எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அண்ணா நகர், விகாஸ் டவர்ல இருக்கறப்ப நான் அனன்யா எஸ்.பி,ஓ.ஏ.ல 12வது படிச்சிட்டிருந்தேன் .17 வயது,நடிகர் கார்த்தியையும், சிவகார்த்திகேயனையும் லவ் பண்ற வயசு.ஐ மீன் யாரையாவது ஒருத்தரை.
மீனு கூட எப்பவும் சண்டைதான்,சிவாவை எதுவும் சொன்னா சுள்னு கோபம் வரும்.நாலு நாள் பேச்சு இல்லை. அஞ்சாவது நாள் சரியாப் போயிடும். கணக்கு புஸ்தகத்துக்குள்ளே சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் படத்தில் நடிச்சப்ப ஷூட்டிங் ஸ்பாட்ல எடுத்த படம்னு ஒரு ஹார்ட் படம் சிவப்பு பேனால வரைஞ்சு ஒளிச்சு வச்சிருப்பேன்.
மும்பைல இருந்து ஏதோ இன்டர்வ்யூனு சந்த்ரு மாமாவும், அவர் பையன் கோபியும் வந்தாங்களா அந்த கோபிப் பையன் எப்பவும் என்னை வம்புக்கிழுத்தான்.
ஒரு நாள் என் கணக்குப் புஸ்தகத்தில் இருந்த சிவா படத்தைப் பாத்துட்டான். அதை கைல எடுத்து பாக்கறப்ப, நான் அவன் கைல இருந்து அதைப் பிடுங்க முயற்சிக்க, சமையலறைக்கும்,மாடிக்குமா அவனைத் துரத்த பெரிசுகளும் சிரிச்சிட்டே முறைப் பையன்னா அப்படித்தான்னு என்னை சமாதானப் படுத்தினார்கள்.
“நான் அழுதுடுவேன்னு நினைச்சு அந்த போட்டோவை என்கிட்டயே கொடுத்த கோபி, “ஏய் அனா,உன் பேர் ஏன் தெரியுமா இப்படி வச்சாங்க,உன் தலைக்கு மேல கொண்டையும்,நீள முகமும்,சில ஃபீச்சர்ஸ் பாத்தா அன்னாசிப்பழம் மாதிரியே இருக்கயா அதான்.அதுல இந்த அழுகல் அன்னாசிப் பழத்தைப் பாக்க சிவகார்த்திகேயன் வருவான் என கனவு வேறே”. ”
என் முகத்தில் உள்ள பருக்களை வச்சி கேலி பண்றான்னு தெரிஞ்சது. ”உன்னைப் பாத்தா யாருக்குமே கோபம் வரும் அதான் கோபினு உனக்குப் பேரு.”
“நம்ம கல்யாணத்துக்கப்பறம் நீ மிஸஸ் கோபி ஆயிடுவயே அப்ப?”
“ஐய்யே ஆசையப் பாரு எனக்காக சிவகார்த்திகேயன், கார்த்தி லைன்ல நிக்கறாங்க தெரியுமா?”
“போடி ரொம்பத்தான், யோகி பாபு கூட திரும்பிப் பாக்க மாட்டான்.”.
“போடா சர்த்தான், உனக்கெல்லாம் ஏதாவது அழுகல் தக்காளிதான் கிடைக்கும்,போ போ.”
இந்த சண்டையெல்லாம், சில வருடங்கள்தான் நான் எதிராஜ்ல படிக்கறப்ப கோபிதான் அடிக்கடி ஞாபகத்துக்கு வந்தான்.எப்படி சண்டை போடுவான் நாமளும்தான் அளவுக்கு மீறி அவனைப் பேசிட்டோம்னு நினைப்பேன். இப்பல்லாம் சென்னைக்கே வரதில்லை, டிகிரி முடிச்சிட்டு புனேல எதோ சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பாக்கறானாம்.
ஒருவேளை இப்ப யாராவது பஞ்சாபிக்காரியையோ,மராத்திக்காரியையோ லவ் பண்ணுவானோ? என்னையெல்லாம் மறந்திருப்பான்.ஆசையா மிஸஸ் கோபினு சொன்னப்ப, நானும்தானே வீம்பா முறுக்கிட்டு நின்னேன்.
அன்னிக்கு லீவாச்சா, நிதானமாய் 8.30 மணி வரை தூங்கி அப்பறமும் எழுந்திருக்காம படுக்கைல நெளிஞ்சிட்டிருந்தேன். கீழே இருந்து அம்மா குரல் கேட்டது,”வாடாப்பா இத்தனை நாள் எங்களையெல்லாம் மறந்துட்டயா? இப்பவாவது மாமா அத்தையை பாக்கணும்னு ஞாபகம் வந்ததே. என்ன எதாவது நல்ல விஷயமா? கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுத்தா?”
தூக்கி வாரிப் போட்டு எழுந்திருந்தேன், அவசரமா தலை முடியை சரி பண்ணிட்டு கீழே வந்தேன்,கோபியேதான்.
என்னைப் பாத்தவுடன் ஒரு புன்முறுவலுடன் ஆனா அம்மாவைப் பாத்து, “எங்கேத்தே ஒரு அழுகின தக்காளிப் பழம் கூட நம்மளை பாக்க மாட்டேன்து”
“அதென்னடா எதோ மாதிரி பேசறே ஒண்ணும் புரியலையே.”
அப்பதான் குளிச்சிட்டு உள்ளே வந்த அப்பா,”அடேடே கோபியா,என்ன ஆச்சு ரொம்ப நாளா ஆளைக் காணோம். அம்மா அப்பா செளக்கியமா? என்ன விசாலம், மாப்பிள்ளையை நிக்க வச்சு பேசிட்டிருக்கே?”
“போங்க மாமா எப்பவும் உங்களுக்கு கேலிதான்”
“கேலி இல்லை நானும் விசாலமும் நேத்துதான் பேசிட்டிருந்தோம், அனாவுக்கு வயசு ஏறிட்டே போறது காலாகாலத்துல ஒரு கால்கட்டு போட்டு அனுப்பிச்சிடணும்னு. முதல்ல உங்ககிட்ட கேட்டுட்டுதான் வெளில பாக்கணும்னு சொன்னா விசாலம். இன்னிக்கு நீங்களே வந்தாச்சு”
“என்ன மாமா திடீர்னு மரியாதையெல்லாம்.என்னோட பேரண்ட்ஸ்கும் இதுல விருப்பம் போலதான் இருக்கு, ஆனா… ..”
அம்மாவுக்கும் இப்ப வார்த்தைல மரியாதை கூடித்து,” ஆனா என்ன மாப்பிள்ளை சொல்லுங்கோ,நாங்க தப்பா எடுத்துக்க மாட்டோம்”
நான் ஏதோ புஸ்தகத்தைத் தேடறாப்பல அங்கே சுத்தி வந்தேன்,ஆனா கவனமெல்லாம் அவங்க பேச்சு மேலேதான்.
கோபி தயங்கித் தயங்கி,”இந்தக் காலத்துல பொண்களோட எதிர்பார்ப்பெல்லாம் வேற மாதிரி இருக்கு. அனன்யாவோட பூரண சம்மதம் இல்லாம இதைப் பத்தி பேச வேண்டாம்னு நான்தான் என் பேரன்ட்ஸ் கிட்ட சொன்னேன்”
இதைக் கேட்டு என் கண்களில் புளுக்னு கண்ணீர் வந்தது. கைல இருந்த புஸ்தகத்தை தொப்னு கீழே போட்டுட்டு என் ரூம்ல போய் படுக்கைல குப்பற விழுந்தேன்.
அடுத்த அஞ்சு நிமிஷத்துல என் தலைமாட்ல “ம்க்கும்”னு சத்தம்.
கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து உக்காந்தேன்.
“என் மேல கோவமா அனா”, சொல்லிட்டே பக்கத்துல உக்காந்தான் கோபி.
“எனக்கேன் கோவமாம், உங்க தகுதிக்கு நல்ல நிறையப் படிச்ச அழகான பொண்ணை கல்யாணம் பண்ணிண்டாதான் சரி. என் அம்மா அப்பாதான் யோசிக்காம ஏதேதோ பேசிட்டாங்க.”
“ஏய் அனா உனக்குமா என்னைப் புரியலை? நீ சிவகார்த்திகேயன் படம் வச்சிட்டிருக்கப்பவே சொல்லியிருக்கேன்தானே மிஸஸ்.கோபினு”
“ஓ அதையே நினைச்சிட்டுதான் இத்தனை நாள் பாக்க வராம இருந்தீங்களா? அப்ப அடலொசன்ட் வயசு,உண்மையான அன்பு காதல் புரியாத வயசு.”
“அதெல்லாம் தெரியும் ஓரளவு லைஃப்ல செட்டில் ஆனவுடனேதான் உன்னைப் பாக்கணும்னு காத்திருந்தேன்.ஆனா மனசெல்லாம் எப்பவும் உன் நினைப்புதான் தெரியுமா”
“ஐய்யே ரொம்பதான், பாக்க ஒரு தடவை வந்தா குறைஞ்சா போயிடுவீங்க”
இப்ப கீழே இருந்து அம்மா, ”அனன்யா என்ன மாப்பிள்ளையை பாடாப் படுத்தறே, டிபன் காபி ரெடி கீழே கூட்டிட்டு வா”
சட்னு என்னை இழுத்து அணைத்து எதிர்பாராதப்ப கன்னத்தில் முத்தமிட்டான் அந்தத் திருடன். “ஐய்யே எச்சல்” கன்னத்தை துடைச்சிட்டேன். திரும்ப இழுத்து அடுத்த கன்னத்திலும்.
“அம்மாடி இங்கே தனியா உங்க கூட இருந்தா டேன்ஜர்,கீழே வாங்க டிபன் சாப்பிட” அவன் கைகளிலிருந்து திமிறி கீழே ஓடினேன்.மனசு பூரா சொல்லத் தெரியாத சந்தோஷம்.
அப்பா டிபன் தட்டை கையில் வச்சிட்டே,”என்ன மாப்பிள்ளை அனன்யா என்ன சொல்றா, மும்பை குடித்தனத்துக்கு ரெடியாமா?”
நான்,”போங்கப்பா நான் மேல படிக்கணும் அதுக்கப்பறம் யோசிக்கலாம்”
கோபி,”புனேலயும் காலேஜ்லாம் இருக்கு”
“ஆனா,அம்மா அப்பா இங்கேதானே இருக்காங்க”
அம்மா,”போடி கிறுக்குப் பொண்ணே நாங்க வந்து அப்பப்ப பாத்துப்போம் ஓகே சொல்லு முதல்ல நீ”
“எனக்கொண்ணும் தெரியாது போ”சொல்லிட்டு தலையை கவுத்துண்டேன்.
அப்பறம் என்ன, அப்பவே போன் பண்ணி மும்பைல இருந்து கோபியோட அம்மா அப்பாவை வரவழைக்க ஏற்பாடு பண்ணியாச்சு.
ஏதேதோ பேச்சுக்கள், முடிவுகள் பெரிசுங்களுக்குள்ளே. நானும் கோபியும் மேகத்துல பறந்தோம். 20 நாளைக்குள்ளே கல்யாணமே திடுக்னு முடிஞ்சு போச்சு.
அப்பறம் என்னன்றீங்களா? உங்க எல்லாரையும் போலத்தான். மேலே படிப்பாவது ஒண்ணாவது, புனேல சிவாஜிநகர்ல ஒரு விசாலமான ஃபிளாட் 7வது மாடில. டே டைம்ல பக்கத்து பிளாட் பஞ்சாபி,மார்வாடி பொண்களோட ஸ்நேகிதம் ஆலு பரோட்டா பண்ண கத்துண்டு சாம்பார் பண்ண கத்துக் கொடுத்தேன். நைட்டைம்ல வேறே ஏதோ வில்லங்கமானதெல்லாம் கோபி கத்துக் கொடுத்தான்.
ஒரு வருஷத்துக்குள்ளே மடில ஸ்நேகாக் குட்டி. வாழ்க்கை இப்படியே ஓடுது. பழைய காதல் மயக்கம் எல்லாம் போயாச்சு அந்த திருடனுக்கு. வேலை வேலைனு ஓடிடறான். இந்த அன்னாசி இப்ப புளிக்குதோ எதுக்கெடுத்தாலும் திட்டறான், கல்யாணம் ஆயிட்டா காதல் போயிடுமா என்ன!
எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings