2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘அரேபியக் குதிரை மாதிரி இருக்காங்கயில்ல…?’
நடந்து கொண்டிருந்த அணு, யாரோ ஏதோ சொல்கிறார்கள் என்று தெரிந்தவுடன் சட்டென நடையை நிறுத்தி, திரும்பிப் பார்த்தாள். கொஞ்ச தூரத்தில் இரண்டு பேர் நின்றிருந்தனர். அவர்களது பார்வை அவள் மேல்தான் பாய்ந்துகொண்டிருந்து. இவள் பார்த்த மறுகணமே அவர்கள் தங்களது பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்கள்.
அவர்கள்தான் அப்படி பேசியிருக்கிறார்கள், அதுவும் கமென்ட் அடிப்பது போல என்று புரிந்துபோனதும் கோபம் தலைக்கேற, ‘இடியட்ஸ்…’ என்று திட்டிக்கொண்டே தனது இருக்கையில் போய் உட்கார்ந்தாள் அவள்.
அந்தக் கம்பெனியில் அன்றுதான் புதியதாய் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். மேனேஜரிடம் போய் அறிமுகம் செய்துகொண்டு, பிறகு, பர்ஸனல் டிபார்ட்மென்ட்டில் போய் தேவையான பாரங்களை எல்லாம் பூர்த்திசெய்து கொடுத்ததும், ஹெச்.ஆர். அசிஸ்டன்ட் அவளை ஒவ்வொரு டிபார்ட்மென்டிற்கும் கூட்டிக்கொண்டு போய் அவளை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்த பிறகு, ‘நீங்கள் போய் உங்களது இருக்கையில் அமருங்கள். எதிர் சீட்தான் உங்களுக்கான சீனியர் கிளார்க்கின் சீட். அவர் வெளியே போயிருக்கிறார், அவர் வந்ததும் உங்களுக்கு என்னென்ன வேலை என்று விளக்குவார்…‘ என்றுவிட்டு அவர் போன பிறகு தனது இருக்கைக்கு திரும்பினாள் அணு.
அப்படி திரும்பி வந்துகொண்டிருக்கும்போதுதான், பில்லர் ஓரமாய் நின்றிருந்த அந்த இருவரும் அப்படி கமென்ட் அடித்தார்கள். திட்டிக்கொண்டே வந்து இருக்கையில் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
‘அரேபியக் குதிரை‘ என்ற வார்த்தைகள் அவளது காதுகளில் மறுபடியும் மறுபடியும் ரீங்காரமிட்டது. கண் திறந்து பார்த்தாள். ராமனாதன் இன்னும் வரவில்லை. தனக்கு கொடுக்கப்பட்ட கம்ப்யூட்டரை ஆன் செய்தாள். கம்ப்யூட்டரை ஆன் செய்ததும் திரையில் ஓடும் குதிரைகள் பின்னணி படமாக தெரிந்தன. கோபம் கொப்பளிக்க, ‘நான்சென்ஸ்… எவன் இதை இதுல வச்சது…‘ என்று திட்டியபடி பின்னணி படத்தை மாற்ற வேறு படங்களைத் தேடி அழகான பூக்கள் உள்ள படத்தை செலக்ட் செய்து பின்னணி படமாக வைத்தாள். இப்போதுதான் மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.
யோசனை வந்து சட்டென திரும்பிப் பார்த்தாள். அந்த இரண்டு பேரில் ஒருவன் மட்டும் பில்லருக்கு அருகில் இருக்கும் இருக்கையில் உட்கார்ந்திருந்தான். இன்னொருவனைக் காணவில்லை. அவனுக்கு வேறு எங்கோ இருக்கை என்று நினைத்துக் கொண்டாள். அந்த இரண்டு பேரின் பெயர்களும் மனதுக்குள் நினைவுப் படுத்த முயற்சித்துப் பார்த்தாள், முடியவில்லை. என்ன டிபார்ட்மென்ட் என்றும் தெரியவில்லை.
இன்னொருவனை மனக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த முயற்ச்சித்தாள். செக் போட்ட டார்க் ப்ளூ சட்டை போட்டிருந்தான்… மைனர் போல மெலிதான மீசை வைத்திருந்தான்… வேறு எதுவும் ஞாபகத்தில் வரவில்லை.
இவர்கள் அரேபியக் குதிரையைப் பார்த்திருக்கிறார்களா, என்னைப் பார்த்து ஏன் அப்படி கமென்ட் அடித்தார்கள்…
’ இடியட்ஸ்… ‘
எழுந்து போய் மேனேஜரிடம் சொல்லிவிடலாமா. கூப்பிட்டு கண்டிக்காமல் விட்டுவிடுவார்களா என்ன…
ஒருவேளை ‘நாங்கள் வேறு விசயங்களைத்தான் பேசிக்கொண்டிருந்தோம். இந்தம்மாவைப் பார்த்து நாங்கள் கமென்ட் எதுவும் அடிக்கவில்லை… ‘ என்று சொல்லிவிட்டால், என்ன செய்வது…
வந்த முதல்நாளே கம்ப்ளைன்ட்டா என்று மேனேஜர் நம்மேல் தப்பான அபிப்பிராயம் கொள்வாரோ… ஒருவேளை அவர்களே, ‘ இவர் என்ன அரேபியக் குதிரைமாதிரியா இருக்கிறார்… ‘ என்று கேட்டுவிட்டால், நமக்கு அது அவமானமாகப் போய்விடுமோ…
யோசிக்க யோசிக்க மண்டைதான் வலித்தது.
கொஞ்ச நேரத்தில் சீனியர் கிளார்க் ராமநாதன் அவரது இருக்கையில் வந்து உட்கார்ந்தார். மனதை ஒருநிலைப் படுத்திக்கொண்டு எழுந்து போனாள். அவரது இருக்கையிலிருந்து மூன்று சீட்டுகள் தள்ளிதான் அந்த சிவப்பு சட்டைக்கான் உட்கார்ந்திருந்தான். மெல்ல ராமநாதனிடமே அவனது பெயரைக் கேட்டுவிடலாமா என்று யோசித்தாள். உடனே, எதற்கு கேட்கிறாய் என்று அவர் கேட்டால் பிறகு நாம் நடந்ததைச் சொல்லவேண்டிய கட்டாயம் வரலாம்… அவமானமாக போய்விடாதா என்றும் யோசித்தாள்.
வரவேற்று எதிரே இருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னார் அவர். அவளுக்கு என்னென்ன வேலைகள் என்பதை விலாவாரியாகச் சொன்னார். இடையில் இரண்டு மூன்று முறை அந்த சிவப்புச் சட்டைக்காரனை பார்த்தாள். ராமநாதன் சொல்லிக் கொடுத்தது முழுதாக மூளையில் போய் ஏறவில்லை.. அவளுக்கு உண்டான ஃபைல்கள் எல்லாம் அவளது இருக்கைக்கு அருகில் இருக்கும் மேஜை டிராயரில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, அவளை போகச் சொன்னார் அவர்.
ஏதாவது சந்தேகம் வரும்போது இண்டர்காமில் கூப்பிட்டுக் கேட்கலாமென்றும் இன்டர்காம் நம்பர்கள் மேஜை மேல் இருக்கும் என்றும் சொன்னார். திரும்பும்போது இன்னொருமுறை சிவப்புச் சட்டைக்காரனை பார்த்துவிட்டு மனதுக்குள் திட்டியபடியே திரும்பி வந்து உட்கார்ந்து கொண்டாள்.
ஃபைல்களை எடுத்து ஒவ்வொன்றாய் பார்த்தாள். ஒன்றும் புரியவில்லை. மறுபடியும் மறுபடியும் எல்லா ஃபைல்களையும் எடுத்துப் பார்த்தாள். எதுவும் மண்டைக்குள் ஏறவேயில்லை.
‘ ச்சே, முதல்நாளிலேயே மண்டை வலிக்கச் செய்துவிட்டார்களே, நா..கள்… ‘
நினைக்கும்போது ஆத்திரமாய் வந்தது. கமென்ட் அடித்தபோதே ஓடிப்போய், ‘ பளார் ‘ என்று ஆளுக்கு ஒரு அறை கொடுத்திருக்க வேண்டுமோ… இப்போது யோசிப்பதில் பயன் ஒன்றுமில்லையோ என்றும் யோசனை வந்தது.
அதற்குப் பிறகு அந்த விஷயத்தை மறக்க முயற்ச்சித்தாள். ஒருவழியாக மனது கொஞ்சம் லேசாகி, பிறகு ஃபைல்களை எடுத்து ஒவ்வொன்றாய் பார்க்க ஆரம்பித்தாள். சாயங்காலம் ஆறு மணிக்கு எல்லோரும் ஒவ்வொருவராய் கிளம்ப, அவளும் சீனியரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
xxxxxx
வீட்டுக்கு வந்ததும், ‘ எப்படி இருந்தது ஆபீஸ் வேலை ‘ என்று அம்மா கேட்டார்கள். அவளிடம் சொல்லிவிடலாமா என்று யோசித்து பிறகு மனதை மாற்றிக்கொண்டவள், ‘சொல்லிக் கொடுத்தாங்கம்மா… மண்டையிலத்தான் ஏறலை… கண்ணைக்கட்டி காட்டிலே விட்டது மாதிரி இருந்துச்சு… போகப் போக சரியாயிடும்னு நினைக்கிறேன். நிறைய வேலைங்க கம்ப்ப்யூட்டர்லதான்… ’ என்றாள்.
‘ நீதான் கம்ப்யூட்டர் கிளாசுக்கு போனியே. அப்புறம் வேலை ஈசியாத்தானே இருக்கும்…’ என்றார்கள் அம்மா. ‘ ஆமாம்மா ‘ என்றுவிட்டு ‘ கொஞ்சம் கசகசன்னு இருக்குமா, குளிச்சிட்டு வர்றேன், டீ போட்டு வை… ‘ என்றுவிட்டு குளிக்கப் போனாள்.
குளித்துக்கொண்டிருக்கும்போது மறுபடியும் ‘ அரேபியக் குதிரை ‘ என்ற வார்த்தைகள் அவளது காதுகளுக்குள் வந்து எதிரொலித்தது. ஏனோ ஆரம்பத்தில் வந்த கோபம் இப்போது வரவில்லை. குளித்து முடித்து துவட்டிக்கொண்டு நைட்டியை எடுத்து மாட்டிக்கொண்டு ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு வெளியே வந்தவள் நேரே டிரெஸ்சிங் டேபிள் முன் வந்து நின்றாள். முழு நீள கண்ணாடி அவளைக் காட்டியது. இப்படியும் அப்படியும் உடம்பைத் திருப்பி திருப்பிப் பார்த்துக் கொண்டாள். மேலிருந்து கீழ்வரை ஒருமுறை பார்த்தாள்.
‘ ஏ, நீயே அப்படித்தான்டி இருக்கே… ‘ என்று தனக்குள் சொல்லியபடி அவளது உருவத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டாள்.
அந்தப் பக்கமாக போன அவளது அம்மா, அவளை ஒன்றும் புரியாமல் பார்த்தாள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
கடாஅக் களிற்றின் மேல் கட்படாம்
Very nice and interesting g story