in , ,

அவளும் நானும் (குறுநாவல் – பகுதி 4) – சுபாஷினி பாலகிருஷ்ணன்

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இதுவரை

புவியும், ஜனனியும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த ரிஷி புவியிடம் தன்  காதலைச் சொல்ல, மறுக்கிறாள் புவி.‌ மனமுடைந்து பணிமாற்றம் வாங்கிக் கொண்டு வெளிநாடு சென்று விடுகிறான் ரிஷி. புவி ஜனனியிடம் நல்ல தோழமை உருவாகிறது.

இனி

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அம்மாவிடமிருந்து ஃபோன் வர, “என்னம்மா……இப்படி திடீர்னு சொன்னா எப்படி உடனே வரமுடியும்? புரிஞ்சுக்காம பேசறயே” என்ற புவியிடம்,

நம்ம ஊர் கோவில் கும்பாபிஷேகம் புவி. குடும்பமா கலந்துக்கறேன்னு வேண்டிகிட்டு இருக்கேன்.

சேலத்துல படிச்சது வரைக்கும் போதும். இங்கயே வேலை பாக்கட்டும். வெளியூருக்கெல்லாம் வேலைக்கு அனுப்ப மாட்டேன்னு உங்கப்பா சொன்னப்போ, ‘தாயே, நல்ல வேலை கிடைச்சுருக்கு. இவங்க அப்பா மனசார வேலைக்கு வெளியூருக்கு அனுப்பணும்’-னு அவகிட்ட தான் வேண்டிகிட்டேன்.

திடீர்னு உங்க அப்பா மனசுமாறி, ‘யோசிச்சுப் பாத்தேன். என் பொண்ணு பெங்களூருக்கு  போய் சந்தோஷமா வேலை பாக்கட்டும். வெளிய போனா தான் உலகம் தெரியும். ஆனா, போற இடத்துல ஜாக்கிரதையா இருக்கணும். அதை மட்டும் கொஞ்சம் சொல்லி வை’-ன்னு எங்கிட்ட சொன்னப்போ அந்த தெய்வத்தோட அருமையை புரிஞ்சுகிட்டேன். அதனால,  நீயும் கண்டிப்பா கும்பாபிசஷேகத்துக்கு வந்து தான் ஆகணும்” என்றாள் சரஸ்வதி.

“சரி….சரி…..கண்டிப்பா வரப் பாக்கறேன். என்னை வரவைக்கறதுக்குன்னே ஆயிரம் காரணங்களை தேடி கண்டுபிடிக்க உன்னால மட்டும் தான் முடியும்” என்று விளையாட்டுக்காய்ச் சிரித்தவள்,

“அம்மா, முடிஞ்சா என் ஃப்ரெண்ட் ஜனனியையும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரட்டுமா?” என்றாள்.

“ம்…..புதுசா வேலைக்கு சேர்ந்த பொண்ணு. துறுதுறுன்னு இருப்பான்னு சொன்னயே. அந்த பொண்ணு தான. தாராளமா கூட்டிகிட்டு வா.  ஆனா, அவங்க வீட்டுல இருக்கறவங்ககிட்ட சம்மதத்தோட ரெண்டு பேரும் வாங்க” என்றதும் விஷயத்தை சந்தோஷமாக ஜனனியிடம் சொன்னாள் புவி.

“அட! இது நல்லா இருக்கே. பெங்களூருக்குள்ளயே சுத்திக்கிட்டு இருக்கோமே. வெளியூர் எங்கயும் போலயேன்னு நெனச்சேன். அப்ப ரெண்டு பேரும் வண்டியிலயே கிளம்பி போயிட்டு வந்துடுவோம்”  என்றாள் ஜனனி.

“பஸ்-லயே போலாமே. இவ்வளவு தூரமெல்லாம், அதுவும் வண்டியில போறது ரொம்பவே ரிஸ்க். பஸ்ஸுல டிக்கெட் புக் பண்ணீட்டு சொல்லு-ன்னு வேற அப்பா சொல்லியிருக்காரு. அவரு கார் எடுத்துகிட்டு நம்மள கூப்பிட பஸ் ஸ்டேண்டுக்கே வந்துடுவாரு. பிரச்சனை இல்ல” என்றவளிடம்

‘நான் அங்கிளை சமாளிச்சுக்கறேன். வண்டியில தூரமா போறதே ஒரு நல்ல ரிலாக்ஸான அனுபவத்துக்கு தான். அதனால தான் வண்டியில போலாம்னு சொல்றேன்’ என்று சொன்னவள் புவியின் பெற்றோரிடமும் பேசி பச்சைக் கொடி வாங்கிக் கொண்டாள்.

அன்று மாலையே கறுப்பு நிற பேண்ட், ஷர்ட், மேலே குளிருக்கு போட்டுக்கொள்ளும் ஜாக்கெட், ஷூ என வண்டியில் தூரமாகப் போவதற்கென்றே விற்கப்படும் ஆடைகளை பிரத்யேகமாக  வாங்கி புவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்தாள் ஜனனி.

‘இதெல்லாம் தேவையில்லாத செலவு’ என்றவளிடம்,

“ப்ளீஸ்….திரும்ப ஆரம்பிக்காதீங்க. அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும் போது விட்டுட்டு அப்பறம் காலம் போனதுக்கப்பறம் ஏங்கி  பிரயோஜனமில்ல.

அது சரி…..வேற யாராவது  நம்ம கூட வராங்களா?” என்றவளிடம்

“இல்ல ஜனனி. எல்லாரையும் கூப்பிட்டா அது ஒரு ட்ரிப் போன மாதிரி ஆகிடும். இது நாம மட்டும் தனியா போற மாதிரி ஸ்பெஷலா இருக்கட்டுமேன்னு நெனச்சேன்” என்ற புவி

“ஜனனி, நம்ம போறது ஹில்ஸ் ஸ்டேஷன். அதனால சாயங்காலம் நாலஞ்சு மணிக்குள்ள கண்டிப்பா வீட்டுக்கு போறமாதிரி இருக்கணும். இல்லண்ணா அம்மா டென்ஷன் ஆகிடுவாங்க. பாத்துக்கோ” என்றாள்.

“சரி….சரி….. கண்டிப்பா என்னால நீங்க திட்டு வாங்கமாட்டீங்க. கவலைப்படாதீங்க வெள்ளிக்கிழமை ஒரு நாள் லீவ் எடுத்துகிட்டு கிளம்பினா திங்கட்கிழமை காலைல ஆபீஸுக்கு வந்துடலாம்” என்றாள் ஜனனி.

வெள்ளிக்கிழமை. சில்லென்ற காலைப்பனித்துளி அபார்ட்மெண்ட் பார்க் புற்களின் தலையின் மேல் அழகான கிரீடமாய்  முத்து போன்று பூத்திருக்க, தை மாத வானம் இருட்டை தனக்கு போர்வையாகப் போத்திக் கொண்டு நிலவை தன்னுடனேயே வைத்துக் கொண்டு விடமாட்டேனென்று அடம்பிடித்துக் கொண்டிருந்தது.

சூரியனோ, போனால் போகிறதென்று தன் நேரத்தையும் சற்று கூடுதலாகவே கொடுத்துவிட்டு விடிவதற்காக அமைதியாய்க் காத்துக் கொண்டிருந்தான்.

இருவரும்  ஆளுக்கொரு  பேக்கில் வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு வாட்டர் பாட்டில் சகிதம் ஊருக்கு  காலை ஆறு மணிக்கெல்லாம் கிளம்ப, வெடவெடவென்று இருந்த அந்த காலை நேரக் குளிரில் இருவர் மட்டும் சாலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் செல்வது உண்மையில் புவிக்கு வித்தியாசமான அதே சமயம் சந்தோஷமான அனுபவமாகவே இருந்தது.

சிறிய டீக்கடைகள் கூட  திறக்காமலிருந்த அந்த வேளையிலும், நாள் தவறாமல் நடைபயிற்சிக்கு செல்பவர்கள் மட்டும் ஸ்வெட்டர் குல்லாய், பேண்ட் டீஷர்ட் என்று சாலையோரம்  சென்று கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.

கர்நாடக மாநிலத்தின் எல்லையைத் தாண்டி ஓசூர் வந்ததும் ரோட்டோரமாய்  இருந்த ஒரு சாலையோர டீக்கடையில் நிறுத்தினாள் ஜனனி. இருவருக்கும் சுடச்சுட தேநீரும், எல்லா காலங்களிலும் மவுசு குறையாத பேக்கரி தயாரிப்பான தேங்காய் பிஸ்கட்டையும், உப்பு பிஸ்கட்டையும் ஆர்டர் கொடுத்துவிட்டு, “ரெண்டு நிமிஷம்” என்றவள் ஃபோனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.

இரண்டு நிமிடத்தில் கடைக்காரரிடம் கையில் வாங்கிய சூடான தேநீர்க் குவளையை ஜனனியிடம் கொடுத்தவள்,  ஃபோனில் யாரென்று கேட்க, “பைக்கர்ஸ் குரூப்ஸ் தான். பேசிட்டு வந்துடறேன்” என்றாள்.

“நாம மட்டும் தனியா ஊருக்குப் போனா நல்லா இருக்கும்னு அவ்வளவு தூரம் சொன்னனே” என்றவளிடம்,

“அவ்வளவெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. அவங்க யாரும் நம்ம கூட வரல. நீங்க ஏற்காட்டைப் பத்தி அவ்வளவு விவரங்களையும் ரொம்ப அழகா சொல்லவும், அவங்ககிட்டயும் சொன்னேன்.

பக்கத்துல இருக்கற அழகான மலை வாசஸ்தலம்-ங்கறதுனால அவங்க இந்த வாரம் ப்ளான்  போட்டு கிளம்பறாங்க. எப்பவும் இந்த மாதிரி எல்லோரும் சேர்ந்து போகும் போது ஒரு ரிசார்ட் -ல தான் தங்குவோம். அப்பறம் இரவு நேரத்துல கேம்ப் ஃபயர், அடுத்த நாள் ட்ரெக்கிங்,  பக்கத்துல இருக்கற இடங்களை சுத்திப் பாக்கறதுன்னு நேரம் போறதே தெரியாம போகும்” என்றவள்,

“என்னை இந்த வாரம் வரமுடியுமான்னு கேட்டாங்க. நான் தான் அடுத்த தடவை பாத்துக்கலாம்-னு சொல்லீட்டேன்” என்றாள்.

“ஊருக்கு போய்ட்டு வரதைப் பத்தி உங்க வீட்டுல ஒரு வார்த்தை சொல்லீட்டதான” என்றவளிடம்,

“அம்மாகிட்ட சொல்லாம எங்கயும் நகரமாட்டேன். பார்க்க தான் நான் தைரியசாலி. நிஜமாகவும் தான். ஆனா அம்மாகிட்ட மட்டும்  மறுபேச்சே இல்ல” என்றாள் ஜனனி.

அது என்ன, “வெளியில புலி வீட்டுல எலியா?” என்றவளிடம்,

அப்படியில்லை. பொண்னை ஏன் தனியா படிப்பு, வேலை-ன்னு வெளியூருக்கு அனுப்பறன்னு கேக்கறவங்களுக்கு மத்தியில என்னை நம்பி  தனியா விடும்போது நமக்கே  நம்மள அறியாம ஒரு பொறுப்பும் சேர்ந்தே வந்துடுது என்றதும், ‘அடடா…..ஜனனியும் அப்பப்ப சீரியஸா பேசறாப்பா’ என கேலி செய்தாள் புவி.

பிறகு பிஸ்கட்டையும் சாப்பிட்டு விட்டு கடையிலிருந்து கிளம்பும் போது நிறைய கனிந்த வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டவர்கள் கிருஷ்ணகிரி தர்மபுரி தாண்டி தொப்பூர் வந்ததும் ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்தினார்கள்.

அங்கிருந்த குரங்குகளுக்கு சாலையோரமிருந்த மரத்தடியில் பழங்களை வைக்கவும், பரபரவென அத்தனை பழங்களையும் குரங்குகள் எடுத்துக் கொண்டு ஆளுக்கொரு பக்கம் நின்றுகொண்டும், மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டும் சாப்பிட்டன.

எப்போதும் மலை வழியே வரும் வாகன ஓட்டிகள் சாப்பிடுவதற்கு ஏதாவது தருவது வழக்கமாக இருப்பதால் குரங்குகள் கூட்டம் கூட்டமாக அநாயாசமாக அங்கங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும்.

பத்து நிமிடம் ஓய்வெடுத்த வர்கள், வனப்பகுதி என்பதால் அதற்கு மேல் அங்கு  நிற்காமல் சேலத்தில் ஏதாவது அளவாக சாப்பிட்டு விட்டு மெதுவாக மலையேறலாமென முடிவெடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

வழியில் ரைடர்ஸ் குரூப் நண்பர்களைப் பார்த்தவர்கள் கையசைத்துவிட்டு இவர்களின் பயணத்தைத் தொடர, அவர்களும் கையசைத்துவிட்டு  விரைந்து சென்றார்கள்.

பிறகு சேலம் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த பிரபல ஹோட்டலில் ஒலித்துக் கொண்டிருந்த  ஸ்கந்தகிரி கவசத்தைக் காதில் கேட்டபடியே தங்கள் காலை உணவினை மிதமாக எடுத்துக் கொண்டு ஃபில்டர் காஃபியை அருந்தியவர்கள் ஏற்காடு மலைப் பயணத்துக்குத் தயாரானார்கள்.

எப்போதும் போலல்லாமல் தங்கள் மகள் இரு சக்கர வாகனத்தில் வருவதால் நடுவில் மூன்று முறை புவியின் வீட்டிலிருந்து அழைப்பும் வந்தது. கொண்டை ஊசி வளைவுகளை இயற்கையை ரசித்தபடியே வண்டியை ஓட்டி வந்த ஜனனி ஒரு வளைவில் வண்டியை ஓரமாக  நிறுத்த, இருவருமாக நின்றபடி செல்ஃபி எடுத்துக் கொண்டதோடு கீழே  தெரியும் சேலத்தின் அழகினை கேமராவில் அடக்க முயற்சித்துப் கொண்டிருந்தார்கள்.

‘இங்க இருந்து சேலம் முழுக்க தெரியும். இதை விட மேல ஹில் பாயிண்ட் டெலஸ்கோப்-ல பார்க்கும் போது சேலம் அவ்வளவு அழகாத் தெரியும். இரவு நேரத்துல மலையிலிருந்து கீழே பார்க்கும்   போது  வானத்துல இருக்கிற நட்சத்திரங்கள்-லாம் பூமியில இறங்கி வந்துருச்சோன்னு நெனக்கத் தோணும்’ என்றவளுக்கு இந்த தொலைதூர பயணம் புதிய அனுபவமாக இருந்தது. பேருந்து, கார் என புவியின் பயணம் எப்போதும் அவள் குடும்பத்தாருடன் இருந்த நிலையில் இது ஒரு சுதந்திர உணர்வினை மனதில் ஆழமாக விதைத்தது.

வானிலை சற்று  மேகமூட்டத்துடன் மந்தமாக இருக்க மெதுவாக வண்டியில் சென்றவர்கள் மதியம் போல வீட்டினை அடைந்தனர்.

அழகான தனி வீடு. மா மரமும், மிளகுக் கொடியும், கொய்யா மற்றும் நான்கு தென்னை மரங்கள், காய்கறி, பழச் செடிகள் என ஒரு சிறு தோட்டமே வீட்டைச் சுற்றிலும்  இருந்தது. ஒரு வீட்டுக்கும் மற்றொரு வீட்டுக்கும் அருகே நிறைய இடைவெளி. எங்கும் பச்சைப் பசேலென செடி கொடிகள்  ஊரின் வளமையை பறை சாற்றியது.

“துவைச்ச துணியெல்லாத்தையும் கொஞ்சம் கம்பியில காயப்போட்டுட்டு வா’ என்ற அம்மாவின் வார்த்தைக்கு “சரிம்மா” என்றவள் துணிகளை எடுத்துக் கொண்டு வெளியே வர, எதிரே வந்தவர்களைப் பார்த்ததும், ‌“அம்மா, புவி வந்தாச்சு” என்றவள், “வாங்கக்கா” என்று ஜனனியை அழைத்துக் கொண்டு உள்ளே கூட்டிச் சென்றாள்.

“வாம்மா….வா புவி” என்றழைத்த அம்மா,  புவியைக் கட்டிக் கொண்டாள்.

“அம்மா, எங்க வச்சுருக்க?” என்ற திவ்யாவிடம்,

‘கேஸ் அடுப்புக்கு வலது பக்கம் இருக்கற சொம்புல தான் வச்சிருக்கேன்’ என்றதும் இருவருக்குமாக இளநீர் குடிக்கக் கொடுத்தாள் திவ்யா.

தென்னை மரத்திலிருந்து காலையில் தேங்காய் போடும் போதே பத்து  இளநீர் காய்களையும் சேர்த்து போடச் சொல்லியிருந்தாள் சரஸ்வதி.

அம்மா, அப்பா எங்க காணோம்? என்ற புவியிடம்,

“பக்கத்து தோட்டத்துக்கு கொஞ்சம் ஆள் வேணும்னு உங்கப்பாகிட்ட கேட்டிருந்தாங்க. நம்ம தோட்டத்து ஆளுக கொஞ்சம் பேரை அங்க அனுப்பீட்டு வரேன்னு போயிருக்காரு. இதுக்கு நடுவுல நீங்க வந்தாச்சான்னு ரெண்டு தடவை எனக்கு ஃபோன் வேற அடிச்சாச்சு” என்றாள்.

“சரி, உங்க வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று சரஸ்வதி ஜனனியை  நலம் விசாரிக்க,

“ம்…..எல்லோரும் நல்லா இருக்காங்கம்மா. நான் கொஞ்ச நாள் முன்னாடி தான் இந்த கம்பெனியில சேர்ந்தேன். மத்தபடி எனக்கு குரு  புவி தான்” என்று சொல்ல,

மனதுக்குள் பெருமைப்பட்டுக் கொண்டவள், ‘பொண்ணுங்க அவங்கவங்க கால்ல நிக்கறது ரொம்ப முக்கியம்-மா. இப்பல்லாம் காலம் மாறிப் போச்சு. எங்க காலத்துல இவங்க அப்பா பி.ஏ. படிச்சிருந்ததும் என்னை வேலைக்கு அனுப்பல. வீட்டுலயும் வேலை, குழந்தைகள், புருஷன்னு எனக்கான பொறுப்பு கூடிப் போச்சு. ஆனாலும் படிச்ச படிப்புக்கு ஒரு வேலைக்குப் போகாம இருக்கோமேன்னு ஒரு குறை இருந்துகிட்டேஇருந்தது.

பொண்ணுக வளர, வளர நானும் அவங்க கூடவே வளர்ந்தேன்னு தான் சொல்லணும். இப்பவும் ஒன்னும் உனக்கு வயசாகலை. உனக்கு தெரிஞ்சதை பத்து பேருக்கு வீட்டுலயிருந்தே சொல்லிக்குடும்மா’ -ன்னு பசங்க  சொன்னதுக்கப்பறம், இப்போ பதினஞ்சு பசங்களுக்கு ட்யூஷன் எடுக்கறேன். சில நேரங்கள்-ல குழந்தைகள் தான் பெத்தவங்களுக்கு வாழ்க்கையைப் புரியவைக்கராங்க.

சரி….சரி…..காலைல நேரமாவே ஊரிலிருந்து கிளம்பி இருப்பீங்க. முதல்ல சாப்டுட்டு மீதியை அப்பறம் பேசிக்கலாம்’ என்று சொன்ன சரஸ்வதி

“ஆச்சா திவ்யா?” என்று கேட்க,

“ஆச்சும்மா” என்று இரண்டு தலை வாழை இலைகளை தோட்டத்திலிருந்து  எடுத்துக் கொண்டு வந்தாள்.

திவ்யா, ஜனனி, புவி மூவருமாக சாப்பிட்டு முடிக்க, அப்பாவும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார் .

“வாங்கம்மா, எப்படி இருக்கீங்க?” என்றவர், “நல்லா ரெஸ்ட் எடுங்க. சாயங்காலம் பேசிக்கலாம். ரெண்டு நாள் இங்க தான இருக்கப் போறீங்க. எல்லா இடத்தையும் சுத்தி பாப்பீங்களாம்’ என்றார்.

ஊரிலிருந்து வந்த களைப்பில் இருவரும் நன்றாக சாப்பிட்டு  உறங்கிப் போயினர்.

“ஏம்மா, அந்த அக்காவுங்க பைக் அழகா இருக்குல்ல. நானும் பெருசானா இந்த மாதிரி பைக் தான் ஓட்டப் போறேன்” என்றாள் திவ்யா.

சாயங்காலம் எழுந்ததும் திவ்யாவையும் கூட்டிக் கொண்டு மூவருமாக அருகிலிருந்த பொட்டானிகல் கார்டனுக்கு சென்றார்கள்.

மலைப் பிரதேசத்துக்கே உரிய வேஷ்டி, கோட் சகிதம் கையில் குடையுடன் நடக்கும் வயதான ஆண்களையும், கையில் பின்னிய ஸ்வட்டர், ஷால் மற்றும் கயிறு கட்டிக் கொள்ளும் ஸ்கார்ப்ஃபுடன் பெண்களும் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

“கவனிச்சு பாத்தா, வயசானவங்க எல்லாரும் அவங்கவங்க சொந்த ஊர்ல  நல்லா தான் இருக்காங்க. அளவான சத்தான சாப்பாடு, சரியான தூக்கம், வேலை செஞ்ச காலத்துல அளவான சம்பளமானாலும்  நிறைவான வாழ்க்கைன்னு எந்த கவலையுமில்லாம ஆரோக்கியமாத் தான் வாழ்ந்துகிட்டு  இருக்கறாங்க.

ஆனா,  நாம தான் வேலை வேலைன்னு ஊர் ஊரா தேடி ஓடி கை நிறைய சம்பாதிக்கறோம். நமக்குன்னு பக்கத்துல யாருமில்லாம, இருக்கறவங்கள புடிக்குதோ இல்லையோ சகிச்சுகிட்டு, சந்தோஷமா தான் வாழறோம்னு நம்மையே நாம ஏமாத்திகிட்டு ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகிட்டிருக்கோம்” என்றாள் புவி.

“உனக்கென்ன. நீ  வெளியூர்ல நல்ல வேலை கிடைச்சு  சந்தோஷமா இருக்க. படிச்சு முடிச்சிட்டு இன்னும் வேலை கிடைக்காம  எத்தனை பேர் ஏதோ கிடைக்கற  வேலைக்குப் போறாங்க தெரியுமா? இதுல அம்மாவோட புலம்பல் வேற. உங்கக்கா மாதிரி நீயும் உன் சொந்த கால்ல நிக்கணும்னு எப்பப்பாரு அட்வைஸ். பொறந்தாலும் ரெண்டாவது குழந்தையா பொறக்கவே கூடாதுப்பா. உன் பழைய ட்ரஸ்ஸைப் போடறதுல இருந்து எல்லாத்துக்கும் உன்னை வச்சே ஒப்பிட்டு பேசறது வரைக்கும் கொடுமை” என்றாள் திவ்யா.

“நீதான கூடவே இருக்க. உங்கிட்ட தான் சொல்லுவாங்க. எனக்கெல்லாம் பத்தாவது வரைக்கும் எங்கம்மா கூட உக்காந்து படிக்க வைப்பாங்க. இவளை என்ன பண்றன்னு கூட கேக்கறதில்ல ஜனனி. அந்த அளவு இவளுக்கு சுதந்திரம் குடுக்கறாங்க. இவ என்னைப் பேசறா பாரேன்” என்ற புவியிடம்,

“உண்மையா சொல்லணும்- னா எனக்கு உங்க ரெண்டு பேரைப் பார்த்து பொறாமையா இருக்கு. ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடறதும், பாசமா இருக்கிறதும் ஒரே பொண்ணா இருக்கற எனக்கு பார்க்கவே கொஞ்சம் பொறாமையா இருக்குன்னு தான் சொல்லணும். ஆனா, சண்டை போடும் போது மட்டும் “அப்பாடா, நல்லவேளை நமக்கு தம்பி, தங்கச்சியெல்லாம் இல்ல-ன்னு சந்தோஷப்பட்டுக்கறேன்” என்று சொல்ல மூவருமாக மனம்விட்டு சிரித்தனர்.

வீட்டைச் பற்றி கேட்டபோது, “அப்பாவுக்கு இப்பல்லாம் பெருசா முடியறதில்ல. நாங்களா பெருசா எங்கயும் வெளிய போறதில்ல. நீ வரும் போது தான் நாம எல்லாரும் சேர்ந்து வெளிய போறோம் என்றவள் நான் ஆடிட்டர் ஆகலான்னு நெனைக்கிறேன். நீ என்ன நெனக்கற” என்றவளிடம்

“உனக்கு எது புடிச்சிருக்கோ அதை நல்லா படி. அம்மா அப்பாகிட்ட நான் பேசறேன்” என்றாள் புவி.

இவர்கள் உட்கார்ந்து கொண்டிருப்பதை தூரத்திலிருந்து ஒருவன் பார்த்துக் கொண்டே இருக்க, சட்டென அதை கவனித்த புவி நிதானித்து “யாரு திவ்யா அது?” என்றாள்.

‘அது ஒண்ணுமில்ல. என் கூட படிக்கிற பையன் தான். பேரு விவேக். ஆனா நீ நெனக்கற மாதிரி எதுவும் இல்ல’ என்றாள் திவ்யா.

‘நான் எதுவும் நெனச்சு கேக்கலையே. நீ தான் என்னன்னு சொல்லணும்’ என்றவுடன்,

“உன்கிட்ட சொல்லணும்னு தான் முதல்லயே நெனச்சேன். ஆனா, உன்னை தொந்தரவு பண்ண வேண்டாம்னு விட்டது தான் நான் செஞ்ச பெரிய தப்பு. அவனா வந்து ஒருநாள் என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னான். இதைத்  தெரியாத்தனமா நம்ம அப்பாகிட்ட சொல்லீட்டேன்.

அடுத்த நாளிலிருந்து இன்னைக்கு வரைக்கும் அப்பா தான் என்னை வண்டியில பள்ளிக்கூடத்துக்கு போய் விட்டுட்டு கூட்டிகிட்டு வர்றாரு. தனியா சைக்கிள்-ல ஸ்கூலுக்கு கூட போக விடறதில்ல. அதுக்கப்பறம் ஏண்டா அப்பாகிட்ட சொன்னேன்னு ஆயிடுச்சு” என்று வருத்தப்பட்டாள்.

“நான் எந்த ஊர்ல இருந்தாலும் சரி, எந்த நேரமாயிருந்தாலும் ஒரு பிரச்சனைன்னா உடனே யோசிக்காம கூப்பிடு. நீ அப்பா செல்லமா இருக்கலாம். அப்பா அவரோட வேலை விஷயத்துல தைரியசாலி. ஆனா குடும்பத்தை பொறுத்தவரை கொஞ்சம் எமோஷனலா தான் யோசிப்பாரு. அதே அம்மா வீட்டுலயே தான் இருக்கற மாதிரி இருப்பாங்க. ஆனா இந்த மாதிரி விஷயத்துல ரொம்ப நிதானமா யோசிச்சு தெளிவா முடிவெடுப்பாங்க. இப்ப நான் வெளியில் போய் வேலை பாக்க அம்மா தான் முக்கியமான காரணம். அதனால எதாவதுன்னா மறைக்காம அம்மாகிட்ட முதல்ல சொல்லு” என்றவள், “இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்றதும்

“அவர் மிரட்டினதுலயே  அவன்  என்னைப் பார்த்தா பத்து அடி தள்ளிப் போயிடறான். ஒரு ப்ஃரெண்டா கூட என்னால பார்க்க முடியறதில்ல.  நீயும் எதையாவது சொல்லி வைக்காத” என்றவளிடம்

“நல்லாயிருக்குடி. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு மனுஷன கடிச்ச கதையா  பொழுது போகாததுக்கு உனக்கு நான் கிடைச்சேனா. நல்லா   பேசக் கத்துகிட்ட” என்றாள் புவி.

பார்க்கில் வாங்கிய சுட்ட சோளக்கருதை சாப்பிட்டபடியே நடந்து வந்தவர்கள் வண்டியில் வீடு திரும்பினார்கள்.

இரவு எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, “இன்னைக்கு எப்படி போச்சு. பார்க் போயிட்டு வந்தீங்களாமே?”  என்று புவியின் அப்பா முரளி கேட்க,

இன்னைக்கு வெதர் சூப்பரா இருந்ததுப்பா. வரும் போது பொன்னம்மாக்கா கடைல சோளக்கருது வாங்கீட்டு வந்தோம். அவங்க பொண்ணை இந்த வருஷம் காலேஜ்ல சேத்தப் போறேன்னு சந்தோஷமா சொன்னாங்க” என்றாள்.

இந்த ஊருக்கு வந்தப்ப பொன்னம்மா கல்யாணமாகி சின்னப் பொண்ணா வந்தா. புருஷன்  நடத்திகிட்டு இருந்த  கடையை அவன் இறந்ததுக்கப்பறம் தனியாளா ஒரு பெண் குழந்தையையும் வச்சுகிட்டு நடத்தினா.

அவன் கூட சம்பாதிச்ச காலத்துல  குடிச்சே காசை தண்ணியா செலவழிச்சான். ஆனா, இந்த பொண்ணு ராத்திரி பகல் பார்க்காம உழைச்சு மகளை நல்லா படிக்க வைக்கறா. அந்த பொன்னியோட உழைப்பு  வீண் போகல. அவ பொண்ணு  நல்லா  வரணும்’ என்றவர்,

சரி…..சரி….காலைல ஏழு மணி போல சீக்கிரமே எல்லாரும் ரெடியாகிடுங்க. அப்பத் தான் எல்லா இடத்துக்கும் போய்ட்டு வரமுடியும். சீக்கிரம் தூங்கி எழுந்திரிக்கப் பாருங்க” என்று சொல்ல, ஜனனி புவியைச் பார்த்தாள்.

“என்னம்மா, ஏன் அப்படி பாக்கறீங்க. ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. உங்களுக்கு எதுக்கு சிரமம். நாங்க வண்டியிலே கூட போயிட்டு வந்திடுவோம்” என்றாள் ஜனனி.

“வீட்டுல நாலு பேரும்  சேர்ந்திருந்தே நாளாயிடுச்சு. இவங்க அம்மாவும் எங்கேயும் போறதில்ல. திவ்யாவும் மீதி நாள்ல ஸ்கூல், ட்யூஷன்னு போயிடறா. நாளைக்கு ஊர் முழுக்க சுத்தீட்டு, நாளை மறுநாள் கும்பாபிஷேகத்துக்கு எல்லாருமா கோவிலுக்குப் போயிட்டு வந்தா நல்லா இருக்குமேன்னு நெனச்சேன்” என்றார்.

“அப்ப சரிப்பா. காலைல நாங்க ரெடியா இருப்போம்” என்று உடனே பதிலளித்தாள் புவி.

அடுத்த நாள் காலை சீக்கிரமே குடும்பத்துடன் காரில் கிளம்பியவர்கள் முதலில் எமரால்டு ஏரியை அடைந்தனர். சாரல் மழைத்துளிக்கு நடுவே ஏரியில் நீருக்கு மேல் பனிமூட்டங்கள் கடந்து செல்வதைப் பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமாக இருந்தது.

இரண்டு படகை சவாரிக்கு எடுத்துக் கொண்டவர்கள் ஒரு மணி நேரம் சுற்றி விட்டு பிறகு அருகிலிருந்த அண்ணா பூங்காவிற்குச் சென்று சற்று நேரம் இளைப்பாறினர். அங்கிருந்து அண்ணாமலையார் கோவில் தரிசனத்தை முடித்துக் கொண்டு கரடி குகைக்குச் சென்றனர்.

அங்கே பழங்காலத்தில் நிறைய கரடிகள் அந்த குகைகளில்  தங்கியிருந்ததாகவும் பிறகு அதிக மக்கள்  குடியேற்றத்திற்குப் பிறகு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள்  சென்று விட்டதாகவும் பேசிக் கொண்டார்கள்.

அதனருகே சுற்றுலாவாசிகளை (மலையேறுதல்) ட்ரெக்கிங் அழைத்துச் செல்வதற்கான தனியார் அலுவலகமொன்று இருந்தது.  

“நாம வேணா   ட்ரெக்கிங் போகலாமா?” என்ற ஜனனியிடம்

“எங்கப்பா கண்டிப்பா  விடமாட்டார். இப்படி நாங்க வெளிய வந்தே பல நாட்கள் ஆயிடுச்சு. இந்த தடவை வாரக் கடைசில கோவில் விசேஷம் வந்ததுனால நல்லதா போச்சு. எல்லாரும் சேர்ந்திருக்கோம்” என்றவள்

இன்னும் பகோடா பாயிண்ட், கிள்ளியூர் நீர்வீழ்ச்சியெல்லாம் வேற போகணும். இன்னைக்கு முழுக்க இதுக்கே நேரம் சரியா இருக்கும். நாளைக்கு கோவில் விசேஷம் வேற. அம்மா நாளைக்கு கோவிலுக்குப் போக சீக்கிரமே வேற கிளம்ப சொல்வாங்க. அதனால ட்ரக்கிங் தனியா இன்னொரு தடவை பாத்துக்கலாம்” என்றாள் புவி.

“உண்மைல இவ்வளவு இடம் சுத்திப் பார்க்க இருக்கும்னு நெனக்கவே இல்ல” என்றவளிடம்,

“எப்பவும் பக்கத்துல இருக்கற பொக்கிஷம் யாருக்கும் தெரியாததும்மா. அது எல்லா ஊருக்கும் பொதுவானது  தான். ஒரு இடத்துலே இருக்கறவங்க இன்னொரு இடத்துல விசேஷமாக என்ன இருக்குன்னு பார்ப்பாங்களே தவிர அவங்க இடத்தோடு அருமை தெரியாது.  தெரிஞ்சாலும் பெருசா சொல்லிக்க மாட்டாங்க. ஆனா, ஒரு பயணம் தான் நம்மள நிறைய யோசிக்க வைக்கும். நிறைய அனுபவத்தைக் கத்துக்குடுக்கும்.

இந்த மலைல நிறைய மூலிகைகள் இருக்கு. அதே மாதிரி இங்க மாகாணி கிழங்கு இந்த ஊர் ஸ்பெஷல். மலைக்காரங்க, பழக்கப்படுத்திய  பன்றிகளைக் காட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போய் நிலத்துக்கு கீழ இருக்கற மாகாணி கிழக்குகளைப் பறிச்சுட்டு வந்து சந்தைல விப்பாங்க. வெளியூர் வியாபாரிங்க கூட இங்கிருந்து எல்லா ஊருக்கும் வியாபாரத்துக்கு வாங்கீட்டுப் போவாங்க” என்றவள்,

ஒரு முப்பது வருஷம் முன்னாடி ஏற்காடு இன்னும் பசுமையா இருந்தது. அப்பறம் நிறைய ஹோட்டல், லாட்ஜ்- னு கட்ட ஆரம்பிச்சு ஒரு நகரம் மாதிரி ஆகிடுச்சு. கொஞ்சம் வருஷம் முன்னாடி இங்க இருக்கற தோட்டக்காரங்க, மக்கள்-னு எல்லாரும் சேர்ந்து அரசைக் கண்டிச்சு போராட்டம் பண்ணினதுக்கப்பறம் அதிகாரிங்க எல்லாரும் வேற வழியில்லாம சில பல ஹோட்டல் கட்டற முதலாளிகளைப் பகைச்சுகிட்டாலும் கட்டடம் கட்ட அனுமதி தராம மறுத்தாங்க.

அப்பறம் ரெண்டு வருஷம் அடிச்சுப் பெஞ்ச் கனமழைல ஊரே பழையபடி மாறிப்போச்சு. இயற்கையை அது போக்குல விட்டுடணும். வெயில் காலத்துல வனவிலங்குகள் சாதாரணமாக தண்ணியைத் தேடிக்கிட்டு தான் ஊருக்குள்ள வரும். அங்கங்க காட்டுக்குள்ள அரசாங்கம் தண்ணி தொட்டி வசதி ஏற்படுத்திக் கொடுத்தா ஊருக்குள்ள வனவிலங்குகள் இறங்காதுங்க” என்று நடக்கும் உண்மையான சம்பவங்களையும், பிரச்சனையையும் அதற்கான தீர்வுகளையும் அடுக்கினாள் சரஸ்வதி.

“ஆன்ட்டி, நீங்க ரியலி கிரேட். எத்தனை விஷயம் பேசறீங்க. இது தான். ஒருத்தரைப் பார்த்து சாதாரணமா எடை போடக்கூடாதுன்னு சொல்வாங்க. ஒரு ஃபாரஸ்ட் ஆபீஸர் மாதிரி எல்லா விஷயத்தையும் பேசறீங்களே” என்றதும்

“நான் பொறந்து வளர்ந்ததே இங்கதாம்மா. நாங்க ரெண்டு பேரும் சொந்தம் தான். அதனால என் வாழ்க்கை முழுக்க முழுக்க இந்த மலையைச் சுத்தியே தான் இருக்கும்” என்றவள்

“பகோடா பாயிண்ட் வந்துடுச்சு. நானும் அப்பாவும் வண்டியிலிருந்து இறங்கி பக்கத்துல உட்கார்ந்துக்கறோம். நீங்க மூணு பேரும் போய் எல்லாத்தையும் பாத்துட்டு வாங்க” என்று சொல்லி வழியனுப்பினாள்.

பிறகு பகோடா பாயிண்ட் -ல் இருந்து சேலம் உட்பட மலைக்குக் கீழே இருக்கற நிலப்பகுதிகள் அனைத்தும் அழகாய்த் தெரிய, கை எட்டும் தூரத்தில் வானில் மேகக்கூட்டங்கள் நகர்வதையும் காண முடிந்தது.

திரும்ப வரும் போது  கிள்ளியூர் நீர்வீழ்ச்சியில் குளித்தவர்கள் ஹோட்டலில் சாப்பிவிட்டு களைத்துப் போய் வீடு வந்து சேர்ந்தனர்.

இரவு ஜனனியின் அம்மா ஃபோனில் அழைக்கவும், போய் வந்த விவரங்களைச் சொன்னவள் நகரத்துல இருந்து வரவங்களுக்கு, இந்த ஊர் ஒரு குட்டி ஊட்டி மாதிரி இருக்கும்மா’ என்று தன்னுடைய கருத்தைச் சொன்னாள். பிறகு இரு பெற்றோர்களும் தங்களுக்கிடையே நலம் விசாரித்துக் கொண்டனர்.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 23) – ஜெயலக்ஷ்மி

    வீழ்வேனென்று நினைத்தாயோ (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி