எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மணி ஒரு ஐ.டி.கம்பெனிக்காக வீட்டிலிருந்தே வேலை செய்கிறான். காதில் ப்ளூூடூத்தை செருக்கிக்கொண்டு லேப்டாப்பில் மூழ்கியிருந்தான்.
மெல்ல கதவைத் திறந்துகொண்டு எட்டிப்பார்த்தபடி, ‘ தம்பி, நேத்தே பிரியாணி கேட்டியே… போயி அரை கிலோ மட்டன் வாங்கி வந்து கொடேன்… ‘ என்றாள் கமலம்.
சற்றே கோபப்பட்ட அவன், ‘அம்மா… நான் ஆபீஸ் வேலையா இருக்கேன்மா… எனக்கு வேலைத் தர்றியே…‘ என்றவன், ‘அப்பா எங்கே… அவர்கிட்டே கொடுத்தனுப்பே…‘ என்றுவிட்டு மறுபடியும் லேப்டாப்பில் மூழ்கிவிட்டான்.
‘மாடில யார்கூடவோ பேசிட்டிருந்தார்…‘ என்றபடியே போய் மாடியைப் பார்த்து குரல் கொடுத்தாள், ‘ என்னங்க… உங்களைத்தானே… ‘
கொஞ்சம் பொறு என்பது போல சைகை செய்துவிட்டு மேலும் பேசிக்கொண்டிருந்துவிட்டு கீழே வந்தார் ராமன்.
‘ரொம்ப நாள் கழிச்சு பேசறார்… டிஸ்டர்ப் பண்றியே… ‘ என்றவர் சலிப்புடன், ‘ சரி… இப்போ சொல்லு… என்ன வேலை… ‘ என்றார்.
‘ கடைக்குப் போயிட்டு வரணும்ங்க… அரை கிலோ மட்டன் வாங்கணும்… ‘ என்றாள்.
‘ ஏன்… நாந்தான் போகனுமா… ‘ என்றார்.
‘ ஏங்க… அவன் ஆபீஸ் வேலையா இருக்காங்க… ‘ என்றாள்.
‘ரிட்டையர் ஆயாச்சு… வேறென்ன வேலை… ‘ என்று முணுமுணுத்தபடியே அவள் கொடுத்த பையையும் ஐநூறு ரூபாய் நோட்டையும் வாங்கிக்கொண்டு நகர்ந்தார். கிச்சனுக்குள் போனவள், சில நொடிகளிலேயே மறுபடியும் ஓடிவந்தாள். ராமனைக் காணவில்லை.
மகனிடம் வந்தாள். ‘ என்னம்மா… ‘ என்றான் அவன்.
தயங்கியபடியே, ‘ தம்பி… பெரிய வெங்காயமும் சின்ன வெங்காயமும் வேணும்டா… அப்பா கிளம்பிட்டார் போல, ஆளைக் காணோம்… ‘ என்றாள், எங்கே அவன் திட்டுவானோ என்ற பயத்துடனேயே.
அவள் பயந்தது போலவே, ‘ ஏன்மா… யோசிச்சு யோசிச்சுதான்… ’ என்றான்.
அந்த சமயம் பார்த்து பாத்ரூம் கதவைத் திறந்துகொண்டு ராமன் வெளிப்பட, திகைத்துப் போய், ‘ தோ… உங்கப்பா இங்கேதான் இருக்கார்… ‘ என்றாள்.
‘ ஏன்… என்னாச்சு… ‘ என்றார் அவர்.
‘ இல்லே… பெரிய வெங்காயமும் சின்ன வெங்காயமும் ஒவ்வொரு கிலோ வேணும்… கவனிக்க மறந்துட்டேன்…. அதான்… ‘ என்று இழுத்தாள்.
‘ முதல்லலேயே சொல்றதுக்கென்ன… நல்லவேளை நான் இன்னும் கிளம்பலை… போயிருந்தா என்னை இன்னொரு தடவை நடக்க விட்டிருப்பியா… ‘ என்று முறைத்தார்.
‘ தப்புதாங்க… அதான் நீங்க இன்னும் கிளம்பலையே… முதல்ல வெங்காயத்தை வாங்கிட்டு வந்து கொடுத்துடுங்க… முதல்லே வெங்காயம் பூண்டெல்லாம் உரிக்கணுமில்லே… ‘ என்றாள்.
சலிப்பை முகத்தில் காட்டி, ‘காய்கறிக்கு இந்தப்பக்கம் போகணும், மட்டனுக்கு எதிர்ப்பக்கம் போகணும்… என்னை ரெண்டு தடவை அலையவிடறே பார்… ‘ என்று முறைத்தார். அதற்குள் அவள் போய், நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு வந்து நீட்டினாள்.
அதை வாங்க மறுத்தவர், ‘இல்லே என்கிட்டே இருக்கு… ‘ என்றபடி வலது சட்டைப் பாக்கெட்டிலிருந்த நூருரூபாயை எடுத்துக் காட்டினார்.
xxxxxxxxx
கொஞ்ச நேரம் கழித்து முனகிக் கொண்டே வந்தார். கொஞ்சம் ஓய்வு கிடைத்து சோம்பல் முறித்தபடி வெளியே வந்த மணி, அப்பாவைப் பார்த்து, ‘என்னப்பா ஆச்சு, ஏன் புலம்பிக்கிட்டே வர்றீங்க… ’ என்றான்.
‘நூறு ரூபா கொடுத்தேன், பெரிய வெங்காயம் இருபது ரூபாய் சின்ன வெங்காயம் நாற்பது ரூபாய் போக மீதி நாற்பது ரூபாய் கொடுக்கறதுக்கு பதிலா நானூத்தி நாற்பது ரூபாயா கொடுத்திருக்கான். நானும் கவனிக்காம அப்படியே வாங்கிட்டு வந்துட்டேன்… ‘ என்றார்.
சற்றே கோபப்பட்ட அவன், ‘ சரிப்பா, உடனே திரும்பி போய் பணத்தை கொடுத்திருக்க வேண்டியதுதானே… வீடுவரை கொண்டு வரனுமா… ‘ என்று அவன் முறைக்க, ‘இல்லைப்பா, இவ்ளோ தூரம் வந்தாச்சு… திரும்பி அவ்ளோ தூரம் நடக்கணுமே, உன்கிட்டே கொடுத்து அனுப்பிடலாம்னு தான் வந்துட்டேன்… ‘ என்றவர் அவனைப் பார்த்து, ‘ நீயே ஒரு நடை போய்ட்டு விளக்கமா சொல்லி பணத்தை திருப்பி கொடுத்துட்டு வந்துடேன்… ‘ என்றார்.
சலிப்புடன், ‘ சரி கொடுங்க நானே போறேன்… ‘ என்று அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு மொபெட்டை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
அண்ணாச்சி, ‘இப்போதானே அப்பா வந்து வெங்காயம் வாங்கிக்கிட்டுப் போனார்… ‘ என்றார்.
‘அதுக்காகத்தான் வந்தேன்… ‘ என்ற மணி விளக்கம் சொல்லி அவர் கொடுத்த அதிகப்படி நானூறு ரூபாயை எடுத்து நீட்டினான்.
தலையை சொறிந்தபடியே, ’கூட்டம் கொஞ்சம் ஓவரா இருக்கவும், நானும் கொஞ்சம் கனவக்குறைவா இருந்துட்டேன் போல… தேங்க்ஸ் தம்பி… ‘ என்றுவிட்டு பணத்தை வாங்கி கல்லாவில் போட்டுக் கொண்டார் அவர்.
திரும்பி வரும் வழியில் வேகமாய் வந்து கொண்டிருந்தார் ராமன். மொபெட்டை நிறுத்தி, ‘என்னப்பா… ஏன் இப்படி ஓடிவர்றீங்க… ‘ என்றான்.
‘தப்பு நடந்து போச்சுப்பா… அம்மா கொடுத்த ஐநூறு ரூபாயை இடது பாக்கெட்டுல வைச்சிருந்தேனா. ஏற்கனவே நூறு ரூபாயை வலது பாக்கெட்டுல வச்சிருந்தேனா. நூறு ரூபா நோட்டை கொடுத்ததா நினைச்சுதான் அண்ணாச்சி கூடுதலா கோடுத்துட்டானேன்னு திருப்பிக் கொடுக்கச் சொல்லி உன்னை அனுப்பினேன். இப்போ பார்த்தா நூறு ரூபா நோட்டு அப்படியே பத்திரமா இருக்குது… ‘ என்றபடி நோட்டை எடுத்து அவனிடம் காட்டினார்…
கோபம் பொத்துக்கொண்டு வந்தது மணிக்கு. ‘இப்படி மாத்தி மாத்தி சொன்னா அண்ணாச்சி நம்மை எப்படி நம்புவார்… சரி சரி வாங்க… ‘ என்று அவரையும் உட்கார வைத்துகொண்டு திரும்பினான்.
அண்ணாச்சி சிரித்துக்கொண்டே, ‘ நாந்தான் கவனிக்காம அதிகமா கொடுத்திட்டோமோனு நினைச்சுதான் தம்பி பணத்தை வாங்கிப் போட்டேன்… ஸாரி தம்பி…‘ என்றபடி நான்கு நூறு ரூபாய்களை எடுத்து நீட்டினார். பணத்தை வாங்கிக்கொண்டு அப்படியே போய் மட்டனையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய், ‘ஏன்பா… கொஞ்சமாவது யோசிச்சு வேலை செய்ய மாட்டீங்களா… அண்ணாச்சி நல்ல மனுஷன் பணத்தை திருப்பிக் கொடுத்துட்டார். இதே வேறொரு ஆளா இருந்திருந்தா எப்படி கொடுத்திருப்பான்… மாத்தி மாத்தி சொன்னா நம்மளை மட்டமா நினைச்சுக்க மாட்டாங்க… வயசாகுதே தவிர… இன்னும் விவரமா வேலை செய்யத் தெரியலை… ‘ என்றுவிட்டு தனது அறைக்குள் போய்விட்டான்.
ராமன் சோர்ந்து போய் பேசாமல் நாற்காலியில் உட்கார்ந்தார். கமலமோ, யாரை குற்ரம் சொல்லுவது, யாரை சமாதானப்படுத்துவது என்று புரியாமல் தன் வேலைகளை கவனிக்கலானாள்.
கொஞ்ச நேரத்தில் சாப்பாடு ரெடி என்று கமலம் சொல்ல குளித்துவிட்டு டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்தவன் அப்பா இன்னும் சாப்பிட வரவில்லை என்று தெரிந்ததும், ‘அப்பா எங்கேம்மா… ஏன் அவரைக் காணோம்… ‘ என்றான்.
‘ரொம்ப டல்லா உட்கார்ந்திருந்தார்டா… ‘ என்றாள்.
போய் பார்த்தான். அவரது கண்கள் லேசாய் கலங்கி இருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அதற்குள் கமலமும் அங்கே வந்துவிட்டாள். கணவனைப் பார்த்தவள், ‘நீ சத்தம் போட்டியே… அதான் சோகமாகி படுத்துட்டார் போல…‘ என்றாள்.
பதறிப்போன மணி, ‘அடடா… அதுக்காகவா கண்கலங்கிட்டு படுத்துட்டீங்க… ஸாரிப்பா… அண்ணாச்சியாக்கும் கொடுத்திட்டார்… மத்தவங்கள்னா கொடுத்திருப்பாங்களா… நம்ம பணம்ப்பா… நாமத்தான் கொஞ்சம் உஷாரா இருக்கனும்… நான்தான் கொஞ்சம் ஹார்ஸா பேசிட்டேனோனு நினைக்கறேன்… ஸாரிப்பா… இனிமே அப்படி பேசமாட்டேன்… எழுந்திருச்சு வாங்க… ‘ என்றுவிட்டு அவரை இழுக்காத குறையாக இழுத்துக்கொண்டு வந்தான்.
அதற்குள் தட்டுகளில் சாப்பாட்டை எடுத்து போட்டு வைத்திருந்தாள் கமலம்.
தன் தட்டிலிருந்த பிரியாணியைக் கிண்டியவர், கையில் அகப்பட்ட சூப் பீஸ் ஒன்றை எடுத்து மகனின் தட்டில் வைத்தார்.
‘ஏன்பா… ‘ என்று தடுத்தான் அவன்.
‘நீதான்டா சூப்புன்னா விரும்பி சாப்பிடுவே… சாப்பிடு… ‘ என்றார் அவர்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
முற்றும்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings