எழுத்தாளர் ஜெயலக்ஷ்மி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கண்களைத் திறக்கவே சிரமமாக இருந்தது, சிவகாமி அம்மாவிற்கு. உடம்பெல்லாம் அடித்துப் போட்டது போல் இருந்தது. இடுப்பிற்கு கீழே, கால்களைக் கொஞ்ச நேரம் கழட்டி வைக்கலாமா என்றெண்ணு மளவிற்கு வலியெடுத்தது.
ஆனாலும், கணவரின் இருமல் சத்தம் சங்கடப் படுத்தவே, இரு உள்ளங்கைகளையும் ஒன்றுடன் ஒன்று உராயும்படி தேய்த்துக் கொண்டு, முகத்தைத் தடவிவிட்டு, கண்கள் திறந்து, இணைத்து பிரிக்கப்பட்ட உள்ளங்கையில் விழித்து விட்டு, எழுந்து போய், தைலத்தை எடுத்து, கணவரின் மார்பில் நீவிவிட்டு, வாயைக் கொப்புளித்து, முகத்தைக் கழுவிவிட்டு, தண்ணீர் கொண்டு வந்து, கணவரை காலைக் கடன்களை முடிக்க வைத்து, பல் துலக்க வைத்து, ஈரத் துவாலையால் அவர் உடலை துடைத்து, இஞ்சி தேநீர் கொடுத்து விட்டு, தானும் இரண்டு வாய் அருந்தி, இட்லி ஊற்றி வைத்துவிட்டு குளிக்க உடை எடுக்கப் போனவர், கண்ணைக் கட்டிக் கொண்டு வர, அப்படியே கட்டிலில் அமர்ந்தார்.
யாராவது குளிப்பாட்டி விட மாட்டார்களா? யாராவது சிறிது உணவு தயாரித்துத் தர மாட்டார்களா என்றிருந்தது. சிவகாமி அம்மாவுக்கு வயது அறுபத்தைந்து. அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அவரது கணவர் சீனிவாசனுக்கு எழுபது.
சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டதால், எழுந்து நடமாட இயலாமல் படுத்த படுக்கையானார். மூத்த பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தாயிற்று.
இளைய மகன் மதனுக்கும் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளுடன் இவர்களுடனே வசித்தனர். ஆனால், சமையல் மாத்திரம் வெவ்வேறு.. ஒரு வழியாக சமாளித்து, எழுந்து குளித்துவிட்டு, சட்னியும் அரைத்து, கணவருக்கு இட்லியைக் கொடுத்து விட்டு, தானும் அவரருகில் அமர்ந்து ஒரு வாய் வைக்க, “அவரப் பென்ஷன்ல லோனப் போட்டுத் தர சொல்லும்மா” என்றான் மதன்.
“லோனா? எதுக்கு?”
“ஷைனியோட ஆஃபீஸ் பக்கத்திலேயே ஒரு வீடு வெலைக்கு வருது. என்னோட லோன் மட்டும் பத்தாது. அதுக்குத்தான்”
“இந்த வீடுதான் இருக்கே. அப்புறம் இப்ப எதுக்கு இன்னொரு வீடு?”
“இதில உங்க பொண்ணு பங்குக்கு வந்தா, நாங்க எங்க போறதாம்? என்றாள், மதிய உணவுப் பாத்திரத்தை கைப் பைக்குள் வைத்தவாறே வந்த மருமகள் ஷைனி.
“அவ ஒண்ணும் வர மாட்டா. இவரோட ட்ரீடமெண்ட்டுக்கும், எங்க சாப்பாட்டுச் செலவுக்குமே பென்ஷன் சரியாப் போகுது, இதுல லோனப் போட்டுக் கொடுத்துட்டு, நாங்க எங்க போறது?“
“கேக்க மாட்டான்னு என்ன நிச்சயம்?. சாப்பாட்டுக்கு வேணா நாங்க கொடுத்துட்டுப் போறோம்“.
“போதும்மா, நீங்க குடுக்கறது. உடம்பு சரியில்லண்ணாக் கூட ஒரு வாய் சாப்பாடு குடுக்காத உங்கள நம்பி நாங்க உக்காந்திருக்க முடியாது“.
“நாங்க செய்யற சாப்பாடு உங்களுக்கு ஒத்துக்காதுல்ல. அதான் குடுக்கறதில்ல. புரவிஷன் வாங்கிக் கொடுத்திட்றோம்“
“அவ்ளோலாம் வேண்டாம்மா. எங்களத் தொல்ல பண்ணாம இருந்தாலே, அதுவேப் போதும்“
“ஆமா நாங்க எது சொன்னாலும், உங்களுக்குத் தொல்லையாத் தான் இருக்கும். உங்க பொண்ணு கேட்டா அள்ளிக் கொடுப்பீங்க“ என்றாள் நொடித்துக் கொண்டே.
“எப்பப் பாத்தாலும் அவள ஏன் கரிச்சுக் கொட்டற? அவ உன்ன என்னப் பண்றா? அவ குழந்தைங்க வந்தாக்கூட முட்டையக் கொடுக்கறேன், அப்பளத்தக் கொடுக்கறேன்னு பொருமற. அவரு பணத்துல, என்னிக்கோ வர்ற என் பேரன் பேத்திக்கு நான் பண்ணிக் குடுக்கறதுல, உனக்கென்ன பிரச்சின? உம் பொருமல் தாங்காம தான் அவங்க இங்க வர்றதையே நிறுத்திட்டாங்க. இன்னும் அடங்கலியா உனக்கு?“
“பாத்தீங்களா? அவங்க பேரன், பேத்தியாம். அப்போ நாம பெத்தது ரெண்டும் அவங்களுக்கு பேரன்கள் இல்லையாம். நான் வேற அடங்காப் பிடாரியாம்“
“இப்போ லோன் போட்டுத் தர முடியுமா? முடியாதா?“ என்று கேட்டான், மதன்
“முடியாதுடா“ என்றார் சிவகாமியம்மா
“ஆஃபீஸ்க்கு நேரமாகுது. வா, போலாம்“ என்றவாறே, ஷைனி முன்னால் வெளியேற, கதவை படாரென அறைந்து சாத்திவிட்டு சென்றான் மதன்.
மாலை வரும்போதும், கதவை படாரெனச் சாத்திவிட்டு மேலே சென்றான். படார் படாரென அடிக்கப்படும் ஒவ்வொரு அறையும் பெரியவர்களின் இருதயத்தில் விழுந்தது போல் அவர்களுக்கு, திடுக்திடுக்கென இருந்தது.
“வீட்டுக்குள்ள வந்தாலே ஒரே மூத்திர நாத்தம். பசங்களுக்கு எதாவது இன்ஃபெக்ஷன் ஆய்டாதா?“ என்று உள்ளே வரும் போதே எரிந்து கொண்டே மேலே போனாள், ஷைனி. சீனிவாசனுக்கு முகம் கருகி விட்டது. கண்கள் கசிந்தன.
“அவ்ளோ பயம் இருந்தா பசங்கள வேற எங்கயாவது விட்டுட்டுப் போக வேண்டியதுதான? ஏன் எங்களாண்ட விடணும்? “
மகள் கவிதா வீட்டில் அவளது கணவர் அயிர மீன் வாங்கி வந்து கொடுக்க, மண் சட்டியில் குழம்பு வைத்து ஒரு வாய் சுவைக்கவும், அதன் சுவை அப்படியே அம்மா வைக்கிற குழம்பை ஞாபகப்படுத்த, பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு பார்க்கக் கிளம்பினாள்
.மகளைப் பார்த்ததும் அழுகை தாங்க முடியாமல் பொத்துக் கொண்டு வர , நடந்தவற்றை கூறி அழுதார் சிவகாமியம்மா.
“ஏம்மா, இந்த வயசான காலத்தில இப்படி பரிதவிக்கணும்?. அவங்கள வேற வீடு பாத்துட்டு போக சொல்லேம்மா“ என்றாள் கவிதா.
“அதெல்லாம் முடியாதுன்னுட்டாங்க. இல்லண்ணா, பென்ஷன்ல லோன் போட்டுத் தரணுமாம், வீடு வாங்க. லோன் போட்டு குடுத்துட்டு சாப்பாட்டுக்கும், மருந்து, மாத்திரைக்கும் நாங்க என்ன பண்றது?“
“அதெல்லாம் ஒண்ணும் போட்டுத் தராதீங்க. எங்கூட வந்திட்றீங்களா? என்று கேட்டாள் கவிதா.
“என்னடி சொல்ற? மருமகன் வீட்ல எப்டிடி வந்து இருக்க முடியும்? அதோட உம் மாமியார் வேற உன் வீட்டோட இருக்காளே, அதெப்படி சரி வரும்?”
“அப்போ வீட்ட வித்துட்டு, ஏதாவது ஓல்டேஜ் ஹோம்ல சேந்துக்கறீங்களா?“ என்று கேட்டாள் கவிதா.
“ஏண்டி வீட்ட வித்துட்டு வயசான காலத்தில எங்கள எங்க போய் கஷ்டப்படச் சொல்ற? இவர இப்டி படுத்த படுக்கையா வச்சிட்டு, நாங்க எங்க போய் திண்டாட்றது“ என்று கண்ணீர் விட்டார்.
“சரிம்மா. அழாத. வயசான காலத்துல டார்ச்சர் பண்றாங்கண்ணு போலீஸ் கம்ப்ளெய்ண்ட் குடேம்மா“ என்றாள்.
“அவன் என்னருந்தாலும் நான் பெத்த புள்ளையாச்சேடீ. அவனுக் கெதிரா, நான் எப்டி கப்ளெய்ண்ட் குடுப்பேன்?“
“ஆனா, அவன் அத நெனக்கலியேம்மா“ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஷைனி உள்ளே வந்தாள்.
“ஓ மந்திராலோசனை சொல்ல மக வந்தாச்சு போல. அவங்க பேச்சக் கேட்டுட்டுத் தான இப்டி ஆட்றீங்க“.
“யாரு ஆட்றது? பெரியவங்கள பேசற பேச்சா இது. நீதான ஆட்டமா ஆட்ற. உங்க அப்பா, அம்மாக்கு அந்த நெலம வராதா? இல்ல, ரெண்டு ஆம்பளப் புள்ள பெத்து வச்சிருக்கியே, நாளைக்கு உனக்கு அந்த நெலம வராதா?“ என்று கேட்டாள் கவிதா.
“நாங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க. எங்களுக்கெல்லாம் அந்த நெலம வராது. நீங்க உங்க வேலையப் பாருங்க. வீணா சாபம் விட்ற வேலையெல்லாம் வேணாம்“
“நீ பேசாம இரேண்டி“
“நீயாச்சு, உம் மருமகளாச்சு, என்னவோ பண்ணுங்க“ என்று, கோபத்துடன் எழுந்து சென்றாள், கவிதா.
சிவகாமியம்மாவின் தம்பியும், தம்பி மனைவியும் வருகிறார்கள்.
“என்னக்கா எப்படி இருக்கீங்க? இன்னுமா மாமாவுக்கு சரியாகல?“
“இருக்கோண்டா. நீங்க எப்படி இருக்கீங்க?”
“மாமாக்கு கால்ல ப்ளேட் வச்சிருக்கு. இன்னும் எழுந்து நடக்க முடியல. வயசாய்டுச்சில்ல, மெதுவாத்தான் சரியாகும். ஆமா, ஊர்ல எல்லாம் சௌக்யமா இருக்காங்களா? இருங்க காஃபி போட்டுட்டு வர்றேன்“
“இருங்கண்ணி, நீங்க ஏன் ஸ்ரமப் பட்றீங்க? காஃபிதான. நானே கலந்து எடுத்திட்டு வர்றேன்“ என்றாள் சிவகாமி அம்மாவின் தம்பி மனைவி.
அவர் நால்வருக்கும் காஃபி கலந்து எடுத்து வர, கீழே வந்த ஷைனி, “ஐயோ, யாரு இது பாத்திரத்தெல்லாம் எடுத்தது. கிச்சன நாஸ்தி பண்ட்டீங்களா?“ என்று கத்தினாள்.
“ஐயையோ, அவ பாத்திரத்த எடுத்திட்டியா?” என்றார் சிவகாமி.
“என்னண்ணி சொல்றீங்க? அவ பாத்திரம், உங்க பாத்திரம்னு“
“நான் என்னன்னு சொல்றது? ஒவ்வொரு நொடியும் இங்க நரகமாத்தான் கழியிது. கடவுளே, எப்பத்தான் எங்கள எடுத்துக்கப் போறியோன்னு வேண்டிட்டிருக்கோம்“
“ஏன், மதன் ஒண்ணும் கேக்க மாட்டானா?”
“கேப்பான். கேப்பான். எங்கள“
“ஏங்க்கா அவனுக்கு ஹாஸ்பிடல்ல ஆன இன்ஃபக்ஷனால லிவர் ஃபெயிலியராகி, சாப்பிட மாட்டாம வாந்தியெடுத்துக்கிட்டு கெடந்தானே, டாக்டர்ஸ் லிவர் ட்ரான்ஸ்ப்ளாண்ட் பண்ணியே ஆகணும்னு சொன்னப்ப, என் லிவர எடுத்துக்கோங்க. என் புள்ளைய காப்பாத்துங்கனு உன் லிவர கொடுத்திட்டுத் தான டயர்டா இருக்கு, டயர்டா இருக்குனு விழுந்து கெடக்கற. அத அவன்கிட்ட சொல்லலியா? நான் இல்லண்ணா நீ உயிரோடவே இருந்திருக்க மாட்டனு“
“இவர் மட்டும் என்ன? இப்பக் கூட அவன் கொழந்தய வேன் ஏத்தப் போறப்ப கைய உருவிட்டு ஓடிட்டான். வேகமா வந்த கார் அவன் மேல மோதப் போக அவனக் காப்பாத்த தான் இவர் அடிபட்டுக் கெடக்கார். அவங்கள வாழ வைக்றதுக்குத்தான நாம எல்லாக் கஷ்டமும் பட்றோம். பெத்தவங்க பிள்ளைங்களுக்கு செஞ்சதெல்லாம் சொல்லிக் காமிச்சிட்டா இருக்க முடியும்?“
இவற்றையெல்லாம் கேட்க நேர்ந்த மதன், கண்ணீருடன் ஓடிவந்து அவர்கள் காலில் விழுந்தான். அவனைத் தூக்கி உச்சி முகர்ந்தாள் தாய்.
எழுத்தாளர் ஜெயலக்ஷ்மி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
What an emotional story…!!!
🙏🏻😇🙌💫