in , ,

பீனிக்ஸ் பறவைகள் ❤ (பகுதி 3) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“என்னடா விளையாடுகிறாயா? சட்டப்படி இந்த மாதிரி விபத்திற்கு மூன்று லட்சம்தான் தர முடியும். நான் பத்து லட்சம் செலவு செய்திருக்கிறேன். கையில் செலவிற்கு வேறு இரண்டு லட்சம் கொடுத்திருக்கிறேன். ரொம்ப சாரிடா, நானும் இந்தத் தொழில் செய்து தானே பிழைக்க வேண்டும்.

நான் மட்டும் என்ன நோட்டா அடிக்கிறேன்? பெரியவர்கள் வாழ்ந்த வீடு பெரிய பிள்ளையான எனக்குத் தான். இன்னும் வேறு எதுவும் எதிர்ப்பார்காகாதே. எனக்கும் இன்று செக்ரட்டேரியட்டில்  ஒரு மீட்டிங் இருக்கிறது, நான் கிளம்புகிறேன்” என்று நிர்தாட்சியண்யமாகக் கூறிவிட்டு காரில் ஏறிச் சென்று விட்டான்.

வீட்டில் வந்து மனைவியிடம் நடந்தது எல்லாம் அப்படியே சொன்னான் பாலாஜி. ஆனால் அவளோ ஒன்றும் பேசவில்லை.’

“அம்பிகா, உனக்கு கோபம் வரவில்லையா?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் பாலாஜி.

‘இல்லை’ என்று தலையாட்டினாள். “நீங்கள் அடிபட்ட அன்று என்ன நிலமையில் இருந்தீர்கள் தெரியுமா? உங்களை என் கணவராக என் குழந்தைகளுக்குத் தந்தையாக என் கையில் சேர்த்தார்கள். எனக்கு அது போதும். எவ்வளவு பெரிய தனியார் ஆஸ்பத்திரியில் வைத்து வைத்தியம் பார்த்தார்கள். போதும், இனி அவர்களிடம் ஒன்றும் கேட்க வேண்டாம். நாம் உங்கள் பெற்றோர் வாழ்ந்த கும்பகோணத்திற்கே போய்விடலாம். அவர்கள் வாழ்ந்த வீட்டில் நாம் போய் இப்போது இருப்பதென்றால், அதை ரிப்பேர் செய்வதற்கே கையில் உள்ள இரண்டு லட்சமும் செலவாகி விடும். கும்பேஸ்வரர் கோயிலுக்கு அருகிலோ, அல்லது சாரங்கபாணி கோயிலுக்கு அருகிலோ, உங்களுக்கு நன்கு பழக்கமான இடத்தில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து முதலில் இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டும்” என்றாள் கவலையுடன்.

அம்பிகாவின் அம்மா, வீட்டு வேலைகளுக்கெல்லாம் அவளுக்கு நல்ல உதவியாக இருந்தாள். அவள் அண்ணாவும் கும்மகோணத்தில் சிறிய கோயிலுக்கு அருகில் ஒரு சந்தில் சிறிய வீடு வாடகைக்கு அமர்த்தினான். அவனே வீட்டிற்குத் தரவேண்டிய அட்வானஸையும் கட்டிவிட்டான். பாலாஜி கையில் இருந்த இரண்டு லட்சம் ரூபாயும் வங்கியில் சேவிங்க்ஸ் அக்கௌன்டில் போட்டு விட்டான்.

அம்பிகாவுடைய சிறு வயது தோழி கனகா இப்போது கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள் என்று கேள்விப்பட்டு, அவளைப் போய்ப் பார்த்தாள்.

‘அட்டெண்டர் வேலையோ, ஸ்வீப்பர் வேலையோ ஏதாவது ஒன்று கிடைத்தால் கூட போதும்‘ என்று அவளிடம் வேண்டினாள்.

ஆனால் கனகாவோ, ‘எந்த வேலையாக இருந்தாலும் எல்லாமே எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேன்ஜ் மூலமாகத்தான் எடுப்பார்கள். அதில் வரும் ஊதியம் ஒன்றும் குடும்பம் நடத்த போதுமானதாக இருக்காது. நீ லைசன்ஸ் வாங்கி அழகாக ஒரு டிபன் கடை ஒன்றை திறந்து வியாபாரம் தொடங்கு. நானே என்னுடன் வேலை செய்பவர்களை அங்கே அழைத்து வருவேன். அதிக லாபம் எதிர்ப்பார்க்காமல் சுத்தமான தண்ணீர், சுத்தமான நல்ல எண்ணெய் இவற்றை உபயோகித்து நீ சமையல் செய்.

உன் கைமணம் எல்லோருக்கும் பிடித்துவிடும். சாப்பாட்டுத் தொழிலைவிட வேறு நல்ல தொழில் உண்டா? எந்த வேலைக்கு நீ மாதச்சம்பளத்திற்குப் போனாலும் உன் வீட்டிற்காக நேரம் ஒதுக்க முடியாது. சாப்பாட்டுக் கடை என்றால் நீ வீட்டிற்காக தனியாக சமைக்க வேண்டாம். உன் கணவரையும் குழந்தைகளையும் அருகில் இருந்தே பார்த்துக் கொள்ளலாம். கடின உழைப்பைக் கொடுத்தால் நாளடைவில் நல்ல வருமானம் கிடைக்கும்.

என்னடா வேலை தேடி வந்தவளுக்கு இந்த மாதிரி நொண்டிச் சமாதானம் சொல்லி அனுப்புகிறாளே என்று நினைக்காதே. நானும் உனக்கு வேலைக்கான ஏற்பாடுகளை என்னால் முடிந்த அளவு முயற்சி செய்து ஏற்பாடு செய்கிறேன்” என்றாள்.

கனகா சொன்னதை வீட்டில் அவள் பாலாஜியிடமும் மற்றவர்களிடமும் விவரித்தாள்.

‘மேற்கொண்டு வருமானத்திற்கு என்ன செய்யப் போகிறோம்?’ என்று குழப்பத்தோடு கூறினாள் அம்பிகா.

“வங்கியில் இருந்து கொஞ்சம் பணம் வித்ட்ரா செய்யட்டுமா?”

“கையில் இருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு கொஞ்சநாள் தள்ளலாம் மாப்பிள்ளை. ஒரு அட்டையில் இவ்விடம் சுவையான, சூடான டிபன் கிடைக்கும் என்று ஸ்கெட்ச் பேனாவில் பளிச்சென்று தெரியும்படி எழுதி வெளியே மாட்டுங்கள் மாப்பிள்ளை” என்றாள் அம்பிகாவின் அம்மா.

“என்னம்மா சொல்கிறாய்? கனகா சொன்னது போல் செய்யப் போகிறாயா?” என்றாள் அம்பிகா.

“ஏதாவது ஒன்றை செய்துதானே ஆக வேண்டும்?  அதிகமாக செய்யாமல் முதலில் குறைந்த அளவு செய்து பார்க்கலாம். முதல் நாள் இட்லி தோசை என்று செய்யலாம். வியாபாரம் எப்படி நடக்கிறது என்று பார்த்து மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யலாம் என்ற முத்தம்மா – அம்பிகாவின் அம்மா வேகமாக எழுந்து சென்று இட்லிக்கு ஊறவைத்தாள்.

அக்கம்பக்கத்தில் விசாரித்து சுத்தமான தண்ணீர் உபயோகித்து இட்லி மாவு பதமாக அரைக்கும் இடத்தில் கொடுத்து அரைத்துக் கொண்டும் வந்து விட்டாள். பாலாஜியும் கனமான அட்டையில் வெள்ளைப் பேப்பர் ஒட்டி  வெவ்வேறு நிறங்களில் விரிவாக எழுதாமல் சுருக்கமாக இட்லி, தோசை முதலிய பலகாரங்கள் காலை ஏழு மணி முதல் தயார் என்று எழுதி மாட்டினான்.  லட்சுமி சாப்பாட்டுக் கடை என்று பெயரும் சூட்டப்பட்டது. லட்சுமி என்பது காலம் சென்ற பாலாஜியின் அம்மாவின் பெயர்.

சட்னி, சாம்பார் பேக் செய்வதற்கு தனியாக சின்ன சின்ன பிளாஸ்டிக் கிண்ணங்களும், இட்லி தோசை எல்லாம் பேக் செய்வதற்கும் யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக் டப்பாக்களும் அகிலாவை விட்டு வாங்கி வரச் சொன்னார்கள். இவர்கள் வீடு கோயிலுக்கு மிக அருகில் இருப்பதால் வியாபாரம் சீக்கிரம் களை கட்டியது. அம்பிகாவின் கை மணத்தினால் சட்னி தாளிக்கும் வாசனையும், சாம்பார் வாசனையும் அந்தத் தெருவையே தூக்கியது.

ஒரு வாரத்திலேயே வியாபாரம் சூடு பிடித்து விட்டது. கோயிலுக்கு அருகிலேயே இருப்பதால் பூஜை செய்ய வருபவர்களும், கோயிலில் தங்கள் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு போகும் போது இவர்கள் மெஸ்ஸில் வந்து சாப்பிட்டு பார்ஸலும் வாங்கிக் கொண்டு போவது வழக்கமாகி விட்டது.

ஒரு வாரம் இட்லியும் தோசையும் மட்டும் செய்து கொண்டிருந்தவர்கள், பொங்கல் பூரி என்று முன்னேறி விட்டார்கள். விலை அதிகமான நல்ல பச்சரிசி வாங்கி வந்து கமகமக்கும் புளியோதரை, எலுமிச்சை சாதம், புதினா சாதம், கொத்துமல்லி சாதம் என்று அசத்தினார்கள். லாபம் அதிகம் இல்லை. இவர்களும் அதிக லாபம் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் நஷ்டமில்லாமல், வாங்கிய பொருளுக்கு எந்த சேதமுமில்லாமல் மக்களின் விருப்பத்தோடு கடை சுமாரான லாபத்துடன் சுமாரான வேகத்துடன்  வளர்ந்தது.

ஒருமாதம் கடை நல்லமுறையில் லாபகரமாக நடக்கும் போது தன் தோழி கனகாவிற்கு நன்றி கூறினாள்.

“அரசாங்க வேலைக்காக அலைவதற்கு சொந்தமாக ஏதாவது வியாபாரம் செய்யலாமென்று சொன்னாய். உன் வாய்க்கு சர்க்கரை தான் போடவேண்டும். இப்போது கோயிலருகில் ஒரு சிறிய சாப்பாட்டுக் கடை ஒன்றைத் திறந்திருக்கிறோம். ஒரு நாள் கட்டாயம், நீயும் உன் தோழிகளோடு வா” என்றாள் அம்பிகா.

“கட்டாயம் வருகிறேன். உன் குழந்தைகளும், கணவரும் எப்படி இருக்கிறார்கள். நீ வீட்டில் இருந்து வியாபாரம் வியாபாரம் செய்வது உன் குழந்தைகளுக்கும் கணவருக்கும் கூட உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றாள் கனகா.

“ஆமாம் கனகா, நான் இருப்பது அவர்களுக்கு உதவியாக இருக்கிறதோ இல்லையோ, ஆனால் அவர்கள் எங்களுக்கு நல்ல உதவியாக இருக்கிறார்கள். சரி, எங்கள் சாப்பாட்டை ருசி பார்க்க நீயும் உன் ப்ரண்ட்ஸும்  எப்போது வரப்போகிறீர்கள்?” என்றாள் அம்பிகா உற்சாகமாக.

“நாங்கள் வரும்போது போனில் தெரிவித்து விட்டுத் தான் வருவோம். அப்போது நீ நமக்கு பள்ளிக்கூடத்தில் லஞ்ச் டைமில் ஒரு வெங்காயப் பகோடா கொண்டு வருவாயே! ஞாபகம் இருக்கா? அதை செய்து வை” என்றாள்.

பழைய கதைகளை கொஞ்ச நேரம் பேசிவிட்டு மீண்டும் கனகாவைத் தன் சாப்பாட்டுக் கடைக்கு விசிட் பண்ண வேண்டும் என்று அழைத்து விட்டு போனை அணைத்துவிட்டு, அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவள் கணவனைப் பார்த்து சிரித்தாள்.

அருகில் இருந்த அவள் தன் அம்மாவின் பக்கம் திரும்பி, “அம்மா, நீ சில வருடங்களுக்கு முன்பு எனக்கும் எங்கள் நண்பர்களுக்குமாக ஒரு வெங்காயப் பகோடா செய்து தருவாயே ஞாபகம் இருக்கிறதா? அந்தப் பொட்டலத்தைப் பிரித்தாலே ஊரே மணக்கும். அதை இன்று நம் கேன்டீனில் செய்யலாமா அம்மா?”

“நீ கேட்டது எனக்கு மிகுந்த சந்தோஷம். இப்போதே செய்யத் தொடங்கிவிடுகிறேன். சாயந்திரம் குழந்தைகள் வந்தவுடன் அவர்களுக்கும் சாப்பிட ஒரு ஸ்நாக்ஸும் ஆச்சு” என்றவள், உடனே கடலை மாவை எடுத்து சலிக்க ஆரம்பித்து விட்டாள்.

இஞ்சியும் பூண்டும் எடுத்து தோலுரித்து சுத்தப்படுத்தத் தொடங்கினாள். கொஞ்ச நேரத்தில் அந்தத் தெருவே அவர்கள் செய்த பக்கோடாவால் மணக்க ஆரம்பித்தது. கடையில் கல்லாவில் உட்கார்ந்திருந்த பாலாஜியே ஒரு காலை ஊன்றிக் கொண்டு  கிச்சனுக்கு எழுந்து வந்து விட்டான். அவனாகவே ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு பக்கோடாவை ருசிக்கத் தொடங்கி விட்டான்.

ஒரு வருடத்தில் லட்சுமி சாப்பாட்டுக் கடை கும்பகோணத்தில் மத்தியதர வகுப்புகளிடையே நல்ல பெயர் பெற்றது. பக்கத்து கிராமங்களிலும் அதன் புகழ் பரவியது. கடையும், அதன் புகழும் வளர்ந்தது போலவே பாலாஜியின் குடும்பமும் முன்னேறியது.

எல்லோரும் சேர்ந்து அவரவர் திறமைக்குத் தகுந்தாற் போல் வேலை செய்ததால் தான் கடை குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியைப்  பெற்றது. பாலாஜி கல்லாவில் உட்கார்ந்து கொண்டான். கணக்கு வழக்கு, லாப நஷ்டம் எல்லாம் அவன் தான் பார்த்துக் கொண்டான். கடைக்குப் போவது, வெளியிடங்களுக்குப் போவது, சமையலில் அம்மாவிற்கு உதவுவது போன்ற வேலைகளையெல்லாம் செய்வது எல்லாம் அம்பிகாவின் வேலையானது.

மெயின் சமையல், பலகாரங்கள் செய்வது எல்லாம் அம்பிகாவின் அம்மா பொறுப்பானது.  அதிலும் அவர்கள் செய்யும் தயிரவடைக்காகவும் மேலே தூவும் காரா பூந்திக்காகவும் அந்த ஊரில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது என்பது  மறுக்க முடியாத உண்மை.  கவிதா, சாதனா, அகிலா மூவரும், ராமர் கட்டிய பாலத்திற்கு உதவிய அணில் போல் அவர்களால் என்ன முடியுமோ அந்த உதவியை அவர்களுக்கு கிடைக்கும் நேரத்தில் செய்வார்கள்.

ஆனால் மூவருமே படிப்பில், அவர்கள் வாங்கும் மதிப்பெண்களில் பெற்றோரை ஏமாற்றமடையச் செய்யவில்லை. கவிதா அவள் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவள். அவளுக்கு அரசாங்கக் கல்லூரியில்  கம்ப்யூட்டர் இஞ்ஜினீயரிங்கில்  உதவித் தொகையுடன் ஸீட் கிடைத்தும் அவள் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங்க் தான் படிக்க வேண்டும் என்று விரும்பி ஏற்றுக் கொண்டாள்.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும் – வியாழன் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பெண்ணொன்று கண்டேன் (சிறுகதை) – அர்ஜுனன்.S

    பனி விழும் மது வனம்❤️ (அத்தியாயம் 4) – பவானி உமாசங்கர்