நம்மில் சிலர், ஒவ்வொரு விநாடியிலும், ஒவ்வொரு அசைவிலும், ஒவ்வொரு செயல்பாட்டிலும், பயத்தை மட்டுமே பிரதானமாய் முன்னிறுத்திக் கொண்டு, பயந்து பயந்து செயல்படுவர். விளைவாய், தொடர்ந்து தோல்வியை சந்தித்தவாறே காலத்தை நகர்த்திச் செல்வர். இறைவன் படைப்பில் எல்லா ஜீவன்களுக்கும் “பயம்” என்ற உணர்வு இருக்கவே செய்யும். பயம் இல்லாமல் யாரும் இல்லை. அது ஒரு இயற்கையான உணர்ச்சிதான். ஆனால், அதற்காக அன்றாட வாழ்க்கையில் தேவையில்லாத பயங்களை அடுக்கிக் கொண்டே போனால், வாழ்வதில் என்ன அர்த்தமுள்ளது. இயற்கை உணர்ச்சியை யாரும் அழித்து விட முடியாதுதான், அதே நேரம் அதைக் கட்டுப்படுத்த முடியும் அல்லவா?, கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் அல்லவா?
சரி, இந்த அனாவசிய பயங்கள் எங்கிருந்து துவங்குகின்றன?… யார் அவற்றை ஆழ் மனத்துள் பதித்து வைத்தது? என்று ஆழ்ந்து யோசித்தால், அதன் துவக்கம் அம்மா… அப்பா… தாத்தா… பாட்டி போன்ற நம்மை நேசிக்கும், நெருங்கிய உறவுகளிடமிருந்துதான் துவங்குகின்றன, என்பது புரிய வரும்.
சிறு வயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது “டேய்… வேண்டாம் விழுந்து விடுவாய்” என்றும், பழம் நறுக்க கத்தியை எடுக்கும் போது, “அதைத் தொடாதே… கையைக் கிழித்து விடும்!” என்றும், முன்னிரவில் விளையாட தெருவில் இறங்கும் போது, “பனியில் ஆடாதே… ஜலதோஷம் பிடித்து விடும்” என்றும், பகலில் வெளியே சென்றால், “வெயிலில் சுற்றாதே மயக்கம் வரும்”, என்றும் சிறு வயது முதற் கொண்டே பயமுறுத்தி பயமுறுத்தி அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடுகின்றனர் பல பெற்றோர்கள். இங்கு எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தைரிய வார்த்தைகளைக் கூறி வளர்த்திருக்கிறார்கள்… சொல்லுங்கள் பார்ப்போம்?.
“போடா.. நாலு தடவை விழுந்து எந்திரிச்சு வாடா”… அப்பத்தான் பழக முடியும்!” என்றும், கத்தியை எடுக்கும் போது. “ம்ம்ம்… நீயே நறுக்கிப் பழகுப்பா கையைக் கிழிச்சா மருந்து போட்டுக்கலாம்!” என்றும், “அடப் போடா… ஓடற பாம்பை மிதிக்கற வயசுல பனியெல்லாம் ஒரு பிரச்சினையா?… போ… போய் தாராளமா விளையாடு!…” என்றும், “வெயில்… மழையிலெல்லாம் போய் வந்தால்தான் உடம்பு… எல்லாத்தையும் ஏத்துக்கப் பழகும்..!” என்றும், தைரியம் கூறி பிள்ளைகளை வளர்த்திருந்தால், அந்தப் பிள்ளைகள் அதன் மூலம் பல்வேறு அனுபவங்களைப் பெற்று, அந்த அனுபவங்களின் மூலம் பல்வேறு பாடங்களைக் கற்று, தங்களைத் தாங்களே செதுக்கிக் கொண்டிருப்பர். செறிவு படுத்திக் கொண்டிருப்பார்கள்.
சிறு பிராயத்திலிருந்து வளரும் இந்த பய உணர்வு, படிக்கும் காலத்தில் தேர்வைக் கண்டு பயப்பட வைக்கும், கல்லூரிக் காலத்தில் சீனியர் மாணவர்களைக் கண்டு அஞ்ச வைக்கும், படித்து முடித்து பணிக்குச் செல்லும் சூழ்நிலையில் உயர் அதிகாரிகளைக் கண்டு உதறலெடுக்க வைக்கும், தொழில் துவங்க முனையும் போது நஷ்டத்தை எண்ணி நடுங்க வைக்கும். சிலர் சில உணவுப் பதார்த்தங்களை உண்ணவே பயப்படுவர். அதனால் இன்ன நோய் வரும், இன்ன உபாதை ஏற்படும் என்று தம் தாய் தந்தையர் கூறியதை நினைவு கூர்ந்து நடுங்குவர்.
ஆக, ஒரு மனிதனுக்கு தைரியமூட்டும் பெற்றோர்கள் வாய்க்கப் பெற்றாலே போதும், அவன் வருங்காலத்தில் வாகை சூடுவான் என்பது நிரூபணமாகிறது. நவீனங்கள் பெருகிவிட்ட இந்த இண்டர்நெட் யுகத்தில் சிலர், தங்களுக்குள் ஏற்படும் சின்னச் சின்ன உபாதைகள் குறித்த சந்தேகங்களை இணையத்தின் உதவியோடு தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வர். அவ்வாறு அவர்கள் தேடும் போது, பல்வேறு நோய்கள் பற்றியும், பல்வேறு வித பாதிப்புக்கள் பற்றியும் அவர்கள் அறிய நேரிடுகிறது. விளைவு?… கடுகளவு இருந்த பயம் மலையளவாய் மாறி விட பெரும் சிக்கலுக்குள்ளாகின்றனர்.
அடுத்து, இந்த அனாவசிய பயங்களிலிருந்து ஒருவன் மீண்டு வர என்னென்ன மார்க்கங்கள் உண்டு? என யோசித்தால் முதலில் வருவது, தன்னம்பிக்கையே. ஆம், ஒருவன் தன்னைத்தானே நம்பினால் மட்டுமே எதுவும் சாத்தியம். பயம் என்பது உண்மையில் ஒரு ஆழ்மன விவகாரம். அதை மாற்றச் சரியான ஆயுதம் தன்னம்பிக்கையே. உதாரணத்திற்கு, சாலை விபத்து பற்றிய செய்திகளை தினமும் கேட்கிறோம், அதற்காக சாலையில் நடக்காமலா இருக்கிறோம்?..வாகனத்தை ஓட்டாமலா இருக்கிறோம்?… இல்லையே?… அந்த தைரியம் எப்படி வந்தது?… தன்னம்பிக்கையின் வெளிப்பாடுதான் அந்த தைரியம். “நாம் சரியாகச் சென்றால்… நமக்கு எப்படி விபத்து ஏற்படும்?”… “என்னால் விபத்தில்லாமல் ஓட்டி வர முடியும்!” என்கிற தன்னம்பிக்கை எண்ணமே அங்கு அவர்களை வழி நடத்துகிறது.
பொதுவாகவே, அதீத பயம் ஒருவனுக்கு ஏற்படும் போது, அதுவே பல நோய்களுக்கும் கூட மூல காரணமாகி விடுகின்றது. குறிப்பாக ரத்தக் கொதிப்பு, இருதய நோய்கள், நரம்புக் கோளாறுகள் போன்றவை ஏற்படக் காரணம் அனாவசிய பயங்களே. பயத்தால் டென்ஷன் அதிகரிக்கும், தூக்கம் கெடும், மன அமைதி சீர்குலைந்து விடும்.
தியானம் என்றாலே ஆன்மீக உயர்வுக்கு வழி வகுக்கும் ஒரு சாதனம் என்றுதான் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் தியானத்தில் மூலம் மன உபாதைகளை மட்டுமன்றி, உடம்பில் ஏற்படும் பல நோய்களைக் கூட குணப்படுத்தலாம். தன்னம்பிக்கையை அடுத்து, அனாவசிய பயங்களை விரட்ட தியானமே சிறந்த மார்க்கம். தியானத்தின் மூலம் ஒரு ஆக்க சக்தி தோன்றுகிறது. அது சிந்தனையைச் செம்மைப் படுத்துகின்றது. மனதைக் கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் ஏற்படுத்துகின்றது.
இப்போதெல்லாம் மருத்துவர்களே கூட தங்கள் நோயாளிகளை தியானம் செய்யுமாறு அறுவுறுத்துவது இயல்பாகி விட்டது.
தன்னம்பிக்கை உணர்வோடும், தியானத்தின் பயனோடும், பயங்களைத் தூக்கிப் பரண் மேல் போடுங்கள். இயல்பு வாழ்க்கையை இன்பமாய் அனுபவியுங்கள். உலக அற்புதங்களை உல்லாசமாய் ரசியுங்கள். காணும் ஒவ்வொரு காட்சியிலும் களிப்புறுங்கள். பிறவியே இனிக்கும். பிறந்த பலன் புரியும்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings