இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஊட்டியில் ஜெகன்நாதனின் மது பூங்கொத்துக் கடையில் திருமணத்திற்காக பொக்கே வாங்க வரும் ராஜஹம்சன் ஜெகந்நாதனின் மகள் மதுவந்தியைப் பார்க்கிறான். இருவருக்குள்ளும் சிறு மோதல் ஏற்படுகிறது. மதுவின் தம்பி உதயன் ராஜஹம்சனை சமாதானம் செய்கிறான்.
கல்யாண மண்டபத்தை நோக்கி காரை செலுத்தினான் ராஜஹம்சன். காரணமே இல்லாமல் மனம் ஒரு சந்தோஷத் துள்ளலில் இருந்ததால் அவன் காதல் பாட்டு ஒன்றை சீட்டி அடித்தபடி ஓட்டினான்.
ஊட்டி ஸ்ரீனிவாசா கல்யாண மண்டபம் வாழை மரங்களுடன் தோரண வாயிலும் சீரியல் பல்புகளாலும் வெகுவாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மண்டபத்தின் பார்க்கிங்கில் தன் காரை நிறுத்தியவன் பின் சீட்டில்தான் கடைவீதியில் வாங்கிய பொருட்களை எடுத்துக் கொண்டு முன் சீட்டில் வைத்திருந்த இரண்டு பொக்கேகளையும் எடுத்தான். பொக்கேக்களை எடுக்கும் போது எதையோ நினைத்து இதழ் விரித்து சிரித்தான்.
இவன் காரை மண்டப வாயிலில் பார்த்த அவன் அக்கா உமையாள் படிகளில் இறங்கி வந்தாள்.
“நான் தான் எடுத்துட்டு வரேன் இல்ல. அதுக்குள்ள நீ ஒரு நடை நடக்கணுமா? ரொம்ப அலுத்துக்காத அக்கா, கல்யாணம் முடிஞ்சு உன் நாத்தனாரை அவங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிற வரைக்கும் உனக்கு நிறைய வேலை இருக்குது” என்றான் அன்பாக.
தம்பியை பாசத்துடன் பார்த்த உமையாள் “என்ன உன் முகத்தில என்னைக்கும் இல்லாத ஒரு பளபளப்பு தெரியுதே என்ன விஷயம்” என்று கேட்டு சிரித்தாள்.
“மண்டபத்துல ஏதாவது பொண்ணு செட் ஆயிருக்கும்” என்றான் அங்கு வந்த உமையாளின் கணவன் மனோகர்.
“மாமா என்னைப் பார்த்தாலே இதே பேச்சுத் தானா. அப்பா ஆள விடுங்க சாமிகளா. நீங்க வாங்கிட்டு வரச் சொன்ன பொருட்கள் எல்லாம் இந்த பையில இருக்கு. செக் பண்ணிக்கோ உமை” என்று தன் அக்காவிடம் கூறிவிட்டு பொக்கேக்களை மட்டும் தானே எடுத்துக் கொண்டு மண்டபத்தினுள் நுழைந்தான்.
உறவினர்கள் நண்பர்களின் வருகையால் மண்டபம் களைகட்டி இருந்தது. கும்பலாக அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் ஆண்களும் பெண்களும் கலகலவென மகிழ்ச்சியாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
சற்று நேரத்தில் மெஹந்தி போடும் சங்கீத் விழா நடக்க இருந்ததால் அழகிய இளம் பெண்கள் குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு வந்தவர்கள் இவனை ஓர கண்ணால் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டனர். ஆனால் ராஜஹம்ஸன் அதை பார்த்தும் பாராதது போல் வேகமாக மாடியில் இருந்த தன் அறைக்கு சென்றான்.
காரிடரில் அவன் எதிரில் வந்து “வாடா மாப்பிள்ளை எங்க இவ்வளவு நேரம் போயிருந்த?” என்று அவனைக் கேட்டவன் உமையாளின் கணவன் மனோகரின் தம்பி ரகுவரன்.
“அக்கா சில பொருட்கள் வாங்கிட்டு வர சொன்னா. அதான் கடைவீதிக்கு போயிருந்தேன்” என்றான் ராஜஹாம்சன்.
“இது என்னடா கையில பொக்கே, ரேகாராஜன்னு, எங்க அம்மா ஆர்டர் கொடுத்து இருந்தாங்களா. எங்கே மது பொக்கே ஷாப்லயா, தெரிஞ்சிருந்தா நானும் வந்திருப்பேனே” என்றான் ஒரு கள்ள சிரிப்புடன்.
“போடா உனக்கு நிறைய வேலை இருக்கும் அதை போய் பாரு” என்றான் அவனிடம் ராஜகம்சன் ஒரு சிறு கோபத்துடன்
“எனக்கு இப்போ ஒரு வேலையும் கிடையாது. அதனால பால்கனியில உட்கார்ந்து சங்கீத் நிகழ்ச்சியில் பொண்ணுங்க ஆடுறத பார்க்க போறேன். மேல இருந்து பார்க்கிற போது தான் என் பிரண்ட்ஸ் எல்லாரும் வந்திருக்காங்களான்னு தெரியும்” என்றான் கண்களை சிமிட்டிய படி.
“டேய் நீ உதைபட போற இன்னைக்கு. அப்படி ஒரு அண்ணனுக்கு இப்படி ஒரு தம்பி” என அவன் தலையில் செல்லமாக தட்டினான் ஹம்ஸன்.
ரகுவரனும் ராஜஹம்சனும் பள்ளி தோழர்கள். அதனால் ஒருவருக்கொருவர் உரிமையோடு கேலி செய்து பேசிக் கொள்வர். ரகுவரன் ஒரு ஹார்ம்லஸ் ரோமியோ என்பது ஹம்சனுக்கு தெரியும்.
ரகுவரனின் தந்தை பருவதராஜனும் ராஜஹம்சனின் தந்தை ஜெய விசாகனும் பிசினஸ் நண்பர்கள். கோயம்புத்தூரில் விசாகா மோட்டார் இண்டஸ்ட்ரீஸ் ராஜஹம்ஸனின் தாத்தா தொடங்கி வைத்த கம்பெனி.
அதேபோல் ராஜன் ஸ்பேர் பார்ட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஊட்டியில் மிகவும் பிரபலமான ஒன்று. இருவருக்கும் ஒன்றை ஒன்று சார்ந்த பிசினஸ் என்பதால் விசாகனும் ராஜனும் நெருக்கமான நண்பர்களாயினர். பிள்ளைகள் வளர்ந்த பின் விசாகனின் மகள் உமையாளை தன் மகன் மனோகருக்கு திருமணம் செய்து வைத்து ராஜன் அவரின் சம்மந்தியானார்.
ராஜஹம்சனுக்கும் மனோகரின் தங்கை ஜெயந்திக்கும் ஜாதகம் சேராததால் திருமணம் செய்து வைக்க முடியாமல் போனதில் இரு குடும்பத்தாருக்கும் வருத்தமே.
ஆனால் ராஜஹம்ஸனின் அன்னை மீனாட்சி “பெண் கொடுத்து பெண் எடுக்க வேண்டாம் இதுவும் நன்மைக்கே” என்பார் தற்போது ஜெயந்திக்கு தூரத்து உறவில் மாப்பிள்ளை கிடைத்தது வீட்டில் அனைவருக்கும் மிகுந்த திருப்தி.
படிக்கும் போதே ரகுவரன் ஊட்டி பள்ளியில் சின்ன சின்ன சேட்டைகளை செய்ததால் பருவதராஜன் அவனை கோயம்புத்தூரில் ராஜஹம்சன் படிக்கும் பள்ளியில் சேர்த்து கார்டியனாக தன் நண்பன் விசாகனின் பெயரை போட்டுவிட்டு “இனி அவன் உன் பொறுப்பு” என்று கூறிச் சென்றார்.
ஹம்சனின் அன்னை மீனாட்சி கூட “எல்லோரும் ஊட்டியில் பிள்ளைகளை போர்டிங் ஸ்கூல்ல சேர்ப்பாங்க. நீங்க என்ன அண்ணா அவனை இங்கே சேர்க்கிறீங்க” என்று கேட்டு விட்டார்.
பருவத ராஜனும் “அவன் அம்மா ரேகா அவனுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சுருக்கா. அவனுக்கு உங்க கண்டிப்பு தேவைமா” என்றார். மீனாட்சியின் கனிவும் கண்டிப்பும் ரகுவரனை நன்கு திருத்தியது என்னவோ உண்மைதான்.
தங்கள் பெண் உமையாளையும் அவர்களின் மூத்த மகன் மனோகரனுக்கு திருமணம் செய்து வைத்ததால் நட்பு மேலும் இறுகியது.
உமையாளின் மாமியார் ரேகாவோ லேடிஸ் கிளப் சமூகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கான கூட்டங்களில் பங்கெடுப்பது என பாதி நேரம் வெளியே தான் இருப்பார்.
அதுவும் உமையாள் வந்ததும் வீட்டை பார்த்துக் கொள்ள பொறுப்பான ஆள் வந்து விட்டதால் அவர் வெளியில் தங்கும் நேரம் அதிகமாகிவிட்டது. பருவதராஜனுக்கோ தன் மனைவியை கண்டிக்க பயம். ஆனால் உமையாளின் அன்பான குணம் அந்த வீட்டில் அனைவரையும் கட்டி போட்டது.
ஒரு நல்ல மருமகளாய் கல்யாண ஏற்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் செய்யும் தன் அக்காவை பார்த்து வியந்து போனான் ராஜஹம்சன். அவன் பெற்றோர் திருமணத்திற்கு ரிசப்ஷன் அன்று வருகிறோம் என்று கூறி இரண்டு நாள் முன்னதாக அக்கா மாமாவின் உதவிக்காக அவனை அனுப்பி வைத்தனர்.
ஏதோ யோசனையில் நின்றிருந்த ஹம்சனின் அருகில் முழு அலங்காரத்துடன் மணப்பெண் ஜெயந்தி வந்தாள். “என்ன பலமான சிந்தனை ” என்று கேட்டு சிரித்தவளிடம்
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல, மேக்கப் செய்து இப்படி ஆளையே மாற்ற முடியுமான்னு யோசனை பண்றேன்” என்று அவளை கேலி செய்தான் ஹம்சன்.
“ஆனாலும் உங்களுக்கு கிண்டல் அதிகம் தான்” என்று கூறி முறைத்த ஜெயந்தியிடம் “இல்ல, நீயே அழகு உனக்கு எதுக்கும்மா இவ்வளவு மேக்கப்னு அந்த அர்த்தத்தில் சொன்னேன்” என்றான் ஹம்சன்.
“ஏய் சமாளிக்கிறான் நல்லா கேளு விடாத” என்று ரகுவரனும் சேர்ந்து கலாய்க்க “நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னை வைச்சு காமெடி தானே பண்றீங்க” என்று கேட்டாள் ஜெயந்தி.
“சே,சே” என்று இருவரும் சேர்ந்தாற் போல் கூறிச் சிரித்தனர். அதற்குள் “ஜெயந்தி” என யாரோ அவளை அழைக்க அப்பாடி என தப்பித்தது போல் அங்கு சென்றாள் ஜெயந்தி.
இரவு எட்டு மணிக்கு அன்றைய கணக்குகளை முடித்து கடையை சாத்திய ஜகன்நாதன் காரில் வேலையாட்களை ஏற்றிக்கொண்டு பஸ் ஸ்டாப்பில் அவர்களை இறக்கிவிட்டு வீடு திரும்பினார்.
வரவேற்ற கனகவல்லியிடம் எதுவும் பேசாமல் ஹால் சோபாவில் வந்த அமர்ந்தார். “என்னப்பா ரொம்ப சோர்வு ஆயிட்டீங்களே அதான் இன்னைக்கு பிள்ளைங்களே பார்த்துக்கிறேன்னாங்க. நீங்க கேட்காம மதியமே கடைக்கு போயிட்டீங்க” என்றாள் கனகவல்லி.
அவளை முறைத்த ஜெகன்நாதன் “போனதுனால தான் ஒண்ணு புரிஞ்சது” என்றார் சற்று காரமாக.
“என்ன புரிஞ்சது உங்களுக்கு” என ஒன்றும் புரியாமல் கேட்டார் கனகவல்லி.
“நம்ம மதுவுக்கு சீக்கிரமா வரன் பார்த்து திருமணம் நடத்தணும்”என்றார் கடுகடுவென.
“அதை ஏன் இப்படி எரிச்சலோடு சொல்றீங்க, நான் சொல்லும் போதெல்லாம் அவ சின்ன புள்ளடின்னு சொல்லி மேல்படிப்பு படிக்கட்டும்னீங்க. இப்ப என்ன நீங்களே வரன் பார்க்கணும்னு சொல்றீங்க. அவ படிப்பு முடியட்டும் அப்புறம் பார்க்கலாம்” என்ற கனகவல்லியிடம்
“இது கொஞ்சம் அவசரம்” என்றபடியே முகம் கை கால்கள் கழுவ குளியல் அறைக்கு சென்றார்
“என்னமோ பூடகமா பேசிட்டு போறாரே, என்ன நடந்தது கடையில பசங்ககிட்ட கேட்கணும்” என தனக்குள் முணுமுணுத்த கனகவல்லி “உதயன்கிட்ட கேட்டா கரெக்டா சொல்லுவான்” என நினைத்து “உதயா” என்று தன் மகனை அழைத்தார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போலில்லாமல் சற்று பொறுமையாக எழுந்து வேலையை பார்க்கலாம் என்று நினைத்தார் கனகவல்லி.
ஆனால் முதல் நாள் இரவே “நாளை குன்னூரில் இருக்கும் உன் அம்மாவையும் அண்ணன் குடும்பத்தையும் பார்த்து வரலாம்” என்று கூறிவிட்டார் ஜெகநாதன்.
“போன வாரம் தானே போனோம். இனி அடுத்த வாரம் போகலாமே” என்றார் கனகவல்லி.
“இல்ல நாளைக்கு ரெடி ஆகுங்க போகலாம்” என்றார் ஜகன்நாதன் பிடிவாதமாக.
காலையில் சற்று சலிப்பாக தந்தையுடன் கிளம்பிய பிள்ளைகள் அம்மாவின் காதை கடித்தனர் “எனக்கே தெரியல டா உங்க அப்பா மனசுல என்ன இருக்குதுன்னு” என்றார் கனகவல்லி சற்று கோபமாக.
மூவரும் காரில் ஏறியதும் தானும் ஏறிக்கொண்டு காரை சற்று வேகமாக ஓட்டினார் ஜெகன்நாதன். புறப்பட்ட சற்று நேரத்தில் படார் என்ற சத்தத்துடன் காரின் முன் சக்கரம் வெடித்து பஞ்சரானதில் இறக்கத்தில் கார் உழண்டு அதிவேகமாகச் சென்றது. செய்வதறியாது நால்வரும் பயத்தில் அலறினர்.
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings