டில போகிறவன் வருகிறவன் எல்லாரும் நம்ம போடுகிற பிரியாணி வாசத்திலே இரண்டு நாள் இங்கே இருந்து நகரக் கூடாது”  எனச் சொல்லிய ராகவனுக்கு ..

”ம்ம் சரிங்க சார் அதெல்லாம் ஓசியில மட்டன் பிரியாணியும் சரக்கு கிடைச்சா யாரு வரமாட்டேன் சொல்லப் போறா.. தலைவரே கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போகிற அளவுக்கு கூட்டி விடலாம்” எனச் சொல்லிய மாணிக்கம்.. அப்பறம் ”இன்னொரு விசயம் சாரே.. நம்ம இருளாண்டி ஆத்தாவுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல ஆபிரேசன் பண்ணுமா.. அதனாலே தலைவர் கிட்டே சொல்லி எதாவது ஏற்பாடு பண்ணச் சொல்ல முடியுமா” எனத் தயக்கமான குரலில் கேட்டவனை முறைத்த ராகவன்

”இதை முன்பே சொல்ல வேண்டி தானேடா .. நான் தலைவர் காதுல இந்த விசயத்தைப்  போட்டு வைக்கிறேன்.. மேடையிலே கூப்பிட்டு கட்சி சார்பாக உன் ஆத்தாவுக்கு ஹாஸ்பிட்டல் செலவுக்கு பணம் தரச் சொன்னால் இன்னும் மக்களிடையே தலைவருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். நீ என்ன பண்ணற உங்க ஆத்தாவைக் கூட்டம் நடக்கிர நேரத்தில கூட்டி வந்திரு”.. என இருளாண்டியைப் பார்த்துச் சொல்லவும் அவனும் வாயே பல்லாக போய் அசட்டு சிரிப்பு சிரித்தவன் ”ரொம்ப சந்தோஷமங்க சார்”.. எனக் கூழை கும்பிடும் போட்டான்..

”டேய் நீங்கயெல்லாம் கட்சிக்காக உழைக்கிறீங்க.. அதைவிட நாம் எல்லாரும் ஒரே குடும்பம்ல… அப்பறம் அதிலே வர நல்லது கெட்டது நாம் தானே சேர்ந்து பார்க்கணும்” எனப் பேசிய ராகவன் ”சரிடா நீங்க ஆக வேண்டிய சோலியை பாருங்க.. சொன்னதுல எதுவும் குறையாமல் இருக்கணும். அப்பறம் நம்ம மகளிர் அணி பொம்பளைக்களுக்கு செட் சேலை வாங்கனும் அதைச் சொல்ல மறந்துட்டேன். நம்ம அண்ணாச்சி கடையிலே சொல்லி பண்டுல கொண்டு போய் கொடுக்கச் சொல்லிரு”.. எனச் சொல்லி தலையசைத்துவிட்டு சென்றான் ராகவன்.

”ஏல மாணிக்கம்… இந்த சார் நல்ல சார்ல. நம்ம கேட்டவுடனே சரினு சொல்லிட்டாரு.. ஆத்தாவுக்கு ஆஸ்பத்திரி செலவுக்கு என்ன பண்ணறது பயந்து கிடந்தேன். இப்ப தான் நிம்மதியா இருக்கு”.. என்றவன் ”இந்த முறை என் சொந்தப் பந்தத்தையும் கூட்டத்திற்கு வரச் சொல்லணும்..  சும்மா இங்கே வந்தால் வேலை வெட்டி இல்லாமல் அலையிறேனு பேசினானுங்க..கட்சிக்காரன் உனக்கு என்ன செய்யறான் திட்டினானுங்க. நடக்கிற கூட்டத்திலே மேடையிலே கூப்பிட்டு பணம் கொடுத்து ஆஸ்பத்திரியிலே டாக்டரை பார்க்க ஏற்பாடு பண்ணுவதைப்  பார்த்தானுங்க வயிறு எரிஞ்சு போவானுங்க…. அப்பறம் அவனுங்க  முன்னாலே அப்படியே நெஞ்சை நிமிர்த்திக் கிட்டு அதிகாரம் பண்ணலாம். மேலிடமே எனக்குப் பழக்கம் சொல்லி நாலு காசு கையிலே பார்க்கலாம்” எனச் சொல்லிக் கொண்டே வந்த இருளாண்டிக்கு மறுபேச்சு எதுவும் சொல்லாமல் கூட நடந்தான் மாணிக்கம்.

அதன்பிறகு பம்பரமாக சுழன்றனர் இருவரும்.. பந்தல் போட ஆட்களைப் பார்த்துப் பணம் கொடுக்க, பெண்களின் கூட்டம் சேர்த்து கூப்பிட …என நிற்க நேரமில்லாமல் அலைந்தனர் இருவரும்.

கூட்டம் நடக்கும் இரண்டு நாளைக்கு முன்பே பந்தல் மேடை எல்லாம் ஜெக ஜோதியாக அலங்காரம் செய்ய வைத்தவர்கள் ஊரிலே உள்ள எல்லா மட்டன் கடையிலும் சொல்லி மட்டன் பிரியாணிக்குத் தேவையான கறி வகைகளை ஏற்பாடு பண்ணிய இருளாண்டி.. மாணிக்கத்தின் அருகிலே வந்து ”டேய் சரக்கு ரொம்ப வேண்டும் போல.. வரகிறவன் போறவன் எல்லாம் கடையிலே நம்ம பெயரைச் சொல்லி வாங்கிக் குடிக்கிறானுங்க இப்பயே .. இதுக்கு துட்டு கொடுத்திருவானுங்களே .. நம்ம கை காசு போட முடியாதுல. இப்பயே பாதிக்கு நாம தான் செலவு பண்ணிகிட்டு இருக்கோம்.. ஆபீஸ் பக்கம் போனால் அந்த சாரே பார்க்கவே முடியலடா”… எனப் புலம்பியவனைக் கண்டு கடுப்பான மாணிக்கம் ”கடைகாரனிடம் சொல்லி எவ்வளவு ஆச்சு சீட்டு வாங்கி வைத்துக்கோ . அப்பறம் கணக்க முடிச்சுக்கலாம். இப்பயே போய் கேட்டால் உள்ளதும் போச்சு மாதிரி ஆயிரும். இவன்க எந்த நேரம் எப்படி பேசுவானுங்க தெரியாது” எனச் சிடுசிடுத்தவன் ”போய் ஆக வேண்டிய சோலியை பாரு. நீயும் அவனுக கூடச் சேர்ந்து சரக்கு அடிச்சுக் கூத்தடிச்சே தெரிஞ்சுது அவ்வளவு தான்” என இருளாண்டியை மிரட்டியை அனுப்பினான் மாணிக்கம்.

”போடா நீயும் குடிக்க மாட்டே என்னையும் குடிக்க விட மாட்டே.. ஓசியிலே கிடைக்கிறப்ப யாராவது விடுவானுஙகளா ”எனப் பேசியபடி இருளாண்டி கடையை நோக்கிப் போனவன் மூச்சு முட்ட சரக்கை அடித்து தள்ளாடிப் படியே பந்தல் அருகே வந்தான் .

நேராக நிற்க முடியாமல் சாராயத்தைக் குடித்து விட்டு வரும் இருளாண்டி  பார்த்து கோபத்துடன்” ஏல அறிவுக்கெட்ட” பாதி வாரத்தையை முழங்கியவன்  ”சோலியை பார்க்காமல் இப்படி குடிக்கிற.. உன்னை போல குடிகார தள்ளுவண்டியை கூட வைச்சுகிட்டு சுத்தறேன்”  எனக் கண்ட மேனிக்கு கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்த மாணிக்கமோ ”ச்சீ போடா அங்கிட்டு நாத்தம் தாங்குல” எனச் சொல்லியவனை…

”டேய் இதைக் குடிச்சா என்ன? துபாய் செண்டு மனமா வரும்.. நாத்தம் தான்ல வரும். நாளைக்கு வருகிற வெள்ளை சட்டைகாரன் பாதி பேர் இதில முழ்கி நீச்சல் அடிக்க போறானுங்க.  அதுக்காக தான் சாராயம் எப்படி இருக்கும் டெஸ்ட் பண்ணக் குடிச்சமலே.. இதுக்குப் போய் இப்படி திட்டறே” என கோணல் சிரிப்புடன் பேசியபடி அங்கேயே கீழே விழுந்தான் இருளாண்டி.

வேட்டி விலகுவது கூட அறியாமல் ஏதோ ஏதோ உலறியபடி கிடந்தவனை முறைத்து விட்டுச் சென்றான் மாணிக்கமோ இருளாண்டியை பற்றி நினைத்தபடியே நடந்தான். ”இப்படி குடிச்சு வீணா போகிறவன் ஆத்தாவுக்கு உடம்பு சரியில்லே எனக் கூறிக் கொண்டு அஞ்சு பத்துக்கு அலைகிறானா .. ஓசியிலே பினாயில் கிடைச்சாலே சாராயம் நினைச்சு  வாங்கிக் குடிக்கிற கூட்டத்திலே ஆத்தாவின் பேரில் பணம் கிடைச்சா கடையிலே கவுந்திருவான்” என உண்மையை கூடப் பொய்யாக நினைக்கும் அளவிற்கு இருளாண்டியின் செயலால் மனம் குமறியவன் ”நாளை கூட்டம் முடிந்ததும் செலவு ஆனதற்கு பணம் வாங்குவதற்குள்  தனக்கு மண்டை காய்ந்திரும்” என எண்ணியபடி மேடை அலங்காரத்தைக் காணச் சென்றான் மாணிக்கம்.

மறுநாள் காலையிலிருந்தே பிரியாணியின் வாசனை எட்டூருக்கும் அடித்தது … எங்கும் மசாலா  மணம் வீசிக் கொண்டிருந்தது. சூடாக அதை வாங்கி உண்டவர்களோ பாதி உண்டு பாதியை வீணாக்கி காலடியில் மிதித்து ஆங்காங்கே கொட்டிக் கிடக்க… அதைச் சுத்தம் செய்தவர்களோ வாயில் கெட்ட வார்த்தைகளை உதிர்த்து முணுமுணுத்தபடி  அள்ளிக் கொட்டினர்.

மேடையில் பேசுவதற்கான கூட்டமோ வரிசையாக நின்றிருக்க அங்கேயிருந்த ராகவன் எல்லாரும் வந்து விட்டார்களா எனப் பார்வையிட்டான். மக்கள் கூட்டம் முன் பக்கம் அதிகமாகவும்…. போக போக கொஞ்சம் குறைவாக தெரிய… இன்னும்  அதிகமாக கூட்டம் சேர்த்திருக்கலாமோ என்ற எண்ணத்தில் மாணிக்கத்தைத் தேடி அலைந்தது அவனின் பார்வை.

அப்போது அங்கிருந்து கூட்டத்தை விலக்கிக் கொண்டு  தள்ளாடிபடியே ஆத்தாவை இழுத்து பிடித்தபடி வந்த இருளாண்டிக்கு இரவு குடித்த சாராயத்தின் மயக்கம் தீராமல் இருந்தது.

ராகவன் அருகே ஆத்தாவைக் கூட்டி வந்தவனோ ”சாரே” என அழைக்க..

அவரோ அன்றைய நாளின் டென்ஷனில் ”ஏன்டா பரதேசிகளா கூட்டத்தை இன்னும் சேர்த்தத் தெரியாதா.. பாரு அங்கே போட்டிருக்கும் பாதி இருக்கையிலே ஆளைக் காணாம். காசு மட்டும் வேணும் .. கூட்டத்திற்கு ஆள் சேர்க்க வக்கு இல்லை.உன்னை மனுசனா  நம்பி சொன்னேன் பாரு, என்னை செருப்பாலே அடிச்சுக்கணும் .இதுல இவனுங்களை நம்பி தலைவர்கிட்ட பெருங் கூட்டம் வரும். மற்ற கட்சிகாரனுங்கள் வயிறு எரிஞ்சு சாவானுங்கு டைலாக் சொன்னேன்” எனக் கத்தியவன் ”இதுல உன் ஆத்தாவுக்கு வைத்தியம் பார்க்க காசு வேணுமா… இப்பவோ அப்பவோ சாவ கிடக்கிற கிழவிக்கு வைத்தியம் பார்க்கிறேனு ஏமாத்தி காசு புடுங்க பார்க்கிறே… இங்கே செலவானதுக்கு காசு மேலிடத்தில் தருவானுங்களா தெரியல … என்னடா கூட்டம் சேர்த்தீங்கே  பேசித் தொலைவானுங்க.. இதில வந்துட்டுனாங்க கிழவியை கூட்டிட்டு”.. எனத் திட்டியபடி நடந்தான் ராகவன்…

குடிப் போதையில் தள்ளாடிக் கொண்டே நின்ற இருளாண்டியோ ராகவன் பேசியதைக் கேட்டுப் கோபத்தில் ஆத்தாவை அப்படியே விட்டுட்டு அங்கே இருந்த நாற்காலியை எடுத்து ராகவனை நோக்கி  எறிய… கூட்டத்தில்  சிறு கலவரம் வெடித்தது. இருளாண்டியின் பிடியிலிருந்து விலகிய அவனின் ஆத்தா  கூட்டத்தின் சிறு தள்ளுமுள்ளில் கீழே விழந்தவரின் மேலே மிதித்து பலர் சென்றனர்.

அடுத்த நாள் காலை செய்தித்தாளில் கட்சி கூட்டத்தில் கலவரம்.. அதில் நசுங்கி கீழே விழந்த கிழவி மரணம். கட்சி தலைவர் மரணமடைந்த முதிய பெண்மணி குடும்பத்திற்கு ஆறுதல் கூறி இரண்டு லட்சத்தை கொடுத்து உதவினார் எனத் தலைப்பு செய்தி ஊரெங்கும் பரவியது.

ஆத்தா உயிரோட இருக்கும் போதே   உடம்பு சரியில்லை சொல்லிக் காசு வாங்கிடலாம்   நினைத்தால் செத்துப் போய் காசு வாங்கிக் கொடுத்திருச்சே.. எனச் சந்தோஷத்தில் சாலையோரம் தெளிந்தும் தெளியாத மயக்க நிலையில் சிரித்துக் கொண்டிருந்தான் இருளாண்டி.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மத்யமாவதி (பகுதி 13 – பாகேஸ்வரி) – சாய்ரேணு சங்கர்

    பாசம் மாறுமா? (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்