இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஊருக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணி போல சாப்பிட்டு விட்டுக் கிளம்பியவர்கள் இரவு பெங்களூரு வந்துசேர புவியை வீட்டில் விட்டுவிட்டு, ”காலைல ஆஃபீஸ்ல பார்க்கலாம்” என்று சொல்லி விட்டுக் கிளம்பிய ஜனனி, அறைக்கு வந்ததும் அசந்து உறங்கிப் போனாள்.
மறுதாள் தூக்கத்திலிருந்து கண் விழித்தவள் தலையணைக்கருகில் இருந்த செல்ஃபோனை அழுத்திக் பார்க்க மணி ஒன்பதரையைக் காண்பித்தது. அவசரமாக எழுந்தவள், பத்து நிமிடத்தில் குளித்துவிட்டு டைனிங் ஹாலுக்கு வந்தவள் சாண்ட்விச்சை மட்டும் வாங்கி சாப்பிட்டுவிட்டு ஆஃபீஸுக்கு கிளம்பிச் சென்றாள்.
எப்போதும் போல சரியான நேரத்துக்கு வந்திருந்த புவி, “நல்ல தூக்கமா?” என்றாள்.
‘ஆமாமா. என்ன பண்றது? எனக்கு எப்பவும் மண்டே மேனியா இருக்கும் தான்’ என்று சொல்லியபடி சிரித்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள்.
ஒவ்வொரு மேஜையிலும் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு தேநீர் கொடுத்துக் கொண்டு வந்த கல்யாணி, “அதென்னம்மா மண்டே மேனியா? எதாவது மண்டை வலியா?” என்று கேட்க,
சிரித்துவிட்டு, “அது வேற ஒண்ணுமில்ல. சனி, ஞாயிறு லீவு முடிஞ்சு திங்கட்கிழமை ஆபீஸூக்குப் போகணுமேன்னு ஒரு சோம்பேறித்தனம் வருமே, அதைத்தான் அப்படிச் சொல்லுவாங்க” என்றதும்,
“அட, அதுக்கு கூட பேர் வைப்பாங்களா என்ன? ஏன் நான் கேட்டேன்னா, எம்புள்ள பள்ளிக்கூடத்துக்கு போக திங்கட்கிழமை எழுப்பங் காட்டி இப்படித் தான் எத்தையோ சொல்லும். என்னடா இந்த வார்த்தை புதுசா இருக்கேனு நெனச்சேன். சோம்பேறித்தனம்னு நாம சொல்லறதுக்கு ஸ்டைலா இந்த பசங்க புதுசா திணுசா ஒரு பேர வச்சுட்டு சுத்துங்க போல.
ஆனா, உண்மைல திங்கட்கிழமை ஆஃபீஸூக்கு கிளம்பறது கொடுமைதாம்மா. என்ன பண்றது? பொழப்புன்னு ஒன்னு இருந்தாத் தான சோறுங்க முடியும். ஆனா அந்த ஒரு நாள் போயிடுச்சுன்னா, கடகடன்னு அந்த வாரமே ஓடிப் போயிரும். அதே மாதிரி வெள்ளிக்கிழமை வரும்போதே சந்தோஷமும் சேர்ந்தே வந்துருமுல்ல. அடுத்த ரெண்டு நாள் லீவுங்கறது ஒரு அல்ப சந்தோஷத்தை குடுக்கத்தான் செய்யுது.
என்ன ஒன்னு, எனக்கெல்லாம் ஞாயிற்றுக்கிழமை தான் லீவு. அதுவும் எல்லா வேலையையும் முடிச்சுட்டு வீட்டுக்கு கிளம்பும் போது தான் கடை முதலாளி ஏதோ ஒரு வேலையைச் செய்யச் சொல்லி நேரமாக்குவாக” என்றதும்,
“நீயா ஒரு டீக்கடை போட்டா தான் என்ன?” என்று பரிதாபப்பட்டு கேட்க
“அது ஒண்ணும் அவ்வளவு சுலபமில்ல. என் வூட்டுக்காரன் சீட்டாடறேங்கற பேருல தாலி செயினுல இருந்த தங்கத்தையும் வித்து தொலச்சுட்டான். தினத்துக்கும் நான் சம்பாதிக்கிறதுனால தான் வூட்டுல உலை பொங்குது” என்றாள்.
“அது சரி……விடு. நல்ல காலம் பொறக்கும். ஆனா, இப்படித்தான் யாரயாவது குறை சொல்லிகிட்டே இருப்பயா” என்றாள் புவி.
“ஆத்தாடி. தப்பா எடுத்துகிட்டீகளா? உங்கள யாரு சொன்னது? என்னவோ என்னோட குறையைப் புலம்பிகிட்டேன்” என்று தன் அழகான மதுரைத் தமிழில் பேசிவிட்டு கடந்து போக,
“அதுசரி. அதென்ன, ரெண்டு ஊர் தமிழும் பூந்து விளையாடுது”
“அதுவா… எனக்கு மதுரை பக்கம் திருநகர். எங்க மாமா வேலூர். அதான் சென்னை தமிழும், மதுரைத் தமிழும் கலந்து பேசறேன். என் மாமாவத் தான் கட்டிக்கிடுவேன்னு அடம்புடிச்சு கல்யாணம் கட்டிகிட்டேன். எலக்ட்ரீசன் வேலை. அப்பறம் குடும்பம் குட்டின்னு வர, பொழப்புக்காக பெங்களூருக்கு வந்துட்டோம். கண்ணை மூடித் திரும்பப் பார்த்தா, பையன் பள்ளிக்கூடமே முடிக்கப் போறான். ஆனா ஒன்னு. முன்னல்லாம் சுத்தமா பேச மாட்டீய. இப்பப்ப நல்லா வம்பிழுத்துப் பேசறீய. அந்த ஜனனிம்மாவோட சேர்ந்து அந்தம்மாவோட குறும்புத்தனம் உங்களுக்கும் ஒட்டிகிச்சு” என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றாள்.
ஒரு நிமிடம் யோசித்த ஜனனி அவள் சொன்னதிலிருந்த உண்மையை மனதிற்குள் ஒப்புக் கொண்டாள்.
ஜனனி ஆஃபீஸ் முடிந்து போகும் போது அறையில் அனு இருந்தாள்.
“எப்படியிருக்க அனு? என்னாச்சு, திடீர்னு ரூம் காலி பண்ணப் போறேன்னு மெசேஜ் போட்டிருந்த?”
“ம்…..காலைல ரொம்பவே அசதியா தூங்கிகிட்டு இருக்கவும், ராத்திரி வந்து பேசிக்கலாம்னு தான் விட்டுட்டேன். வீட்டுல மாப்பிளை பாத்திருக்காங்க. அவரு துபாய்ல வேலை பாக்கறாரு. ஒரு மாச லீவுல வந்திருக்காரு. எதேச்சையாக எங்க வீட்டுல தெரிஞ்சவங்க மூலமா இந்த வரன் அமைய, எல்லாருக்கும் பிடிச்சிருக்கவும் உடனே அடுத்த மாச முதல் முகூர்த்தத்துல கல்யாணம் முடிச்சுடலாம்னு யோசிக்கறாங்க” என்று சொல்லி முடிக்க,
“எல்லோருக்கும் பிடிச்சிருக்கா? உனக்கு ஓ.கே வா இல்லையா? அதை முதல்ல சொல்லு’’ என்றாள் ஜனனி.
சிறிது வெட்கப்பட்டவளாய் ‘எனக்கு ஓ.கே. தான். நாலு வருஷமா மாப்பிள்ளை பாத்துகிட்டு இருந்தாங்க. எதுவும் சரியா அமையல. எல்லாம் கூடி வந்தாலும் ஏதோ ஒரு விஷயத்துனால தட்டிப் போகும். ஆனா, தெரிஞ்சவங்க மூலமா வந்த இந்த வரன் எல்லாருக்கும் உடனே பிடிச்சுப் போக அடுத்த மாசமே கல்யாணம் வரைக்கும் போயிருக்கு. ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் எல்லாம் நல்லபடியாக நடக்கணுமேங்கற பயமும் இருக்கு” என்றாள்.
‘நான் கூட திடீர்னு உன் மெசேஜைப் பார்த்ததும் என்னமோ ஏதோன்னு பதறிப் போய்ட்டேன். வார்டனும் நீ எதுக்கு ஊருக்குப் போனன்னு தெரியாதுன்னு சொன்னாங்க”
“எல்லாம் ஓ.கே. ஆனதுக்கப்பறம் சொல்லிக்கலாம்னு தான் எதுவும் சொல்லிட்டுப் போகல. இப்ப, கம்பெனிக்கு வேலையை விடறதுக்கு நோட்டீஸ் இமெயில் அனுப்பிச்சாச்சு. இருந்தாலும் நேராகப் போய் சொல்லீட்டு அப்படியே ரூமைக் காலி பண்ணீட்டு போக தான் வந்தேன்” என்றாள்.
ஒருபக்கம் தன்னுடன் தங்கியிருந்த அனு அறையைக் காலி செய்து கொண்டு ஊருக்குக் கிளம்பிச் செல்கிறாள் என்ற வருத்தம் இருந்தாலும் அவளுக்குத் திருமணம் கை கூடி வந்ததில் ஜனனிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அத்தனைக்கும் அதிகம் இருவருக்குள்ளும் நெருக்கமில்லை என்றாலும் நல்ல சிநேகிதி.
புவியும் ஜனனியும் ஒரே வீட்டில் தங்குவதற்கு முடிவெடுத்திருந்ததால் அனு அறையைக் காலி செய்து கொண்டு போன இரண்டு வாரத்திலேயே ஜனனி புவியின் அடுக்கு மாடி குடியிருப்பிற்குச் சென்று விட்டாள்.
இருவரும் காலையில் அலுவலகத்திற்கு ஒன்றாக வண்டியில் செல்வது, மாலையில் ஒன்றாக வீடு திரும்புவது, வெளியே செல்வது என பெங்களூர் நாட்கள் அழகாக கழிந்தன. புவியின் வீட்டில் திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பிக்க, தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னாள் புவி.
“சரிங்க, இன்னும் கொஞ்ச நாள் தான் விட்டுப் பிடிப்போமே” என்று அம்மா சரஸ்வதியும் கூற, அதுவும் சரிதான் என தன் முடிவைத் தள்ளிப் போட்டார் நடராஜ்.
இதற்கு நடுவே புதிய ப்ராஜக்ட்டுக்காக ஏழு பேர் கொண்ட ஒரு குழுவை அமெரிக்காவிற்கு அனுப்ப நிறுவனம் தேர்ந்தெடுத்தது. அதில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களில் ஜனனி மற்றும் பிஜூ தேர்ந்தெடுக்கப்பட, சீனியர்களில் புவி தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஆனால், வீட்டில் வெளிநாடு செல்ல அனுமதிக்காததால் அவளுக்கு பதிலாக மாலினியை அமெரிக்காவிற்குச் செல்ல பரிந்துரைத்தாள் புவி.
அமெரிக்காவிற்குச் செல்லுவதற்கு முன் எல்லோருமாக ஹோட்டல் சென்று வெற்றியைக் கொண்டாட முடிவெடுத்தனர்.
ஒரு வாரத்தின் கடைசி வேலை நாளில் அலுவலகத்திலிருந்து நேராக உணவகத்திற்குச் சென்றவர்கள் எல்லோருக்கும் வேண்டிய உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு மனதார பேசிக் கொண்டனர்.
அன்று ஒவ்வொருவரும் தங்கள் குடும்பப் பின்னணியைப் பற்றியும், நிறுவனத்தில் வந்து சேர்ந்த தங்களது நினைவுகளையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள, கூட்டம் சுவாரசியமானது.
நகரத்தில் படித்து வந்த ஒருவர், கிராமத்து அரசு பள்ளியில் படித்து முதல் தலைமுறை பட்டதாரியாக சாதித்த ஒருவர் என இருக்க, ஜனனி தன் பெற்றோர் தனக்குக் கொடுக்கும் சுதந்திரமே தன்னை வாழ்க்கைக்கான வெற்றிப் பாதையை நோக்கி நகரச் செய்கிறது என்று உணர்ச்சிவசப்பட்டாள்.
சாப்பிட்ட பின் எல்லோரும் அவரவர் வண்டியில் கிளம்பிச் செல்ல ஜனனியும், புவியும் வீட்டுக்கு வந்தனர். அறை முழுதும் இருட்டாக இருக்க, “என்னாச்சு? எப்பவும் கரண்ட்டெல்லாம் இந்த நேரத்துக்குப் போகாதே” என்று ஜனனி ஹால் விளக்கைப் போட,
கூட்டத்தின் நடுவே இருந்த டேபிளில் “டு த ஸ்பெஷல் பர்சன்” (முக்கியமான நபருக்காக) என்று ஐஸிங் க்ரீமினால் எழுதப்பட்ட வரிகள் தெரிய சாக்லேட் கேக் தயாராக இருக்க,
“ஓ…..இது என்ன ஸ்பெஷல் சர்ப்ரைஸ்” என்ற ஜனனியிடம்,
உன்னோட வெற்றியை நாம கொஞ்சம் ஸ்பெஷலா கொண்டாடணும்னு நெனச்சேன் என்றவள் கேக் வெட்டும் கத்தியை ஜனனியிடம் கொடுக்க, கேக்கை கட் செய்தவள் புவிக்கு கொஞ்சமாக ஊட்ட, மீதி கேக்கை ஜனனிக்கு ஊட்டிய புவி சற்றே உணர்ச்சிவசப்பட்டவளாய் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள்.
வினாடியில் சட்டென புவியிடமிருந்து விலகிய ஜனனி, அருகே இருந்த ஷோஃபாவில் உட்கார்ந்தாள். எதிர்பாராமல் ஒரு நிமிட அங்கே மௌனமே நிலவியது.
“இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கல புவி”
“ஜனனி, நீ வெளிநாடு போறது எனக்கு ரொம்பவே சந்தோஷமான விஷயம் தான். வேலை விஷயமா தான் அமெரிக்கா போற. ஆனா, உன்னை விட்டுட்டு இருக்கறத நெனச்சாவே எனக்கு தாங்க முடியல. இதுக்கு முன்ன யாருக்காகவும் நான் இவ்வளவு வருத்தப்பட்டது இல்ல. ஆனா, இன்னைக்கு உங்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லியே ஆகணும். படிப்பு, வேலையைத் தாண்டி மனசை சந்தோஷமா வச்சுகிட்டு வெகு இயல்பான வாழற உன்னோட வாழ்க்கை முறை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. காலம் முழுக்க நாம சேர்ந்தே வாழணும்னு ஆசைப்படறேன். நான் உன்னை விரும்பறேன் ஜனனி” என்று அருகில் வந்து கையைப் பற்றினாள்.
ஒரு நிமிடம் அமைதியாக இருந்த ஜனனி அவள் அறைக்கு எழுந்து செல்ல, “எதுவும் சொல்லாமப் போனா எப்படி?”
‘எனக்கு கொஞ்சம் நேரம் வேணும்’ என்றவள் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.
அன்று முழுக்க தூங்காமல் விழித்திருந்த புவி காலை மூன்று மணிக்கு மேல் தூங்கிப் போனாள். தூங்கி எழுந்தவளின் நினைவில் முந்தைய நாள் நடந்தது நினைவில் வர, ஜனனியைத் தேடி அறைக்குச் சென்றவள் அதிர்ச்சியடைந்தாள்.
அறையில் ஜனனி இல்லை. வீடு முழுக்கத் தேடிப் பார்த்தாள். ஜனனி இல்லை. விவரத்தைக் தெரிந்து கொள்ள ஜனனிக்கு அலைபேசியில் அழைத்தாள். தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறாள் என்ற செய்தியே வந்தது.
ஒரு நிமிடம் பித்து பிடித்தவள் போல உட்கார்ந்திருந்தாள் புவி. பிறகு வீட்டிற்கு வெளியே பால்கனிக்கு வந்து உட்கார்ந்தாள்.
எப்போதும் இருவரும் அங்கு தான் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். என்றுமில்லாமல் அன்று மட்டும் வெறுமையாக உதித்து மேலெழும்பிக் கொண்டிருந்த சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தவள் பார்வையைத் திருப்ப, “ஐ நீட் சம் டைம் (எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும்) என்று எழுதி அதன் மீது இருவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்துவிட்டு கிளம்பியிருந்தாள். அவள் உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள் ஜனனி.
அதற்குப் பிறகு ஒரு வாரம் வீட்டிலிருந்தே அலுவலக வேலை செய்து கொண்டிருந்த ஜனனி, அமெரிக்கப் பயணத்திற்குத் தயாரானாள்.
வந்த ஒரு வாரத்தில் ஒருமுறை கூட புவிக்கு ஃபோன் பேசாதிருந்ததை கவனித்த ஜனனியின் அம்மா, “ஏதாவது பிரச்சனையா?” என்றாள்.
“இல்லம்மா” என்று சமாளித்த விடம்,
“நீ எங்கிட்ட எதுவுமே சொல்லலண்ணா கூட பரவாயில்லை. வாழ்க்கைல நாம நிறைய பேரைக் கடந்து போது வேணாடியிருக்கும். ஆனா, தெரியாத்தனமாக கூட மனசார யாரையும் காயப்படுத்தீடாத. எந்த முடிவா இருந்தாலும் உனது மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யாத” என்றதும்,
“தேங்க்ஸ்மா” என்றாள் ஜனனி.
“ஒருவேளை நான் தப்பா முடிவெடுத்துடுவனோன்னு நெனக்கற போதெல்லாம் தெரிஞ்சோ தெரியாமலோ நீ சொல்ற அட்வைஸ் என்னை சரியான முடிவை தான் எடுக்க வைக்கறது” என்று சொன்னவள் தெளிவான மனநிலைக்கு வந்தாள்.
நிறுவனத்திலிருந்து அமெரிக்கா சென்றவள் அங்கிருந்து புவிக்கு கடிதம் எழுதினாள். கடிதத்தை தனியாக பிரித்து படிக்க நினைத்தவள் பால்கனியில் உட்கார்ந்து கொண்டு படித்தாள்.
டியர் புவி,
எப்படி இருக்க? உடனே எதாவது எழுதினாலோ பேசினாலோ தப்பா போயிடும்னு தான் அமைதியா இருந்தேன். எப்பவும் நீ எனக்கு ஸ்பெஷல் தான். எல்லோர்கிட்டயும் நான் யதார்த்தமா பழகீடுவேன். ஆனால், நீ எல்லார்கிட்டயும் அவ்வளவு சீக்கிரம் கூடியவ இல்லை. என்கிட்ட மட்டும் மனசார பழகினதை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது.
ஆனா, அது நம்ம வளர்ந்த சூழ்நிலையால தான். உன்னை சாகறவரைக்கும் ஒரு நல்ல தோழியா தான் நான் பார்க்கிறேன். அதைத் தாண்டிய மனநிலக்கு வந்ததில்ல. இதைச் சொல்ல கஷ்டமா இருந்தாலும் சொல்லி தான் ஆகணும். இந்த பதில் உனக்கு கஷ்டமா இருந்தாலும் நாம எல்லோரும் தெரிஞ்சோ தெரியாமையோ யாரையாவது காயப்படுத்திகிட்டு தான் இருக்கோம்.
இங்க வந்ததுக்கப்பறம் தான் ரிஷி சாரைப் பார்த்தேன். இன்னும் உன்னை நெனச்சுகிட்டு கல்யாணம் பண்ணாம இருக்காரு. எனக்கான ஒருத்தரைப் பார்க்கும் போது கண்டிப்பா நான் கல்யாணம் பண்ணிப்பேன். உன்னையே நெனச்சுகிட்டு ஒருத்தர் இருக்காருன்னு தெரிஞ்சுதுக்கப்பறம் உனக்கு அவர் மேல் அபிப்பிராயம் வந்ததுன்னா சொல்லு. முதல்ல நான் தான் சந்தோஷப்படுவேன்” என்று கடிதத்தை முடித்திருந்தாள்.
புவியின் கண்களில் தன்னையறியாமல் கண்ணீர் வந்தது. ஜனனியின் நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாத வலியை, தானும் ரிஷிக்குக் கொடுத்ததை உணர்ந்தாள். ஆனால் காதல் என்பது தானாக மலர்ந்தால் தான் அது காதலாக இருக்க முடியும் என்பதை உணர்ந்தவள் மெல்ல மெல்ல இயல்பினைப் புரிந்து கொண்டாள்.
ஆனால் ரிஷி தன்னிடம் சந்தித்த நாட்களை தற்போது நினைத்துப் பார்க்கையில் அதிலிருந்த தூய்மையான காதலைப் புரிந்து கொள்ள முடிந்தது. பிறகு எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் வேலையில் முழுக்க முழுக்க தன் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தாள்.
“என்னவோ ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு ரொம்ப பளிச்சுன்னு இருக்கீங்கமா” என்ற கல்யாணியிடம்,
“எதாவது காரியம் ஆகணுமா? எதுக்கு இப்ப புகழற?”
“மூஞ்சிக்கு முன்ன ஒன்னு, பின்ன ஒன்னு கிடையாதும்மா. என் பையனும் பனிரெண்டாவது முடிக்கறாம்மா. அவனை உங்களையெல்லாம் போல வரவைக்கணும். அதுக்காகவே இன்னும் அதிகமா உழைப்பேம்மா” என்றவளிடம்,
“கண்டிப்பா படிக்க வை. இதைவிட பெரிய கம்பெனியில அவன் வேலை பார்ப்பான். கவலைப்படாத’ என்றவள் போகும் போது இந்த செக்கை மட்டும் பேங்க்ல போட்டுட்டு போயிடு” என்றதும்
“சரிம்மா” என்று வாங்கியவள் வங்கிக்குப் போய் பார்க்க கல்யாணியின் பெயருக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு காசோலையை எழுதிக் கொடுத்திருந்தாள் புவி.
அங்கிருந்து உடனே ஃபோனில் அழைக்க, “பையனை ஒழுங்கா படிக்க வை. அது தான் நீ எனக்கு வட்டியோடு குடுக்குற அசல்” என்றாள்.
“ரொம்ப நாள் ஆச்சு. உன் தங்கையும் உன்னைப் பார்த்து நாளாச்சுன்னு சொன்னா. முடிஞ்சா இந்த வாரம் வந்துட்டு போயேன்” என்று சொல்லவும் வார இறுதியில் வீட்டுக்குச் சென்றாள்.
எப்போதும் போலல்லாமல் அப்பா வெள்ளை வேஷ்டி சட்டையிலும், அம்மா அழகான காட்டன் புடவையிலும் இருக்க தங்கையிடம் “என்னடி, ஏதாவது விசேஷமா?” என்றாள் புவி.
“எங்கயாவது கல்யாணத்துக்குப் போகறமாம்மா?” என்றவளிடம்,
“எல்லார் வீட்டு கல்யாணத்துக்கு மட்டும் போய்கிட்டே இருந்தா, நம்ம வீட்டு கல்யாணம் விருந்தை எப்ப தான் போடறது?” என்று சூசகமாக சொன்னவளிடம்,
“என்னதான் நீ சொல்ல வர?” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ரிஷி அவன் அம்மாவுடன் வந்து காரில் இறங்க, கூடவே வந்த ஜனனி கையில் கொண்டு வந்த பரிசை புவியிடம் கொடுத்தாள்.
அழகான மயில்பீலி நிறத்தில் வாங்கி வந்த பட்டுப்புடவையைப் பார்த்ததும், “என்ன நடக்குது ஜனனி?” என்று புவி தனியாக அழைத்து கேட்க,
“உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும். அதனால் தான் நானே நேர்ல வந்திருக்கேன். எதேச்சையா ஒருநாள் எல்லோரும் சந்திச்சப்ப, ரிஷி கல்யாணமே வேணுடான்னு சொல்றான்னு அவங்க அம்மா வருத்தப்பட்டாங்க. அவரா வந்து உங்கிட்ட திரும்ப பேசினா தான் நீ புரிஞ்சுப்பன்னு தான் இந்த ஏற்பாடு” என்றாள்.
“ஆனா, எங்க வீட்டுல?”
“உங்க வீட்டுல ரிஷியோட அம்மா பேசினதுக்கப்பறம் தானு இந்த ஏற்பாடே நடக்குது. உங்க வீட்டுல ரிஷியை எல்லாருக்குமே பிடிச்சிருக்கு. உன் சம்மதத்துக்காகத் தான் இந்த பெண் பார்க்கும் படலமே” என்றவள்
“இனி நீங்க தான் பேசணும் ரிஷி” என்றாள்.
ரிஷியும் புவியும் வீட்டின் பின்னாலிருந்த தோட்டத்தில் தனிமையில் இருக்க,
“எப்படி இருக்க புவி?”
ம்….. இத்தனை வருஷமா நீங்க….”
“நீயும் தான்” என்றவரிடம்
“ஆனா….”
“எனக்கு எல்லாம் தெரியும். உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கற காதல் தோழமையானது. அதை கொச்சையா நான் நினைக்கல. ஒருத்தர் மேல நாம வைக்கிற அன்பு. அவ்வளவு தான்” என்று சொல்ல,
“நான் தான் உங்களை நிறைய காயப்படுத்தீட்டேன்.”
“இனியும் என்னை காக்க வச்சுடாத புவி” என்றதும் இருவரூம் வாய்விட்டு சிரித்தனர்.
“அக்கா, மாமா ஏற்காட்டை சுத்தி பார்க்கணுமா. போலாமா?” என்றதும்
“ம்….” என்றவள் பெற்றோரைப் பார்க்க,
“ஜாக்கிரதையா போய்ட்டு பத்திரமா சீக்கிரம் வந்து சேருங்க” என்று பெற்றோர் அனுமதிக்க
ஒரு வண்டியில் ரிஷியும் புவியும், மற்றொரு வண்டியில் ஜனனியும் திவ்யாவும் உட்கார்ந்து கொண்டு சந்தோஷமாக கிளம்பினார்கள்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings