2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“கே.பி.எஸ்.கல்லூரி”யின் பெண்கள் விடுதியில் அறை எண்.56-லிருந்து வந்த கூச்சலாலும் ஆரவாரத்தினாலும் அந்த இரவு நேரத்தின் அமைதி அநியாயத்திற்கு பாழாகிக் கொண்டிருந்தது.
பக்கத்து அறை வாசிகளுக்கு அது மாபெரும் தொந்தரவாய் இருந்த போதிலும் அதை நேரில் போய்க் கேட்கவோ… அல்லது பிரின்ஸிபாலிடம் புகார் கொடுக்கவோ யாருக்குமே தைரியம் இல்லாத காரணத்தால் வாயையும்… காதையும்… அப்படியே தங்கள் அறைகளின் கதவுகளையும் இறுகச் சாத்திக் கொண்டு கிடந்தனர்.
அறை எண் 56-ல் வாசம் செய்யும் நால்வரில் தலைவியைப் போல திகழும் அமுதா ஒரு பணக்கார வீட்டின் ஒரே திமிர் வாரிசு என்பதோடு மட்டுமல்லாது அவளின் தகப்பனார் அரசியல் செல்வாக்குப் பெற்ற ஒரு பெரிய தொழிலதிபர் என்பதும் அக்கல்லூரியில் எல்லோருக்கும் தெரிந்தவொன்று. அவளுடன் மோதுவதென்பது சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்வதைப் போல என்பதை எல்லோருமே நன்கு அறிவர்.
“த பாருங்கடி… நாளைக்கு காலேஜூக்கு கட் அடிக்கறோம்… காலைக்காட்சி ஒரு இங்கிலீஸ் மூவி பார்க்கறோம்… மதியம் ‘பார்க்-இன்”ல லன்ச்… அப்புறம் அப்படியே ஷாப்பிங்-மால் போறோம்… ஈவினிங் டிரைவ்-இன் போறோம்… கையிலிருக்கற காசையெல்லாம் செலவு பண்ணிட்டு நைட்தான் ரூமுக்குத் திரும்பறோம்… என்ன… ஓ.கே.தானே?”
அவளது அறைத் தோழிகள் மூவரும் கோரஸாய் “ஓ.கே… டன்..”எனக் கத்தினர்.
சில நிமிட அமைதிக்குப் பிறகு, “ஆனாலும் உனக்கு ரொம்பவே சாமார்த்தியம்டி… நிச்சயம் உன்னால அந்த அருணோட பாக்கெட்ல இருந்து பர்ஸை அடிக்க முடியாதுன்னுதான் நெனச்சேன்… பட்… நீ… சாதிச்சிட்டே…” வெள்ளைத் தோல் விஜயா சொல்ல,
“பின்னே?… நான் யாரு?… என்னோட எகஸ்பீரியன்ஸ் என்ன?… இதுவரைக்கும் கிட்டத்தட்ட இருபது.. இருபத்தஞ்சு பேர்கிட்ட பர்ஸை அடிச்சிருப்பேன்… அவ்வளவு ஏன்… ஒரு தடவ ஒரு பேராசிரியர்கிட்டவே அடிச்சிருக்கேன்னா பார்த்துக்க…” அமுதா பெருமையாய்ச் சொன்னாள்.
“எவ்வளவு பெரிய பணக்காரி நீ?… உன்கிட்ட இல்லாத பணமா?.. அப்புறம் எதுக்கடி இந்த அல்பத்தனமான பழக்கம்?”
“சும்மா… ஒரு தரில்லுக்காக… எப்பவும் என் பணத்தையே செலவு பண்ணிட்டிருந்தா எப்படி?.. இந்த மாதிரி அடுத்தவங்க பர்ஸை ஆட்டையைப் போட்டு அந்தக் காசை செலவு பண்றதுல இருக்கற கிக் வேற லெவலு”
“எப்படியோ கைவசம் ஒரு தொழிலிருக்கு உனக்கு” பாய் கட்டிங் பாவனா சொல்ல,
எல்லோரும் உச்சஸ்தாயில் சிரித்து அக்கம் பக்கத்து அறைக்காரர்களின் வயிற்றெரிச்சலை மொத்தமாய் கொட்டிக் கொண்டனர்.
மறு நாள் காலைக் காட்சியையும், மதிய உணவையும் முடித்து விட்டு ஷாப்பிங் மாலுக்கு வந்து கண்ணில் கண்டவற்றையெல்லாம் அது தேவையா… இல்லையா?… என்பதைப் பற்றிச் சிறிதும் யோசிக்காமல் வாங்கிக் குவித்தது அந்தப் பெண்டிர் கூட்டம். எவனோகிட்ட அடிச்ச காசுதானே?
“ஏய்… போதும்டி… அவன் பர்ஸிலிருந்த பத்தாயிரத்தில் ஒன்பதரை காலி… கடைசி ஐநூறுதான் இருக்கு… அது டிரைவ்-இன்ல திங்கறதுக்குத்தான் ஆகும்… வாங்க… வாங்க” ஐஸ்க்ரீம் வழியும் வாயுடன் அமுதா சொல்ல,
“பரவாயில்லைடி அந்த அருண்… பாத்தா படு சாதாரணமா இருக்கான்… பாக்கெட் மணியா… பர்ஸ்ல பத்தாயிரம் வெச்சிருக்கான்…” சிவப்பு சுடிதார் சுகன்யா வியந்தாள்.
‘ப்ச்… அதைப் பத்தி நமக்கென்னடி… ஒரு ஜாலிக்கு பந்தயம் கட்டினோம்… பர;ஸை அடிச்சோம்… அந்த வெற்றியைக் கொண்டாட அதிலிருந்தே பணத்தை எடுத்து செலவு செய்யறோம்… தட்ஸ் ஆல்…” வெகு எளிதாகச் சொல்லிவிட்டு எழுந்து காரை நோக்கி நடந்த அமுதாவைப் பின் தொடர்ந்தது அந்தக் கூட்டம்.
டிரைவ்-இன்.
“ஆர்டர் ப்ளீஸ்..” காரின் கதவருகே வந்து நின்று வெய்ட்டர் கேட்க,
அமுதா ஐட்டங்களை ஒப்பித்தாள்.
“தேங்க் யூ” சொல்லி விட்டு நகர்ந்த இளைஞனின் குரல் எங்கோ கேட்டது போலிருக்க காருக்கு வெளியே தலையை நீட்டி.. “வெய்ட்டர்… ஒன் மினிட்…” அழைத்தாள்.
திரும்பிய வெய்ட்டரைப் பார்த்து அதிர்ந்தாள்.
அருண்.
தன்னுடன் படிக்கும் சக மாணவிகள் தன்னை அந்தக் கோலத்தில் பார்த்த விட்டதற்காய் அவமானப்பட்டு… கூனிக் குறுகிப் போன அருண் ஏதும் பதில் பேசாது பரிதாபமாய் நின்றான்.
“ஹேய்… அருண்… வாட்ஸ்… திஸ்?… நீ… எப்படி… இங்க?… அதுவும் வெய்ட்டரா?”
“அது… வந்து… அது ஒரு பெரிய கதை… கொஞ்சம் பொறுங்க நீங்க ஆர்டர் பண்ணின ஐட்டங்களை எடுத்திட்டு வந்து பரிமாறிக்கிட்டே சொல்றேன் அந்தக் கதையை…” அவன் ஜாலியாய் சொல்லிவிட்டு நகர காருக்குள்ளிருந்த நாலு பெண்களுக்கும் முகத்தில் ஈயாடவில்லை.
ஐந்தே நிமிடத்தில் திரும்பி வந்த அருண் ஐட்டங்களை நீட்டியபடியே, “நேத்து ஒரு பெரிய சோகமாயிடுச்சு அமுதா… ஊர்ல… எங்க வீட்டுப் பக்கத்துல ஒரு பொண்ணு… அவ பேரு… சாவித்திரி… என்கூட ஸ்கூல்ல படிச்சவ… நீங்கெல்லாம் எப்படி என் மேல் அன்பு காட்டி அக்கறை காட்டி நட்போட பழகறீங்களோ… அதே மாதிரிதான் அவளும்… போன தடவ நான் ஊருக்குப் போயிருந்தப்ப காலேஜ் பீஸ் கட்ட பணம் புரட்ட முடியாம சிரமப்பட்டேன்… அவ ‘டக்”குன்னு தன்னோட தாலியக் கழட்டி என்கிட்ட குடுத்து, “இந்தா இதை வெச்சு காலேஜ் பீஸ் கட்டு… எப்படியும் துபாயிலிருந்து எம்புருஷன் வர இன்னும் மூணு மாசமாகும் அதுக்குள்ளார திருப்பித் தந்துடு” ன்னு சொல்லிக் குடுத்தா… நானும் அதை வெச்சுத்தான் பீஸ் கட்டினேன் இப்ப திடீர்னு அடுத்த மாசம் நாலாம் தேதி எம்புருஷன் வர்றான் தாலிய மீட்டுக் குடுன்னு லெட்டர் போட்டுட்டா… நானும் அங்க இங்க வாங்கி பத்தாயிரம் ரெடி பண்ணிட்டு தாலியை மீட்கப் போனேன்… அங்கதான் விதி வெளையாடிடுச்சு…”
“என்னாச்சு?” தெரியாதவள் போல் கேட்டாள் அமுதா.
“போற வழியிலேயே பர்ஸை எவனோ அடிச்சிட்டான்…” சொல்லி விட்டு மெலிதாய் முறுவலித்தவன் “சரி… எப்படியும் இன்னும் ஒரு மாசமிருக்கல்ல… அதுக்குள்ளார சம்பாதிச்சு மீட்டுடலாம்னுதான் இங்க இந்த டிரைவ்-இன் ஓட்டல்ல பார்ட் டைம் வெய்ட்டரா சேர்ந்தேன்… அப்புறம் இங்க டியூட்டி முடிஞ்சதும் ஒரு அப்பார்ட்மெண்ட்லே நைட் வாட்ச்மேனா போறேன்… ரெண்டிலேயும் வர்ற வருமானம் போதும் தாலியை மீட்க….”
படு காஷூவலாய்ச் சொன்ன அந்த அருணை பிரமிப்புடன் பார்த்தாள் அமுதா.
இரண்டு தினங்களுக்குப் பிறகு அருண் பெயருக்கு கூரியரில் ஒரு பார்சல் வர யோசனையுடன் பிரித்தான். “எனக்கு யாரு அனுப்பறது?”
உள்ளே…
அவன் பர்ஸூம்… அதில் ரூபாய் பத்தாயிரமும் இருந்தது.
கூடவே ஒரு கடிதம்… அதில் ஒரே ஒரு வார்த்தை…
“மன்னிச்சிடுங்க”
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings