in ,

அனுபவம் ஓர் அருந்தவம் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

ஒரு கதை சொல்வார்கள்.  ஒரு மன்னன், “முதியவர்களெல்லாம் தேவையில்லாத அறிவுரைகளைத் தந்து அனாவசிய தடை போட மட்டும்தான் லாயக்கு” என்றெண்ணி, தன் நாட்டிலுள்ள முதியோர்களையெல்லாம் தனித்தீவில் குடியேற்றி விட்டு, இளையவர்கள் கையில் பொறுப்புக்களைத் தருகிறார்.  ஒரு பாசக்கார மகன் தன் வயதான தந்தையை பரண் மேல் ஒளித்து வைத்து விடுகிறான்.

     நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டு, பட்டினிச் சாவு அதிகரிக்க அரசு திணறுகிறது. அந்த பாசக்கார இளைஞன் மன்னனுக்கு சில மார்க்கங்களைச் சொல்லித் தர நாடு பஞ்சத்திலிருந்து விடுபடுகிறது. அதே போல், கடும் மழை, பெரும் வெள்ளம் வந்த போதும் அந்த இளைஞன் மன்னனுக்கு சில வழிமுறைகளைச் சொல்லித் தர, மக்கள் காப்பாற்றப் படுகின்றனர்.  தொடர்ந்து பல பிரச்சினைகளுக்கு அந்த இளைஞனே உபாயங்கள் சொல்லித் தர,

     “உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்” என்கிறார் மன்னன். அப்போது அவன் வயதானவர்களின் அனுபவ மகத்துவத்தை மன்னனுக்கு உணர்த்தி, தான் சொல்லிய உபாயங்கள் யாவும் தான் மறைத்து வைத்திருக்கும் தன் தந்தை சொல்லித் தந்தது எனக் கூறுகிறான். மன்னனும் மனம் மாறி முதியவர்களை நாட்டுக்குள் அழைக்கிறான்.

     இக்கதையின் மூலம் தெளிவாகப் புரியும் உண்மை என்னவென்றால், அனுபவம் என்பது ஒரு அற்புதக் கல்வி.  அழியாப் பொக்கிஷம். ஆம்! வாழ்க்கையில் ஏற்படுகின்ற சிறு சிறு அனுபவங்கள்தான் மனிதனைச்  சிறுகச் சிறுக உருவாக்குகின்றன. வாழ்க்கையைல் குறுக்கிடுகின்ற எந்தவொரு அனுபவமுமே பயனற்றதாக இருப்பதில்லை. அனுபவங்களிலிருந்து மனிதன் எத்தனையோ படிப்பினைகளை கற்கிறான்.

அனுபவம் என்னும் ஆசான்:

      பள்ளிக் காலத்தில் ஆசிரியர் தரும் தண்டனைகளைக் கண்டு கலக்கம் கொள்ளாமல், அதனைக் கொண்டு தன்னைத் திருத்திக் கொள்ளும் மாணவன் எதிர்காலத்தில் அவ்வாறு வெற்றி பெற்று உயர்வானோ, அதே போல்தான் அனுபவம் என்னும் ஆசிரியர் தரும் தண்டனைகளை தன்னைத் திருத்திக் கொள்ளக் கிடைத்த காரணிகள் என ஏற்றுக் கொண்டவனுக்கு ஏற்றம் உறுதி.

      கல்வியறிவு மனித வளர்ச்சிக்கு பெரிதும் தேவை, என்பது மறுத்துரைக்க முடியாத மாபெரும் உண்மை, என்றாலும் அனுபவத்தின் மூலம் பெறும் அறிவு நிச்சயம் அதற்கு ஒப்பான ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது, என்பதும் நிரூபணமான உண்மை.

புத்திக் கொள்முதல்: (Investment for knowledge)

       ஒரு வியாபாரத்திலோ, ஒரு முயற்சியிலோ, ஒரு செயலிலோ, தற்செயலாக ஏற்பட்டு விடும் நஷ்டத்தை ஒரு இழப்பாகக் கருதாமல், அதை ஒரு புத்திக் கொள்முதலாக எண்ணிக் கொள்ளும் பட்சத்தில் தோல்வியும் கல்வியாகிறது. இழப்பும் இண்வெஸ்ட்மெண்ட் ஆகிறது.  அதாவது, தன் செயல்பாட்டில் தான் புரிந்த தவறுகளைப் பற்றிய தகவல்களைக் கற்றுக் கொள்ள தான் செய்த ஒரு முதலீடாக அந்த இழப்பை எண்ணிக் கொள்தல் வேண்டும்.

      மின்சார விளக்கைக் கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிஸன், குழல் விளக்கில் பயன்படுத்திய இழையை (Filament) பல் வேறு உலோகங்களில் செய்து பார்த்துத் தோல்வியடைந்திருக்கிறார். முதலில் கார்பனைப் பயன் படுத்தினார், அது சிறிது நேரம் மட்டுமே எரிந்து விட்டு பட்டென்று அணைந்து போனது. அடுத்து தாமிர இழையைப் பயன் படுத்தினார். அது சில மணி நேரங்கள் எரிந்து விட்டு அணைந்தது. நீண்ட ஆய்வுகளுக்குப் பிறகு டங்ஸ்டன் இழையைக் கொண்டு உருவாக்கினார்.  அது வெற்றிகரமாக அமைந்தது.  அப்போது எடிஸனிடம் ஒருவர் கேட்டார், “தொடர் தோல்விகள் உங்களைச் சலிப்படைய வைக்க வில்லையா?” என்று.

      அதற்கு எடிஸன் சொன்னார், “ஒவ்வொரு தோல்வியையும் ஒரு விஞ்ஞான சோதனையாக எடுத்துக் கொண்டு, தவறுகளைப் பற்றிப் பாடம் கற்றுக் கொண்டேன்” என்றார்.  தன் தோல்விகளையும், இழப்புகளையும் அவர் புத்திக் கொள்முதலாக ஏறுக் கொண்டதால் வெற்றி கண்டார்.

      கல்வியால் வரும் அறிவு என்பது, ஓட்டுநர் உரிமம் பெறுவது போன்றது. ஆனால், அனுபவ அறிவு திறன் பழகி பெறுவது.  கல்வி அறிவு மட்டுமே ஒருவனை உயர்த்த முடியாது. கல்வி அறிவோடு சேர்ந்த அனுபவ அறிவுதான் உயர்விற்கு வழி வகுக்கும்.  கல்வியும் அனுபவமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது.  அனுபவமே கல்வி கல்வியே அனுபவம்.

      நூலகத்தில் பல புத்தகங்கள் இருப்பது போன்று பலவகை அறிவினை பெறுவது கல்வியின் நோக்கம். அதனை வாழ்வியல் சூழ்நிலையில் பயன் படுத்தும் திறனை வளர்ப்பது அனுபவம்.

      அனுபவங்களை கருத்தியல் சார்ந்து தருவது கல்வி. செயல்முறை கல்வியை தருவது அனுபவம். அதனால்தான் கல்வி பெறும் போது செயல் முறை கல்வியும் இணைத்து கற்பிக்கப்படுகிறது.

      அனுபவங்கள் வாய்ப்புகள் மூலமே பெற இயலும். அந்த வாய்ப்புகளை உருவாக்கி தருவது கல்வி.

      ஒருவரை மின்சாரம் தாக்கும் போது காப்பாற்ற மின்கடத்தா பொருள் கொண்டு மின் பிணைப்பை துண்டிக்க வேண்டும். மின் கடத்தும் பொருள்கள் எவை என்பதை தெரிந்திருப்பது பயன் தராது அதனை தேவையான சூழ்நிலை பயன்படுத்தும் தானே அனுபவ அறிவு

      நமது பாரத நாட்டில், மனித சமுதாயத்திற்கு நல்வழி காட்டிய பல அறிஞர்கள், தலைவர்கள், மகான்கள், கல்வியறிவு விஷயத்தில் சாமான்யர்களாக இருந்து கொண்டு, அனுபவக் கல்வியில் ஆகாயம் வரை உயர்ந்தவர்களாகி, தாங்கள் பெற்ற அனுபவ அறிவை நாட்டு மக்களுக்கு தெளிவாக உணர்த்தி, உச்சநிலையைத் தொட்டிருக்கிறார்கள்.

      தங்கள் அனுபவங்களை யார் நமக்குத் தந்தாலும் மறுப்பின்றி ஏற்போம். மணிக்கட்டுகளில் கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டு தவறான நேரத்தைச் சொல்வோருக்கு மத்தியில், வயற்காட்டில் நின்று கொண்டு வானத்தைப் பார்த்து சூரியனின் இருப்பைப் பார்த்து, மணி சொல்லும் விவசாயிகள் அனுபவம் எவ்வளவு உயர்வானது? எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும் ஆழாக்கு, உழக்கு, கலம், நெய்க்கரண்டி, எண்ணெய்க்கரண்டி, பாலாடை, அவுன்ஸ் என்று முகத்தல் அளவையைக் கூறி, மனக் கணக்கில் அபாக்கஸ் அறிஞர்களைத் தாண்டுமளவு ஆற்றல் பெற்றிருந்தார்களே எப்படி? அனுபவம் எனும் படியில் ஏறித்தானே!

      வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் அனுபவம், நாம் கற்றுக்கொள்ளாததையும் பெற்றுக் கொடுக்கும். அனுபவம், முதிர்ச்சியின் அடையாளம். மழைநாளுக்குப் பிறகு மண்ணைத் துளைத்து வெளியேறும் மண் புழுவைப் போல் தன்னைத் துளைத்துத் தன்சுயத்தைக் காட்டும் விஸ்வரூப விருட்சம் அனுபவம். சல்லடையை வைத்து சமுத்திரத்தைச் சலிக்கமுடியுமா? அனுபவத்தைப் புறந்தள்ளி யாராவது சாதிக்க முடியுமா? அனுபவசாலிகள் என்றும், புலம்பலை மறந்த புத்திசாலிகளாகவே திகழ்கிறார்கள். நம் அனுபவங்களை முதலீடாக்கி முயற்சியை தொடங்கினால் வெற்றி என்ன?… அந்த விண்ணகமே நம்ம கைக்கு வரும்.

      ஆயிரம் ஆசிரியர்களால் கற்றுக் கொடுக்க முடியாத பாடத்தை ஒரு நாளில் நாம் பெறும் அனுபவம் கற்றுத் தந்து விடுகிறது.  தோல்விகளில் நாம் பெறும் அனுபவப் படிப்பினைகளே, வெற்றியை நோக்கிய நம் பயணத்தை விரைவுபடுத்துகின்றன.

      வெற்றியில் பெற்றதை விட, தோல்வியில் கற்றது கல்லில் செதுக்கிய எழுத்தாய் நமக்குள் ஆழப்பதிகிறது. எனவே அனுபவ ஆசானிடம் அனுதினமும் பாடம் படிப்போம்.

      அனுபவங்களை அலட்சியப் படுத்த வேண்டாம்.  அவை நம்மைச் செதுக்கும் நல் உளிகள்.  நம்மைச் சுகப்படுத்தும் நல் மூலிகைகள்.

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அகலக் கால் ஆகாதுங்க! (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

    பழகும் விதமே பண்பாடாகும் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்