2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இதுவரை:-
மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் புவியின் மீது ரிஷி காதல் வசப்படுகிறான். தானுண்டு தன் வேலையுண்டு என்று யாரிடமும் அவ்வளவு எளிதாக பழகாத புவி ஜனனியின் யதார்த்தமான போக்கினை நேசிக்கிறாள். முதல் மாத சம்பளத்தில் தன் கனவான இரு சக்கர வாகனத்தை வாங்கும் ஜனனி அதில் புவியை உட்காரச் சொல்ல, இருவரும் ஊரைச் சுற்றிவிட்டு ஒரு கடையில் இரவு உணவை சாப்பிடுகின்றனர்.
இனி:
பிறகு இருவருமாக வண்டியில் புவியின் அடுக்கு மாடி குடியிருப்புக்கு வந்து சேர்ந்தனர். வண்டியின் முன்பக்கமிருந்த ஜனனியைப் பார்த்து சிறிது குழப்பமடைந்த செக்யூரிட்டி, பின்னால் உட்கார்ந்திருந்த புவியைப் பார்த்ததும் சல்யூட் அடித்து கேட்டைத் திறந்து விட்டார்.
பல அடுக்குமாடி குடியிருப்புக்களுக்கிடையே ப்ளாக்-டியின் பத்தாவது தளத்தில் இரண்டாவது வீடாக இருந்தது புவியின் வீடு.
இரண்டு படுக்கையறை, சமையலறை, ஹால், டைனிங் மற்றும் குளியலறை என வீடு மிகவும் கச்சிதமாகவும் அதே சமயம் அழகாகவும் இருக்க, எல்லா அறைகளின் சுவற்றிலும் அழகான ஓவியங்கள் இருந்தன.
புவி, “வீடு ரொம்பவே லட்சணமா இருக்கு. நல்லா மெயின்டெயின் பண்றீங்க. அதைவிட இந்த பெயிண்ட்டிங்ஸ். ரொம்பவே அழகா இருக்கு” என்ற ஜனனியிடம்,
“என்னைக்காவது தோணும் போது வரைய ஆரம்பிச்சுடுவேன். ஆனா, கடைசியா நான் படம் வரைஞ்சே பல மாசம் ஆயிடுச்சுன்னு நெனக்கிறேன்” என்றாள் புவி.
“நீங்க வரைஞ்சதா? தயவுசெஞ்சு விடாம தொடர்ந்து வரையுங்க புவி. எல்லாருக்கும் எல்லாமும் வராது. ரியலி வெரி ப்ரொபஷனல் புவி. நான் எதிர்பார்க்கவே இல்ல. நெறைய திறமையை இன்னும் வெளிய காமிக்காமலேயே வச்சுருக்கீங்க போல இருக்கே” என்றவளிடம்,
“இது நானா ஏதோ வரைய ஆரம்பிச்சதுதான் ஜனனி. எந்த வகுப்புக்கும் போனதில்ல. நேரம் கிடைக்கும் போதெல்லாம் வரைய ஆரம்பிச்சுடுவேன். ஏற்காடு முழுக்க பச்சை பசேல்-னு மலை, மரம், செடி, கொடி, தோட்டம்-னு வளர்ந்ததாலயோ என்னவோ எனக்கு இயற்கையை ரொம்பவே பிடிக்கும். அதனால என்னோட பெயிண்டிங்க்ஸ் இயற்கையையும், மனிதர்களின் உணர்வுகளையும் தான் பிரதான அம்சமா வெளிப்படுத்தும்” என்றாள் புவி.
“உண்மைதான். என்ன தான் படிப்பு, வேலைன்னு வெளியூர்ல இருந்தாலும் சொந்த ஊர் என்பதே தனி ஃபீல் தான். அதுவும் நீங்க மலைப் பிரதேசத்துல இருக்கறவங்க வேற. கேட்கணுமா? இயற்கையோட மடியில இருக்கற சுகம் வேற எங்க கிடைக்கும்?” என்ற ஜனனி,
“சரி, உங்களுக்கு இந்த ஊர் பிடிச்சுதா?” என்றாள்.
“ரொம்பவே பிடிச்சது ஜனனி. எங்க ஊருக்கெல்லாம் அதிக பஸ் கூட கிடையாது. ஏற்காடுல இருந்து கரடியூர் போற வழியில ஒரு கிராமத்துல தான் எங்க வீடு இருக்கு. மினி பஸ்ஸுல தான் எங்க ஊருக்கே போகணும். ஏதாவது விசேஷம்னா அதிகபட்சமா நாங்க எல்லாரும் எங்க ஊர்ல இருந்து சேலத்துக்கு வந்து டிரஸ் வாங்குவோம். ஆனா இங்கயோ சாப்பிட, தங்க, வெளிய போகன்னு எல்லாத்துக்குமே வசதிகள் அதிகம். முதல்ல சேலத்துல காலேஜ் படிச்ச போது கொஞ்சம் வெளியுலகம் பழகிகிட்டேன். அப்பறம் பெங்களூர் வந்ததும் இங்க தான் நமக்கான வாழ்க்கை இருக்குன்னு முடிவு பண்ணீட்டேன்” என்றாள் புவி.
“இந்த வீட்டுல எப்படிதான் தனியா இருக்கீங்களோ?” என்றவளிடம்,
“அப்பப்போ வீட்டுல இருந்து அம்மா, அப்பா வந்தாங்கன்னா தங்க வசதியா இருக்கும்னு தான் பி.ஜி., ஹாஸ்டல்னு பார்க்காம வீடாவே பார்த்தேன். அதனால இருந்து தான் ஆகணும்” என்று சிரித்தாள்.
“சூப்பர்’ங்க. ஆனா, நீங்க தெய்வம் தான். ஆஃபீஸ், வீடுன்னு ரெண்டையும் எப்படித்தான் பாத்துக்கறீங்களோ? எனக்கெல்லாம் சத்தியமா முடியாது. சரி, நேரமாச்சு. நான் கிளம்பறேன். இல்லண்ணா அந்த வார்டனுக்கு வேற பதில் சொல்லணும்” என்ற ஜனனி அரைமணி நேரம் இருந்துவிட்டு கிளம்பிச் சென்றாள்.
பிறகு மார்ச் மாத அலுவலகப் பணியில் எல்லோருக்குமே வேலைப் பளு கூடிப்போக, ஒரு நாள் மதியம் நீண்ட நாள் கழித்து எதேச்சையாக எல்லோரும் கேண்டீனில் ஒன்று கூடினர்.
அரட்டை அடித்துக் கொண்டே கலகலவென சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் சத்தத்தைக் கேட்டபடியே வந்த மாலினி, “வாட் ஈஸ் திஸ்… கொஞ்சமாவது எல்லாருக்கும் பொறுப்பிருக்கா. மார்ச் மாதம் ஓடிகிட்டு இருக்கு. அட்மின்ல அக்கௌண்ட்ஸ் டிபார்ட்மென்ட் தீயா வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. நீங்க என்னன்னா எந்த கவலையுமில்லாம ஜாலியா லஞ்ச் சாப்டுட்டுகிட்டே அரட்டை அடிச்சுகிட்டு இருக்கீங்க” என்றாள்.
அவங்களுக்கு வருஷத்துல ஒரு மாசம் தான் டென்ஷன் மேம். எங்களுக்கு ஒவ்வொரு ப்ராஜக்ட்டும் நல்லபடியா முடியற வரைக்கும் டென்ஷன் தான். அதே மாதிரி நாம வேலை செஞ்சா தான் அவங்களுக்கு வேலை. அப்பறம், எத்தனை தான் நாங்க வேலை செஞ்சாலும் அதைவிட அதிகமா வேலை செய்யணும்னு டார்கெட் குடுத்து மீட்டிங்ல எப்படியும் எங்களை திட்ட தான் போறீங்க. சரி, அதுக்கு தான் சாப்பிடும் போதாவது நிம்மதியா சாப்பிடலாமேன்னு வந்தோம்” என்று வைஷ்ணவி சொல்ல,
“அட, இப்ப வந்த மாதிரி இருக்க. அதுக்குள்ள நல்லா பேச கத்துகிட்டயே வைஷு” என்றாள் மாலினி.
“உண்மை தான மாலினி. வைஷூ சரியாத் தான் சொல்றாங்க. பேசாம டாக்டர், சயிண்டிஸ்ட்’ன்னு படிச்சிருந்தாலாவது நிம்மதியா இருந்திருக்கலாம் போல” என்றான் டெக்னிகல் ஹெட் மதன்.
“அப்படியெல்லாம் நெனக்காத மதன். என்னோட ஸ்கூல் ப்ரண்ட் ஒருத்தி டாக்டர் ஆகியே தீரணும்னு எம்.பி.பி.எஸ் படிச்சா. படிப்பு முடிஞ்சதுக்கப்பறம் பெருந்துறைல இருக்கற ஒரு அரசு மருத்துவமனைல பயிற்சிக்காக ஒரு வருஷம் இருந்து ரொம்ப கஷ்டப்பட்டா. அங்க, ஒரு நாளைக்கு நாற்பது பிள்ளைப்பேறு கேஸ் வருமாம். ஒன்னு மாத்தி ஒன்னுன்னு டெலிலரி வேலையை முடிச்சுட்டு ஏதோ அவசர அவசரமா சாப்ட்டுட்டு ரூமுக்கு போய் படுத்தா, அடுத்த நாள் விடிஞ்சுடும். அதுக்குள்ள ஏண்டா பொழுது விடியுதுன்னு இருக்கும்னு புலம்புவா. அதனால ஒவ்வொரு வேலையிலயும் ஒரு கஷ்டம் இருக்கும். எப்பவும் அக்கறைக்கு இக்கறை பச்சை தான்” என்றாள் மாலினி.
“ஓ.கே. மேம். ஒத்துக்கறோம். ஆனா, இப்ப போய்கிட்டு இருக்கற ப்ராஜெக்ட்டை நாங்க எல்லோரும் சேர்ந்து நல்லபடியா முடிச்சோம்னா நாம எல்லாரும் சேர்ந்து ஒரு பெரிய ட்ரிப் போக நீங்க தான் ஏற்பாடு பண்ணணும். நீங்க ஓ.கே. சொன்னா கண்டிப்பா அட்மின்ல ஒத்துப்பாங்க” என்று வைஷு சொல்லவும் “எஸ் மேம், ப்ளீஸ் மேம்” என்று கோரஸாக எல்லோரும் கேட்டனர்.
“இதைத் தான் சொந்த காசுல சூனியம் வச்சுக்கறதுன்னு சொல்லுவாங்க. நானே வந்து உங்ககிட்ட மாட்டிகிட்டேனா” என்றவள், “சரி….சரி…..பாஸ்கிட்டயும், டிபார்ட்மென்ட் ஹெட் கிட்டயும் கண்டிப்பா இதைப்பத்தி பேசறேன்” என்றாள்.
“ஹே…..” என்று கூச்சலிட்டவர்கள் எல்லோரும் உண்மையில் அந்த வருட வருடாந்திர மீட்டிங்கை ஆவலோடு எதிர்பார்த்தனர்.
அலுவலகத்தில் பணிநிமித்தமாக சிலசமயம் ரிஷியை பார்த்த போதும் கூட அநாவசியமான பேச்சைத் தவிர்த்தாள் புவி.
நிர்வாக அதிகாரிகள் புவி, மாலினி, மதன் என அனைவரும் வருடாந்திர நிகழ்ச்சியின் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்க, நிறுவனத்தின் எம்.டி. பாலசுப்பிரமணியம் டெல்லியிலிருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்ததும் அவரை வரவேற்பதிலிருந்து நிறுவனத்தின் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு டெல்லிக்கு அவர் திரும்பும் வரை உண்டான அனைத்து பொறுப்பினையும் ரிஷி ஏற்றுக் கொண்டிருந்தான்.
எம்.டி ரிஷியுடன் காரில் நிகழ்ச்சிக்கு வந்து சேர, மதனும், புவியும் எம்.டி-க்கு வரவேற்புரை வழங்கினார்கள். ஆடிட்டர் ரங்கநாதன் அந்த வருடத்திற்கான ஆண்டுக் கணக்கினைப் படிக்க, அதன்பின் உரையாற்றிய எம்.டி. பாலசுப்பிரமணியம் நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் தன் வாழ்த்துக்களைச் சொல்லியபடி தன்னுடைய பேச்சை ஆரம்பித்தார்.
அந்த வருடத்திற்கான இலாபத்தைக் குறிப்பிட்டு பாராட்டிப் பேசியவர் அதற்காகப் பாடுபட்ட அத்தனை பணியாளர்களுக்கும் தன் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதோடு ஊதிய உயர்வினையும் அறிவித்தார்.
நிர்வாகத்தின் திறமை வாய்ந்த பணியாளர்களால் தான் மேலும் பல வெளிநாட்டு ப்ராஜெக்ட் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயுள்ளது என்ற சந்தோஷமான விஷயத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டவர் அடுத்த ஆண்டு இன்னும் மென்மேலும் நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பணியாளர்கள் நிறுவனத்தின் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாட, அனைவரும் விரும்பியபடி நிர்வாகச் செலவில் சுற்றுலா ஒன்றினை ஏற்பாடு செய்து கொண்டு சென்று வர அனுமதி அளித்த எம்.டி. எல்லோரையும் வாழ்த்தினார்.
ஹே…..என்று குழந்தைகள் போலக் கூச்சலிட்ட பணியாளர்கள், பார்வையால் மாலினிக்கு நன்றியைத் தெரிவித்தனர்.
“நம்ம காலத்துல ஒரு நிறுவனம்னா வேலை செய்யறவங்களுக்கு ஒரு பயம் இருக்கும். இன்னைக்கு இருக்கற பசங்களுக்கு எப்பவும் எல்லாத்துலயும் ஒரு விளையாட்டுத்தனம் தான் இருக்கு சார்” என்று ஆடிட்டர் ரங்கநாதன் சொல்ல
“காலம் மாற மாற நாமளும் கொஞ்சம் மாறணும் ரங்கநாதன் சார். இந்த பசங்க தான் இத்தனை லாபத்தையும் நம்ம நிறுவனத்துக்கு சம்பாதிச்சுக் கொடுத்திருக்காங்க. அவங்ககிட்ட வெறும் விளையாட்டுத்தனம் மட்டுமில்ல, அசாத்திய திறமையும் சேர்ந்தே இருக்கு. வாழ்க்கை முறையே நம்ம காலத்தை விட இப்ப நெறைய மாறியிருக்கு. அதனால நாமளும் அவங்களோட சேர்ந்து கொஞ்சம் மாறலாம். தப்பில்லை. மாற்றம் ஒன்னு தான் மாறாதது சார்” என்றவர்,
“ஓ.கே. கைஸ். இதே மாதிரி வரப் போற வருஷத்துலயும் உங்களோட பர்ஃபார்மன்ஸ் இன்னும் நல்லா இருக்கணும். எல்லாரும் சந்தோஷமா வெற்றியைக் கொண்டாடுங்க. பை” என்றவர் ரிஷியுடன் கிளம்பிச் சென்றார்.
எந்த ஊருக்குப் போகலாம் என்ற பேச்சு வர, “எந்த ஊருன்னாலும் சரி. சூட்டோட சூடா ஊருக்கு போய்ட்டு வந்துடணும். இல்லண்ணா எல்லாரும் சேர்ந்து போவது அவ்வளவு சீக்கிரம் அமையாது” என்று மதன் சொல்ல ,
கோவா, கொடைக்கானல், டார்ஜ்லிங் என் பல இடங்களை பரிசீலித்து இறுதியில் கேரளாவிலிருக்கும் வாகமென் என்ற இடத்தைத் சுற்றுலா பயணத்திற்காக எல்லோரும் ஒருமனதாய்த் தேர்ந்தெடுத்தார்கள்.
கிடைக்கும் நான்கு நாட்களில் பயண நேரத்தைக் குறைத்துக் கொண்டு எல்லோரும் சேர்ந்து இருக்கும் நேரம் அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பியதால் நான்கு நாள் பயணமாக வாகமென் சென்றுவர அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்தனர்.
எல்லோரும் அவரவர் நண்பர்களுடன் ஊருக்கு செல்லப் போவதைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, புவி தன் அலுவலகப் பணியை செய்து கொண்டிருந்தாள்.
“எல்லாரும் இவ்வளவு சந்தோஷமா ஊருக்குப் போறதப் பத்தி பேசிகிட்டு இருக்காங்க. இதுல கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத மாதிரி நீங்க மட்டும் வந்து உட்கார்ந்து வேலை செய்யறது நல்லாவா இருக்கு?” என்ற ஜனனியிடம்,
“எங்க வீட்டுல எல்லாம் சத்தியமா விட மாட்டாங்க. நானும் ஊருக்குப் போய் நாளாச்சு. இந்த நாலு நாள் நிம்மதியா நான் ஊருக்குப் போய்ட்டு வருவேன்” என்றவளிடம்
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் உங்க வீட்டுல பேசறேன். நம்ம இந்த தடவை கண்டிப்பா டூர் போறோம்” என்றாள் ஜனனி.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings