in , ,

அரூபன் (பயணம் 2) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இரயில் பயணம்… 2

ரயிலின் ஜன்னல் வழியாக வீசிய பெங்களூரின் மெல்லிய காற்று, குமரனின் முகத்தை வருடிச் சென்று கொண்டிருந்தது. ஈரோட்டில் அவனும், அருகில் அமர்ந்திருந்த ஆறுமுகமும் பெங்களூர் செல்வதற்காக ரயில் ஏறி கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆகியிருந்தது.

ரயில் நிலையங்களில் ஆங்காங்கே போர்டுகளில் தென்பட்ட கன்னட எழுத்துக்கள் ரயில் பெங்களூரை நெருங்கிவிட்டதை உணர்த்தின. அருகில் அமர்ந்திருந்த ஆறுமுகத்தைத் திரும்பிப் பார்த்தான் குமரன். மெல்லிய குறட்டை ஒலியுடன் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார் அவர்.

குமரனின் தாத்தாவுக்கு ஆறுமுகம் மிகவும் நெருங்கிய நண்பர். ஆனால் பாவம்…. அவருக்கும் சில குடும்பப் பிரச்சினைகள் இருந்தன. அவரின் பரம்பரை சொத்துப் பிரச்சினைக்காக ஈரோடு கோர்ட், சென்னை கோர்ட் என்று அலைந்து இப்போது டெல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்.

கோர்ட்டுக்குப் போவதற்கும் வருவதற்குமாக,‌ ரயில் பயணித்திலேயே வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்ததால், ரயில் பிரயாணம் அவருக்கு எந்த அசெளகரியமும் கொடுப்பதில்லை. .

கல்லூரிப் படிப்பு முடிந்து முதல் வகுப்பில் பாஸ் செய்தவுடன், வீடு தேடி வேலை வரும் என்ற அறியாமையில் இருந்தவ‌ன் குமரன். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அடித்துப் பிடித்து டிகிரி முடித்துவிட்டு ஊரில் சும்மா இருந்த ஒரு வருடத்தில் உருப்படியாகச் செய்த ஒரே காரியம் அருகில் இருந்த கொடுமுடி சென்று டைப்பிங் படித்து முடித்ததுதான்.

கிராமத்தில் அனைவரும் அவன் வேலையைப் பற்றி கேட்கத் தொடங்கவும், குமரனின் அம்மாவும் அப்பாவும் அவனின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டுபோய் ஒரு நல்ல ஜோசியரிடம் காண்பித்தனர். 

கட்டங்களில் கணக்குப் போட்டு முடித்த அந்த ஜோசியர் சொன்னார்,  ‘பையனின் கிரக நிலை இருக்கும் சூழ்நிலையில் கொஞ்சம் மந்தமாகத்தான் எல்லா காரியமும் நடக்கும். ஆனால் தொடர்ச்சியாக ஒரு முப்பது நாட்கள் காலையும், மாலையும் அஞ்சனை மைந்தனை அதாவது ஆஞ்சனேயரை வழிபட்டு வந்தால் பையனுக்கு நல்லது நடக்க வாய்ப்பிருக்கு..’.

ஜோசியர் கூறியதை வேத வாக்காக மதித்து, குமரனை கொடுமுடியில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் அவனின் பெற்றோர். தாத்தா காலையில் எழுந்து, காவிரி ஆற்றில் குளித்து விட்டு, ஆற்றங்கரையில் இருக்கும் மகுடேஸ்வரர் ஆலயத்தில் தரிசனம் செய்து முடித்துவிட்டுத்தான் காலை உணவு அருந்துவார்.

அதே நடைமுறையைத் தவறாமல் மாலையிலும் பின்பற்றுவார். தாத்தா பாட்டியுடன் தங்கி, குமுரனும் தினமும் காலையும் மாலையும் ஜோசியர் கூறியபடி ஆஞ்சனேயரை தவறாமல் தரிசித்து வந்தான்.

முப்பது நாட்கள் முடிய இன்னும் இரண்டு நாட்கள்தான் இருந்தன. அப்போதுதான் எதிர் வீட்டிலுருக்கும் ஆறுமுகம், தாத்தா வீட்டிற்கு வந்தார். பொழுது போகாதபோது தாத்தாவிடம் வந்து அரட்டை அடித்துவிட்டுப் போவது அவர் பழக்கம். அவரிடம் தாத்தா வழக்கம் போல் புலம்பினார்.

‘குமரனுக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டால் போதும். முதல் வகுப்பில் டிகிரி பாஸ் செய்திருக்கிறான். டைப்பிங் பாஸ் செய்து விட்டான். வேலைக்கு இன்னும் நல்ல நேரம் வரவில்லை. என்ன செய்வது?’. தாத்தாவின் குரலில் பேரனுக்கு வேலை கிடைக்காத ஆதங்கம் தொனித்தது.

கொஞ்சம் யோசனை செய்த பிறகு ஆறுமுகம் தாத்தாவிடம் சொன்னார்,

‘என் அக்கா பையன் பழனிச்சாமி பெங்களூரில் ‘டாட்டா இன்ஸ்ட்டியூட்’டில் வேலை செய்கிறான். மனைவியை இழந்த அவன், தன் ஒரே பெண்ணை அவன் அம்மாவின் பொறுப்பில் கொடுமுடியில் விட்டிருக்கிறான். பெங்களூரில், சேசாத்திரிபுரத்தில் ஒரு பேச்சிலர் லாட்ஜில் தங்கியிருக்கிறான். பெங்களூரில் அவனுக்கு கர்நாடக மாநில ஹெல்த் மினிஸ்டரிடத்தில் நல்ல பழக்கம். அவன் நினைத்தால் நிச்சயம் குமரனுக்கு பெங்களூரில் வேலை வாங்கிக் கொடுக்க முடியும். அப்படி நடந்தால் நான் மாதம் ஒரு முறை என் பெண்ணைப் பார்க்க பெங்களூர் போகும்போது குமரனையும் பார்த்து விட்டு வந்து விடுவேன். உங்க நல்ல நேரம் தன் பெண்ணைப் பார்ப்பதற்கு நேற்று பழனிச்சாமி கொடுமுடி வந்திருக்கிறான். நாளைக்கு இதே நேரம் அவனை இங்கே கூட்டி வருகிறேன். குமரனை டிகிரி சர்டிபிகேட் எல்லாம் எடுத்து வைத்து தயாராய் இருக்கச் சொல்லுங்க. பழனிச்சாமி என்ன சொல்றான்னு பார்க்கலாம்’ என்றார்.

தாத்தாவுக்கும் குமரனுக்கும் அப்போதே வேலை கிடைத்ததைப் போல மகிழ்ச்சி நெஞ்சில் பரவியது. ஆறுமுகமும், பழனிச்சாமியும் மனித உருவில் வந்த தெய்வங்கள் போலவே தோன்றினர் குமரனுக்கு.

‘ஆஞ்சனேயரைக் கும்பிட்டது வீண் போகவில்லை.. பார்த்தாயா?’ என்றார் பக்கத்திலிருந்த பாட்டி. 

அடுத்த நாள் பழனிசாமியுடன் வந்தார் ஆறுமுகம். ஏதோ நேர்காணலுக்குப் போகும் படபடப்புடன் காத்திருந்தான் குமரன். கிராமத்துச் சூழ்நிலையில் வளர்ந்திருந்ததால், ஆங்கிலப் பேச்சு அவனுக்கு இன்னும் தடுமாற்றமாகவே இருந்தது. 

பழனிச்சாமி ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் புரிந்து கொண்டு எப்படி பதில் சொல்வது என்பதை மனதிற்குள் ரிகர்சல் பார்த்துக்கொண்டிருந்தான் குமரன். நல்ல சிவந்த நிறத்தில், மீசையை ம‌ழித்துக்கொண்டு, பேண்ட் இன் பண்ணி, பெல்ட் அணிந்து, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு இந்தி நடிகர் தேவ் ஆனந்தைப் போல இருந்தார் பழனிச்சாமி. அறிமுகப் படலம் முடிந்தவுடன் குமரனின் சர்டிபிகேட்டுகளைப் பார்த்து விட்டு, வியப்புடன் அவனைப் பார்த்தார்.

‘கணக்குல மூணு சப்ஜக்ட்ல செண்டம் வாங்கியிருக்கிறே? உனக்கா வேலை கிடைக்கல? அன்பிலீவபிள்’ என்றார். முழுதும் ஆங்கிலம் பேசாமல் இடையிடையே தமிழில் பேசியதால் குமரனுக்கு கொஞ்சம் ஆசுவாசமாயிற்று.

‘பெங்களூர்ல எச்.எம்.டி., ஐ.டி.ஐ. பி.எச்.ஈ.எல்.. போன்ற தொழிற்சாலைகள் நிறைய இருக்கின்றன. உன் மார்க்குக்கு எப்படியும் வேலை கிடைச்சுடும். ஆனா, இங்கிருந்து முயற்சி செய்வதை விட நீ பெங்களூர் வந்து என்னோட தங்கி முயற்சி செய்யணும். வேலை கிடைக்க ரெண்டு மூணு மாசம் கூட ஆகலாம். அதுக்கு தயாரா வந்துடு’ என்றவர் ஆறுமுகத்திடம் திரும்பி,

‘மாமா, நீங்க அடுத்த தடவை உங்க மகளைப் பார்க்க பெங்களூர் வரும்போது குமரனையும் கூட்டிக்கிட்டு வாங்க… என் ரூம்லயே தங்கி வேலைக்கு முயற்சி செய்யட்டும்’ என்று அனைவரிடமும் விடைபெற்று கிளம்பியவர், ஆறுமுகத்தைக் கூப்பிட்டு அவர் காதில் ஏதோ கிசுகிசுத்துவிட்டுச் சென்றார். அவரை அனுப்பிவிட்டு திரும்பி வந்த ஆறுமுகம்,

‘பழனிச்சாமி என்ன சொல்றான்னா… பெங்களூர் மாதிரி இடத்தில தங்கி வேலை தேட நிறைய‌ செலவாகும். அதனால் குமரன் வரும்போது அவனின் செலவுக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்து விடச் சொன்னான்’ என்று அதிர்ச்சி கொடுத்தார்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளில் மூவாயிரம் என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு பெரிய தொகை. இருந்தாலும், குமரனின் தாத்தா எங்கெங்கோ அலைந்து, யார் யாரிடமோ பிராண்டி, மூவாயிரம் ரூபாயை குமரனிடம் கொடுத்து, ஆறுமுகத்தோடு அவனை பெங்களூர் அனுப்பி வைத்தது பெரிய கதை. 

தூங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம் உள்ளுணர்வின் உந்துதலில் திடீரென்று விழித்து வெளியே எட்டிப் பார்த்தார்.  

‘இன்னும் அஞ்சு நிமிசத்தில ‘கண்டோன்மெண்ட்’ ஸ்டேசன் வந்துரும். அங்க எறங்கினா என்னோட‌ பொண்ணு வீடு இருக்கும் அல்சூர் போக பக்கமா இருக்கும்’ என்று குமரனிடம் விவரித்தார். அவர் கூறியது ஒன்றும் புரியவில்லை என்றாலும் புரிந்தது போல் குத்துமதிப்பாக தலை ஆட்டி வைத்தான்.

‘நம்ப நேரா பொண்ணு வீட்டுக்குப் போயி குளிச்சுட்டு, டிபன் சாப்பிட்டுட்டு அதுக்கு அப்புறம் சேசாத்திரிபுரம் போய் பழனிச்சாமியைப் பார்க்கலாம். இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை.. எப்படியும் ஒன்பது மணி வரை அவன் ரூமில் இருப்பான். அதற்குள் போயிடலாம்’ என்றார்.

ஸ்டேசனை விட்டு வெளியே வந்து ஆட்டோ பிடித்து ‘அல்சூர் போப்பா’ என்றார் டிரைவரிடம்.

மகள் வீட்டில் இறங்கியவுடன் ‘குமரா, ஆட்டோவுக்கு சார்ஜ் குடுத்துட்டு வா..’ என்று நகர்ந்தார். தாத்தாவின் பணம் மூவாயிரத்திலிருந்து முதல் பட்டுவாடாவைத் தொடங்கினான் குமரன்.

ஆறுமுகத்தின் மகள் வீட்டில் குளித்து, டிபன் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பி ஆட்டோவில் சேசாத்திரிபுரம் வந்த போது மீண்டும் தாத்தாவின் காசிலிருந்து ஆட்டோ சார்ஜ் முப்பது ரூபாய் குறைந்தது.

இரண்டு கட்டில் போடப்பட்டிருந்த அந்த லாட்ஜின் அறையில் ஒரு கட்டிலில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார் பழனிச்சாமி. கொடுமுடியில் பார்த்த தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறாக வெள்ளை முண்டா பனியனும், லுங்கியும், தூங்கி எழுந்தவுடன் இருக்கும் கலைந்த தலையுமாக இருந்தார். தலைமுடியும் வெளுத்திருந்தது.

‘போன வாரம்தான் இந்த ரூமில் இருந்த மற்றொருவர் காலி செய்தார். உனக்காக இந்தக் கட்டிலைப் பிடித்து வைத்திருக்கிறேன். மேனேஜர் வந்தால் ஒரு மாத வாடகை அறுபது ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிடு’ என்றார் பழனிச்சாமி.

பழனிச்சாமி வாங்கிக் கொடுத்த காபியைக் குடித்துவிட்டு மகள் வீட்டுக்குக் கிளம்பினார் ஆறுமுகம். கிளம்பும் முன்பு தனியாக குமரனைக் கூப்பிட்டு, காசை சிக்கனமாகச் செலவு செய்யும்படியும், விரைவில் ஒரு வேலையைத் தேடிக் கொள்ளவும் அறிவுரை கூறிச் சென்றார். 

அடுத்து வந்த இரண்டு மாதங்கள், குமரனுக்கு புதிய வேறொரு உலகத்தை பெங்களூர் அறிமுகப்படுத்தியது. பகலில் கூட ஏ.சி. போட்டதுபோல் இருக்கும் பெங்களூரின் கிளைமேட், நூறு அடிக்கு ஒன்று என்று எங்கும் நிறைந்திருக்கும் சினிமா தியேட்டர்கள், அதில் காலை ஒன்பது மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடக்கும் சினிமாக் காட்சிகள், எல்லா மொழிக்காரர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் அதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என்று ஓடும் பல மொழிப் படங்கள், எட்டு ரூபாய்க்கு எங்கும் கிடைக்கும் ‘கல்யாணி’ பீர், இது தமிழ்நாடோ என்று ஐயுறும் வகையில் பெட்டிக் கடைகளில் தொங்கும் எண்ணற்ற தமிழ்ப் பத்திரிகைகள், காசில்லாமல் அனுபவிப்பதற்கென்றே இருக்கும் கப்பன் பாக், லால் பாக், எம்.ஜி.ரோட், எந்த ஊரிலும் கிடைக்காத சுவையான மசால் தோசை, பிஸி பேளா பாத் என்று இதுவரை அவன் வாழ்வில் பார்த்திராத, அனுபவிக்காத சுகங்கள். இடையிடையே பழனிச்சாமி ‘டெக்கான் ஹெரால்ட்’ பேப்பரில் பார்த்துச் சொல்லும் வேலைகளுக்கு விண்ணப்பித்தல், இண்டர்வியூ போவது என்று இருந்தாலும் ஏனோ குமரனுக்கு சரியான வேலை மாத்திரம் கிடைக்கவில்லை. அவனின் தடுமாற்ற ஆங்கிலம் ஒரு காரணமோ என்ற சந்தேகம் அவனுக்கே இருந்தது.  

அந்த ஊர் மக்களின் மற்றொரு திறமை அவனை ஆச்சரியப்பட வைத்தது. யார் எந்த மொழியில் கேட்டாலும், அதே மொழியில் பதில் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். அதைப் பார்த்து ரோசம் வந்து ‘முப்பது நாட்களில் கன்னட பாஷை’ புத்தகம் வாங்கி படிக்க ஆரம்பித்தான் குமரன்.

கமலும், சரிதாவும் நடித்த ‘ மரோ சரித்திரா’ என்ற தெலுங்குப் படம் சென்ட்ரல் தியேட்டரில் நூறு நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. குமரனும் தன் பங்குக்கு ஐந்து முறை பார்த்ததில், தெலுங்கு பேசினால் புரிந்து கொள்ளும் அளவு தேர்ச்சி பெற்றான்.

தினமும் இரவில் அறைக்கு வரும்போது பழனிச்சாமி தள்ளாட்டத்துடன்தான் வருவார். அதே போல் ஞாயிறுதோறும் அவர் குதிரை ரேஸ் போவதும் தவறாது. மாதக்கடைசிகளில் அவ்வப்போது அவனிடம் கொஞ்சம் பணம் கடன் வாங்குவார். தவறாமல் சம்பளம் வந்ததும் கொடுத்து விடுவார்.

சில சமயம் மந்திரியைப் பார்க்கப் போக வேண்டும் என்று ஆட்டோ சார்ஜ் கேட்டு வாங்கிப் போவார். நாட்கள் செல்லச் செல்ல அக்கம் பக்கத்து ரூம் நண்பர்களும் மாதக் கடைசியில் அவனிடம் கடன் வாங்கத் தொடங்கினர். ஆனால், அவர்களும் சம்பளம் வந்தவுடன் தவறாமல் திருப்பிக் கொடுத்து விடுவதால், குமரனுக்கு பெரிய சங்கடங்கள் எதுவும் ஏற்படவில்லை.

கையில் இருக்கும் பணம் இன்னும் ஒரு மாதத்துக்குத்தான் வரும் என்ற நெருக்கடியான நிலை வந்தபோதுதான், குமரனுக்குக் கொஞ்சம் பயம் பிடித்தது. 

ஒரு நாள் காலை குளிக்கலாம் என்று தோளில் துண்டுடன் குமரன் கிளம்பும்போது, பக்கத்து அறையில் இருக்கும் ஜின்னா வந்தான். குமரனின் வயதுதான் அவனுக்கும் இருக்கும். இந்த இரண்டு மாதப் பழக்கத்தில் அவனிடத்தில் குமரனுக்கு நல்ல நட்பு உண்டாகியிருந்தது. சொந்த ஊர் வேலூர் என்று கூறியதாக ஞாபகம். பிரைவேட் கம்பெனி ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் இருப்பதாகக் கூறியிருக்கிறான்.

‘எனக்குத் தெரிந்த ஒரு ஃபேக்டரியில டைப்பிஸ்ட் வேலை காலி இருக்குது. உனக்கு விருப்பம் இருந்தா நாளைக்கு என்னோட வா. கூட்டிக்கிட்டுப் போய் முதலாளிக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். முதலாளி எனக்குத் தெரிந்தவர்தான். நல்ல மனிதர். ஆனா, சம்பளம் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்..’ என்றான்.

அவன் வார்த்தைகள் நெஞ்சில் பால் வார்த்தது போல் இருந்தது. நெருக்கடியான சமயத்தில், அந்த ஆஞ்சநேயரே ஜின்னாவின் வடிவில் வந்ததாகத் தோன்றியது. ‘என்ன சம்பளம் என்றாலும் சரி.. நாளைக்குப் போகலாம்’ என்றான் குமரன் தீர்மானமாக.

‘ரூபவாணி இன்டஸ்ட்ரீஸ்’ என்று எழுதியிருந்த போர்டின் கீழ் லேசாகத் திறந்திருந்த கதவு வழியாக உள்ளே நுழைந்தார்கள் குமரனும், ஜின்னாவும். உள்ளே இடது புற மூலையில் ஒரு மேஸ்திரியும் மூன்று இளைஞர்களும் மெட்டல் தகடுகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள்.

மற்றொரு பகுதியில் ஒரு பெயிண்டர் மாத்திரம் தனியாக பீரோ ஒன்றிற்கு பச்சைக்கலர் ஸ்பிரே பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் கம்ப்ரசர் ஒன்று மெல்லிய ஒலியில் ஓடிக்கொண்டிருந்தது.  

ஜின்னாவைப் பார்த்து மேஸ்திரியும்,பெயிண்டரும் கை அசைத்தனர். மாடியைக் காட்டி ‘முதலாளி இருக்கிறார், போ’ என்பதுபோல் ஜாடை காட்டினர். அருகில் இருந்த மரப்படியின் வழியாக ஜின்னா குமரனை மேலே உள்ள ஆபீஸ் அறைக்கு அழைத்துச் சென்றான்.

‘வாப்பா ஜின்னா.. எங்கே ரொம்ப நாளா காணோம்..’ என்று வரவேற்றவர்தான் முதலாளியாக இருக்க வேண்டும். குள்ளமாக, குண்டாக, கருப்பாக நெற்றியில் விபூதிப் பட்டையுடன் நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார். அப்போதுதான் சாமி கும்பிட்டிருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில், ஊதுபத்திகள் வாசத்தை வீசிக்கொண்டிருந்தன.   

‘கொஞ்சம் வேலை அதிகம் சார். அதான் வர முடியல. இவர் என் நண்பர் குமரன். நீங்க ஒரு டைப்பிஸ்ட் வேணுமின்னு சொல்லியிருந்தீங்கல்ல.. அதுக்காக கூட்டி வந்தேன். டிகிரி முடித்திருக்கிறார். டைப்பிங் பாஸ் பண்ணியிருக்கிறார்’ என்று குமரனை அறிமுகப் படுத்திவிட்டு, ‘இவர்தான் முதலாளி.. எல்லப்பா’ என்று இருவரையும் அறிமுகப் படுத்தி வைத்தான் ஜின்னா.  

‘இப்ப ஆர்டர் நிறைய வருது. நானும் ரொம்ப நாளா ஆபீசைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். நல்ல சமயத்தில் கூட்டி வந்தாய்.. ‘ என்று ஜின்னாவைப் பாராட்டிவிட்டு, குமரனின் ஊர், குடும்பம் பற்றி விசாரித்தார். 

‘சரி.. எப்ப இருந்து வேலைக்கு வரீங்க’ என்றவுடன்

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கும்பராசியும் கோவிந்தசாமியும் (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.

    தங்க பிரேஸ்லெட் (சிறுகதை) – சுஶ்ரீ