2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பேருந்து நிலையத்தில் பஸ்ஸை விட்டு இறங்கியதும், பாக்கெட்டினுள் கையை விட்டு அந்தக் கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துப் பிரித்துப் படித்தேன்.
“கௌரி கல்யாண மண்டபம், பஜார் தெரு, காளியாபுரம், கோயமுத்தூர்”
தனி ஆளாய் இருந்திருந்தால் பேருந்து நிலையக் கடையொன்றில் விசாரித்துக் கொண்டு கால்நடையாய்ப் போய் விடுவேன். இப்போது என் மனைவி அலமேலுவும் கூட இருக்கிறாளே. பத்தடி கூட நடக்காத பரம சொகுசுக்காரி.
“பேசாம ஒரு ஆட்டோ பிடிச்சுப் போயிடறதுதான் பெட்டர்…” எனக்குள் சொல்லிக் கொண்டு ஆட்டோ ஸ்டாண்டை நோக்கிச் சென்றேன்.
அலமேலு நான் ஆட்டோ பிடிக்கத்தான் போகிறேன் என்பதைப் புரிந்து கொண்டு நின்ற இடத்திலேயே நின்றாள்.
ஆட்டோக்காரனிடம் கல்யாணப் பத்திரிக்கையைக் காட்டி விட்டு, ஆட்டோவில் ஏறி அமர்ந்து, சற்றுத் தள்ளி நிற்கும் அலமேலுவைக் காட்டினேன். அவன் புரிந்து கொண்டு ஆட்டோவை அலமேலுவிடம் செலுத்தினான். அவள் ஏறியமர்ந்ததும் ஆட்டோ வட்டமடித்து பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறியது.
முகூர்த்த நாளானதால் சாலையில் பட்டுப்புடவைப் பெண்கள் அதிகம் கண்ணில் பட்டனர்.
இருபது நிமிடப் பயணத்திற்குப் பின், ஆட்டோ அந்த கல்யாண மண்டபத்தின் முன் நிற்க, இருவரும் மண்டபத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்துப் பிரமித்தவாறே கீழே இறங்கினோம்.
ஆட்டோக்காரனுக்கு வாடகை கொடுத்து அனுப்பிய பின், “பார்த்தீங்களா… என்னோட சொந்தக்காரங்க எவ்வளவு பெரிய ஆளுங்க!ன்னு?” அலமேலு கேட்டாள்.
“எதைப் பார்த்தீங்களானு கேட்கறே?” வேண்டுமென்றே தெரியாதவன் போல் கேட்டேன்.
“ம்ம்ம்… கல்யாண மண்டபத்தோட டெக்கரேஷனைப் பார்த்தீங்களா?… தேவலோக மாளிகை மாதிரியல்ல இருக்கு?… அதே மாதிரி அங்க… கார் பார்க்கிங்ல நிக்கற கார்களைப் பார்த்தீங்களா?… பாதி… வெளிநாட்டுக் கார்கள்!… உங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்கும் அன்னிக்குப் போனோமே?… ஹும்… பாடாவதிக் கல்யாண மண்டபம்… வாய்ல வைக்க முடியாதபடி டிபன் ஐட்டம்ஸ்… வ்வேய்… இப்ப நினைச்சாலும் குமட்டுது”
திரும்பி அவளை முறைத்தேன்.
ஆனால் மண்டபத்திற்குள் சென்று அங்கே குவிந்திருந்த கோட், சூட் ஆண்களையும், நடமாடும் நகைக்கடையாக உலவிக் கொண்டிருந்த பெண்களையும் பார்த்து கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். “உண்மையிலேயே அலமேலு வீட்டுப் பக்கத்து ஆளுங்கெல்லாம்… கொழுத்த பணக்காரங்களாய்த்தான் இருப்பாங்க போலிருக்கு”
மேடையில் ஜோடியாக நின்று கொண்டிருக்கும் மணமக்களைக் கண்டு, வாழ்த்தி தாங்கள் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களை வழங்கி விட்டுப் புகைப்படம் எடுக்க ஒரு கூட்டமே க்யூவில் நின்று கொண்டிருந்தது.
“ஏய்… அலமேலு… இந்த க்யூல நாம் போய் நின்னா எப்படியும் முக்கால் மணி நேரம்… ஒரு மணி நேரம் ஆயிடும்… என்ன பண்ணலாம்?” அலமேலுவிடமே கேட்டேன்.
“ஆமாங்க… பெரிய வீட்டுக் கல்யாணம்ன்னா இப்பத்தான் இருக்கும்… நின்னு பொண்ணு மாப்பிள்ளையைப் பார்த்திட்டே போகலாம்” சொன்னவள் வேக வேகமாய்ச் சென்று அந்த லைனில் நின்று கொள்ள, நானும் நின்றேன்.
யார் செய்த புண்ணியமோ அரை மணி நேரத்திலேயே நாங்க மணமக்களைப் பார்த்து, அன்பளிப்புக் கவரைக் கொடுத்து, புகைப்படமும் எடுத்துக் கொண்டு மேடையை விட்டுக் கீழிறங்கினோம்.
அடுத்ததாய் பந்தி பரிமாறப்படும் இடத்திற்குச் சென்றோம். அங்கும் கூட்டம் நிரம்பி வழியும் என்றெண்ணிய என்னை வியப்பிலாழ்த்தும் விதமாய் அங்கே கூட்டம் அவ்வளமாஅய் இல்லை.
“என்னங்க?… அங்கே அத்தனை பேர் க்யூ வரிசைல நின்னிட்டிருந்தாங்க… இங்க பார்த்தா கூட்டம் குறைவாயிருக்கு” அலமேலு புருவங்களை நெரித்துக் கொண்டு என்னைக் கேட்க,
மௌனமாய்ச் சிரித்த நான், “அம்மாடி… உன்னோட பனக்காரச் சொந்தக்காரங்கள்ல பாதிப் பேருக்கும் மேலே சுகர் கம்ப்ளைண்ட்… பிரஷ்ஷர் தொந்தரவு… இன்னும் என்னென்ன வியாதிகள் உண்டோ அத்தனையும் உள்ள ஆளுங்க.,.. அவங்களால… இந்த மாதிரி கல்யாண விசேஷங்கள் போடுற பந்திச் சாப்பாட்டையெல்லாம் சாப்பிட முடியாது… வீட்டுக்குப் போய் வழக்கமான பத்தியச் சாப்பாட்டையும்… மாத்திரைகளையும்தான் சாப்பிட முடியும்… அதான் பறந்திட்டாங்க” என்று அடித்து விட்டேன்.
முகம் சுண்டிப் போனவள், “சரி…சரி… வாங்க நாம போய்ச் சாபிடுவோம்” என்னை இழுத்துக் கொண்டு நடந்தாள்.
பந்தியில் என் மனைவிக்கு எதிரே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்தக் கறுத்த மனிதனை முகத்தை அருவருப்பாய் வைத்துக் கொண்டு பார்த்த அலமேலு, “இவனையெல்லாம் யாரு உல்ளே விட்டது?… ச்சை… பார்க்கவே கஷ்டமாயிருக்கு” என்றாள் என்னிடம்.
“யாருக்குத் தெரியும்… உங்க சொந்தக்காரனாய்க்கூட இருக்கலாம்” என்றேன்.
அவள் என்னை எரிப்பது போல் பார்த்து விட்டு அவ்வப்போது அந்த கருத்த மனிதனையும் கவனித்துக் கொண்டேயிருந்தாள். அவனோ இலை நிறைய பதார்த்தங்களைக் கேட்டுக் கேட்டு வாங்கி நிரப்பிக் கொண்டிருந்தான்.
எனக்கு அது ஒரு மாதிரி அநாகரீகமாய்த் தெரிந்தது. சரி அப்படித்தான் வாங்கிக் கொண்டவன் அதுகளை வாரியடித்துச் சாப்பிட்டானா என்றால் அதுவுமில்லை. கோழி கொத்துவது போல் நிதானமாய்க் கொத்திக் கொண்டேயிருந்தான். பதார்த்தங்கள் இலையில் அப்படியே இருந்தன. கிட்டத்தட்ட எல்லோரும் எழுந்த பின்னும் அவன் எழவில்லை.
இலையில் எல்லா ஐட்டங்களும் அப்படியே இருந்த நிலையில் “பொசுக்” கென்று மூடி விட்டு எழுந்தான். எனக்குள் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. ஆனாலும் அமைதியைக் கடைப்பிடித்தேன்.
ஆனால் அலமேலு என்னைப் போல் இல்லாமல், கை கழுவப் போன இடத்தில் அவனைப் பிடித்து, வாய் விட்டுக் கேட்டே விட்டாள். “ஏன்யா… நீ என்ன சைக்கோவா?… என்னமோ தின்னு தீர்க்கறவனாட்டம் எல்லா ஐட்டங்களையும் வாங்கி இலை நிறைய வெச்சுக்கிட்டு கடைசில அதுகளை அப்படியே மூடி வெச்சிட்டு வந்திருக்கியே… பொருட்களை வீண் பண்றதுல உனக்கு அப்படியென்ன சந்தோஷம்?”
மெலிதாய்ச் சிரித்தவன், “ஒரு நிமிஷம் என் கூட வாங்க” என்று சொல்லி எங்களிருவரையும் எச்சில் இலைகளைக் கொட்டும் இடத்திற்கு அழைத்துச் சென்று காட்டினான். அப்போதுதான் அவன் வைத்து விட்டு வந்த அந்த இலையும் அங்கே கொட்டப்பட்டது.
காத்திருந்த பிச்சைக்காரர்கள் பாய்ந்து சென்று மிச்சம் மீதிகளை வழித்துத் தின்ன, அந்தக் கருத்த மனிதனின் இலையைக் கைப்பற்றிய பிச்சைக்காரன், “ஆஹா… எந்த மகராசனோ… எனக்காகவே நிறைய மிச்சம் வெச்சிருக்கான்பா” என்றபடி அவசர அவசரமாய் அள்ளி உண்டான்.
எனக்கு விஷயம் புரிந்து விட, “ஸாரி என்னை மன்னிச்சிடுங்க… உங்களைத் தப்பா நெனச்சிட்டேன்” என்றேன்.
“சார்… இந்தக் கல்யாண வீட்டுக்காரங்க வேற யாருமில்லை… என்னோட பங்காளிதான்…. பொண்ணோட அப்பன் சதாசிவம் யாருக்கும் பத்துக் காசு தர்மம் பண்ண மாட்டான்!… ஏழைபாளைகளுக்கும் குடுக்க மாட்டான்… கோயில் கொளத்துக்கும் குடுக்க மாட்டான்!… ஆனா இப்ப தன்னோட பணக்காரத்தனத்தையும்… படோடோபத்தைக் காட்டணும் என்பதற்காகவே ரொம்ப… ரொம்ப ஆடம்பரமா மகள் கல்யாணத்தைப் பண்ணிட்டிருக்கான்!.. அதான் அவனுக்காக நான் தர்மம் பண்ணினேன்!… இப்படியாவது இந்தப் பட்டினிக் கும்பலோட வாழ்த்துப் புண்ணியம் அவனுக்குப் போய்ச் சேரட்டும்” சொல்லி விட்டு அவன் நடக்க,
நான் அலமேலுவைப் பார்த்தேன், அவள் வேகமாய்ச் செல்லும் அவனையே வியப்போடு பார்த்தபடி நின்றிருந்தாள்..
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings