2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘அம்மா, எரியற கொள்ளியில எண்ணெய விடற மாதிரி ஆச்சுமா நீ பண்ணினது…‘ என்று போனில் திட்டிவிட்டாள் மஞ்சுளா. மகள் திட்டுவதைக் கேட்டு திகைத்துப்போய் வாயடைத்தும் நின்றாள் மரகதம்.
இரண்டு நாட்கள் முன்பு பக்கத்து ஊரில் ஒரு பெரிய காரியத்துக்காகப் போயிருந்தாள் மரகதம். அங்கே மஞ்சுளாவின் மாமியாரும் வந்திருந்தார். அவர் அங்கே வருவார் என்று மரகதம் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் சம்பந்தியை பார்த்தும் பார்க்காதது போல நகர்ந்து போய்விட்டாள், மரகதம்.
காரணம் அவள்மேல் இருந்த எரிச்சல்தான். எத்தனை தடவை மஞ்சுளா போன் போட்டு அழுதிருக்கிறாள் அவள் செய்யும் கொடுமைகளையெல்லாம் சொல்லிச் சொல்லி.
‘அம்மா, காலைல உப்புமா பண்ணும்போது உப்பு கொஞ்சம் கூடுதலாப் போச்சுமா… ஒரு உப்புமா பண்ணத்தெரியலை… நீயெல்லாம் எப்படித்தான் குப்பை கொட்டப் போறியோன்னு திட்டிட்டாங்கம்மா…‘
‘நேத்திக்கு, ரெண்டு தடவை கூப்பிட்டிருக்காங்கம்மா… நான் கவனிக்கலை… நான் ரூமுக்குள்ளே மொபைல்ல பேசிட்டிருந்தேனா… உள்ளே வேகமா வந்தவங்க என்னைக் கூப்பிட்டு வச்சு, ’நான் அம்பது தடவை கூப்பிட்டிட்டேன், என்னன்னு வந்து கேட்கலை… பகல்ல அப்படி என்ன நமநமன்னு பேச்சு, நான் கூப்பிடறது கூட காதுல விழாத அளவுக்குன்னு… ‘ கேவலமா திட்டிட்டாங்கம்மா… ‘
எத்தனை தடவை இப்படி போன் போட்டு அழுதிருக்கிறாள் மஞ்சுளா.
மாமியாருக்கு பயந்து பக்கத்து வீட்டுக்கு போகிறமாதிரி போய் அங்கிருந்து அம்மாவுடன் பேசுவாள், அல்லது மொட்டை மாடிக்கு போய் நின்றுகொண்டு அங்கிருந்து பேசுவாள். ஒவ்வொரு தடவையும் அழுதுகொண்டேதான் பேசுவாள் அவள். மரகதத்திற்கு நெஞ்சு கனத்து கண்கள் கசிந்துவிடும்.
கல்யாணத்திற்கு பெண் கேட்டு வந்தபோது, ‘உங்க பொண்ணை எங்க பொண்ணு மாதிரி பார்த்துக்குவோம்ங்க… தைரியமா உங்க பொண்ணை கொடுங்க…‘ என்று தேனொழுகப் பேசி கட்டிக்கொண்டு போய்விட்டு, இப்போது இப்படியா பாடாய் படுத்தி வைப்பார்கள் என்று பல தடவைகளில் உள்ளுக்குள் கொதித்திருக்கிறாள், மரகதம்.
கல்யாணமாகி மூன்று மாதம்தான் ஆகிறது. ஆனாலும் ஏதோ ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது போல ஒரு பிரமை, மரகதத்திற்கு… அத்தனை போன்கள், புலம்பல்கள், அழுகைகள்… மஞ்சுளாவிடமிருந்து.
அதனால்தான் சாவு காரியத்திற்கு போயிருந்தபோது, அங்கே வந்திருந்த சம்பந்தியை எதேச்சையாய் பார்த்தும், பார்க்காதது போல முகத்தைத் திருப்பிக்கொண்டு வந்து விட்டாள் மரகதம்.
ஊருக்கு திரும்பிப் போனதும் மருமகளை பிடிபிடியென்று பிடித்திருக்கிறாள் சம்பந்தி. ‘உங்கம்மா என்ன எலிசபெத் ராணியா… இளவரசியை கட்டிக்கொடுத்துட்டாங்களா… என்னை பார்த்தும் பார்க்காதது போல போய்ட்டாங்க. என் பக்கத்துல உட்கார்ந்திருந்தவங்கள்லாம் என்னை எவ்வளவு கேவலமா பார்த்தாங்க தெரியுமா… அப்படி நான் என்ன உங்கம்மாவைப் பிடுங்கி வச்சேன்… போயி நூறு பவுன் நகைபோட்டுக்கிட்டு வான்னு உன்னை துரத்தினேனா… இல்லை உங்க மருமகனுக்கு ஆடி கார் வாங்கி கொடுன்னு புடுங்கினேனா… இல்லை இருபது லட்சம் ரொக்கமா வாங்கிட்டு வான்னுதான் உன்ன ஓட்டிவிட்டேனா… என் மேல அப்படியென்ன காண்டு உங்கம்மாவுக்கு… அங்கே என்னை சுத்தியிருந்தவங்கள்லாம், ‘உங்க சம்பந்தி கூட ஏதாவது சண்டையா என்ன… ’னு என்கிட்டே துக்கம் விசாரிக்கறமாதிரி விசாரிச்சாங்க தெரியுமா… உங்கம்மாவால எனக்கு மானம் போச்சு… மரியாதை போச்சு… ’ என்று கொதித்திருக்கிறாள் மருமகளிடம்.
பிறகுதான் அம்மாவிடம் போனில் அதையெல்லாம் சொல்லி, ’எரியற கொள்ளியில எண்ணெய விடறமாதிரி ஆச்சுமா நீ பண்ணினது… ‘ என்று அம்மாவை திட்டியிருக்கிறாள் மஞ்சுளா.
மரகதமும் விக்கித்து நின்றாள். ஆனாலும் சுதாரித்துக்கொண்டு, ‘ஏன்டி… அப்படிச் சொல்றே… என் மகளை பாடாய்படுத்தி வைக்கறாங்களே, அவங்களை பார்த்து கொஞ்சிக்கச் சொல்றியா… என்னால முடியாது…‘ என்றவள், ‘இன்னொருதடவை உன்கிட்டே திமிரா பேசினாங்கன்னா பேசாம இங்கே கிளம்பி வந்திடு… நாங்க பார்த்துக்கறோம்… பொறுத்துப் பொறுத்து போனா இவங்களுக்கு ரொம்பத்தான் இளக்காரமா போச்சு…மயி….‘ என்று சொல்லக்கூடாத வார்த்தைகளால் அர்ச்சித்தாள் மரகதம்.
அதுவரை ஆத்திரமும் கோபமுமாய் அவள் பேசிக்கொண்டிருந்ததையெல்லாம் பொறுமையாய் கவனித்துக் கொண்டிருந்த சிவராமன், மெல்ல எழுந்து அவளருகில் போனார்.
‘மரகதம்… உன் வயசுக்கு நீ பேசறது கொஞ்சம் கூட நல்லாயில்லை தெரியுமா… வாழற புள்ளைய தாயார் கெடுத்தாள்னு ஒரு பழமொழி உண்டு… அப்படி இருக்கு நீ இப்போ பேசறது… குடும்பம்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும்… ‘ நீதான் அனுசரிச்சு போகணும் ‘ னு மகளுக்கு புத்திமதி சொல்லுவியா… அதைவிட்டுட்டு, ‘ நீ கிளம்பி இங்கே வந்துடு… நாங்க பார்த்துக்கறோம்‘னு சொல்றியே… இதெல்லாம் நல்லாவா இருக்கு… பொண்ணை வாழறதுக்கு அனுப்பிவச்சோமா, இல்லை வாழாவெட்டியா திரும்பி வர்றதுக்கு அனுப்பிவச்சோமா… ‘ என்று சத்தம் போட்டார். உடனே அவள் கையில் இருந்த மொபைலைப் பிடுங்கிகொண்டு மகளை ஒரு பிடிபிடிப் பிடித்தார்.
‘பாரு மஞ்சும்மா… நீங்க ரெண்டு பெரும் பேசினதையெல்லாம் நானும் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்… நீ உங்கம்மா சொல்றான்னு கிளம்பி இங்கே வந்துடப்போறே… உனக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. உலக அறிவு தெரியணும்னுதான் உன்னை படிக்க வச்சோம்… உன்கிட்டே ஏதாவது குறையிருந்தா, அதை அவங்க சொல்லத்தான் செய்வாங்க… நீதான் அதை நிவர்த்தி பண்ணிக்கணும்… அதை விட்டுட்டு அவங்க அதைச் சொல்றாங்க, இதைச் சொல்றாங்கனு அம்மாக்கிட்டே போன் போட்டு போன் போட்டு சொல்லிக்கிட்டிருந்தா, பெற்றவங்க மனசு கஷ்டப்படத்தான் செய்யும், மகள் புகுந்தவீட்டுல போயி கஷ்டப்படறாளேன்னு கோபப்படத்தான் செய்யும்… அதுக்காக சண்டைப் போட்டுக்கிட்டு ஓடிவர்றதா… ‘ என்று சொல்லி நிறுத்தியவர் மனைவியை பார்த்து முறைத்தபடியே தொடர்ந்தார்.
‘மஞ்சுமா… சாமிக்குப் படைக்கறதுக்கு வேணா எச்சில் படாம சமைக்கலாம்… மத்தபடி ருசி பார்த்துக்கிட்டு சமைக்கக் கூடாதுன்னு யார் சொன்னாங்க… ஒருதடவைக்கு ரெண்டு தடவை உப்பு போதுமா, காரம் போதுமான்னு டேஸ்ட் பார்த்து சமையேன்… உன்னை யாரு தடுக்கப் போறா… அப்புறம் எதுக்கு உன்மேல குறையும் சொல்லப் போறாங்க… உப்பைக் கொட்டி உப்புமா கிண்டினா திட்டத்தான் செய்வாங்க… பசி நேரத்துல சாப்பிடக் கிடைக்கலைன்னா யாருக்குதான் கோபம் வராது…
அதே மாதிரி ரூமுக்குள்ளே நீ பேசிக்கிட்டிரு… ஆனா காதை தீட்டி வச்சுக்கோ… மாமியார் கூப்பிடலாம், மாமனார் கூப்பிடலாம், காலிங் பெல் அடிக்கலாம், அடுப்புல வச்ச குக்கர் கூட சவுண்டு குடுக்கலாம்… நாமதான் கவனமா இருக்கணும்… அதை விட்டுட்டு ஒரு விஷயத்துல மட்டும் நாம கவனம் செலுத்திகிட்டிருந்தா எப்படி குடும்பம் நடத்த முடியும்… நீ இன்னிக்கு அந்தக் குடும்பத்துக்கு மருமகள்… நாளைக்கு நீ ஒரு அம்மாவாகனும், ஒரு மாமியாராகனும், பாட்டியாகனும்… ஆலமரமா விரிஞ்சு நிக்கப்போற ஒரு பெரிய குடும்பத்தை நிர்வாகிக்கணும்… இப்போதிருந்தே எல்லாத்தையும் கத்துக்கனும்மா…
அதுதான் படிச்சப் பொண்ணுக்கு அழகு… சின்னச் சின்ன கோபதாபங்களை சகிச்சுக்கத்தான் வேணும், விட்டுக்கொடுக்கப் பழகிக்கணும்… அதான் வாழ்க்கை… பொறுமையா உட்கார்ந்து யோசி… அப்பா சொல்றது புரிய வரும்… இப்போ போனை வச்சிடட்டுமாம்மா… ‘
மறுமுனையில்… ‘ரொம்ப சரிப்பா ‘ என்றுவிட்டு போனை அவள் துண்டிப்பது கேட்டது சிவராமனுக்கு. போனை வைத்துவிட்டு திரும்பியவர் மரகதம் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, ‘ ஏன் மரகதம், அழறியா என்ன… ‘ என்றார் கேலியாய்.
‘ஸாரிங்க… என் அறிவுக்கண்ணை திறந்திட்டீங்க… அதுல இருந்து கொஞ்சம் கண்ணீர் கசிஞ்சிடுச்சு… வேறொன்னுமில்லை… ‘ என்றாள் அழுகையும் சிரிப்புமாய்…!
சிவராமனும் புன்னகைத்துக்கொண்டார்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
இந்தக் கதையை இத்துடன் நூறு பேர் படித்து விட்டனர். அனைவருக்கும் நன்றி. உங்களது கருத்துகளையும்இந்தப் பகுதியில் பதிவிட்டு ஊக்குவிக்க வேண்டுகிறேன். மீண்டும் நன்றி.